எஸ்ரா என்று செல்லாமாய் அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணனை நேரடியாகச்சந்தித்து உரையாட 2004 ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு தமிழகம் சென்றிருந்த போது நாங்கள் மூன்று நண்பர்கள் , செய்த முயற்சி தோல்வியில் முடிந்ததும் எனக்கு தமிழக எழுத்தாளர்கள் மேல் வெறுப்பு உண்டானது. ஒரு கண நேரம் சந்திப்பாக மட்டுமே அது இருந்திருக்கூடும் என்றாலும் எஸ்ராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நழுவியதில் உண்டான ஒட்டுமொத்த வருத்தம் அது. ஆனால் அந்த வருத்தம் இம்மாதம் 18தேதி முதல் 21ம் தேது வரையிலும் அவரோடு கழித்த தருணங்களால் தவிடுபொடியானது. மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் பயிலரங்கில் நானும் ஒரு கட்டுரை வாசிப்பதாக இருந்ததால் 18 ம் தேதியே கோலாலம்பூர் பயணமாகவேண்டியிருந்தது. அன்று மாலை ஏழரை மணிக்கு கிரண்ட் பெசபிக் விடுதியை அடைந்ததும் நான் சந்தித்த முதல் மனிதர் எஸ். ரா. அப்போது அவரை பார்த்த அந்த முதல் கணம் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்துவிடப் போகிறது என்று பட்டது. அப்போது எஸ்ரா முனைவர் முல்லை ராமையாவோடு பேசிக்கொண்டிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் என்னை அவர் என் எழுத்தின் மூலம் முன்னமேயே அறிந்திருந்தது உவப்பளிப்பதாக இருந்தது.. குறிப்பாக மலேசிய எழுத்து தமிழகத்தில் அவ்வளவாக அறிமுகமானதில்லை. இருப்பினும் எஸ் ரா தேடி தேடிப் படிக்கும் பழக்கமுள்ளவராக இருந்ததால் என்னை அடையாளம் தெரிந்துகொண்டதில் வியப்பேதும் இல்லையென்றே தெரிந்தது.
எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன்," புண்ணியவான் உங்களோடுதான் இருப்பார். நீங்கள் இன்றிரவைத் தனியே கழிக்க வேண்டியதில்லை," என்றதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட எனக்கே அதிகமாக இருந்தது. நான் ,ராஜேந்திரன் . கார்த்திகேசு, முல்லை ராமையா, செண்பகவல்லி, மின்னல் வானொலி அறிவிப்பாளர் பொன்.கோகிலம். விக்னேஸ்வரன், ஆகியோர் எஸ்ராவோடு இரவு உணவை விடுதிக்கு அருகில் உள்ள டி.எம். எஸ் உணவகத்தில் முடித்துக் கொண்டதும். மற்ற அனைவரும் இல்லம் திரும்ப நானும் எஸ்ரா மட்டுமே இரவைக் கழிக்கத் தயாரானோம்.
"எனக்கு இரவில் வெகு நேரம் தூக்கம் வராது , நீங்கள் என்னோடு இருக்கப் போகிறீர்கள் என்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று எஸ்ரா சொன்னார்.
"எனக்கும் அப்படித்தான் நள்ளிரவைத்தாண்டியும் உறக்கம் தழுவாது," என்று சொன்னேன்.
"நல்லதாகப் போயிற்று பேசிக்கொண்டிருக்கலாமே," என்றார் வெளியில் தெரியாத புன்னகையோடு. இருவருக்குமான நட்பின் கேமிஸ்ட்ரி முதல் சந்திப்பிலேயே உணரத்துவங்கினோம்.
இலக்கியம் பேசுவதானால் இரவு இன்னும் நீண்டிருக்கவேண்டும் எனக்கு.அதுவும் எஸ் ரா பக்கத்தில் இருக்கும் போது கேட்கவே வேண்டியதில்லை.
