Skip to main content

கர்ண மோட்சம்



கலை சார்ந்து இயங்குபவர்கள் எப்போதுமே  ஒரு பித்த நிலையில் இருப்பார்கள். குறிப்பாக அதற்குள் அவர்கள் ஒரு தீவீரத் தன்மையை வளர்த்துக் கொண்டு, சதா அதனைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்துக் கிடப்பார்கள்.  அதனுள் உள்ளிறங்கிவிட்டவர்கள் ஒரு ஞானியைவிடவும் அற்புதமான கலையாற்றலை வெளிக்கொணரும் அபூர்வமான சாத்தியங்களையும்  பெற்றிருப்பர். இது கலையில் தோய்ந்த முயக்கத்தின் உண்டான முக்தி நிலை. இதற்கு வேறெங்கும் உதாரணம் தேட வேண்டாம். பாரதி ஒருவனே போதும்.
கலைகளில் சினிமாதான் காந்தம் கொண்டு ஈர்க்கும் விநோதச் சக்தியைக் கொண்டது. சினிமா பித்து பிடித்த பலரை நான் சந்தித்திருக்கிறேன். கலைகளில் சினிமா சார்ந்து செயல்படத்துடிக்கும் ஒருவனை ஆமைத் தன் தலையை உள்ளிழுத்துக் கொள்வதுபோல கவ்வி இழுத்துக் கொள்ளும். சதா சினிமாதான் அவன் உயிர் மூச்சாக இருக்கும். அவன் பேச்சில், அவன் உடல்மொழியில் சினிமாதான் ஆக்ரமித்து நிற்கும். “என் வேலையை விட்டுவிட்டு, நான் சினிமா இயக்குனராகப் போகிறேன்,” என்று சொன்ன ஒரு நண்பர் சொன்னபடியே நாலு இலக்க சம்பளத்தை உதறிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். எழுபதுகளில் ஒரு பிரபல மரபுக் கவிஞர் மனைவி பிள்ளைகளை உடன் அழைத்துக் கொண்டு தமிழகம் சென்று சினிமா படம் எடுக்க முயன்று தோற்று மீண்டும் நைந்துபோய் நாட்டுக்கே திரும்பிவிட்டார். ஆனாலும் அவர் நாவில் பாக்கு மென்ற துவர்ப்பாய் சினிமாதான் ஒட்டி ஆடியது. கலையார்வம் மிகுந்தவர்கள் கலை நையப் புடைத்து அனுப்பினாலும், புண் ஆறுவதற்கு முன் மீண்டும் குருத்தாய்த் துளிர்த்துவிடும் தன்னிச்சையாக. அவர்கள் ஆன்மாவுக்குள் அது இரண்டரக் கலந்தே பயணிக்கும். இவர்கள் விட்டில் பூச்சிகள் போல. வெளிச்ச பழத்துக்காக பறந்தோடி முட்டி மோதி வீழ்ந்துவிடுவார்கள். எழுத்தாளர்கள் கூட அப்படித்தான். நிறைய எழுதிய பின் சலித்துவிட்டபிறகு தனக்கு அதில் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று சற்று ஒதுங்கி இருப்பார்கள். பின்னர் மீண்டும் எழுதத் துவங்குவார்கள். எழுதுவதை முற்றுமுழுதாய் நிறுத்திக்கொண்டவர்கள் ஆழ்மனம் படைப்பில் விழுந்து துடித்தபடியே இருப்பதுதான் காரணம். எங்காவது ஒரு மூலையில் எழுதவேண்டுமென்ற துளி ஆர்வமாவது சுழித்துப் பொங்கிக் கிடக்கும். சமகாலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மீதும் மௌனமாகவே கவனத்தைச் செலுத்தத் தவறமாட்டார்கள் இவர்கள். உயிர் அணுக்களோடு கொண்ட அன்னியோன்யத் தொடர்பை அறுத்துத் தனித்துவிடுவதே இல்லை கலை போதை.
ஒருமுறை குடுமபத்தோடு சென்னை சென்று துணிமணிகள் வாங்கவேண்டி வந்தது எனக்கு. நாங்கள் தேடும் துணிவகைகள் எங்கேயும் கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்தும் பயனில்லை. கடைசியில் ஒரு முறை மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த வந்த ஒரு கலைஞரோடு நட்பு உண்டானது நினைவுக்கு வந்தது. பதிவு செய்து வைத்திருந்த அவரின் தொலைபேசி எண்ணைத் தேடியதும் அதிர்ஸ்டவசமாய்க் கிடைத்துவிட்டது. அவரைத் தொடர்பு கொண்டோம். “நான் இன்று மதியம் சினிமா சூட்டிங் போக வேண்டியிருக்கும்.. இருந்தாலும் கொஞ்ச நேரம் உங்களோடு இருக்கிறேன்,” என்று தன் பெருமிதத்தைச் சொல்லிக்கொண்டுதான் வந்து சேர்ந்தார்.
