Skip to main content

தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கு துணை முதல்வர் திரு கோவிந்தசாமி
 ஆசிரியர் முனிச்செல்வியுடன் நான்

என் எழுத்துச் சகோதரி முனிச்செல்வி  ஏற்கனவே தான் போதித்த பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த என்னை அழைத்திருக்கிறார். அது ஒரு அலாதியான அனுபவம். தானும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் படைப்பிலக்கியம் பற்றிய வற்றாத பற்று  ஊறிக்கொண்டே இருக்கிறது . இம்முறையும் மாணவர் பயனுற என்னை தற்போது அவர் பணியாற்றும் தாமான் பெர்வீரா இடைநிலைப் பள்ளியில் ஒரு பயிலரங்கை நடத்தச் சொல்லி கேட்டுக்கொண்டதிலிருந்து இலக்கியம் சார்ந்த அவரின் ஈர்ப்பு நன்கு புலனாகிறது.( ஏன் அவரையே அழைக்கிறீர்கள் ,எனக்கு ஒரு  வாய்ப்பு தரலாமல்லவா என்று யாராவது உங்களைக் கேட்டும் வரலாம் செல்வி) ஒரு மூன்றாண்டு காலம் தன்னுடைய முதுகலைப் படிப்பை வெற்றிகரமாய் முடித்துவிட்டு இந்தப் புதிய பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் அவர்.எங்கே போனாலும் மாணவர்களோடு அன்பான தொடர்பு வைத்திருப்பவர் இவர். அவர்களுக்கும் படைப்பிலக்கிய ஆற்றல் வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.
கடந்த வெள்ளிக்கிழமை 17.2.2012 ல் சரியாக 12.50 க்குப் பள்ளியை அடைந்ததும் என்னை வரவேற்றவர் அப்பள்ளியின் துணை முதல்வர் திரு. கோவிந்தசாமி அவர்கள். என்னை அடையாளம் தெரிந்தது எனக்கு முதலில் வியப்பாகவே இருந்தது. அதிலும் நான் ஒரு எழுத்தாளர் என்பதை அவர் அறிந்து வைத்திருந்ததுதான். அவர் என் படைப்புகளை வாசித்திருக்கிறார் என்பதை அவரின் துவக்க உரையில் புலனானது. என் புகழபெற்ற கவிதையை (இவன் நட்ட மரங்கள்…..) அவரும் மாணவர் முன்னால் சொன்னதில் நான் மெய்யுருகிப் போகவில்லை என்றாலும்….(பழகிப்போயிடுச்சு) ஒரு துணை முதல்வர் வாயிலிருந்து வரும்போது அது எத்தனை உள்ளங்களில் குடியிருக்கிறது என்பதையும் , அது வியந்தோததற்குரியதுதான் என்பதையும், அது பிறருக்கான அகத்தூண்டலாக இருப்பது மட்டுமல்லாமல் என்னையும்  உற்சாகமூட்டுவதாக அமைகிறது என்பதில் ஐயமில்லைதான். ஆசிரியர் முனிச்செல்வியின் அறிமுக உரையில், என்னை அவ்வளவு தூரம் பாராட்டிப் பேசி இருக்கவேண்டாம் என்றே தோன்றுகிறது. ஒரு முன்னோடியை மாணவர் முன்னால் பாராட்டியே ஆக வேண்டும் என்பது அவர்களுக்கான உந்து சக்தியாக அமையவேண்டும் என்று ஆசிரியர் நினைத்திருந்ததையும் மறுப்பதற்கில்லை.
