அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.
அம்மா
என்ற தலைப்பில்
கவிதை கேட்டார்கள்
‘அம்மா’
என்றேன் உடனே,
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
‘நீ’.....என்று ...தாஜ்
இந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது. வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை!. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவதுபோல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும் மெய்யும் இரண்டரக் கலந்து நிற்கிறது.
ஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னைத் தன்னோடு ஓரிடத்துக்கு வரும்படி அழைத்திருந்தான். எங்கே என்றெல்லாம் நண்பனிடம் கேட்கத்தோணவில்லை. என் வீட்டுக்கு வந்து என்னை தன் காரில் ஏற்றிக்கொண்டான். பின் இருக்கையில் ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தாள். பங்கரையான உடையில், மழலையின் சுவர்க்கோடுகளாய் கிறுக்கல் விழுந்த முகத்தில் சோகம் படிந்திருந்தது. வதங்கிய கீரைத்தண்டைப்போல ஒடுங்கியிருந்தாள். கண்களை மூடியிருந்தாள். அப்போது அவள் யாரென்று கேட்கத்தோணினாலும் வார்த்தைகள் என்னவோ முடமாகிக்கொண்டேயிருந்தன. சற்று நேர மௌனமான பயணத்துக்குப் பிறகு நண்பனே வாய் மலர்ந்தான்.
“இவங்கள அனாதை விடுதியில சேக்கணும். தனியா கெடந்து தவிக்கிறதவிட அந்த எடத்துல அவங்களுக்குத் தொணையா மத்த ஆளுங்க இருப்பாங்க, நீங்க துணைக் கையெழுத்துப் போடணும்” என்றான். வயது முதிர்ந்த திக்கற்றவளை அனாதை விடுதியில் சேர்த்த புண்ணியம் என்னையும் சேரட்டுமே என்று நானும் ஒத்துக்கொண்டேன்.
“யாருமில்லாதவங்க, போல இருக்கு. இன்னிக்கி நான் பிரீயா இருக்கேன், அதான் அங்க பதிஞ்சிராலாமுன்னு முடிவெடுத்துட்டேன், ரொம்ப நாளாவே இதச் செய்யணும் செய்யணும்னு நெனச்சிக்கிட்டிருந்தேன், இன்னிக்குதான் முடிஞ்சது,” என்றான்.
பின் சீட்டில் அமர்ந்திருக்கும் கிழவி எந்தச்சலனமுமில்லாமல் இருந்தால். திரும்பிப் பார்த்தபோது , கனத்த மௌனத்தோடு கண்களை மூடியபடியே இருந்தாள். உறங்கிவிட்டாள் போலும்.
“அவங்களுக்கு காது கேட்காது.” என்றார்.
அனாதையாக அலைந்து ஊர் சுற்றிப், பின்னர் ஒரு நாள் பசிக்காகக் கையேந்துவதைவிட அனாதை இல்லம் நல்ல புகலிடமாக இருக்குமென்ற எண்ணம் மனதுக்குள் ஓடியபடி இருந்தது. மேற்கொண்டு அவளைப்பற்றி விசாரிப்பதற்குள் எங்கள் உரையாடல் வேறு திசையை எட்டியிருந்தது.
அவளை அனாதை இல்லத்தில் விட்டு விட்டு வீடு திரும்பியிருந்தோம். அவளை அங்கே விட்டு விட்டு வெளியே வந்தபோது அவன் முகத்தில் என்று மில்லாத மலர்ச்சி ததும்பியிருந்தது.
பின்னொரு நாளில் ஏதோ ஒரு வேலையாக அவன் முகவரியைத்தேடி வீட்டுக்குசென்ற போது அவன் வீட்டு வாசலில் ‘அன்னை இல்லம்’ என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தேன். அப்போது அவன் வீட்டில் இல்லை எங்கோ வெளியே போயிருந்தான்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு நண்பரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது என் நண்பனைப்பற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவன் அனாதைகளுக்கு உதவுபவனென்றும், அன்னையின் மேல் அதிக பாசமுள்ளவனென்றும் , தன் வீட்டுக்கே அன்னை இல்லம் என்றுதான் பெயரிட்டிருக்கிறானென்றும் புகழ்ந்துரைத்தபடி இருந்தேன்.
நான் வெள்ளந்தியாகப் பேசிக்கொண்டிருந்ததை ஒரு அங்கதப் புன்னகையோடு அவதானித்துக் கொண்டிருந்தவன் சொன்னான், “அவன் தான் பெத்த தாயவே அனாதை இல்லத்துல விட்டுட்டு வந்துட்டான், ஊரு மெச்சிக்கணுங்கிறதுக்காக தான் வீட்டுக்கு அன்னை இல்லம்னு பேரு வச்சிருக்கான்,” என்றார். ஒரு சிறுகதையின் எதிர்பாராத திருப்பம் முகத்தில் அறைந்துவிட்டதுபோல நான் விக்கித்து நின்றபடி அசைவற்றுப்போயிருந்தேன். நான் அவனைச் சிகரத்தின் மீது ஏற்றி வைத்திருந்த மரியாதை பனிப்பாறைபோல உடைந்து சரிந்து பல்லத்தாக்கை நோக்கி உருண்டுச் சிதறிப் பாய்ந்துகொண்டிருந்தது.
மனிதர்கள் விநோதமானவர்கள். தன்னை முன்னிருத்திக்கொள்ள யாரையும் பலியிடத்தயங்குவதில்லை! தவமிருந்து வரம் வாங்கிப் பெற்ற பிள்ளை என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். அப்துல் ரகுமான் பொறுமை இழந்து இப்படிக் கேட்கிறார்.