வந்ததும் தன்னை ஒரு நடிகன்போலவே வெளிக்காட்டிக்கொள்ளத் துவங்கினார். அவர் அணிந்திருந்த குர்தா கழுத்தைச் சுற்றிய பூ வேலைப் பாட்டில் மின்னியது. துப்பட்டா கழுத்தில நாகத்தைப்போல சுருண்டு முன்னும் பின்னும் தொங்கி ஆடியது. முகத்தைப் பளிச்செனத் தெளிவாக்கியிருந்தார். நடையில் ஒரு மிடுக்கும், பேச்சில் தன்னம்பிக்கையும் தொனித்தது. எங்களைப் பார்த்துவிட்டு உடனடியாக சூட்டிங் இடத்திற்குக் கிளம்பவேண்டுமென்ற அவசரத்தைக் காட்டினார்.
“நாங்க ரொம்ப நேரம் கடத்தெருவில செலவழிக்கவேண்டி இருக்கும், நீங்க எடத்த காட்டிட்டி ...உங்க பொழப்ப மொத கவனியுங்க,” என்றே சொன்னோம்.
“இல்ல அழைப்பு வரும். அதான் காத்திட்டு இருக்கேன்,” என்று சொல்லிக்கொண்டே கைப்பேசியில் திரையைப் பார்த்தார். அதில் புதிய தகவல் ஏதும் வந்திருக்கவில்லை.
“என்னை நேத்துதான் ஒரு சினிமா துறையில வேலை செய்யும் ஒரு நண்பர் படத்து இயக்குனர்க்கிட்ட பேசிட்டதாவும் என்ன  வரச் சொன்னதாகவும் சேதி சொன்னார்... கண்டிப்பா இந்தப் படத்துல சான்ஸ் கெடச்சிடும் ..” என்றார். தன்னை முழுமையாக அதில் ஒப்புக்கொடுத்துவிட்ட ஆர்வத்தை அவரின் உடல்மொழியில் அவதானித்தோம். என்னேரத்திலும் அழைப்பு வரலாம் என்று தொலைபேசித் திரையைக் கவனித்தபடியே இருந்தார். நீண்ட காலமாகவே சினிமா வாய்ப்புக்காக அலைமோதிக்கொண்டிருந்த செய்தியும் அவர் பேச்சிலிருந்து கசிந்துகொண்டிருந்தது. வாய்ப்பு கிடைக்கவில்லையெனினும் சினிமாவில் சேரும் ஆர்வமும் உற்சாகமும் தணிந்ததாகவே இல்லை.
“அந்த நண்பர் உங்களுக்கு எப்படிப் பழக்கமானார்?” என்று ஆட்டோவில் பயணித்தபடியே கேட்டேன்.
“நான் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் இருந்தபோது என்னைப் பார்க்க வந்தார். எனக்கு  காப்புறுதி இழப்பீட்டுத்தொகை கிடைக்க உதவி செய்தார். அந்தப்பணத்தில் ஒரு பகுதியை அவர் கடனாகக் கேட்டு வாங்கிக்கொண்டார். அப்போதுதான் நான் சினிமா வாய்ப்பு தேடுவது தெரிந்து எனக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாகவும்..தனக்கு இயக்குன நண்பர்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்”’ என்றார்.
சினிமா வாய்ப்புக்காக தன் வாழ்நாள் சேமித்த பணத்தையே கொடுக்கும் அளவுக்கு பித்தாகத் திரிகிறாரே என்று அவர் மீது பரிதாப்பட வேண்டியதாயிற்று.
ஆனால் அவர் காத்திருந்த படி அழைப்பு ஏது அன்று வரவில்லை. அவரின் பகல் உணவு, தேனீர பலகாரம், இரவு உணவு எல்லாவற்றுக்கும் நாங்களே ஏற்றுக்கொண்டோம். அவரிடம் செலவுக்கு பணமில்லாததை அவர் உடல் மொழியின் மூலமே தெரிந்து கொண்ட பிறகே இந்தச் சமயோசிதம்.
