Skip to main content

பேரமைதியைக் கொல்லும் பெருங்குரல்




                                                கவிஞர் பாலு மணிமாறன்


சிங்கப்பூர் பாலு மணிமாறனின் காதல் கவிதைகளை முகநூலில் படிக்கும் போதெல்லாம் எனக்கு வயதானதே ஒரு கணம் மறந்துபோகிறது. என்னை மட்டுமல்ல காதல் எல்லாருக்குமே இளமையை நினைவு படுத்துகிறது- ஆமாம் படுத்துகிறது.
நான் நினைப்பேன் காதல் தோல்வி காணும்போதுதான் அது சாகாவரம் பெறுகிறது என்று. காதலில் ‘வென்றவர்கள்’ பாவம் கல்யாணம் ,  குடும்பம் என்ற சாகரத்தில் போய் விழுந்து எதிர் நீச்சல் போட முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால்தான் காதல் , கால்யாண ஆப்கானிஸ்தான் எல்லையைத் தொடக்கூடாது என்று சொல்கிறேன். கல்யாணம் செய்யாமல் வாழ முடியாதே என்று யாரோ சிலர் எதிர்வினையாற்றுகிறார்கள். காதலர்களாக இருந்தவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு அதிகாரமும் அகம்பாவமும் பிடிவாதமும் நிறைந்து காதலைக் கசக்கி எரிந்துவிடுகிறது என்று வாக்குமூலம் தருகிறார்களே!.
 காதல் இல்லை என்றால் வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும் என்று நான் சொல்வேன்.. காதல் இல்லாமல் எத்தனைத் திருமணங்கள் ‘திரு’வை விவாகரத்து செய்து ‘மணமற்றுப்’போய்விட்டன! கால்யாண மாலைகள் எத்தனை ‘கருகி’விட்டன. அன்புப் பரிமாற்றம் எவ்வளவு பழுதடைந்து போய்விட்டது.
பாருங்கள் இந்தக் கணத்தில் இதை வாசிப்பவர்கூட ஆமோதிப்பதை.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் காதல் பற்றி ஒரு கவிதை தோன்றியது எனக்கு.
காலம் செத்துக்கொண்டே
இருக்கிறது
காதலுக்குச் சாகாவரம்
கொடுத்துவிட்டு

உங்கள் முகநூல் கவிதைகளை நூலாகத் தொகுத்துக் கொடுங்கள், அது காதல் கவிதைகள் எழுதும் இளைஞர்களுக்குப் பால பாடமாக -பாடப் புத்தகமாகுமென்று நான் சொன்னபோது, அப்படியா புத்தகம் போடுமளவுக்கான தகுதி அவற்றுக்கு இருக்கிறதா என்று பாலு கேட்டார். இப்போது அவரின் ‘காதலை’ கவிதைகள் வழி உணர்வில் ஸ்பரிசிக்கிறேன். ஏனெனில் அவை மந்திரச் சொற்களாலானவை. நிலவை இரு கைகளால் ஏந்திய உணர்வைத் தருபவை.
ஆம்,காதல், கவிதைகளின் ஊடாகத்தான் ஜீவ எல்லையை அடைகிறது.
காதல், கவிதை செய்யும்போதுதான் விமோசனம் பெறுகிறது.
காதல் கவிதையாக்கத்தின்போதுதான் பூப்பூத்துக்கொண்டே இருக்கிறது.
உங்கள் கவிதைகள் அதற்கெல்லாம் நற்சான்று.
நீங்கள் சொல்வீர்கள்,
உன்னிடம்
கொடுத்துவிட்டுத்
திரும்பும்போது
கூடியே இருக்கிறது
உன்னிடம் நான் கொடுத்த
அன்பு
தொடக்கத்தில் காதல் எதையும் எதிர்ப்பார்க்காது. அன்புக்குத்தான் அது ஏங்கும்.அந்த அன்பு ஒரு சந்திப்பில்,ஒரு பார்வையில், ஒரு புன்சிரிப்பில், ஒரு தொடுதலில் தன்னை தாரைவார்த்துவிட்டு தனியே நிற்கும்.. அது எப்போது பன்மடங்காகிக்கொண்டிருக்கும் என்றால் ஒரு சந்திப்புக்கும் இன்னொரு சந்திப்புக்குமான இடைவெளியில்தான். நேரில் கண்பார்க்கும் ஏக்கத்தில். சொற்கள் பரிமாறிக்கொள்ளும் இனிய தருணத்தில்!
ஓரிடத்தில்

உன்னிடம்
தோற்பதற்கு ஏற்ற
விளையாட்டுக்களையே
நன் எப்போதும் தேடுகிறேன்
என்று சொல்கிறார்.
இது ஒரு ஆத்மார்த்த சித்திரம். காதல் பிறந்துவிட்டால் என்ன விலை கொடுத்தும் நாம் நம்மை அடகுவைக்கத் தயாராய் இருப்போம். அடகு வைப்பதற்கு எதற்கு? ஆசைப்பட்ட இன்னொன்றை அடையத்தானே? தோற்பது ஒரு வகை அடகு வைத்தல்தானே! தோற்பது அடையத்தானே! அப்படியானால் மகிழ்ச்சியாகவே தோற்கலாம் என்கிறீர்கள் நீங்கள்! ஆமாம், காதல் சரணாலயம்தான். யாராவது ஒருவர் தோற்றிருக்காவிட்டால் இருவரும் வெற்றிபெற்றிருப்பார்காளா   என்பது சந்தேகம்தான். தோல்விச் சிதலங்களை நீக்கினால்தானே அழகிய சிலை கிடைக்கும்!
எனக்கும் விபரீதமான ஒரு பரிமாணம் ஒன்று இக்கவிதையிலிருந்து விரிந்தது. இன்றைக்கு உலக நடப்பில் ஊழல் மலிந்துவிட்டது. கையூட்டு கொடுத்தலிலும் வாங்கலிலும்தான் அரசியலிலும் ,வணிகத்திலும் சாதிக்க முடிகிறது. கையூட்டு என்பதே காதலிலிருந்துதான் தொடங்கியதோ என்ற எண்ணம்தான் அது. நான் தான் சொன்னேனே விபரீத பரிமாணம் என்று. விடுங்கள்!
            

