கவிஞர் மணிமாறன்
கவிஞர் தேவராஜன், தலைவர் ராஜேந்திரன்
ஊக்கச் சக்தி முனைவர் முல்லை
சமூகச் சிந்தனையாளர் ராமேஸ்வரி
ஏற்பாட்டுக் குழுத் தலைவி செண்பகவல்லி
தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது என்னைப்போன்ற படைப்பாளனுக்கு உவப்பான விடயம். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலக்கிய வீதியில் காலாற நடக்க சாத்தியமாகியிருக்கிறது இப்போதெல்லாம். படைப்பாளன் தளம் எங்கே நிறைவுறுகிறது என்றால் வாசிப்பில் தொடங்கி, அகவயப் பார்வையில் தொடர்ந்து, எழுத்தில் திளைத்து பின்னர் விமர்சனத்தில் அல்லது குறைந்தபட்சம் புறத்தே நோக்கி பார்க்கும் பார்வையில் முடிகிறது. இதில் சுயவிமர்சனம் எழுத்தாளனுக்கு மிக அவசியம். தன் படைப்பைச் சுயமாக விமர்சனம் செய்துகொள்வதிலும் , அதில் காணும் குறைகளைக் கடந்து வருவதிலும் அவனின் இலக்கிய வாழ்வு முழுமையடைகிறது என்று சொல்வேன்.
இலக்கிய நிகழ்வுகளில் பாசாங்கு போக்கு ஆங்காங்கே தலை காட்டினாலும் , இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் இலக்கை அடைந்தோமா என்ற விமர்சனம் முகாந்திரமானது. சமீபத்தில் மலேசிய எழுத்தாளர் சங்கம் மீண்டும் ஒரு புதுக்கவிதை கருத்தரங்கை முன்னெடுத்தது. நவீனக் கவிதைகள் படைக்கப்பட்டு வரும் இந்நாளில் நாம் ஏன் புதுக்கவிதை முதுகில் ஏறி சவாரி செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒருகால் புதுக்கவிதை எழுதுவதிலேயே நாம் கரை சேரவில்லை என்பாதாலும் இருக்கலாம். ஆனாலும் இலக்கிய தேட்டத்தில் நவீனக்கவிதை தன்னை தகவமைத்துக்கொள்ளும் பரிணாம காலக் கட்டத்தில் நாமும் அதனோடு இயைந்து நடப்பதுதான் அறிவுப்பூர்வமானது. மரபுக்கவிதை இலக்கியம் கிட்டதட்ட களத்திலிருந்து காணாமற்போனது எதனால் என்ற ஆய்வை முன்வைக்கும்போது அதன் இறுக்கமான மரபிலக்கணம், அதனை எழுதுவோரின் கவிதைகளில் காணும் இலக்கண முரணை இலக்காரம் செய்வது, கவி மன உணர்வை பொறுத்தமான வார்த்தைகளால் சொல்ல இயலாமல் போவது, மரபு இயங்கிய காலத்தின் பாடுபொருளை பாடி முடித்துவிட்டது, சொன்னதையே சொல்லிச் சொல்லி போரடிப்பது, அரசர்களைப் புகழ்ந்துரைத்த மரபு இக்கால கனவான்களிடமும் தொடர்வது போன்ற செயல்களால் மரபு தன் பிடியை மெல்ல நழுவச்செய்துவிட்டது. இதுபோன்ற காரணங்களையே நாம் புதுக்கவிதை பாதை ஏதோ ஒரு முனையில் முடிந்துபோன சாத்தியத்தை முன்வைக்கலாம்.
மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சபாபதி புதுக்கவிதையின் உத்திமுறைகளைபற்றி பேசிவிட்ட பிறகு, எப்போதும் போலவே கவிதைப் பட்டறை நடத்தப்பட்டது. அவரின் பேச்சு அகத்தூண்டலாக இருக்கும் அதே வேளையில் சில புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதனையே கவிதை எழுதுவதற்கான பாடு பொருளாக்கப்பட்டது. சபாபதியின் பேச்சு புதுக்கவிதையின் குறியீட்டு உத்தியை அதிகமாக கொண்டதால் எழுதப்படும் கவிதைகள் குறியீடுகளைப் தங்கள் கவிதைகளில் பயன்படுத்தின. இருப்பினும் நல்ல கவிதைகளைக் காணமுடியவில்லை. சிரம்பானில் வசிக்கும் மணிமறன் என்ற கவிஞர் (படைப்பிலக்கிய களத்திலிருந்து காணாமற்போனவர்) அந்தக் கருத்தரங்குக்கு இவ்வாண்டின் தொடக்க ஆறூமாத காலத்தில் காகித ஊடகங்களில் வெளிவந்த கவிதைகளைப் பற்றிய ஆய்வையும் சிறந்த கவிதை மூன்றையும் பரிசுக்காக பரிந்துரைத்திருந்தார். ஆய்வைப்பற்றிய தொகுப்புரையை நான்தான் வழங்கவேண்டுமென்று பிடிவாதமாக அழைத்தார். என் உரையில் இரண்டு போதாமைகளைச் சொன்னேன்.