மறுநாளும் நாங்கள் அழைக்காமலேயே எங்களிடம் வந்து சேர்ந்தார். அன்று முழுதும் இருந்தார். ஏதாவது அழைப்பு வந்தால் அது சினிமா அழைப்பாக இருக்குமென்ற நம்பிக்கை ஒளி அவர் முகத்தில பாய்ந்திருந்தது. ஆனால் அதுவல்ல என்ற போது அவர் முகம் பட்டென வாடிவிடுவதையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. சினிமா அழைப்பு வரும் என்றிருந்த நம்பிக்கை அவரை விட எங்களுக்கே ஏமாற்றம் தருவதாக இருந்தது. நாங்கள் தேடிய துணிமணி வாங்கும் முதல் நாளே முடிந்திருந்தாலும் அடுத்தடுத்த நாட்களிலும் எங்களோடு ஒட்டிக் கொண்டார். எல்லா வேலை உணவுக்கும் எங்களை நம்பியிருந்ததை எங்களால் உணர முடிந்திருந்தது. ஆனால் எங்களோடு இருந்த நாட்களில் தன் சினிமா ‘பிம்பத்தை’ அவர் கலைத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. இத்தனைக்கும் எதிர்பார்த்து நின்ற அழைப்பு கடைசிவரை வரவே இல்லை! சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட படியே இருந்தார். அந்த நண்பர் சொல்லும் சால்ஜாப்புகளை நம்பி தற்காலிகமாக முகம் பிரகாசமாவதை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. நாங்கள் கிளம்பும் நாளில் அவர் கைகட்டி கூசி நின்றதை கவனித்து கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தோம்.
சினிமா வாய்ப்பு தேடி ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் சென்னை வந்து இறங்குவதாகப் படித்திருக்கிறேன். தன் வேலையை விட்டு, தன் நிலத்தை விற்று, தன் பெற்றோர் சேமிப்பைக் கைப்பற்றி சினிமாவுக்கு அலைந்து கடைசியில் சின்னாபின்னமாகும் மனிதர்களின் கதை எழுதி முடிக்கவியலாத எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. யாரோ ஓரிருவர் அடைந்த உச்சத்தின் வழிப்பாதையில் நடந்து வெளிச்சத்து வர நினைக்கும் பால்லாயிரம் பேரில் ஓரிருவருக்கு  மட்டுமே அது சாத்தியப் படுகிறது. மற்றெல்லாரும் மென்று தெருவில் வீசி எரியப்பட்ட எலும்புத் துண்டுகள்போல சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்கிறார்கள். இப்படிப் பல எழுதப் படாத சோகம் மலிந்து கிடக்கிறது கோடம்பாக்க வீதிகளில்.
எஸ். ராமகிருஷ்ணனின் ‘கர்ண மோட்சம்’ சிறுகதை குறும்படமாக வெளிவந்தபோது அதனை மெனக்கட்டுப் பார்த்தேன். அச்சிறுகதை தந்த அவலத்தைவிட , காட்சியாக்கப் பட்டபோது அதன் சோகத்தை என்னால் தாளமுடியவில்லை.
கிராமங்களும், உட்புறப்பகுதிகளும் நிறைந்து கிடக்கும் தமிழ்நாட்டிலேயே நாடகக் கலை நலிவுற்றுக் கிடக்கிறது . அதை நம்பி வாழ்ந்த கலைஞர்களின் குடும்பங்களின் வயிறு காய நேருகிறது. அறிவியல் தொழில் நுட்பம் பெருகி தொலைக் காட்சிகளின் அலைவரிசைகள் பல்கிப்பெருகிக் கொண்டிருக்கும் இந்நாளில் நாடகக் கலை தாக்குப் பிடிக்க முடியுமா? வண்ணத் திரையில் இடுப்பையும் தொப்புளையும் அசைத்து ஆடும் ‘கலைக்கு’ ஈடாகுமா தொன்ம நாடகங்கள்? வாழ்வியலையே புரட்டிப் போட்ட தொழிநுட்பம்தான் அறியுமா கலைஞர்களின் வயிறு காய்வதை? தொழில் நுட்பம் ஒருபக்கம் இருக்கட்டும். அது காலத்தின் கட்டாயம். ஆனால் நம்முடைய பண்பாட்டுப் பின்புலத்தைத் தற்காக்க சமூகம் எதிர்த்துப் போராடவில்லையே. அந்த விழுமியங்களைத் தற்காக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் இல்லையே நமக்கு! கரும்புத்தோட்டத்துகுள் நுழைந்த யானைக் கூட்டம் அதனை துவம்சம் செய்வதுபோல ,தொழில் நுட்ப முன்னேற்றமும் நாசம் செய்துகொண்டிருக்கிறது நமது மரமான கலைகளை! தொழில் நுட்பத்தை தறிகெட்டு ஓடவிட்டு அல்லவா பண்பாட்டைப் புதைக்க வழிசெய்தோம்! 