நானும் துணை முதல்வரும் இல்ஹாம் அறைக்குள் நுழையும்போது மூன்றாம், நான்காம், ஐந்தாம் படிவ மாணவர்கள்  சுமார் அறுபது பேர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆசிரியர் இல்லாத அறை படும் அல்லோல கல்லோலம் அங்கே இல்லாதிருந்தது வர்வேற்புக்குரிய சூழலுக்கு ஏற்றதாக இருந்தது. இந்த அசாத்ரணமான ஒழுங்கு கட்டமைதிக்கு ஒரு முக்கிய காரணம் ஒன்றுண்டு. அதனைப் பின்னர் சொல்கிறேன்.
பி.எம்.ஆர் , எஸ்.பி.எம் மாணவர்  சிறுகதையோ, நாடகமோ எழுது வேண்டுமென்பது சோதனை வினாக்களில்  ஒன்று. ஒரு பொதுத் தலைப்பையோ, அல்லது ஒரு சிறுகதையின் துவக்க வரிகளையோ கொடுத்து கதை எழுதப் பணிக்கிறது வினா. அதற்கேற்ப என் வழி நடத்தல் அமைய வேண்டுமென்று முனிச் செல்வி கேட்டுக்கொண்டார். வினாத்தாட்களையும் என் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தார். சோதனையை நோக்கியே மலேசிய பாடத்திட்டங்கள் வடிவமைத்திருந்தாலும், சிறுகதை எழுதத்தூண்டும் பகுதி மாணவர்களைச் சோதனையோடு முடிச்சுப் போட்டுவிடாமல் படைப்பிலக்கியத்துக்கான எண்ணத்தை நோக்கிப்போகும் பரிணாமத்தை உள்ளடக்கியது உள்ளபடியே போற்றத்தக்கதுதான். அவர்களின் வினாத்தாட்களில் கூட உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் வினாக்களாக கேட்கப்பட்டிருந்ததானது உள்ளூர் கலைக்கான  அங்கீகாரமாகவே கருதலாம். மு. வ, அகிலன், கல்கி போன்றவர்களின் நாவல்களும், வினாவிடைப்பகுதிகளிலும் கோலோச்சியிருந்த காலம் மலையேறிவிட்டது. (மலேசியாவில் இன்றைக்கும் அதிகமாக அறியப்படும் எழுத்தாளர் மு.வ தான்) சோதனை வாரியத்தின் தமிழ்ப்பகுதித் தலைவர் மூர்த்தியின் முயற்சியும் , பங்களிப்பும் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டியே ஆகவேண்டும். இல்லையென்றால் தமிழ் நாட்டு ஆக்ரமிப்பு இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்.
   தொடக்கத்தில் சிறுகதை புனைவு சார்ந்தது என்றும். புனைவு அழகியல் கூறுகளைக் கொண்டது என்று விளக்கிச்சொல்லிவிட்டு, கட்டுரைக்கும் கதைக்குமான உள்ளீடு கூறுமுறையின் முரண் பற்றியும் விளக்கினேன்.
   சிறுகதை என்றால் என்ன, அதன் வடிவமைதி எப்படி அமைதல் வேண்டும், தொடக்க வரிகளின் ஈர்ப்பு கதைக்குள்ளே வாசகனைக் கவரும் தன்மை என்பது எது,  அழகியல் கூறுகள்  ஒரு சிறுகதையை  எவ்வாறு மெருகேற்றுகிறது என்பதையெல்லாம் ஒரு முக்கால் மணி நேரத்தில் விளக்கி முடித்தேன். சுய அனுபவமே ஒரு சிறுகதையைச் செறிவாக அமைக்கும் என்பதை சில எடுத்துக்காட்டு மூலம் காட்டிச் சென்றான்.( தொடக்க நிலைக்குச் சுய அனுபவக் கதயாடலே சிறந்தது. படைப்பாளனுக்கு மிக நெருக்கமான தொடர்புடையது அதுதானே) மதிய உணவுக்குப் பிறகு உண்டாகும் சோர்வைக் காட்டாமல்,  கவனச்சிதறல் குறையாமல் , மாணவ மணிகள் என்னைப் பின் தொடர்ந்தது என் பேச்சு ஆர்வநிலையை மட்டுப்படுத்தவில்லை என்பதற்கான ஆதார சுருதியாக கருத வைத்தது.