1. ஆய்வில் சில இளைய நம்பிக்கை எழுத்தாளர்கள் யாவரென்று அடையாளம் காட்டியிருக்கவேண்டும். ஏனெனில்ளேழுத்தாளர் சங்கம் இளைய எழுத்தாளர்களைத் அடையாளம் காணவே இந்தக்கருத்தரங்கு.
2. மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தவிர்த்து மேலும் 10 சிறந்த கவிதைகளைப் பரிந்துரைத்திருக்க வேண்டுமென்றும் , சிறந்த கவிதைகள் ஆய்வில் இடம் பெறாதது குறித்தும் சொன்னேன். அந்த இரண்டு விடயங்களைத்தவிர கட்டுரை முழுமையாக இருக்கிறது என்றேன்.
இந்த ஆண்டு தொடங்கி கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த கவிதைகளில் ஜாசின் தேவராஜனின் கவிதை முதற்பரிசு பெற்றது, சைபீருக்கு இரண்டாவது பரிசும், பா.ஆ சிவத்துக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.
அதனையடுத்து எனக்கு 35 நிமிடங்கள் ஒதுக்கியிருந்தார்கள். நானும் புதுக்கவிதை பற்றி பழைய விஷயங்களையே பேசாமல் நவீனக் கவிதைகள் பற்றிப் பேசினேன்.
நவீனக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான மூன்று வேறுபாடுகளைச் சுடிக்காட்டினேன். எதனால் புதுக்கவிதை மரபுக்கவிதைபோன்றே தாக்குப்பிடிக்காமல் நீர்த்துப் போனது பற்றிப் பேசினேன்.
நவீனக் கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான வேறுபாடுகள்.
1. நவீனக் கவிதை பெரும்பாலும் படிமத்திலேயே இயங்கும். புதுக்கவிதை படிமத்தில் இயங்கியவைதான். ஆனால் அது படிமத்தை தேவையானபோதுமட்டும் பயன் படுத்திக்கொண்டது. குறியீடு, அங்கதம், தொன்மம், பகடி போன்ற புதுக்கவிதையை இயக்கிய உத்திகள் நவீனத்தில் அதிகம் பார்க்க முடியாது.
2. புதுக்கவிதைகள் பெரும்பாலும் புறவயமாகவே பாடியது. நவீனக்கவிதைகள் அகவயமாக இயங்கின. அகவயமாக இயங்கும் கவிதைகள் படிம உத்தியிலேயே தன்னிச்சையாக இயங்கும். அகவயமென்பது படைப்பாளனின் உள்மன ஆதங்கமாக, போதாமையாக, ஆவலாக, எல்லாவித மன உணர்வுகளின் வெளிப்பாடாக இயங்கும்.
3. நவீனக் கவிதைகளில் இசைத்தன்மை இருக்காது. மரபுக்கவிதைகளில் மெட்டமைத்துப் பாடமுடியும். அவை யாப்பிலக்கணத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவை. புதுக்கவிதையின் தாய் மரபுக்கவிதை என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம் புதுக்கவிதையில் வெளிபடையாக காணப்படும் சந்தம், எதுகை, மோனை போன்ற மரபின் எச்சங்களாகும். வைரமுத்து, மேத்தா, பா. விஜய் போன்றோர்களின் கவிதைகளில் இந்த இசைத்தன்மையில் எழுதப்பட்டவைதான். ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த வைரமுத்துவின் கவிதையே பாடலாக இசைத்தட்டை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
இந்த அடிப்படைகளைத்தொட்டே என் பேச்சு அமைந்தது. இரண்டு கலாப்ரியாவின் கவிதைகளை எடுத்துக்காட்டாகச் சொன்னேன். நம் நாட்டில் வெளிவந்த ஒரு சில நல்ல கவிதைகளும் எனக்கு உதவின.
என் உரையை உற்று கவனித்த பேராசிரியர் முல்லை மேலும் சில நுணுக்கமான வினாக்களை முன்வைத்தார். டாக்டர் சபாபதி தனக்கும் நவினக் கவிதை சார்ந்த தேடலுக்கு உதவியாக இருந்தது என்றார். எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அடுத்தடுத்து ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கில் நவீனக்கவிதைகள் பற்றிய ஆழமான தரிசனங்கள் அவதானிப்பு நடக்கும் என்றார். நவீனக் கவிதையை முன்னெடுப்பதற்கு என் பேச்சு முன்னோடியாக அமைந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
இந்தப் புதுக்கவிதைக் கருத்தரங்கை குமாரி செண்பகவல்லி தலைமையேற்று நடத்தியிருந்தார். அவரோடு இணைந்து பொன். கோகிலம், அஷாகில் ஆகியோர் சுறுசுறுப்பாக இயங்கி கருத்தரங்கையும் இளமையாக்கினர். இளையவர்களுக்கு தலைமைத்துவ பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமென்ற ராஜேந்திரனின் எண்ணம் வீண்போகவில்லை.
Comments