பொன்னாடையோடு அன்புச் செல்வன் தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்தபோது |
ஒரு படைப்பாளனின் மரணத்தை சாதாரணமாகக் கடந்து விட முடியவில்லை. ஏனெனில் அவன் அறிவு சார்ந்து இயங்குபவன்.
தனக்குள்ள சொற்களின் பலத்தால் தன்னை தகவமைத்துக்கொண்டவன் அவனை ஒரு தனிமனித இயக்கமாக மாற்றுவதும் அவன் சேகரித்து வைத்துள்ள சொற்கள்
செய்த கைங்கர்யம்தான். அவனின் மரணம் அவன் கருத்துலகின் மரணம். படைப்பிலக்கியம் சார்ந்த
புதிய கருத்துகள் அவனிடமிருந்து இனி வரப்போவதில்லை. அவனிடமிருந்து இனி புதிய சிறுகதைகள்,
கட்டுரைகள், என் எதுவுமே வர வாய்ப்பில்லை என்பதால் அவனின் விடைபெறல் சாதாரணமானது அல்ல.
மு.அன்புச்செல்வன்
நினைவுக்கு வரும்போதெல்லாம் அவரின் கிண்டல், அங்கதத்தொனி முன்னிற்கிறது. ஒரு படைப்பாளனின்
படைப்பில் அங்கதம் ஒலிக்கிறதென்றால் அந்தப் படைப்பு வாசகனின் மனதில் நிலைத்துவிடுகிற
சாத்தியாத்தைப் பெற்றுவிடுகிறது. புதுமைப் பித்தனை, நாஞ்சில் நாடனை, ஆதவன் தீட்சண்யாவை, அவர்களின் கேலி மொழி கொண்டே மனிதி நிற்கிறார்கள். அது ஒரு படைப்பு வித்தை. கதைகளில்
கட்டுரைகளில் சினிமா கேள்வி பதில்களில், கதை விமர்சனங்களில் அன்புவுடைய அங்கத அடையாளம்
ஊடுறுத்துக்கொண்டே இருக்கும். அவை வலிய திணித்தவையல்ல, சிந்தனை ஓட்டத்தின் குறுக்கே
வந்து விழும் சொற்கள். நம்மோடு பேசுகையிலும் கூட ஒரு மெல்லிய நகைச்சுவையை ஊடாட விடுவார்.
அது துர்நோக்கம் அற்றதாயிருக்கும்.
நான் இளமைக் காலத்தில்
எழுத வருகிறேன். எனக்கு ஒரு நெருங்கிய எழுத்து நண்பராக அறிமுகமாகிறார் அமரர் கரு.வேலுச்சாமி.
அவர் ஒரு சிறுகதை தொகுப்பு நூல் போட முனைந்தபோது மு.அன்புச்செல்வனின் சிறுகதை ஒன்றையும்
சேர்த்துக்கொண்டார். சிறுகதை எழுதியவனிடம் அனுமதி பெறாமல் நூலாக்குவது சட்டத்துக்கு
விரோதமானது என்று உணர்ந்தவர், “உங்கள் சிறுகதை நான் போடும் தொகுப்பு நூலில் சேர்த்திருக்கிறேன்,
உங்கள் அனுமதி வேண்டும்,” என்று கடிதம் எழுதுகிறார் அன்புச்செல்வனுக்கு. இரண்டு வாரம்
முடிந்து அவரிடமிருந்து ஒரு பதில் கடிதம் அவருகிறது. கொஞ்சம் கடுமையாக,” என்னுடைய அனுமதியை
முன்னாலேயே பெறாமல் என் கதையைத் தொகுப்பில் இணைப்பது எழுத்தாளனுக்குச் செய்யும் அநியாயமாகும்,”
அந்தக் கடுங்குரல் என்னை அதிரவைத்தது. படைப்பாளனுக்கு எதிர்க்குரல் இருக்கவேண்டும்.
கருத்து உடன்படாமை அவனின் தேடலை அதிகரிக்கும்.
என் படைப்பு உங்கள் தொகுப்பில் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த மகா பெரிய கௌரவம்
என்று தலைசொரிந்து நிற்பவன் எதிர்க்குரல் ஒலிக்கமாட்டான். அவன் எல்லாவற்றுக்கும் உடன்படும்
முதுகெலும்பற்றவன். மு.அன்புச்செல்வனின் அந்த எதிர்க்குரல் தொடுக்கும் புல்லியிலிருந்தே
எனக்கு அறிமுகமாகிறார்.