பலமுறை ஒருசில பாடல்களைக் கேட்கும்போது நாம் நம்மை பாடலுக்குள் இழந்துவிடுகிறோம். நமக்காகவே எழுதப் பட்டதா என்று சுயநலத்தில் சற்றே புளகாங்கிதம் அடைவோம்.(அது கண்டிப்பாக நமக்காக எழுதப் பட்டதல்ல- என்ன ஒரு முரண் நகை, ஆனால் அந்த ஒத்திசைவை சொந்தம் கொண்டாடக் கூடாதா என்ன?) பாலு தன் புனைவில் அதனை நேர்த்தியாகச் சொல்கிறார் இப்படி:
நான் பாடுவேன்
அந்தப் பாடலின் வரிகளை
ஆனால் அந்தப் பாடலின்
நினைவுகள்
உன்னுடையாதாகவே இருக்கின்றன
ஏன் தெரியுமா? காதல் ஐம்புலன்களையும் கடந்து ஆன்மாவில் போய்ச் சங்கமிக்கிறது. பின்னர் ஆன்மாவே காதலைச் சஞ்சாரம் செய்யும். கடைசியில் ஆன்மாவே காதலுக்குள் ஐக்கியமாகிவிடுகிறது.


இன்று நான் பார்த்த சிட்டுக்குருவி
அன்று நாம் பார்த்த சிட்டுக்குருவியா
என்று யோசிப்பது
அபத்தம் என்பதை அறிவேன்
ஆனால்
அபத்தமற்ற காதலில்
என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது?
ஆமாம், காதலிக்கும் காலத்தில் விடிய விடிய பேசிக்கொண்டிருப்பார்கள். என்னதான் பேசினீர்கள் என்று பேசியவர்களைக் கேட்டால் கண்டிப்பாய் நிறைவான பதில் கிடைக்காது அவர்களிடமிருந்து. அவர்கள் தொகுத்துப் பார்த்துச் சொல்வதற்கும் ஒன்றும் மிஞ்சாது! ஆனால் அவர்களுக்கு அது அர்த்தமற்றதே அல்ல! ஏன் தெரியுமா? மறுநாளும் அந்த தருணத்துக்காக காத்திருப்பார்கள். காதலர்களுக்கு அதுதான் சுவார்ஸ்யம் . அவர்களைப் பொறுத்தவரை அதுதானே காதல் என்றாகிறது? ஏனெனில் அது அவர்களின் காதல்! அப்படியென்றால் உங்கள் கூற்றுக்கு நானும் உடன் படுகிறேன். அபத்தத்தைக்கூட காதலாக்கிய  உங்களின் சொல் தேர்வை என்னவென்று சொல்வது?

பாலுவின் கவிதைகளில் தத்துவப் பார்வைகள் அடிகோடிட்டுக் காட்டப்படவேண்டியவை. அவை மிகப் பொருத்தமாய் முகங்காட்டுகின்றன. கவிதைகளினூடே ஊடுபாவாய் ஒலிக்கும் தத்துவக்குரல் காதல் சொற்களிலிருந்து தனித்து நில்லாமல் அத்னோடு ஐக்கியமாகி வாசகனை சற்றே நின்று அவதானிக்கச் செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு இரண்டு பருக்கை பதச்சோறு.
பிரிவு என்பது
முடிந்தவரை
தள்ளிப் போடப் படும்
துயரம்தான்

எல்லாம் உதிர்ந்த பின்னும்
கிளை நீட்டிக் காத்திருப்பேன்
சிக்கிக் கிடக்கும் பட்டமாய்
பழைய தருணங்கள்.

நல்ல கவிதைகள் எப்போது வார்த்தைகளில் புரிந்து கொள்வதைவிட இதயத்தோடு பேசவேண்டும். ஏனெனில் காதல் உணர்வுகளின் உச்சம். அதனால்தான் ‘காதல் கடவுளின் முகவரி’ என்று கண்டடைகிறார் ஒரு கவிஞர். உங்கள் கவிதைகள் என் இதயத்தோடு உரையாடின. வாசிக்கும் எல்லா இதயத்தோடும் பேசும். குறிப்பாக காதலர்கள் உள்ளங்களை அலைக்கழிக்கும். அதனை அவரின் வரிகளாலேயே சொல்லி முடிக்கிறேன்!
என் பின்னிரவின் அமைதியை
பெருத்த குரலோடு
அசைத்துக் கொண்டிருக்கிறது
மௌனம்!
பாலுவின் எல்லாக் கவிதைகளையும் படித்துவிட்ட பிறகு எதை விடுவது எதைத்தொடுவது என்ற குழப்பம் எனக்கு. எல்லாக் கலா ரசிகனுக்கும் தேர்ந்த கலையை ரசிக்கும்போது இந்த குழப்பம் நேருவது இயல்பு. நட்சத்திரங்களில் எதை அழகு என்பது? அப்படித்தான் உங்கள் கவிதைகளும். எப்போதுமே எண்ணத்தில் உதித்ததை எவனாலும் அச்சுவார்த்தார்போல் அப்படியே எழுதிவிடவும் இயலாது. நான் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா?
























Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...