வற்றாது ஒடும் நதி

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்  கனத்த இதயத்தோடுதான் நான் பணி ஓய்வு பெறும் நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இனி அத்துவான வெளியைப்பொல சலனமற்று விரிந்திருக்கும் வெறுமையான நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற இனம் புரியாத அச்சம் மனதுக்குள் கசியத்துவங்கியிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களிலேயே அந்த அச்சம் உச்சி வெயிலின் நிழலென சுருங்கிவிட்டிருந்தது! எனக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் என்னோடு கவச குண்டலமாய் ஒட்டிக்கொண்டிருந்ததால் பணி ஓய்வு பெற்ற வெறுமையான நாட்களை எளிதில் கடந்து செல்ல  முடிந்திருந்தது. கலை சார்ந்து இயங்காதவர்களின் வாழ்க்கையின் வெறுமையான நாட்களை எளிதில் கடந்துவிடும் உபாயம் பெற்றிருப்பார்களா என்பதில் என் மனதில் தீராத சந்தேகம் வடிந்தபடி இருக்கிறது.

என் நீண்ட கால ஆசிரியர் பணியை செம்மையாகச் செய்ததுண்டா என்ற வினா  மின்சார, தண்ணீர், தொலைபேசி கட்டண பில் போல  என்னை விடாமல் பின் தொடர்ந்தவண்ணம் உள்ளது. பள்ளியில் நான் போட்ட திட்டங்கள் பல நிறைவேறியும், சில வற்றில் தோல்வியும், முழுமூச்சாய் ஈடுபடாததால் சிலவற்றில் நிறைவின்மையும் உண்டானதுண்டு. தலைமை ஆசிரியப் பணியின்போது உண்டான பின்னடைகளும், முழுமையின்மையுமான செயற்பாடுகள் இன்றைக்கும் என்னைத் துன்புறுத்துகிறது. என் சுய சிந்தனையை நிறைவேற்றவிடாமல் தலைக்குமேல் காத்திருந்த கல்வி அமைச்சின்- இலாகாவின் தொடர் திட்டங்களால்  முடங்கி மூச்சுத்திணறியதுண்டு. இன்னும் நிறைவாகச் செய்திருக்கலாமே என்னை ஆதங்கத்தோடு எண்ணம் என்னைத் திரும்பிபார்க்கச் செய்கிறது. இங்கேதான் காலங்கடந்துவிட்ட சிந்தனை படிப்பினையாக மலர்கிறது போலும்!  என்னை நம்பி வந்த மாணவர்களுக்கு முறையாக சேரவேண்டிய கல்விச்செல்வத்தை ஒப்படைத்தேனா என்ற எண்ணம் ஆற்றின் சுழியைப்போல சுழன்றபடியே இருக்கிறது. மனசாட்சி குரங்கைப்போல சதா இயங்கிக்கொண்டே இருப்பதால்  குறைகளை ஓசையின்றி, நம்முடைய காலக்கணக்கில் ரகசியமாய் எழுதிக்கொண்டே தன் வலிமையை நமக்கு நிரூபித்தவண்ணம் நகர்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதம்படி என்னை வற்புறுத்திய இன்றைக்கு நடந்த இரண்டு சம்பவங்களை நான் சொல்லவேண்டும். என் முகப் பக்கத்துக்கு வந்த ஒரு செய்தி முதலில் தருகிறேன். முகப்பக்கம் பழைய நண்பர்களையும் நம்மோடு இணக்கமாக இருந்தவர்களையும் நாம் நினைவுகூர ஏதுவானதான சந்தர்ப்பத்தை அமைத்துக்கொடுக்கிறது. இன்றைக்குக் காலையில் மீண்டும் ஒரு மாணவி சார் நான் உங்களை மறக்கவில்லை, நீங்கள் எங்களுக்குச்செய்த நற்பணிகளைப்பற்றி என் புதிய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தாள். ஒரு நல்லாசிரியருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமிது. மேடை கௌரவங்களும் பொன்னாடைகளும் செய்யமுடியாத ஒன்றை வார்த்தைகள் மாலையாக கோர்த்து வழங்கிவிடுகின்றது. மாணவர்களைக் கொண்டாடுவதில் உண்டாகும் மனத்திருப்தி காலங்கடந்து வந்தாலும் அது தரும் சுகம் அலாதியானது.
   தினங்களை கொண்டாடுவதை
   விட்டு விட்டு
   குழந்தைகளைக் கொண்டாடுங்கள்
என்ற ஒரு கவிஞரின் அறிவுரை எவ்வளவு சத்தியம் மிக்கது பாருங்கள்.