அந்தக் கதைதான்
அவரின் படைப்புலகை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. அக்கதையின் நடையும் கேலிக்குரலும்
எனக்குப் புதிது. முழுக்க முழுக்க உள்நாட்டுக் கதைகளையே படித்திருந்தவன்,அன்புச்செல்வனின்
கதையில் ஒரு பெரிய வேறுபாட்டை உணர முடிநதது. அவர் புனைவில் கதாபாத்திரமாக இருக்கும்
நிஜ மனிதன் அக்கதையைப் படித்திருந்தால் நொந்து போயிருப்பான். அதன் அங்கத மொழி அவனை
கூர் பார்த்திருக்கும்.
வாசித்து கால்
நூற்றாண்டு கழித்தும் அவரின் ஒரு சிறுகதை மனதில் நின்று வருடுகிறது என்றால் அக்கதை
வெற்றிபெற்ற கதைதான். அதுவும் இன்னொரு சக படைப்பாளனை நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதென்றால்
அக்கதை காலத்தை வென்று நிற்கிறது என்றே பொருள்படும். அந்தக் கதையை இப்படி எழுதியிருப்பார்.
ஒரு குடும்பத்தலைவன் இறந்துவிடுகிறான். மனைவி குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு. அவன்
ஒருவன் சம்பாதித்தே அத்தனை வயிறும் நிறைய வேண்டும். நம்பி இருந்தவன் சடக்கென தன் வாழ்நாளை
முறித்துக் கொண்டபோது குடும்பம் கதறுகிறது. அந்த எதிர்ப்பாரா மரணம் மனைவியை உலுக்கிவிடுகிறது.
துக்கம் தாள முடியவில்லை. நினைத்து நினைத்து அழுகிறாள். நாள் பட நாள் பட மரணச்செய்தி
பழையதாகி பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறது குடும்பம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை
சூடப்பட்டு பொட்டு வைக்கப்பட்ட அவர் புகைப்படத்தைப் பார்க்குந்தோறும் இழப்பின் துக்கம்
நீங்கியபாடில்லை. மெல்ல மெல்ல புருஷன் படமாகிப்போய் தொங்குவதும் பழகித்தான் போகிறது.
துக்கம் மெல்ல நகர்ந்து தூராமாய்ப் போய்விடுகிறது. ஒருநாள் காலையில் அவர் படத்தை கும்பிடும்போது
ஒரு சொல்லொணா கோபம் பீறிடுகிறது மனைவிக்கு.” என்ன மனுஷன் இவன்… இவனை நம்பியே ஒரு குடும்பம்
இருக்கிறது என்று கூட உணராமல் ஒன்றுமே சேர்த்து வைக்காமல் இப்படி தத்தளிக்க வைத்துப்
போய்விட்டாரே. இப்போது எவ்வளவு அவதிப்படவேண்டி இருக்கிறது” என்று சலித்துப் புலம்புகிறாள்.
கதை இந்தப் புல்லியில் முடிந்துவிடுகிறது. இறந்துபோனவன் கணவனாக இருந்ததால் எப்போதுமே
கழிவிரக்கத்துக்கு ஆளானவன் என்ற சமூக அறத்தை உடைத்து நொறுக்குகிறது கதை. கணவனை இழந்தவள்
குடும்ப பாரம் அழுத்தும் தருவாயில் இவ்வாறான சலிப்புக்கு ஆளாகாமல் இருக்க முடியாது.
எல்லா விதவைகளுக்கும் உண்டாகும் மிக யதார்த்தமான உணர்வு இது. இறந்துவிட்டபோது கணவனின்
கையாளாகாத்தனத்தை நினைத்து விம்முவது யாதார்த்த வாழ்வின் நிதர்சனம்தான். ஆனால் இதனை
வெளியில் காட்டாமல் இருப்பதே பதி பக்தித் தன்மைக்குச் செய்யும் தார்மீகம். இது ஒரு
அந்தரங்க உணர்வாக நிலைக்கச் செய்துவிட்டார்கள். இதனை மனைவி காதாபாத்திரத்தின் வழியாக உரக்க ஒலிக்கச்
செய்ததே சமுகம் கட்டமைத்து பாதுகாத்த வந்த ஒழுங்கை உடைத்தெறிவதற்குத்தான். இந்த உணர்வை
கதை வழியாக பெண்பாத்திரத்தை புலம்ப விடுவதையும் அதனை வாசகனிடம் மடைமாற்றம் செய்யும்
திறனும் ஒரு ஆளுமையால் மட்டுமே ஆகக் கூடிய
செயல்.
