18. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?


ஒரு சாபமா?

       காசிக்கு அடுத்து ரிசிகேஸ் கிளம்பவேண்டும். பேருந்தில்தான் மீண்டும் டில்லிக்குப் போய் அங்கிருந்து ரிசிகேசுக்குப் போகவேண்டும். டில்லியை அடைந்தவுடன் படுத்துறங்கி பயணத்தைத்தொடர்கிறோம். எட்டு மணி நேரத்துக்கு மேலாகிறது ரிசிகேஸை அடைய. மலை உச்சியில் தபோவனம் விடுதிதான் நாங்கள் இரு இரவுகள் கழிக்கவேண்டும். ஊருக்குத் தகுந்த பேர்.பாதையைத் தவற விட்ட ஓட்டுனர் தொலைபேசியில் விசாரித்து விசாரித்து, சுற்றி அலைந்து மலை அடிவாரத்தை அடைந்தார். இரவு சாய்ந்து கொண்டிருந்தது. மலை அடிவாரத்தை நெருங்கியதும் மழை தூறல் போட்டு 
பூமியை ஈராமாக்கி இருந்தது. அடர்ந்த காடு. இன்னும் எத்தனை மணி நேரமாகும் என்று வயிறு கேட்டுக் கொண்டே இருந்தது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாகும் என்று சொன்னார்கள். மழையின் காரணத்தால் இன்னும் தாமதமாகலாம். சாலை வலைந்து நெலிந்து போய்க்கொண்டிருந்தது. தூரம் என்று கருதிய படியால்தான் சாலைமேல் பழியைப் போட்டு 'சாலை போய்க்கொண்டிருந்தது ' என்று சலித்துக்கொள்கிறோம்.  மலை உச்சியை அடைய அடைய  குளிரும் உச்சியை அடைகிறது. இரண்டொரு விடுதியைக் கடந்து போகிறோம். 'இந்த விடுதியா' என்று குறுக்கே விழுந்த நப்பாசை வேறு. இன்னும் மேலே என்றார் ஓட்டுனர்.ஒரு கட்டத்தில் பேருந்து திணறியது. ஒரு வளைவில் போய் நின்று முரண்டு பண்ணியது. டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு இனி மேற்கொண்டு செல்லாது. கொண்டை ஊசி வளைவு. பேருந்துக்கு முதுகெலும்பும் , வளைந்து கொடுக்கும் தசை நார்களும் இல்லையென்று அப்போதுதான் தெரிந்தது. விடுதிக்குத் தொடர்பு கொண்டு வாகனத்தை அனுப்பச் சொன்னார்கள். வாகனம் வந்தது. நான்கைந்து வாகனங்கள். அங்கிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் இறக்கம்தான்.
"இதைவிட பெரிய பேருந்தெல்லாம் இதில் வளையும்... என்றுசலித்துக்கொண்டார் ஒரு விடுதி ஊழியர்.

                                               கங்கையைக் கடக்கும் பாலம்

தபோவனத்தை பசியோடு அடைந்தோம். மிகச்சாதாரண விடுதி. தபோவனம் இல்லையா அதனால். பார்ப்பதற்குத்தான் பெரிய நட்சத்திர விடுதி போன்று உள்ளது. ஆனால் மிகச்சாதாரணமான ஒன்றுதான். உணவு பணியாட்களின் சேவை எல்லாம் சுமார்தான். இரவைக் கழித்துவிட்டு ஹரிதுவாருக்கு இறங்க வேண்டும். கங்கை நதி பல முனைகளிலிருந்து சங்கமித்து நதி அழகில் மெருகேறி 
                                           
