Skip to main content

பேயச்சம்



கழுத்தைக்கடித்து
குருதியுறுஞ்சும் பேயாகவே
மாரியம்மன் கோயிலேறும்
சடக்கில் தலைகோதி நின்ற
புளிய மரம் அச்சுறுத்திய
காலம் ஒன்றுண்டு

அம்மாதான் சொல்வாள்
ரத்தக் காட்டேறி மரமென்று
 பழம் பறிக்க பள்ளி முடிந்து
கழியெறியும் போதெல்லாம்


அதன் குச்சியொடித்து
விலாசும்போதே
தோலுறித்த ரத்தத் தடையங்கள்
உறுதிப் படுத்தியது
உண்மைதானென்று

வெயில் விரட்டும்
அதன் குளிர் நிழலில்
வியர்வை நனைய
விளையாடும் போதில்
பேய் நினைவு மெல்ல
ஒதுங்கத் தொடங்கியது


நோய் நொடி விரட்டும்
அதன் இலை மருத்தவம்
பார்த்துப் பழகி
நன்பகல் நிழலாய்
கறையத்தொடங்கியது
கொஞ்சம்

மாநுட நலம் காக்கும்
கரிசனை நோக்கம்
மரத்தை நேசிக்க நேர்ந்தது

கருவாட்டுக் குழம்புக்கும்
ஆத்துமீன் கறிக்கும்
புளிப்பு
 சுவை கூட்டியபோதும்
பயம் பறந்தோடி
பாசம் மருவியது

காய்ந்து சுல்லிகள்
நின்றெரியும் தீயில்
தோளில் ஒட்டா புளியம் பழமாய்
அச்சம் ஒட்டாது ஓடியது

கிளையேறி ஒளிந்து
விளையாடும் விறுவிறுப்பில்
கிலி அருதியாய்
 அழிந்தொழிந்தது

கல்லெறிந்து கல்லெறிந்தே
காட்டேரியை
விரட்டி அடித்தோமோ என்னவோ


கித்தா மரங்கள் இலையுதிரில்
எலும்பாய்த் துருத்தி நின்றாலும்
தீராக் கானலை, புயல் மழையை
போராடி ஜெயித்து
நெடுங்காலமாய்
நின்று நிலைக்கும்
புளிய மரம்
சோர்வுறும் மக்களுக்குச்
சூட்டிக் காட்டியது
சுய இருப்பை


பேய் பயம் முற்றாய்
தீர்ந்த
ஒரு விடிகாலைப் பொழுதில்
வாழ்வுக்குப் பயந்த
நைலான் கயிற்றில் தொங்கிய
பேடியொருவனால்
உயிர்க்கத் தொடங்கியது
மீண்டும் பயம்













Comments

அருமையான இயல்பான அந்த நடை ஆஹா.... நடையழகா, நீவீர் வாழ்க.
MUNIANDY RAJ said…
arumaiyana kavithai....siruvayathu puliya marathu vasalukku kondu poi niruthiyatthu..
MUNIANDY RAJ said…
arumaiyana kavithai....appadiye siruvayathu puliya marathu vaasalil kondi poi niruthiyathu

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின