காதலியின் காதே அதிக சுவையானது!
                                                               அண்டன் ஷெக்கவ்

சமீபத்தில் சவூதியில் ரிசானா என்ற இலங்கைப் பணிப்பெண்ணுக்கு இஸ்லாம் சமயத்தின் ஷர்ரியா சட்ட அடிப்படையில் மரண தண்டனை வழங்கப் பட்டது என்னை உலுக்கியது. சவூதியில் ஷர்ரியா சட்டம் ரிசானாவுக்கு வழங்கிய மரண தண்டனை முறையை யார் வாசித்திருந்தாலும் எனக்கு நேர்ந்த அதே திகிலும் பீதியும் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இலங்கையைச் சேர்ந்த ரிசானா என்ற இளம் பணிப்பெண் சாவுதியில் வீட்டு வேலைக்காகப் போயிருக்கிறாள். அவள் பராமறிப்பில் இருந்த குழந்தை புட்டிப்பால் அருந்தும் தருணத்தில் பால் மூக்கிலேறி மூச்சுத்திணறி இறந்துவிட்டிருக்கிறது. ரிசானாதான் குழந்தையைக் கழுத்து நெரித்து கொன்றிருக்கிறாள் என்ற ஆதாரப் பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் சவூதி இஸ்லாம் ஷரியா சட்டம் அவளுக்கு மரண தண்டனை விதித்தது. அவள் குற்றச்சாட்டை மறுத்தாள். தனக்கு விதிக்கப்ட்ட தண்டனை பற்றியும் அறியாதவளாகவே இருந்திருக்கிறாள்.
 ஷர்ரியா சட்டம் இன்னும் சில இஸ்லாம் நாடுகளில் நடப்பில் உள்ளது. ஏன் இது போன்ற தண்டனையை இஸ்லாம் நாடுகள் சில அமலில் வைத்திருக்கிறது என்று ஒரு முஸ்லிம் போதகரைக் கேட்டபோது அவர் சொன்ன காரணம்,  ஏற்றுக்கொள்ளும்படிதான் இருந்தது. ஷர்ரியா சட்டத்தை அமல் படுத்தும் சில இஸ்லாம் நாடுகளில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்திருக்கிறதே என்றார். அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார். அதே நேரத்தில் ஐரோப்பிய முறையிலான சட்ட அமலாக்கத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்தபடியேதான் இருக்கின்றன என்று அவர் சொன்னபோது மறுப்பதற்கில்லை என்றே பட்டது. நம் நாட்டிலேயே குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் நம் கண் முன்னே நடக்கும் அராஜகங்களைப் பார்க்கும்போதுபோது சட்டவிதிகளில் கறாரான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
சிங்கப்பூரில் என் உறவினர் ஒருவர் உயர் போலிஸ் அதிகாரியாக இருந்தார். சிங்கப்பூரில் குற்றச்செயல்கள் குறைந்துவிட்டதே , உலக நாடுகளே சட்டம் ஒழுங்குக்கு உங்கள் நாட்டை உதாரணமாகக் காட்டுகிறார்கள், இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தது என்று கேட்டேன். அங்கே குற்றச்செயல்கள் புரிபவரெல்லாம் அயல் நாட்டிலிருந்து சிங்கைக்கு வேலைக்கு வரும் பணியாட்கள்தான் என்றும், கறார் சட்ட அமலாக்கம்  இருப்பதை புரிந்துகொண்ட சிங்கப்பூர் பிரஜைகளின் குற்றச்செயல்கள் ஈடுபடுவது இல்லை என்றே சொன்னார். எந்நேரத்திலும் அமைதியான சூழல் அங்கே நிலவுவதை பொறாமையோடுதான் அவதானித்து வந்தேன். சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு குலையாமல் இருப்பதைப் பார்க்கும்போது ஐரோப்பிய முறையிலான சட்டம் கறாரான அமலக்கத்தில் குறைகள் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அதே ஐரோப்பிய நாடுகளில் கொலைக்குற்றங்களைப் படிக்கும்போது ரத்தம் உறைந்துவிடுகிறது. தன் காதலியைக் கண்ட துண்டாமாக வெட்டி சமைத்து உண்டிருக்கிறான் ஒரு கொடும்பாவி. தண்டனை கொடுக்கப்பட்டு நீதிமன்றதிலிருந்து சிறைக்குக் கொண்டு செல்லும் போது , சிறைக்கு வெளியே காத்திருந்த ஒரு நிருபர் வம்படியாக , காதலியை வெட்டி சமைத்து உண்டீர்களே, அவளின் எந்தப்பகுதி அதிக சுவையாக இருந்தது என்று கேட்டிருக்கிறான். குற்றவாளி சற்றும் தயங்காமல் அவளுடைய காது என்றானாம். இவன் போன்றவர்களுக்கு மரணம் விளைவிப்பதுதான் சரியான  தண்டனை என்றே பெரும்பாலானோரின் முடிவாக இருக்கும்.
சமீபத்தில் நம் நாட்டில், தன்னை ஒருவன் பாலியல் வன்மத்திலிருந்து தற்காத்துக்கொள்ள கலைச்செல்வி என்பவர் அவனோடு போராடும் வேளையில் அவன் இறந்திருக்கிறான். அவனைக் கொன்ற ஆதாரத்தை மறைத்து வைத்த குற்றத்துக்காகவும் அவனைக் கொன்ற குற்றச்சாட்டிலும் அவள் மரண தண்டனையை எதிநோக்கி இருக்கிறாள். கற்பழிப்பிலிருந்தும், பாலியல் வன்கொடுமையிலிருந்தும்  ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ,கற்பழிக்க முயன்றவன் இறக்கும்போதும், அதற்கான அதிகபட்ச தண்டனையைப் பெறும்போதும் ,இனி கற்பழிப்பை எதிர்க்காது வழிவிட்டு ஏற்றுக்கொள்வதே சரியென முடிவெடுப்பதே ஆபத்தில்லாதது என்று எண்ணுவதற்கு வகைசெய்கிறது. போராடுவது தனக்கே விபரீதத்தைக் கொண்டுவரும்போது இப்படிப்பட்ட குதர்க்கமான கருத்தாக்கங்கள் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை. இக்’குற்றத்திற்கு” மரண தண்டனை விதிப்பது நீதியாகுமோ என்ற ஒரு சாமான்யனின் வினா விடை காணாமலேயே போய்விடலாம்.
 சட்டத்தில் பல ஓட்டைகள் இன்னும் அடைபடாமலேயே இருப்பதுதான் இதற்குக் காரணம்.
 இந்தியாவில் 2011 டிசம்பர் 13ஆம் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுகூட சட்டப்பூர்வமானதொரு தீவிரவாதமே என் அறிவு ஜீவிகள் கருத்துரைக்கிறார்கள். அங்கே மரண தண்டனை நீக்கப் படவேண்டுமென்று உரத்த குரல் ஒலித்தபடி இருக்கிறது. அதற்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதித்திருக்க வேண்டுமென்ற மாற்றுத்திட்டத்தைப் பரிந்துரைத்தபடி இருக்கிறார்கள். இப்படி இரு விதமான அபிப்பிரயாங்கள் மனித நாகரிகம் அடைந்த காலந்தொட்டே இருந்து வருகிறது.
ஒரு கொலைக் குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கலாமா ஆயுள் தண்டனை கொடுக்கலாமா என்ற விவாதம் இன்று நேற்று விவாதிக்கப்பட்டு வந்ததல்ல. பல ஆண்டுகளாக விவாதம் நடந்தபடிதான் இருக்கிறது. விவாதங்களின் மூலமே நியாயமான தீர்வைக் காண முடியுமென்பதுதான் உண்மை.
  சில ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையை முற்றாக நீக்கியிருக்கிறது. அதற்குப் பதிலாக சிலபல ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து அவன் மனம் நொந்து திருந்துவதற்கான கால அவகாசத்தைக் கொடுக்கிறது. ஆனால் மரண தண்டனை தனிமனிதன் மனம் வருந்தி திருந்துவதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பதில்லை என்ற கருத்தும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.
மரண தண்டனையா? ஆயுள் தண்டனையா? என்ற குழப்பமான கேள்விக்கு  அண்டன் செக்காவின் ‘பந்தயம்’ என்ற சிறுகதை ஒரு தெளிவைத் காட்டுகிறது.