 தபொவனம் விடுதி

நிற்கிறது. அதனைத் திரிவேணி சங்கமம் என்றே நினைத்தேன். திரிவேணி சங்கமம் இன்னும் மேலே போகவேன்டும் என்றார்கள். நதியின் கரையில் பலர் சிவனின் சிலையை நிறுவி பூசை செய்கிறார்கள். நீங்கள் கீழே பார்க்கும் இந்த பக்தர்போல பலரை நாம் பூசை செய்யும்போது பார்த்தோம். நதியின் கரையில் மிகப்பெரிய சிவன் எழுந்தருளி இருக்கிறார். நதிக்கரையில் காசியைப் போலவே இங்கேயும் பல வீடுகளையும் கோயில்களை பார்க்கிறோம். நதி நீர் காசி போலல்லாமல் திருப்திபடும் அளவுக்கு தெளிந்து நகர்கிறது. சாமியார்கள் பகதர்களை இடைமறித்து விபூதி கொடுத்து பைசா கேட்கிறார்கள். ஒரு வெள்ளைக்காரத் தம்பதியினரை எவ்வளவு வற்புறுத்தியும் முடியாமல் பின்வாங்கும் சாமியாரைப் பரிதாபமாகப் பார்க்க நேர்ந்தது.


பேருந்தை நிறுத்திவிட்டு கேபல் காரில் மானசதேவி கோயிலுக்குப்புறப்பட்டோம். கங்கைதான்  மானசதேவியாக எழுந்தருளி இருக்கிறார். வரிசையில் காத்திருந்து கேபல் காரில் ஏறி 15 நிமிடத்தில் மலை உச்சியை அடைகிறோம். கேபில் காரில் போகும்போது கீழே கங்கை கிளை கிளையாகப் பிரிந்து ஓடும் அழகைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.


ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் வரிசைப் பிடித்து நிற்க நாங்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். வரிசை நத்தையாய் நகர்கிறது.மானசதேவி கோயிலை அடையும் முன்னரே காளிச் சிலைகளை சிறு தெய்வம் போல  நிறைய நிறுவி இருக்கிறார்கள். பக்தர்கள அதனைக் கடக்கும் போது நிறுத்தி வழிபடச்சொல்கிறார்கள். எதற்காக இந்த வற்புறுத்தல் என்று பார்த்தால் குறைந்தது 10 ரூபாயாவது தட்டில் போடுவதற்கு. இப்படி பத்துக்கு மேற்பட்ட உருவ வழிபாடுகள். ஒவ்வொன்றிலும் ஒரு சாமியார் தரிசனம் தருகிறார். அவருக்குப் பணம் போட ஒரு தரகர் நம்மைத் 'தடுத்தாட்கொள்கிறார்'.
   
 தபோவனம் விடுதிக்கு முன்னால் மேடான பகுதியில் சிறுவனிகர்களின் சிரமம்

சில பயந்தாங்கொல்லி பக்தர்கள் ஒவ்வொரு தட்டிலும் ரூபாய்கள் போட்டுக்கொண்டே போகிறார்கள். சாமிக் குத்தம் வந்திடும் என்று பயம். சாமிகளே இப்படி குத்தம் செய்வதை அறியாத பேதைகள்.
! பக்கா பகற்கொல்லை நடக்கிறது. கோயில் உண்டியல் அங்கிருக்க, ஏன் இடைத் தரகர்கள் வழிப்பறி செய்கிறார்கள் என்று தெரியவில்லை . காசியிலும் ரிசிகேசிலும் ஹரிதுவாரிலுமா இப்படி? காசியிலும் அரித்துவாரிலும் கோயிலை எப்படி நிர்வகிப்பது உலக இந்துக்கோயில்களுக்கு இப்படித்தான் 'பாடம்' கற்றுக்கொடுக்கிறார்கள். என்னை இரண்டு மூன்று இடத்தில் மிரட்டி பைசா போடச்சொன்னார்கள். இந்தியில் ஏதோ திட்டினார்கள். கையை நீட்டி வழி மறித்தார்கள். நான் அசையவில்லை.நீங்கள் பார்க்கும் இந்தப் பணமரம் மானசதேவி கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அங்கே கட்டியிருக்கும் நூலில் ரூபாய்களை கட்டிவிட்டுச் செல்லவேண்டும். நாம் அதனைக் கடந்து சென்றால் அடியாள் போன்ற ஒருவன் குறுக்கே நின்று மிரட்டுகிறான். பலர் பயந்தே பணம் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். பக்தியில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத் தந்திரம் என்று ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்து சமயத்தைச் சடங்கு அளவிலேயே தரிசிக்கும் கூட்டம் 99 விகிதம் இருக்கிறார்கள். அந்தச் சடங்குகள் புத்தி ஏற்கிறதா என்று சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். சிறுதெய்வங்கள் கையில் அரிவாலையும், ஆயுதங்களையும் சிறுவயதில் பார்த்து பயந்த சனங்கள்! சாமி பேரில் யார் மிரட்டினாலும் அரண்டு விடுகிறார்கள். இந்து சமய நம்பிக்கையாளர்களுக்கு  இது ஒரு சாபம்தான்.