இன்னொரு சம்பவம் நான் என் மகனின் இன்சூரண்ஸ் பாலிசிக்கு பணம் கட்டப் போன இடத்தில் நடந்தது.
சார் நீங்க தமிழ் ஸ்கூல்லதான வேல செஞ்சீங்க? என்று கேட்டவாறு என்னை எதிர்கொண்டார் ஒரு முகமறிந்த நண்பர்.
நான் “ஆமாம்” என்றேன்.
“அபப்டின்னா ஒங்களுக்கு கண்ணையா சார தெரியணுமே?” என்றார்.
“நல்லாவே தெரியும் அவர் அமைப்பாளராக இருந்தார். கடசியா ஆஸ்டிரேலியாவுக்குக் குடியேறனதா  கேள்விப்பட்டேன்,” என்றேன்.
“அருமையான வாத்தியாரு சார் அவரு. நான் இன்னிக்கி இந்த நெலமியில் இருக்கேன்னா அதுக்கு அவர் முக்கியமான காரணம் சார். என்னை அன்போடு பாத்துக்கிட்டரு சார். எனக்கு செலவுக்கு காசெல்லாம் தருவார் சார்,” என்றார்.
ஆசிரியரின் கடமை போதிப்பதோடு நின்றுவிடுவதில்லை. ஒரு மாணவனுக்கான தேவையை உணர்ந்து அவனுக்கு உற்ற துணையாக செயல் படும்போதுதான் ஒரு ஆசிரியர் நினைவில் நீங்காது , மாணவரின் தங்கச் சிம்மாசனத்தைப் அமர்ந்து கொள்கிறார். ஒரு நல்லாசிரியருக்குக் கிடைக்கவேண்டிய தார்மீகமான அங்கீகாரமிது!

அவரின் அடுத்த செய்திதான் எனக்கு நிலைகொள்ளாமையை உண்டாக்கியது. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் பெயரைச் சொல்லி இவனைத்தெரியமா என்றும் வினவினார். தன் வாழ்வின் குறுக்கே வந்த ஒரு வில்லங்கமான கதாபாத்திரத்தைக் கொடுமையான பின்னணி இசையின் மூலம் அறிமுகப்படுத்துவதுபோல இருந்தது, ‘இவனைத்’ தெரியுமா என்ற எகத்தாள வார்த்தை.
“கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்று பதிலுரைத்தேன்.
“சார் இந்த வாத்தியாருதான் சார் நான் செய்யாத குற்றத்துக்காக என்னை லோக்கப்ல போட்டான்,” என்றார்.
“நீங்க மாணவரா இருக்கும்போதா?” என்ற வியப்போடு கேட்டேன்.
“ஆமா சார் இடைநிலைப் பள்ளியில படிச்சிக்கிடிருக்கிறப்போ நான் ஸ்டோர் ரூம்லேர்ந்து திருடிட்டேனு போலிஸ¤க்கு புகார் கொடுத்துட்டாரு சார். என்னப்புடிச்சு உள்ள போட்டானுங்க,” என்றார்.
இந்தத் தகவல் என் இரு கால்களையும் பற்றி, சுவற்றில் வீசி அறைந்தது போல இருந்தது. ஆசிரியர் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்துகொள்ளவேண்டும்? திருடி இருக்கலாம் என்றாலும் பள்ளியில் நடந்த சம்பவத்தை பள்ளியிலேயே அல்லவா விசாரித்து தண்டனை கொடுத்து முடித்திருக்க வேண்டும்? பதின் வயதின் அதுவும் பள்ளிப் பருவத்தில் சிறைக்கு அனுப்பும் கொடுமை ஒரு மாணவரின் வாழ்க்கையில் ஆறாத புண்ணாக அல்லவா தீராது வலித்துக்கொண்டிருக்கும்?( இண்டர்லோக் நாவலைப் படிக்கமாட்டோம் என்ற ஒரு பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் திருப்பிக்கொடுத்தபோதும் காவல்துறை வரை மாணவர்கள் இழுக்கப்பட்டு அவமானப் அப்டுத்தப் பட்ட சம்பவமும் , ஆசிரியரின் மீது உண்டான் கோபம் நினைவுக்கு வருகிறது.)
“சார் நான் அவனை நேத்த எதேச்சையா சந்திச்சிட்டேன் சார்,” என்றவர் முகத்தில் வன்மம் வெடித்திருந்தது..” நீ இன்னும் உயிரோடையா இருக்கேன்னு கேட்டுட்டேன். இன்னைக்கு தேதி வரைக்கும்  எனக்கு ஆத்திரம் தீரல,” என்றார். மனசாட்சி தனக்கு ஏற்பட்ட அவமானக்களை வங்கியின் நீண்ட கால நிரந்தர இருப்பைப்போல  சேகரம் செய்து பத்திரமாக வைத்துக்கொண்டே இருக்கிறது.  பழி வாங்க சந்தர்ப்பம் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது. வாய்ப்பு நேரும் போது தன் கோர நகங்களைக் கொண்டு பிராண்டி விடுகின்றது. அவரைப் பழி வாங்க எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன! பழி வாங்கும் எண்ணம் வற்றாத நதியைப்போல இயங்கிக்கொண்டே இருக்கிறது.? அவ்வப்போது தோலுறித்துக்கொள்ளும் பாம்பு போல பழிதீர்க்க தன் கோபத்தைப் புதுப்பித்துக்கொள்கிறது.
     ஆனால் நல்லாசிரியர்கள் எப்போதுமே மாணவனின் (மனிதனின்) மனப்பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். நெகிழ்ச்சியோடு நினைவுகூரத்தக்கவர்களாக ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீராவாணியின் கவிதை திகழ்கிறது.
      