கர்ண மோட்சம் குறும்படத்தின் கதை இதனை மையமாகக் கொண்டே நகர்கிறது.
நாடகக் கம்பெனியில் கர்ணனாக வேடம் கட்டிய ஒரு கலைஞர் வாழ்க்கை இது. நாடகக் கலை நலிவுற்றதன் காரணமாக ‘கர்ணனின்’ குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! வாழ்நாள் முழுதும் நாடகம் தந்த சொற்ப வருமானம்தான் ஆதாரமாக இருந்திருக்கிறது. வேறு வேலையும் தெரியாது. வாழ்க்கை நெடுக்க நாடகத்தைச் சார்ந்தே பழக்கப்பட்டுவிட்டார். அந்த வாழ்வாதாரமும் முடங்கிவிடுகிறது. என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கிறார்.
 கல்விச் சாலைகளை அணுகி, தான் கர்ணனாக நடித்துக் காட்டி வயிற்றுப்பசியைப் போக்க முடிவெடுக்கிறார். பள்ளிக்கூடங்கள் இதனை விரும்பலாம் என்று முடிவெடுத்து அவர்களை அணுகுகிறார். அவர் எதிர்பார்த்தபடி  அவரின் கோரிக்கையை பள்ளி நிர்வாகங்கள் ஆதரிக்கவில்லை. அதற்கெல்லாம் பள்ளியில் நேரமில்லை என்றே அவரை வந்த வழியே அனுப்பிவிடுகிறது. இப்படியே ஒவ்வொரு நா¨ளையும் ஏமாற்றத்தோடு கடக்கிறார். ஒரு நாள் அதிர்ஸ்ட வசமாக அவரின் கெஞ்சலுக்குப் பிறகு ஒரு பள்ளித்தலைமை ஆசிரியர் அவருக்கு வாய்ப்புத் தர முன்வருகிறார். அவரின் நடிப்பைப் பார்க்கப் போகும் மாணவர்களே கொடுக்கும் சில்லறைகளை மட்டுமே நம்பி வரவேண்டுமென்று பள்ளித் தலைமை ஆசிரியர் சொல்கிறார். பள்ளி நிர்வாகம் அதற்கும் பணம் தராது என்ற ஒப்பந்தத்தின் பேரிலேயே நடிக்க ஒப்புக்கொள்கிறார். தன் இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க வேறு வழி தெரியவில்லை அவருக்கு. ஒரு குறிப்பிட்ட நாளில் அவர் கர்ண வேடம் கட்டிக்கொண்டு தெருவில் நடந்தே போகிறார். முகத்தில அரிதாரம்! வேடத்தில உடல் கனக்கிரது. கையோடு அவரின் பெண் பிள்ளையும் போகிறது. அவரோடு வெயிலில் நடந்து போகும்போதே தெருவில் விற்கும் தின்பண்டங்களை வாங்கித்தரசொல்லி தொல்லை செய்கிறது குழந்தை. “ வரும்போது நான் கண்டிப்பா வாங்கித் தரேன்.. இப்போ தொல்லை பண்ணக் கூடாது,” என்று அமைதிப்படுத்துகிறார் ‘கர்ணன்’. குழந்தையும் பலமுறை தொந்தரவு செய்தபிறகு , வாங்கித் தரமாட்டார் என்று முடிவுக்கு வந்துவிடுகிறது.
வளாகத்தை அடைந்தபிறகுதான் தெரிகிறது பள்ளியின் நுழைவாயில் இரும்பு பூட்டு போட்டு பூட்டிக் கிடப்பது. பள்ளியில் ஒரு மாணவர் நடமாடுவதைக்கூடக் காணமுடியவில்லை. சலனமற்றுக் கிடக்கிறது அவர் நம்பி வந்த கல்விக்கூடம். ஒரு கணம் நிலை தடுமாறிப்போகிறார். அவர் அணிந்திருக்கும் கர்ண வேடம் நொடிக்கு நொடி கனக்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது. பள்ளி அடைபட்டுக் கிடப்பதப் பார்க்கும் தோறும் மேலும் கனக்கிறது வேடம்.