ஹரிதுவாரில் இயற்கைக் காட்சிகள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

தொடரும்.......

Comments

பயணத்தில் எவ்வளவு இடர்கள், சுற்றுப் பயணத்துரையில் இருக்கும் ஸ்காம்களை வைத்து ஒரு டாக்குமெண்டரி எடுத்துவிடலாம் போல. சுற்றுளா துரைக்கு நிச்சயமாக பாதுகாப்பும் கட்டுபாடுகளும் வேண்டும். இந்தியாவை விட ஏழை நாடுகள் கூட இதில் கவனமாக உள்ளன. ஒரு நாட்டின் நிர்வாகத்தின் மெத்தன போக்கே இவற்றிக்கு காரணம்.
ko.punniavan said…
சீனா எவ்வளவோ பொறுப்புடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறது.
இந்தியா பொறுப்புண்ர்ச்சி கிலோவுக்கு என்ன விலைக்குக் கிடைக்கும் என்று கேட்கும் போல.
Bagawanjee KA said…
இந்த விபூதிப் பிச்சை எங்கே போனாலும் விட்ட பாடில்லை !
Anonymous said…
பணமே பிரதானம், மக்களின் இறை பயமே அதற்கு மூலதனம். இவர்களுக்கு காசே தான் கடவுள், இது அக் கடவுளுக்கு நன்றாக தெரியும் போல. இயற்கை எழில் கொஞ்சும் அரித்துவாரம், மானசரவோரில் போக்குவரத்து வசதிகளையும் பெருக்கி பணம் பறிக்கும் பொறுக்கி சாமிகளை தடுத்தாலே சுற்றுலா சொர்க்கமாய் அது உருமாறும் என்பதில் மறுபேச்சு கிடையாது.
ko.punniavan said…
வருகைக்கு நன்றி பகவான் ஜி, விவரணன் நீலவண்ணன்...

சரியாகச் சொன்னீர்கள். இந்தியா சுற்றுலாத்துறையை மேம்படுத்த முழுகவனமும் பொறுப்புண்ர்ச்சியையும் காட்டவேண்டும்.இந்தியா பெரிய அளவில் சாதிக்க முடியும்.
Indian said…
Kondai oosi valaivu (Hair pin bend) enbathuthaan sari, Gundoosi valaivu alla.
அடுத்த ஆண்டுக்கான எனது சுற்றுளாவுக்கான எனது திட்டம் பெய்ஜிங், சீனா...
ko.punniavan said…
ஆமாம் கொண்டை ஊசி வளைவுதான் சரி. தவறாக எழுதிவிட்டேன். நன்றி
இந்தியன்.
ko.punniavan said…
விக்கி.
பெய்ஜிங் போய் வாருங்கள். நான் சென்றபோது மைனஸ் 7ல் இருந்தது குளிர். கொட்டும் பனி. இரவில் காற்றடித்தால் எலும்ப் நொறுங்கிவிடும்.