     அதன் பின்னர் ஒரு சிறுகதைப் படிநிலை எடுப்பு, தொடுப்பு, முடிவு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக ருஷ்ய எழுத்தாளர் லியோ டோல்ஸ்டாயின் ‘அவனுக்கு அது போதும்’ என்ற சிறுகதையைக் கொடுத்து வாசிக்கச் செய்து , அதனை மேற்கூறிய படிநிலை வாரியாக பிரித்து எழுதச் செய்தேன். மாணவர்களை ஏற்கனவே ஏழு பிரிவுகளாகப் பிரித்து குழு ரீதியாக பணிமனை நடத்தினார் ஆசிரியர் முனிச்செல்வி.. அவர்கள் கதையையும், அதன் வடிவத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டது, தாங்கள் எழுதி வந்ததைப் மாணவர் முன்னால் படைக்கும் போது தெளிவானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவையும் ஒரு கதையைத் தயார் செய்யப் பணித்து, அவற்றையும் வடிவ நேர்த்தியோடு அடுக்கச்சோல்லி படைக்கச் சொன்னேன். என் இரண்டு மணி நேர விளக்கம் பலனளித்ததா, தோல்வி கண்டாத என்பதற்கான பலப்பரீட்சையாகவே இதனை நான் மேற்கொண்டேன். மாணவர்கள் சிறுகதையின் மையக் கருவை அடிப்படையாக்கொண்டு  அதன் வடிவ அமைதி  சிதறாமல் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு வந்தனர். சிலரிடம் குறுக்கிட்ட சினிமாத் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.( சோற்றிலே கல்லாக இருந்த சினிமா, இப்போது சோற்றூப்பருக்கையில் கற்களாக மலிந்து விட்டன ) வானவில் வருவதற்கு முன்னர் சினிமா மோகம் குறைவு. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட சீரியஸ் எழுத்தாளர்கள் வானவில்லின் சினிமா விற்பனை பற்றி எழுதலாமே. ஆமாம் அப்புறம் தம்பட்டம் அடித்துக்கொள்ள அஸ்ட்ரோவை பேட்டிக்குக் கெஞ்ச முடியாதே?
 மாணவர்களுக்கு வார்த்தை எண்ணிக்கையின் சேகரம் குறைவாகவே இருக்கும் என்பதில் பல பட்டறைகளில் நான் கண்டறிந்த ஒன்று. அதனால் ஒரு முழு கதையை எழுதப் பணிக்கவில்லை. சிறுகதைக்கு வார்த்தை தேர்வு மிக முக்கியமானது. உணர்வு ரீதியாக அதனை சொல்லிச்செல்ல பொருத்தமான சொற்களைச் சேர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களிடம் கொள்முதல் கனிசமான அளவு இல்லாத பட்சத்தில் நல்ல கதையைச் சொல்லும் திறன் மங்கியிருக்கும். எனவே செய்நேர்த்தியிலேயே என் கவனம் இருந்தது. தொடர் வாசிப்பே அவர்கள் சொல்வங்கியைக் கனக்கச்செய்யும் என்று அறிவுறுத்தி  நிறைய வாசிக்கச்சொன்னேன். வழி நடத்த நல் ஆசிரியர்கள் அமைந்துவிட்ட காரணத்தால் பின்னாளில் அவர்களிடமிருந்து கதைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. சோதனையை முன்வைத்து மட்டும் நான் பயிலரங்கை முன்னெடுப்பதில்லை. வாழ்க்கை பரப்பில் திறந்து கிடக்கும் பல்வேறு சுவாரஸ்யங்களையும் ருசித்துப் பருகவும்தான்.
    மதியம் ஒன்றரை துவங்கி நான்கரை வரை நடந்த பயிலரங்கில் துணை முதல்வரும், முனிச்செல்வியும், ஆசிரியை புஷ்பராணியும்  அறையை விட்டுப் போகாமல் இருந்தது அவர்கள் மாணவர்கள் பால் கொண்ட அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டியது.
   நான்கரை மணிக்குப் பயிலரங்கு முடிந்ததும்துணை முதல்வர், என்னை பள்ளி வாசல் வரை வந்து வழி அனுப்பும் போது, மாணவர்கள் சற்று நேரம் விறைப்பாகக் நின்று (ராணுவ வீரர் போன்று) அவர் நெருங்கியதும் , குனிந்து அவருக்கு வணக்கம் சொன்னது அப்பள்ளியின் கட்டொழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்த்தியது. பல பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர் கடப்பதைக் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்களும் அவ்வாறே. இங்கே மாணவர் ஒழுக்கம் பாசாங்கில்லாமல் இருப்பது எப்படி என்று கேட்டேன். நாங்கள் பெற்றோரோடு கொண்ட அணுக்கமான உறவும், அவர்கள் ஒத்துழைப்பும் முக்கியக் காரணம் என்றார், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கிய இப்பள்ளி இன்றைக்கு ஆயிரத்து எழுநூறு மாணவர்கள் எண்ணிக்கையைத் தொட்டும் , மேலும் கூடிய வண்ணமே இருக்கிறது. எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருப்பதற்கு அதன் கட்டொழுங்கு மரபு ரீதியாக்க் கடைபிடிக்கப் படுவதே காரணம் என்றார்.  அடிப்படையில் அது சரியாக இருந்தால் மற்ற நடவடிக்கைகள் சிதறாமல் நடக்கும் அல்லவா?
     வீடு நோக்கி பயணிக்கும் போது நெடுஞ்சாலைக்குள் நுழைவதில் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நடந்து செல்லும் ஒருவரைக் கேட்டேன். மனுஷன் வெயில் நேரத்திலும் தள்ளாடிக்கொண்டிருந்தார். எனக்குப் பாதையைக் காட்டிக்விட்டு, தன்னை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓரிடத்தில் கொண்டுபோய் விடும்படி கேட்டுக்கொண்டார். சரி ஏறுங்கய்யா என்றேன். உள் நுழைந்தவர் கதவைப் பாடரென்று சாத்தினார். இன்னும் கொஞ்சம் வேகமாக இழுத்து மூடியிருந்தால் வாகனம் பொல பொல வென்று உதிர்ந்து போயிருக்கும். பழைய வண்டி. இறக்கிவிட்டவுடன் மூன்று விரலைக் காட்டி மூனு இருந்தா கொடுங்க என்றார். மூனு எனக்கும் சேர்த்து நாமம் என்றே விளங்கிக்கொண்டேன்.
ஆமாம். பள்ளியின் ஒழுங்கைக் காப்பாற்ற தகுந்த தலைமைத்துவம் இருக்கிறது. பப்லிக்கை எப்படி காப்பாற்றுவது?
    


