Skip to main content

பிசு பிசுத்துப் போகும் வெற்றுப் போராட்டம்!


     

    
               

       13 வது மௌன வெளியீட்டுக்காக  மலாக்கா வரை சென்று வந்ததில் களைப்பு இன்னும் தீரவில்லை. பயணக் களைப்பு தூங்கி எழுந்தால் போய்விடும். இது தூங்கி எழுந்தால் கலைந்து போகும் களைப்பல்ல. நவீனக் கவிதைகள் பல கவிஞர்களிடமே போய்ச் சேராத களைப்பு. கவிதை ஆளுமைகளை அடையாளம் காணமுடியாத களைப்பு , போட்டிகளினால் நல்ல கவிதைகளைத் தேர்வு செய்ய முடியாத ஆதங்கக் குரலில் எழுந்த களைப்பு என ஏகப்பட்ட களைப்புகளின் ஒட்டுமொத்த fatique (அதீத களைப்பு) இது.
       நவீனக் கவிதை எழுதுபவர்களில் பா. அ. சிவம் , பாலமுருகன் , தேவராஜன், ரிவேகா இருந்தது ஆறுதலாக இருந்தது. நான் நவீனக் கவிஞனா (கவிஞர் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கல!) என்பதில் எனக்கு எப்போதுமே பலத்த சந்தேகம் உண்டு. சை. பீரையும், பச்சை பாலனையும் நான் கண்டிப்பாக நவீன கவிஞர் லிஸ்டில் சேர்க்க மாட்டேன். (நன்றாக கவிதை யாப்பது வேறு விஷயம்). இவர்களோடு மரபுக் கவிதை எழுதும் நாணல் , சிறுகதை எழுதும் டாக்டர் ஜான்சனோடு , வாசக முகங்கள் சில பார்வையிலேயே எண்ணிவிடும் அளவுக்கு அழகான மண்டபத்தில் இருந்தனர். நன்னெஞ்சர் தொ.க. நாராயணசாமி மனமுவந்து அளித்த அவரின் தனியார் பள்ளி மண்டபம் அது.  இந்தக் கரிசனம் அவர் தமிழ் பற்றாளர் என்பதால் கசிந்ததாக இருக்கலாம்.
     பன்னிரண்டாவது மௌனத்தில் வந்த கவிதைகளின் தரத்தை மதிப்பீடு செய்ய அதனை எம்.ஜி.சுரேஷிடம் ஒப்படைத்திருக்கிறார் தேவராஜன்.
     கவிஞர் தேவராஜன் மௌனம் நவீனக் கவிதைகளை அடையாளம் காணவும், அதன் ‘அடர்த்தி’ அல்லது தரம் குறித்தும் தெரிந்துகொள்ளவே இந்த ஏற்பாடு; இது போட்டியல்ல என்று தற்காத்தும், போட்டியின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை எனவே மௌனம் தீவிர ஈடுபாட்டில் எனக்கு சந்தேகம் உண்டாகிறது என்ற கங்காணித்துவ நுனிப்புல் குறிக்கீடு இருந்துகொண்டே இருந்தது மௌனத்துக்கான சவால் என்றே கொள்வோமாக. ஆனால் தேர்வில் வெற்றிபெற்றவர் பட்டியலின் மேல் திருதியின்மை உண்டானது இயல்பானதுதான்...
      நடுவர் எம். ஜி சுரேஷ் சை.பீரையும், கோ.புண்ணியவானையும் , மஹாத்மனையும் பரிசுக்குரியவர்களாக் தேர்வு செய்தது மஹா பெரிய குற்றம்தான். எம்.ஜி சுரேஷ் என்ன கவிதைக்குப் பெரிய கொம்பா? கோட்பாடு சார்ந்த கவிதை குறித்தும் நவீன பின்நவீன தற்கால போக்கு குறித்தும் விலாவாரியாக எழுதுபவருக்கு, நடுவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? சரி விடுங்கள். அடுத்த முறை போடியெல்லாம் வேண்டாம். தீவிர இலக்கிய கோட்பாடு வரைவிலக்கணத்தைத் தேடி அதன்படி நடப்பது நல்லது.
   மலாக்கா மௌன விழாவில் என்னதான் நடந்தது?