அண்டன் செக்கவ் ரஷ்யா ஈன்றெடுத்த கதைசொல்லிகளில் மிக மிக முன்னோடியானவர். லியோ டோல்ஸ்டாய், மார்க்சிம் கார்க்கி, டாஸ்தோய்வ்ஸ்கி போன்ற ரஷ்ய உலகப் புகழ்பெற்ற படைபாளர் வரிசையில் அண்டன் செக்கவின் கதைகள் மறக்க முடியாத வாசிப்பு அனுபவங்களை தரக்கூடியவை. தன்னுடைய டாக்டர் பணியில் இருந்துகொண்டே படைப்பிலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் . தன்னுடைய புனைவுகள் பற்றி அதிகம் பெருமைப்பட்டுக் கொள்ளாதவர் செக்கவ் என்றாலும், அந்தக் கதைகள் ஒரு நூற்றாண்டுக்கும்  மேலாய் வாசிப்பு உலகில் தொடர்ந்து பயணித்த வண்ணம் இருப்பவை. இத்தனைக்கு அவர் வாழ்ந்த காலம் வெறும் 44 ஆண்டுகளே!(இங்கே அப்படியா? நீங்க எழுதிய சிறுகதை நல்லாருக்கு என்று ஒரே ஒரு குறுஞ்செய்தி வந்தவுடன் பெருங்குரலெடுத்து ஆனந்தத் தாண்டவம் ஆடிவிட்டு அது எப்படி இங்கே பரிசு பெறாமல் போச்சு என்று வம்பிழுக்கும்  எழுத்தாள அபத்தங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை!இதுல அபத்தம் என்னான்னா, அவரே குறுஞ்செய்தி அனுப்பிக் கேப்பாராம், அவங்க பாவம் போவட்டும்னு’ நல்லருக்குன்னு தகவல் அனுப்புவாங்கலாம்!)

செக்கவ்வின் ‘பந்தயம்’ கதை ஒரு இரவு விருந்தில் தொடங்குகிறது. விருந்தில் விவாதப் பொருளாக மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் என்று ஒருவர் கூற அதனை மறுத்து மரண தண்டனையே சரியான தீர்ப்பாகும் என்று மற்றொருவர் எதிர்வாதம் செய்கிறார். மரண தண்டனையே சரியானது என்று சொன்னவர் தன் கூற்றை வலுப்படுத்த மரண தண்டனை குற்றவாளியை உடனடியாகக் கொன்று விடுகிறது, மாறாக ஆயுள் தண்டனை சன்னஞ் சன்னமாக் கொள்கிறது. ஒரே அடியாகக் கொல்வதைவிடச் சன்னஞ்சன்னமாகக் கொல்வதுதான் ஆகக் கொடுமையானது என்று சொல்கிறார். இதில் எது கொஞ்சம் கருணையான  தண்டனை என்பதை  நீயே முடிவு செய்து கொள் என்கிறார்.
விவாதம் முற்றுகிறது. அந்த விருந்தில் கலந்துகொண்ட ஒரு வழகறிஞரின் கருத்தைக் கேட்கிறார்கள். அவரின் கருத்து ‘நான் உடனே இறப்பதை விட கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்துவிட்டு இறப்பது மேலென்று சொல்வேன்,’ என்கிறார் ஆயுள் தண்டனையை வரவேற்றவராய். விவாதத்தில் இருந்த வங்கி உரிமையாளர் ஒருவர் அவர் கருத்தில் உடன்படாதவராய் , சினமுற்று மேசையைக் குத்தி ஆர்ப்பாட்டம் செய்து, “நீ ஐந்தே ஆண்டுகள் சிறைபடுவதற்குத் தயாராய் இருந்தால் உனக்கும் இரண்டு மில்லியன் டாலரைப் பரிசாகத் தருகிறேன்,” என்று வழக்கறிஞருக்குச் சவால் விடுகிறார்.
“நீ உள்ளபடியே 2 மில்லியன் தருவதில் உறுதியாக இருந்தால் ஐந்து ஆண்டுகள் என்ன பதினைந்து ஆண்டுகள் சிறைபடுகிறேன்,” என்று சவாலை ஏற்கிறார் வக்கீல்.

பெரும்பணக்காரரான வங்கி உரிமையாளர் , “ தோ பாரு மேன் இரண்டு மில்லியன் என்பது எனக்கு சின்ன காசு. வீணாக உன் வாழ்க்கையைப் பணையம் வைக்கதே .பின் வாங்கிவிடு, இரண்டு மூன்றாண்டுகள் என்பதே உன் வாழ்நாளில் ஒரு நீண்ட காலம். நான் ஏன் இரண்டு மூன்றாண்டுகள் எனக் கணக்கிட்டுச் சொல்கிறேன் தெரியுமா , நீ அவ்வளவு நாட்கள்கூட சிறையில் இருக்கமாட்டாய் அது மிகுந்த வலியைத் தரக் கூடியது,” என்று அறிவுறுத்துகிறார்.