அன்று இரவு மலேசிய இலக்கியம், அரசியல், சமூகம் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அ. ரெங்கசாமியை நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவரிடமிருந்து எனக்கு வியப்பைத்தரும் வினாவொன்று இருந்தது. இங்குள்ள எழுத்தாளர்கள் ஏன் பிரிட்டிஷ் ஆதிக்கக்காரர்களின் ஆதிக்கப் போக்கை எழுத்தில் அவதானிக்க முடியவில்லை என்பதுதான். இந்தியாவைப் போன்றில்லாமல் வெள்ளையனை துரையென்றே விளித்து மரியாதை கொடுப்பதும், அவர்கள் உங்கள் முன்னோர்களை அடிமைப் படுத்தி வைத்திருந்ததை எழுத்தில் பெரிதாக ஏதும் ஒன்றுமில்லையே என்று கேட்டார்.
"இல்லையே ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கிறார்களே" என்று பதிலுரைத்தேன். அவர்களுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின்யபோது நடந்த அட்டூழியங்கள் எழுத்தில் முழுதாய் பிரசன்னமாகவில்லையே என்ற கருத்தை மறுத்து. மலேசிய இலக்கியத்தை உதிரி உதிரியாகப் படித்துவிட்டு நம்மிடம் மெச்சுதல் வாங்க மேடையில் புகழ்பாடிவிட்டுச் செல்லும் தமிழக எழுத்தாளர்களின் மத்தியில் எஸ்ரா ஊன்றிப் படித்திராவிட்டால் இவ்வாறான வினா எழுந்திருக்க வாய்ப்பில்லை என்றே பட்டது!
அப்போதைக்கு என்னிடம், அந்த சந்தேகத்துக்கான ஒரு பதில் மட்டுமே இருந்தது.
இந்தியர்கள் இப்போதுள்ள மலாய்க்காரர்களின் இனவாத அரசியலைவிட வெள்ளையர்களின் ஏகாதிபத்திய அரசியலை மேலாக விரும்பினார்கள் என்பதே, வெள்ளையர்களின் ஆட்சியின்போது தமிழர்கள் அரசு உயர் பதவிகளின் நியமிக்கப் பட்டிருந்தார்கள். இந்தியர்களின் கடுமையான உழைப்பை மதித்து அங்கீகாரம் அளித்தார்கள்.ஆனால் விடுதலைக்குப் பின்னர் மலாய்க்காரகளுக்குச் சட்ட ரீதியாக சிறப்புச் சலுகை வழங்க வகை செய்தமைக்கும், தமிழர்களைத் திட்டமிட்டே புறந்தள்ளியமைக்குமான வெறுப்பு எழுத்தாளர்களிடையே இருந்தமையால் வெள்ளையனை வெறுப்பதற்கான முகாந்திரங்களை கண்டுகொள்ளவில்லை யென்பதே என் அபிப்பிராயமாக இருந்தது.
ஆனால் தமிழ் படைப்புக்களில் வெள்ளையனுக்கு எதிரான உணர்வு எழுப்பப் படவில்லையென்பது, எஸ்ரா கருத்துரைத்த பிறகு நான் உணரத்துவங்கினேன். ஜப்பானியரின் கொடுங்கோலாட்சியை எழுத்தில் காட்டிய வேகம் வெள்ளையன்மேல் காட்டவில்லை என்பது உண்மையே!
அன்றிரவு , இங்குள்ள மலேசிய இந்தியர்கள் இனவாத அரசியாலால் எவ்வாறு சிறுமைப் படுத்தப் பட்டார்கள், இன்றுவரை பெரும்பாலான இந்தியர்கள் அதனை உணரவில்லை என்பதை அவரிடம் விளக்கியவண்ணம் இருந்தேன்.
இரவு நள்ளிரவைத்தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது.