 எப்போதுமே ஒரு சிற்றிதழின் ஆதங்கம் நிறைந்த வார்த்தைகள் தேவராஜனிடம் நிறைந்து இருந்தன. சிற்றிதழ் தொடங்கினால் ஆதங்கங்களுக்கும் அழுகுரலுக்கும் குறைவிருக்காது. ஆனால்... அதன் பிரசவ நாளன்று ஆதங்கம் வற்றி அழுகை தீர்ந்து புது உற்சாகம் பிறப்பெடுக்கும். அதற்குத்தானே உழைப்பு!
 பா. ஆ. சிவமும் பாலமுருகனும் கட்டுரைகளுக்கு எதிர்வினை இல்லை. கேள்வி நேரத்தில் ‘மௌனமே’ ஆக்ரமித்திருந்தது.
   பின்னர் தன் கவிதையை  சை. பீர் வாசித்து முடித்த போது அவர் விடுத்த வினா பற்றியும், அதன் பின்னர் எழுந்த வினாவுக்கு வினா கலந்துரையாடலும் நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியது.
     நாணல் கவிதை புரியவில்லை என்றார். நவீனக் கவிதை புரியவில்லை என்ற முடியாமையை முயலாமையை எதிர்கொள்ளவில்லை என்றால் அதன் பயணம் முழுமை பெறாது என்பது எழுதப்படாத விதி.
     டாக்டர் ஜான்சனும் அதனைத் தொட்டிருந்தார். மிகச் சாதாரணக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளும் எளிய முயற்சியைக் கூட வாசகனிடம் இல்லை. தலைவாழை இலையில் பரிமாறப்படும் V.I.P சலுகையை எதிர்பார்க்கிறார்கள். காற்பந்தை உதைத்து கூட பழக்கமில்லாதவர்கள் திடலில் இறங்கி ஆடினால் கால் சுளுக்கி கை முறிந்து வெளியாக வேண்டியதுதான். எல்லாவற்றுக்குமே பயிற்சி தேவை. கவிதையை வாசித்து பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு கவிதாசுகம் பரவசமான அனுபவம் கிடைக்கும்.
     குறியீட்டுக் கவிதையும் படிமக் கவிதையும்  எப்போதுமே  சாதாரண வாசகனுக்குள் நுழையாது.  அவன் தான் கவிதைக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டும். மிகச் சாதாரண சித்தாந்தம் இது. மறு வாசிப்பில் கவிதையின் சில சொற்றொடர்களில் உடைப்பு ஏற்பட்டு பொருள் கசிய ஆரம்பிக்கும். முதல் உடைப்புக்குப் பிறகு கற்பாறை உடைந்து நொறுங்குவதில்லையா, அதை போல. இது எனக்குப் புரியாது என்ற முன்முடிவோடு வாசித்தால் சாதாரண சிறுகதை கூட மண்டையில் நுழையாது. நாம்தான் முன் கவனத்தோடு மூளையைச் சுற்றி ஒரு சுவர் வேலியை நிறுவி விட்டோமே! என்வே வாசகன்தான் படைப்பில் ஒன்ற முயற்சி செய்ய வேண்டும்.
    நானும் சை. பீரும் கவிதைக்கு புரிதல் உண்டாக விளக்கங்கள் பல சொல்லியும் வினா தொடுப்போர் பழையபடி புரியவில்லை என்றே புலம்பிக்கொண்டு இருந்தனர்.( இந்தக் கட்டத்தில் சை. பீரை நவீனக் கவிஞர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள நான் சிபாரிசு செய்வேன்) அவர்கள் மேல் தப்பே கிடையாது. அவர் கவிதையும் புரியாதார் இருக்கிறார்களே!
     நாணலுக்கும் டாக்டர் ஜான்சனுக்கும் கவிதை புரியாததுதான் என்னால் செரித்துக்கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப நவீனக் கவிதைக்கும், தற்காலக் கவிதைக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டு அரங்கத்தை நகைப்புக்குள்ளாக்கினார்கள்.மற்ற வாசகர்கள் காலி நாற்காலிகள் சிலவற்றை நிரப்பி மௌனமாகவே இருந்தனர். ( ‘மௌனம்’ நிகழ்ச்சியை சரியானபடி புரிந்து கொண்டவர்கள்)
   
     சாதாரண வாசகனிடமும் , நவீனக் கவிதைகள் தவிர பிற துறைகளில் எழுதிவரும் படைப்பாளரிடமும் கவிதை போய்ச் சேராதது நவீனக் கவிஞர்கள் செய்யும் மிகப் பெரிய வன்முறையாகும். பாலர் பள்ளி மாணவரிடம் பின்னல் கணக்கைச் செய்யச் சொல்ல வற்புறுத்துவது வன்முறைக்கு நிகரானதுதானே. மௌனம் நிகழ்வு கூட இந்த வன்முறையை முன்னெடுத்ததில் உண்டான களைப்புதான் இன்னும் தீரவில்லை எனக்கு.
வாசகர்கள் இங்கே என்ன நடக்கிறது என்ற பிரம்மையில் இருந்தது வன்முறை செலுத்தப் பட்டதன் ஆதாரமாகவே சொல்லலாம்.
     வாசகனிடம் போய்ச் சேராத கவிதையின் கதி ? எல்லாக் கலைப் படைப்பும் சுவைஞனை ஆதார சுருதியாகக் கொண்டே படைக்கப் படுகின்றன என்பது கலையின் வாளர்ச்சிக்கான விதை. தொடை தட்டி ரசிக்கும் சுவைஞனின் பிரதிபலிப்பே கவிதையின் வாழ்வையும் வனப்பையும் கையகப்படுத்துகிறது. சுவைஞனே இல்லாத கலைப் படைப்பாக போய்விடுமோ நவீனக்கவிதை? என்னுடையதை தேவராஜனும், தேவராஜனுடையதை  நானும் மாறி மாறி சொரிந்து சுகித்துக் கொண்டால் போதுமா? ( கவிதையைச் சொல்கிறேன்) அது சேருமிடம் பற்றிய சிந்தனை எப்போதுமே கவலை அளிக்கிறது.
   ‘வானம்பாடி’ இதழ் கவிதை புரிகிறது,(வானம்பாடி- புதுக்கவிதைத் துறையை விதைத்து வளர்த்த குழுமம் அல்ல) நவீனம் புரிய வில்லையே என்று புதுக்கவிதை தொடங்கிய இடத்திலேயே தொங்கிக்கொண்டிருந்தவர்கள் அபிப்பிராயங்களை வைத்துவிட்டு விளக்கங்களைக்கூட உள்வாங்கிக்கொள்ளும் திறமையற்றவர்களிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம் என்னையும் சில கவிஞர்களையுமே சேரும்.
   நவீனக் கவிதைகள் மலேசியாவில் ஏன் கால்கோளிட முடியவில்லைவில்லை? அதன் இறுக்கமான மொழி, அதன் மீ மொழி, அது கவிஞனின் ஆழ்மனத்திலிருந்து நுண்தளத்தை தேர்வு செய்துகொண்டு  பரிமாறப்படும் போக்கு என்று சொல்லிவிடலாம். நம் வாசகர்கள் இந்த மாதிரியான இலக்கிய போக்குக்கு இன்னும் பரிச்சையமாகவில்லை. கிளர்ச்சிக் கவிதையின்பால் தன்னைப் பசையாக்கிக்கொண்டு ஒட்டிக் கொண்ட மனோபாவம். பாவம்!
   எல்லா வகை வடிவத்துக்கும் பழக்கமாகிவிட்டவர்கள் நவீனக் கவிதை கதவுகளை மட்டும் ஏன் திறக்க முடியவில்லை என்பதற்கு முகாமையான காரணி சினிமாக் கவிஞர்களிடம் நாம் சிக்கிக்கொண்டதுதான் காரணம்.
   வைரமுத்து பாடல்கள் பின்னர் அவரால் எழுதப் பட்ட அதே வகைமாதிரிக் கவிதைகள், அதனை நம் ஊடகங்களும் (மின் ஊடகங்களும் சேர்த்து குறிப்பாக வானவில் , வானொலி , அங்கே பணிபுரியும் அசாதாரண கவிக் கோமகன்கள்) டி. எச். ராகாவிலும் , மலேசிய வானொலியிலும் வானவில்லிலும் பணிபுரியும் வைரமுத்துவின் சாமர வீசுனர்கள்  மெய்சிலிர்த்து ,முன்னெடுத்து , ஊதிப் பெருக்கிய விதம் நவீனக் கவிதைகளின் பயணத்தை ஸ்தம்பிக்கச் செய்து விட்டன.
 
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான் மறந்தான்
மரம்தான் மரம்தான்
மனிதன்
மரம்தான் மரம்தான்

என்ற இந்த வகைமாதிரி சவவடிவத்துக்குப் போய்விட்ட கவிதைகளின்

ஆக்ரமிப்பை இன்னும் அசைக்கமுடியவில்லை. இவர்களின் எளிமையான  யதார்த்தவாத வணிக இலக்கிய வெளியில் சிக்கிக்கொண்டு வெளியாக முடியாமல் இருப்பது பெரிய சாபக்கேடு.
  புதுக்கவிதை தொடங்கிய இடத்திலேயே இருங்கள். நாங்கள் போய்விட்டோம் வெகுதூரம் என்ற குரல் கொடுத்த மௌன விழா அதுவோ?
   

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...