வக்கீல் இரண்டு மில்லியன் பணத்தின் மேலேயே கண்ணாய் இருந்ததால் அவரின் கருணைக் கருத்தை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டார்.
வங்கி அதிகாரி தன் விருந்தினர் வீட்டையே சிறையாக மாற்றி அந்த வழக்கறிஞரை உள்ளே தள்ளி பலத்த பூட்டு போட்டு காவல் வைத்து விடுகிறார். பதனைந்து ஆண்டுகள் சும்மா இல்லை. ஆள் சில நாட்களிலேயே தனிமைக் கொடுமையிலிருந்து  பதறி அடித்துக்கொண்டு பின்வாங்கக் கூடுமென்றே அவ்வளவு பெரிய தொகையை பணையம் வைக்கிறார்.
ஆனால் நடப்பது வேறு!.வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டும் முதல் சில நாட்களைக் கழிக்கிறார்.அதே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது போரடிக்கிறது. தனிமைக் கொடுமை கொல்கிறது. ஆனாலும் வாக்கைக் காப்பாற்றப் போராடுகிறார்.
வங்கி முதலாளி சிறைப்பட்டிருக்கும் வழக்கறிஞருக்குச் சிகிரெட்டையும், பழச்சாறையும் அனுப்பி வைக்கிறார். புகையும் மதுவும் தன்னை அதற்கு அடிமையாக்கி நாட்களைக் கழிப்பதற்கு பெரும் எதிரியாகிவிடும் என்று கூறி மறுத்துவிடுகிறார். பலவிதமான புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கிறார்.
சிறைபட்டிருக்கும் வக்கீல் தனிமைச் சிறையிலிருந்து சில சமயம் பியானோ வாசிப்பது கேட்கிறது.
பிரைன், ஷேக்ஸ்பியர் போன்ற பெரும் எழுத்தாளர்களை வாசித்து நாட்களைக் கடத்துகிறார். சமூகவியல் உளவியல், பொருளியல் , மருத்துவம் எனத் தன் வாசிப்பை வேறு கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார். ஆழ்கடலில் நீந்தத் தெரியாது சிக்கிக் கொள்பவனுக்கு ஒரு மிதக்குப் பலகை கிடைத்ததுபோல வாசிப்பையே காலத்தை வெல்லும் கருவியாக ஆக்கிக்கொள்கிறார். ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிடுகிறது.
அறிவியல், சூழலியல், விவசாயம் பற்றிய நூல்கலையும் ஆர்வத்தோடு  தொடர்ந்து வாசிக்கிறார். வாசிப்பிலேயே லயித்து சிறைபட்ட நாட்கலைக் கடத்துகிறார்.
இப்படியே பதினைந்து ஆண்டுகள் கழிந்து விட வங்கி உரிமையாளர் வக்கீலுக்கு இரண்டு மில்லியன் கொடுத்தாக வேண்டுமே என்று வருத்தப் பட நேருகிறது.பாவி பின்வாங்கிவிடுவான் என்றல்ல எதிர்பார்த்தேன். இப்படி விடாகொண்டனாய் இருக்கிறானே. எவ்வளவு பெரிய தொகை. சும்மா வெட்டிக்குக் கொடுக்கப் போகிறோமே என்று  தன் அறிவீனச் சவாலை எண்ணி எண்ணி கவலையுறுகிறார்.
வீணாக ஏன் இரண்டு மில்ல்லியனை இழக்க வேண்டும்? நாளை விடுதலையாகப் போகும் வழக்கறிஞரை இன்று இரவே கொன்று விட்டால், தன் இரண்டு மில்லியன் டாலர் மிச்சமல்லாவா என்று முடிவெடுத்து அவரை கொன்றுவிட திட்டமிடுகிறார்.
அன்று நள்ளிரவு மெதுவாக சன்னலைத்திறந்து பார்க்கிறார். எலும்பாகி ஒடிந்து ஒரு குச்சியாய்ப் படுத்துக் கிடக்கிறார் சவாலை ஏற்றவர்.