Comments

Anonymous said…
Hi sir.I am a student form 4 from SMK Taman Perwira.Thanks for coming sir. I was very excited before this workshop began.It's really useful for those who really love to write and read stories including me.I have read some of your poems and short stories before.In my opinion they were very interesting.Especially the "rubber tree" poem.Tat's one of my favorite.Thanks again sir.....
Muniselvi said…
வணக்கம்.
தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறுகதைப் பயிலரங்கு பற்றின தங்களின் விசாலமான பார்வைக்கும் ஆழமான கருத்துக்கும் முதற்கண் என் நன்றியைப் பதிவு செய்கிறேன். என்னைப் பற்றின தங்களின் கருத்துக்கும் எங்கள் பள்ளி தொடர்பான தங்கள் நல்லபிப்ராயத்திற்கும் மிக்க நன்றி.

பயிலரங்கு முடிந்த மறுநாளே பயிலரங்கு தொடர்பான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்திருந்ததைக் கண்ணுற்றேன். தங்களின் சுறுசுறுப்பு என்னை வியக்கச் செய்கின்றது. எதனையும் காலத்தோடு செய்யத் தூண்டும் தங்களின் பண்பு மாணவ மணிகளுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக அமைந்திடும் என நான் நம்புகிறேன். தங்களின் விமர்சனம் குறித்து என் கருத்துகளை அனுப்பிட எண்ணி, நானும் எண்ணத்தில் தோன்றியதையெல்லாம் பதிவு செய்தேன். ஆனால், அனுப்புவதற்குள் எல்லாம் மாயமாய் மறைந்த கதை....சோகக் கதைதான்.
இலக்கியம் தொடர்பான விபரங்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதில் நான் என்றும் உறுதியாக இருக்கின்றேன். வெறும் பாடப் புத்தகங்கள் மட்டும் அவர்களின் அறிவு வளர்சிக்குப் பெருமளவில் துணை புரிந்திட முடியாது. முதற்கண், இலக்கியம் என்றால் என்ன என்பதை மாணவர்கள் அறியாதிருப்பது வேதனைக்குரிய விடயம் தான். இலக்கியவாதிகள் பற்றின தெளிவும் இல்லாதிருக்கின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய நேரம் வந்து விட்டது. தேர்வுத் தாள்களில் படைப்பாளர்கள் குறித்து கேள்விகள் வினவப் பட்டாலும் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டுவதும் அவசியம் என்பதனை அவ்வப்போது என் மாணவர்களுக்கு நான் வலியுறுத்திக்கொண்டுதான் வருகின்றேன். அவ்வகையிலே இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்தோம்.
பயிலரங்கை நடத்திக் கொடுக்குமாறு தங்களை நாடும் பொழுதெல்லாம், எவ்வொரு மறுப்பும் நீண்ட யோசனையுமின்றி உடனடியாக ஒத்துக் கொள்கின்றீர்களே...எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். அதற்காக் மற்ற எழுத்தாளர்களையும் நாங்கள் ஒதுக்கிட மாட்டோம். வாய்ப்பு வரும்பொழுது நிச்சயம் அழைப்போம். உங்கள் எல்லோரின் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்.
இப்பயிலரங்கின் வழி மாணவர்கள் மிகுந்த பயனடந்தனர் என்று என்னிடம் கூறினர். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகப் பயிலரங்கில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். தேர்வு என்ற நோக்கத்திற்காக மட்டுமல்லாது வாசிப்பைத் தங்களின் சுவாசிப்பாக நினைத்தால், எதிர்காலத்தில் தாங்களும் சிறந்த படைப்பாளர்களாக ஆக முடியுமென்பதை அவர்களின் ஒளி வீசும் கண்கள் கூறாமல் கூறுகின்றன.
பயிலரங்கு முடிந்து இல்லம் திரும்பிய நேரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருத்தப்படுகிறேன் சார். சிறந்த கட்டொழுங்கு வீட்டிலும் பள்ளியிலும் நிலைநிறுத்தப்பட்டால் சமுதாயம் ஒழுங்குபட்டுவிடும் என்று நான் கருதுகிறேன். முடியும்தானே..