         தாவரவியல் பச்சையம் நீங்கள்
         எனக்குள் அனைத்தும்
         உற்பத்தியாகின்றன.
         நீங்கள் வீசியெறிந்த பிராணவாய்வால்
         இன்றுவரை என்னுள்
         சகமான சுவாசிப்பு!
         அரிசுவடி கற்பிக்கையில்
         உங்கள் சேலைத் தலைப்பில்
         பூத்த கனவுகள் சேலையுடுத்தும்
         ஒவ்வொரு பொழுதிலும் என்னில் குலுங்கி
         மணம் பரப்புகின்றன.
         பேசு நீயென்ன பேசாமடந்தையா
         என்ற உங்கள் வார்த்தைகள்
         எனக்குள் இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன
         அன்று பேச மறந்ததையும்
         இன்னும் பேச மறுப்பதையும்
         என் பேனா பேசிக்கொண்டிருக்கின்றன
         என்னுள் நீங்கள் விதைத்த கனவுகளில்!           (மீராவாணி)
ஆசிரியரின் போதனையை பிராணவாய்வு என்ற குறியீட்டில் சொல்லும்போது ஆசிரியரின் மீதான மரியாதை மேலும் உயர்கிறது. ஆசிரியர் வகுப்பில் மாணவர் முன்னிலையில் திட்டியதுகூட பின்னாளில் தித்திப்பாய் மாறுவதுதான் மகோன்னதமானதாகவும் வியப்புக்குரியதாகவும் மிளிர்கிறது. அன்றைக்குத் தேவையானதை மட்டுமா ஆசிரியர்கள் தருகிறார்கள்? ஒரு முன்னோக்குச் சிந்தனையுடன் தூரநோக்கைத் தொடப் பார்க்கும் புனிதப் பயணமது.
         கவிதை முதல் வாசிப்பில் நமக்குள் நுழைய மறுத்தால், மறு வாசிப்பைச் செய்யவேண்டும். வாசகன்தான் கவிதைக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டும். பல கவிதைகள் முதல் வாசிப்பில் வாசகனுக்குள் நுழையாது. என்வே தொடர் முயற்சி பலனளிக்கும். தொடர் வாசிப்பில் வார்த்தைகள் பொருள் உடைந்து கசிய ஆரப்பிக்கும். அப்போது கவிதையின் முழு அவதானிப்புசாத்தியமாகும் வாய்ப்பு உண்டு. வாசிக்க வாசிக்க புதுப்புது பரிமாணங்கள் நம்மை வியக்கவைக்கும் –சுகிக்கும்.  பழம் கைக்குக் கிட்டவில்லையே என்று உச்சிக்கொம்பை அடையாதவன் அதன் சுவையை மறுதலிப்பவனாகிறான். இது நமக்குப் புரியாது என்று தூர விலகும்போது கவிதையும் தூர விலக்கிப்போகும். எவ்வகையிலும் அது கவிதைக்கு நட்டமில்லை. வாசகனுக்குத்தான்!
   Comments

KAVIN said…
ம்..உண்மைதான். ஓர் ஆசிரியரின் பணி மகத்துவமானது. அப்பணியில் மாணவர்கள் மனதில் நாம் எவ்வாறு பதியம் ஆகிறோம் என்பதை காலம் வயதைக் கரைத்து விட்டு உரக்கச் சொல்லும்.
KAVIN said…
ம்..உண்மைதான். ஓர் ஆசிரியரின் பணி மகத்துவமானது. அப்பணியில் மாணவர்கள் மனதில் நாம் எவ்வாறு பதியம் ஆகிறோம் என்பதை காலம் வயதைக் கரைத்து விட்டு உரக்கச் சொல்லும்.