வாங்க போய் தேனீர் அருந்திவிட்டு வருவோம் என்றேன். அவர் 'தண்ணி"சாப்பிடும் பழக்கமில்லாதவர் என்று முன்பே அறிந்திருந்தும் நான் "அவரைத் தண்ணி சாப்பிடுவீங்களா? என்று கேட்டு வைத்தேன்.
அவர் மிக நாகரிகாமாக," அந்தப் பழக்கம் எனக்கு இல்லை,"என்றார். எதிர் பார்த்த பதில் தான்.
பக்கத்திலுள்ள சீனர் உணவகம் எப்போதும்போல சீனக்கூச்சல் மரபில் தோய்ந்திருந்தது. சற்று தள்ளி அழைத்துச் சென்றேன். ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்பார். அவருக்கு வியர்க்கத் துவங்கியிருந்தது. "களைப்பாக இருந்தால் சொல்லுங்கள் எதிரில் அங்காடிக் கடை இருக்கிறது," என்று அழைத்தேன். "இல்லை பராவாயில்லை, நடக்கலாம்," என்றார். ஒரு தேசாந்திரியைப் பார்த்து இவ்வினாவை நான் கேட்டிருக்கக்கூடாதுதான். வெகு நேரம் அமர்ந்திருந்ததால் எனக்கும் கொஞ்சம் காலாற நடக்கவேண்டும் போலிருந்தது.
மேம்பாலத்தைக் கடந்து, எதிர்ப் புறத்தில் இருக்கும் திறந்தவெளி கடைக்கு அழைத்துச் சென்றேன்.
இரவு முழுதும் சாலையில் கார்கள் பெரும் சத்ததோடு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் சென்ற கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பட்டணங்கள் பகற்பொழுதைப் போலவே இரவிலும் விழித்தே கிடந்தது. பட்டண மனிதர்கள் இரவில் உறங்கும் பழக்கம் இல்லாதவர்கள் போன்று இயல்பாகவே இருந்தனர்.
நாங்கள் ஆர்டர் செய்த தேனீரும் பாலும் ஓரிரு நிமிடத்தில் கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. என் கண்ணாடிக் கோப்பையைத் தொட்டபோது பாலைக் குடிப்பதற்கு இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் போல இருந்தது. தொட முடியாத அளவுக்கு சூடு. எஸ் ரா அப்போது தேநீரை குடித்து முடித்திருந்தார்.
"என்ன சார் தேநீர் கொதிக்கிறதே," என்றேன். மஷனுக்கு அவ்வளவு தாகமா என்று எண்ணியவாறு.
"எனக்குச் சுடச் சுடக் குடித்தால்தான் பிடிக்கும்," என்றார்.
"அதற்காக இவ்வளவு சூடாகவே?" என் கோப்பையை வாய்க்கருகில் கொண்டுபோக முடியாத நிலையில் எப்படி எஸ்ரா இந்த சாகசத்தை செய்தார் என்ற வியப்போடு கேட்டேன்.
"சூடாகக் குடித்தால்தான் அது உடலுக்குச் செலுத்தும் வீர்யத்தை உணரமுடியும் ,"என்றார்.
தொடரும்...........
Comments
எஸ்ராவை கெடாவுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன். லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கைப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் அவரின் சினிமா பேட்டி காரணமாக இரு நாட்களின் வருகையை சுருக்கிக்கொண்டு கிளம்பி விட்டார். அவர் வந்திருந்தால் நீங்கள் கண்டிப்பாய்ச் சந்தித்திருக்கலாம்தான். மலேசிய எழுத்தாளர் சங்கம் ஒரு சிறுகதைப் பட்டறையை ஏற்பாடு செய்கிறது. நீங்கள் கலந்துகொள்ளுங்கள். என் சிறுகதைத் தொகுப்பு விரைவில் வெளியீடு காண்கிறது .உங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரியபடுத்துகிறேன். வலைப்பூ படித்து கருத்துரைதமைக்கு நன்றி.