அவனைக் கொல்வதற்கு அறையினுள் நுழைந்த போது மேசையிமேல் ஒரு கடிதம் கிடக்கிறது. அக்கடிதத்தில்,
‘நாளை நான் விடுதலையாகிவிடுவேன்.அதற்கு முன்னர் சில வரிகளை எழுதிவிட்டுசெல்கிறேன். இந்த அ¨றையை விட்டு வெளியே சென்று சூரியனைப் பார்ப்பதற்கு முன், நீ கொடுத்த புத்தகங்கள் வழி இந்த உலகத்தைப் பார்த்தேன். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நான் உண்மையான வாழ்க்கையை அனுபவித்தேன். நான் வெளி உலகை பார்க்கவில்லை என்பது உண்மைதான், ஆனால் புத்தகங்கள் அந்தக் குறையை நிவர்த்தி செய்தது. பழச்சாறின் மணமும், இசையில் இன்பமும் எழுத்தின் வழி சுவாசித்தேன். பாடி பரவசம் அடைந்தேன்., காட்டில் மான்களையும் கரடிகளையும் வேட்டையாடி மகிழ்ந்தும், கவிதைகளின் வழி அழகிய பெண்களைக் காதலித்தும், மேகத்தை ரசித்தும் , வாழ்க்கையின் மந்திர சுவையை ருசித்தேன். கதாப்பாத்திரங்களோடு உரையாடினேன்.
உன் நூலின் வழி எல்பரஸ் மலையை ஏறினேன், சூரிய உதயத்தைப் பார்த்தேன், அஸ்தமனத்தை முகர்ந்தேன், கடல், வானம், பூக்கள், பச்சை அழகை உள்வாங்கினேன்,தேவதைகளின் இறக்கையை தொட்டேன்.
உன் நூல் என் அறிவை விரிவாக்கியது, எனவே நான் உன்னை விட புத்திசாலி என்பதை உணரவைத்தது. நீ பத்திரமாகச் சேமித்து வைத்திருக்கும் பணம் பொருள் எல்லாம் காணல் நீரைப்போல பொய்யானது என்பதைக் காட்டியது. வாழ்க்கை வெறும் மாயை என்பதைச் சொல்லியது.
நீ தவறான புரிதலோடு வாழ்கிறாய். பொய்மையை உண்மை என்று நம்புகிறாய். அசிங்கத்தை அழகு என்று தரிசிக்கிறாய். நீ பொய்த்தோற்றத்தில் புளகாங்கிதம் அடைகிறாய். நான் உன்னைப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. நான் ஒரு காலத்தில் இரண்டு மில்லியன் டாலர் எனக்கு சொர்க்கத்தைக் காட்டும் என் நம்பியிருந்ததை  இந்தப் பதினைந்து ஆண்டுகள் சிறை வாழ்க்கை பொய் என நிறுவி இருக்கிறது. எனவே என் விடுதலை காலம் நிறைவுறும் ஐந்து நிமிடத்துக்கு முன்னாலேயே நான் தப்பித்துவிடுவேன், நம் ஒப்பந்தத்தை மீறீ!.அந்த இரண்டு மில்லியன் பணம் தூசுக்குச் சமானம் எனக்கு!” என்று எழுதியிருந்தது.
மறு நாள் காலை வக்கீல் அறியிலிருந்து தப்பித்துப் போய்விட்டிருந்தார். ஒரு ஆதாரத்துக்காக அந்த பணக்காரன் அக்கடிதத்தைப் பாதுகாப்பாகப் பூட்டி வைத்துக்கொண்டான்.
இப்படி  ஆயுள் தண்டனை பெற்றவனுக்கு தன்னைத் திருத்திக்கொள்ளவும், காலத்தை மிகப் பயனான வழியில் செலவழிக்கவும் சந்தர்ப்பம் வாய்ப்பதைப்போல உயிரை ஒரு நொடியில் இழக்க நேரிட்டவனுக்குக் கிட்டுமா? இரண்டுமே தண்டனைகள்தாம். ஆனால் ஆயுள் தண்டனை தீர்ப்பில் தண்டனையும் உண்டு, தண்டிக்கப் பட்டவனின் மனம் செம்மையுற வழியும் உண்டு. காலமும் சூழலும் அவனை ஆழச் சிந்திக்க வைத்து மெல்லச்செதுக்குகிறது. அவன் மனிதனாகிறான். வன்ம மனிதர்களை நல்வழிப் படுத்துவதுதானே நீதியின் நீட்சியாக இருக்கவேண்டும்?


Comments