வரங்களே
சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே
தவங்கள்
எதற்காக?
எதற்காகப் பெற்ற தாயை அனாதை இல்லத்தில் விடவேண்டுமென்ற நினைப்பு என்னைக் கரையானைப்போல அரிக்கத்துவங்கியிருந்தது. மருமகளுக்கும் மாமியாருக்குமான உறவில் விரிசல் காண்பது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இத்தனைக் காலமும் தான் பெற்று வளர்த்து ஆளாக்கியவனைக், கழுகு பறந்துவந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச் சென்றுவிட்டதைப்போல மகனைத் தன் பக்கம் ஈர்த்து வைத்துக்கொண்டாளே என்ற நெருடல் அவளைத் துன்புறுத்தியிருக்கக்கூடும். தனக்குச் சொந்த மாகிவிட்டவன் அம்மாவின் சொல்லுக்கு அடிபணிகிறானே என்ற எண்னம் மருமகளை வருத்தியிருக்கக்கூடும். பெரும்பாலான குடும்பங்களில் மருமகள் மாமியாருக்கிடையே நடக்கும் இழுபறிகளால்தான் உறவு முறியத் தொடங்குகிறது. தொடக்கத்தில் கண்களுக்குத் தெரியாத விரிசலாக இருந்து பின்னாளில் உடைப்புகளாக வெடித்துவிடுகிறது. இதற்கான தற்காலிகத் தீர்வாகவே மகன் அவளை அனாதை விடுதியில் விட்டிருக்கலாம் என்று தோணியது.
மனிதர்கள் எப்போதுமே வார்த்தைகளைச் சுமந்து திரிகிறார்கள். சினத்தில் சிதறி வரும் வார்த்தைகள் வெப்பத்தில் குஞ்சுபொறித்து இனப்பெருக்கத்தை உண்டுபண்ணிவிடுகிறது. வார்த்தைகள் சேகரமாக ஆக வன்மத்தின் சுமை கூடிவிடுகிறது. குறியீடாய் விழும் வார்த்தைகளைத்தான் நாயாகவும், பேயாகவும், குரங்காவும் நாம் உருவமாக்கிக்கொள்கிறோம். அவற்றைப் புறந்தள்ளுவதற்கு போதுமான புத்தி நமக்கு இருப்பதில்லை! குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், புதிய குற்றங்களை உண்டாக்கிவிடுவதிலும் நம்க்குள்ள விருப்பம் அவற்றைக் கலைவதில் இருப்பதில்லை! வார்த்தைச் சுமையைத் தாளமுடியாதபோது இப்படியான முடிவுகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் நான் படித்த ஒரு பழைய கவிதை இந்த சம்பவத்துக்கு எப்படிப் பொருந்திவருகிறது பாருங்கள்.
அம்மா
என்
பிஞ்சுவயதுப் பிரபஞ்சமே
எனக்கு நீ உலகமாகவும்
உனக்கு நான் உலகமாகவும்
இருந்த காலங்கள்
கல்யாணப் பந்தலில்
ஒரு புரோகித மந்திரத்தில்
ஒடிசலான ஒரு பூனைக்குட்டி
தேவ கன்னிகையாய் பரிமளித்து
ஆச்சிரிய நிமிடங்கள்
உன் ஆசிர்வாத
அட்சதை மணிகள்
அப்புறம்..... அப்புறம்....
அம்மா...... அம்மா...
என் பிஞ்சுவயதுப் பிரபஞ்சமே
உனக்கும் எனக்கும்
இடையில் விழுந்ததே
ஒரு அழுத்தமான
மௌனத்திரை (மௌனத்திரை- சர்ப்பயாகம்)
ஒடிசலான ஒரு பூனைக்குட்டி என்ற குறியீடு தனக்கு வாய்த்த மனைவியைச் சுட்டுகிறது. ஒரு தேவ கன்னிகையாகப் பரிமளித்தவள் தன் பிஞ்சுவயது உலகமாக இருந்த அம்மாவைக் காவுகொண்டு விடுவதை அங்கதமாகச் சொல்கிறது கவிதை. அம்மாவுக்கும், மகனுக்கும் இடையே அந்தத் தேவ கன்னிகை திரையாக விழுந்துவிட்ட வாழ்வின் நிதர்சனத்தைக் கவிதை புலப்படுத்திவிடுகிறது. கவிதை என்பது அதன் சொற்கள் மற்றும் சொல்லிடை வெளிகளில் ஆன மௌனங்களால் ஆனது.. வாசகன் குறியீடுகளை தன் வாழ்வனுபவத்தால் உடைத்துப்பார்க்கும்போது டுரியானிலிருந்து வெளிப்படும் சுளையும் அதன் வாசமும்போல கவிதையின் பொருள் அவனை வந்தடைகிறது.
புரியாத கவிதை என்று ஒன்றில்லை. முள் தரித்த ஒரு முரட்டு டுரியானைப் போன்று முதல் வாசிப்புக்குத் தோன்றும கவிதையை உடத்துச்சுவைப்பதற்கு வாழ்வனுபவத்தைக்கொண்டே அணுக வேண்டும். வாசகனின் அந்தரங்கத்தில் உள்ள அனுபவ மண்டலத்தில் அது அளிக்கும் பொருள் முக்கியமானது.
Comments
கடுகுக் கவிதையானாலும் இரத்தத்தை உறையவைக்கிறது.