காத்திருந்து பார்த்துவிட்டு தலைமை ஆசிரியர் முகவரியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வீடு தேடி நடக்கிறார். வீட்டையடைந்ததும் கதவைத் தட்டுகிறார். தலைமை ஆசிரியர் வெளியே வருகிறார்.
“அடடே நீங்களா... நானும் அருதியா மறந்துட்டேன்.. நேத்து பள்ளியின் முக்கியஸ்தர் ஒருவர் எறந்துட்டார். அதனால் பள்ளி மாணவர்க்கு லீவு உட்டாச்சி’” என்கிறார். நடிகரின் தர்மசங்கடமான நிலையை புரிந்துகொள்ளாதவராக.
கர்ணன் வாசலில் கைபிசைந்து நிற்கிறார். குழந்தை அப்பாவையும், தலைமை ஆசிரியரையும் மாறி மாறிப் அந்நாந்து பார்க்கிறது. அப்பா திரும்பப் போகும்போது கண்டிப்பாய் தின்பண்டம் வாங்கித் தருவார் என்ற நம்பிக்கை ஒளி மாறாமல்.
“இன்னோரு நாளைக்கு பாக்காலம்,” என்று வெறுங்கையோடு வழியனுப்பிவிடுகிறார் கர்ணனை தலைமை ஆசிரியர்.
கர்ணன் உடல் தளர்ந்து முன்பிருந்த உற்சாகம் இழந்து திரும்ப வந்த வழியே ஏமாற்றத்தோடு நடக்கிறார்.  ஒவ்வொரு பலகாரக் கடையையும் கடக்கும் போது அவரின் முகத்தை முகத்தைப் ஏறிட்டுப் பார்க்கிறது குழந்தை. அப்பா வந்த காரியம் கைகூடவில்லையே என்று மெல்லப் மகள் புரிந்து கொள்கிறாள்! இந்த முறை முகத்தைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறது குழந்தை பாவம்.
தோல்வியோடு நடந்து செல்லும்போது கர்ணன் வேடம் மீது அவருக்கே வெறுப்பு உண்டாகிறது. எத்தனை மேடைகள் கண்டிருப்பார். எத்தனை கைதட்டல்கள் வாங்கியிருப்பார். இப்படியா ஏமாற்றத்தில் போய் முடியவேண்டும்?
அவர் நடந்து போகும்போதே கர்ண வேடத்தில் அவர் அணிந்திருக்கும் ஆடை அணிகலனை ஒவ்வொன்றாய் கலைந்து தெருவில் உதிர்த்துக்கொண்டே நடக்கிறார். அதனைத் திரும்பிக்கூடப் பார்க்கவேண்டும் என்று தோணவில்லை. அக்காட்சி நம்மை உலுக்கிவிடும்.  ஆடை அணிகலன்களைக் கலைந்து துறக்கும்போது இந்தச் சமூகத்தின் மீது நமக்கு உண்டாகும் சினமும், நடிகரின் மீது நமக்கு உண்டாகும பச்சாதாபமும் உச்சம் கொள்கிறது. கொஞ்சமும் பொருட்படுத்தாது தெருவில் வீசப்பட்ட ஒரு கலைஞனின் குறியீடாகவே அந்தத் துயில் உறிதல் காட்சிப் படுத்துகிறது. கொஞ்சகூட கரிசனமில்லாமல் காலங்காலமாய் நடந்து வந்த கலையை மக்கள் கொன்று புதைத்துவிட்ட கோபம் நம்மைக் கவலையுறச் செய்கிறது. கலைஞர்கள் நம்பி வாழ்ந்த கலையே கலைஞனை கடைசியில் கைவிட்டு விடுவதை என்னவென்று சொல்வது?
இதில் மிகப் பெரிய சோகம் கர்ணன் கதாப்பாத்திரத்தை கதையின் மையச் சரடாகக் கொண்டு வந்ததுதான். மகா பாரதத்தில் கர்ணன் எவ்வளவு பெரிய கொடைவள்ளல். அந்தக் கொடைவள்ளலையே குறியீடாக வைப்பதும்,  தன் வாழ்நாட்களையே நாடகக் கலைக்காக அர்ப்பணித்த கலஞனை, நம் விழுமியங்களைக் தற்காத்து வந்த சுயநலமற்றவனை, இந்தச் சமூகம் ஒரு வேளை சோற்றுக்காகப் பரிதவிக்கவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை,  எள்ளி நகையாடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...