நன்றி.
மு. முனிச்செல்வி
தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி
பினாங்கு.
ko.punniavan said…
நன்றி முனிச்செல்வி.
நான் கலூரிகளுக்கும், இடைநிலைப்பள்ளிகளுக்கும் சிறுகதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். அவர்களிடம் நான் காணும் மிகப்பெரிய பின்னடைவு வாசிக்காமைதான்.வாசிப்பவர்களுக்கு இலக்கியமோ, சமையமோ, வாழிவியலோ, தத்துமோ , வான சாஸ்திரமோ எதுவானாலும் பிடிபட்டுவிடும் வாசிக்காதவர்களுக்கு வழிகாட்டல் ஒரு தொடக்கமாக மட்டுமே அமையும். அவர்கள் தொடரவேண்டும்.எதுவானாலும் பிடிபட்டுவிடும். உங்கள் நீண்ட கடிதத்துக்கு நன்றி
Anonymous said…
என் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஐயா அவர்களுக்கு எனது முத்தான முத்தமிழ் வணக்கத்தை சமர்பிக்கிறேன் . தங்களின் பட்டறையில் பயனுற்ற பலருள் நானும் ஒருவன் . ஆம் . தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் படிவம் நான்கில் பயின்றுக்கொண்டிருக்கும் எனக்கு சிறுகதை எழுதுவதன் வழிகாட்டலாக அமைந்தது ஐயாவின் சிறுகதை பட்டறை . சிறுகதை படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதுநாள்வரை சிறுகதையை படிப்பதற்காக மட்டும் வழக்கப்படுடிக்கொண்ட எனக்கு சுயமாக சிறுகதை எழுதுவது எப்படி என்று மிகவும் தெளிவாக எடுத்துரைட்டமைக்கு நன்றி மலர்களை நவில்கிறேன். ஐயாவின் அறிவாற்றலுக்கும் இலக்கியத்திரமைக்கும் விலை மதிப்பில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. நிறைவாக, படிவம் ஐந்திற்குப் பிறகு நானும் என்னால் இயன்ற சிறுகதைகளை எழுதி சிறுகதையின் சிறப்பை சிகரத்தின் உச்சியில் கொண்டு நிறுத்த எனது சிறு பங்கினை ஆற்ற முடிவெடுத்துள்ளேன் . என்னுடைய இம்முடிவிற்கு ஐயாவின் இலக்கியக்கலை புலமையும் படைப்புமே காரணம் என்பதை உள்ளத்தில் பூத்த நன்றி மலர்களால் மகிழ்ச்சியுடன் தெரிவிட்டுக்கொள்கிறேன்...........


ஹ.ஹரிராஸ்குமார்
படிவம் நான்கு
தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி .
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
reko said…
வணக்கம்

உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!

ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே

என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!

அன்புடன் ரெகோ !
reko said…
வணக்கம்

உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!

ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே

என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!

அன்புடன் ரெகோ !
reko said…
வணக்கம்

உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!

ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே

என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!

அன்புடன் ரெகோ !
reko said…
வணக்கம்

உங்களின் ப்ளாக் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்!

ஓய்வுள்ள போதெல்லாம் படித்து மகிழ்ச்சியடைய உங்களின் இனிய இலக்கிய படைப்புகள் இருக்கின்றனவே

என்ற மகிழ்ச்சி மனதுக்குள் கொள்கிறேன்!

அன்புடன் ரெகோ !
ko.punniavan said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
Dear Reko,

I couldnt respond to your comment immediately since I was busy after the visit to India.Anyway thanks for visiting my blog.I feel honoured.

Popular posts from this blog

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

எம்ஜியார் -சிறுகதை

எம்ஜியார்
திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்செவிமடல்களைச் சிலிர்க்கச்செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத்துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள். இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம். சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று.நள்ளிரவு 12.00க்குத் திரும்ப பேருந்து டிக்கட் வாங்கியாயிற்று . பத்து நிமிடங்ளுக்கு முன்னாலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் .அது டிக்கெட்டின் கட்டளை. காலை ஆறு மணிக்குத்தான் திரும்பப் போய்ச் சிரம்பான் சேரும். தன் பையிலிருந்த நெளிந்து நெகிழ்ந்து நெளிந்த்து, மடிப்புக்கு அடங்கமாட்டேன் என்று வில்லத்தனம் செய்யும்சிகப்புச் சட்டை. சமீப காலமாய் இனிப்பு நீர் தொல்லையால் இளைத்துப் போன மார்பகத்துக்கும், கை முஷ்டிக்கும் இறுக்கம் தருவதில்லைதான். ஆனால் சட்டைக் …