உள்நாட்டு இலக்கிய
வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் மு.அன்புச்செல்வன். அதனால்தான் பத்திரிகைகளில்
இலக்கியப் பக்கப் பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கும் சிறிய கருத்தையாவது கட்டம்போட்டு எழுதிவிடுவார். இது படைப்பாளனுக்கு
பலனளிக்கவேண்டுமல்லாது வேறு காரணத்தைக் கற்பிக்கமுடியாது. “நம்ம ஊர் கதைகளைப் பற்றி
எழுதுங்கள் புண்ணியவான், என்னா பெரிய தமிழ்நாடு?” என்று பலமுறை எனக்கு எதிர் நின்றார்.
மலேசியாவில் எழுதப்பட்ட சிறந்த கதைப் பட்டியல்
அவரிடம் உண்டு. என் “குப்புச்சியும் கோழிகளும்” கதையைப் பற்றி சந்திக்குப் போதெல்லாம்
சிலாகித்ததை மற்க்க முடியாது. மலேசிய நண்பனில் அவர் இலக்கிய பொறுப்பாசிரியரான பின்னர்,
உள்நாட்டில் பேசப்பட்ட கதைகளை மீள் பிரசுரம் செய்து வந்தததை இங்கே கட்டியங் கூறுகிறேன்.
என்னால் எளிதில்
மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டியில்
நானும் அவரும் பங்கெடுத்த ஆண்டுகளில் ஓராண்டு பரிசளிப்புக்கு அழைக்கப்பட்டு இருவருமே
பக்கம் பக்கம் அமர்ந்திருக்கிறாம். ஆறுதல் பரிசிலிருந்து ஒவ்வொரு பரிசாய் அறிவிக்கிறார்கள்.
மு.அன்புச்செல்வந்தான் இம்முறையும் முதற்பரிசு பெறுவார் என்று எங்களுக்குள்ளேயே பேசிக்
கொள்கிறோம். ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப் படுகிறது. பரிசுபெறுவோரில் என்
பெயர் மட்டுமே அறிவிக்கப்படாமல் இருந்துபோது “ஓ இந்த முறை புண்ணியவானுக்கா?’’ என்று
சொல்லிக் கைகுலுக்கிவிட்ட பின்னரே பரிசு வாங்க மேடையேறுகிறார். ஒரு மதிப்புமிக்க ஆளுமை
சக படைப்பாளியைப் பாராட்டுவது தமிழ்ப் படைப்பு வெளியில் அபூர்வமாகவே காணமுடியும்.
யானை இறந்தாலும்
ஆயிரம் பொன்.
கோ.புண்ணியவான்
Comments
அங்கதத் தொனிக்காரர் என்று சொல்கையில், பேசும்போதே பேச்சுகளை கிசுகிசுத்துக்கொண்டே விழுங்குவார். விளங்கவில்லை மீண்டும் சொல்லுங்கள் என்றால்.. தொல்காப்பியமா சொல்றேன்.. என்று சொல்லி அடி தொட்டையில் சிரிப்பார். அவரிடம் பேசினால் சிரித்துக்கொண்டே இருப்பேன்..
உங்களின் இந்த இரங்கல் கட்டுரை அருமை சார்..
நீங்களே ஓர் அங்கதத் தொனி எழுத்தாளர் . உங்கள் இல்லத்தில் நுழைய முயன்ற திருடன் பற்றிய உங்களின் அண்மைய கட்டுரை தக்க சான்று . உங்களையே கவர்ந்தவர் மு. அன்புசெல்வன் என்பதை அறிந்து மகிழ்கிறேன். திருமகள் மாணவர் பத்த்ரிகை நடத்திய கரு. வேலுச்சாமி ஐயா அவர்களை இக் கட்டுரையில் குறிபிட்டது அவர் என் இல்லத்தில் சந்தித்த பழைய சம்பவத்தை நினைவு படுத்தியது.