Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 14

 வெனிஸ் என்ற நீரூர் -முத்தம் 14

ப்ராண்சியாவில் காத்திருந்த தருணம்
சாய்ந்த பைசா கோபுரத்தைச் சாய்ந்து சாய்ந்துதான் பதிவு செய்துகொண்டிருந்தோம். உலக அதிசயங்களைப் பார்க்கும் கூட்டம் குறையவே இல்லை. அதிலும் பைசா கோபுரம் மிக விநோதமான ஒன்று. சாய்ந்த எப்போதோ விழுந்திருக்க வேண்டிய ஒன்று. அதன் சாய்வை நிறுத்தி கட்டுமான தொழில்நுட்பத்தில் வரலாறு படைத்த விநோதம் நிகழ்ந்தது அங்கே.. அவ்வளவு சாய்ந்துதிருந்தும் வரலாற்று அடையாளத்தை  நிலை நிறுத்த வேண்டி எத்துனையோ சிரமத்துக்குப் பிறகு அதன் சாய்வை நிறுத்தி வைத்த மனித மூளையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஏ மானுடா, ஒரு பிரச்னை வந்ததும் துவண்டு  சாய்ந்துவிடாதே, சாய்ந்த இடத்திலிருந்தே உன் சாதனையைத் தொடங்கு என்ற குறியீடாக, படிமமாக, தொன்மமாக கல் கட்டடம் ஒன்று  உலக மாந்தருக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறது பைசா கோபுரம். "இனி மேலும் சாய்வதாய் இல்லை, என்னைப்பார்," என்று நமபிக்கையின் உரத்த குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பைசா கோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை சட சடவென் இறங்கியது. குடை விற்பவர்கள் முகம் நம்பிக்கையோடு  மலர்ந்திருந்தது. எனக்கு அப்போது ஒரு கவிதை தோன்றியது.
           இடியும் மின்னலும்
           மழைக்காற்றும்
           குடை விற்பவனின்
           மனம் விரிய வைத்த
           மழையே
           ஏமாற்றியது
           அவனை
மழை வந்த வேகத்திலேயே  நின்று போனது. குடை விற்பவர்கள் ஏமாந்துதான் போனார்கள். வெயிலில் விற்கவே கால் கடுக்க நின்று காத்திருந்தனர். மழை பெய்ய ஆரம்பித்ததும் அவர்கள் குடை விற்கும் தருணம் இதுவே என்று மகிழ்ந்தார்கள். மழை நின்றதும் வெயிலையும்  தணிய வைத்துவிட்டது. குடை விற்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை மழை நின்று கெடுத்துவிட்டது. வெய்யிலும் காயாமல், மழையும் பெய்யாமல் குளிச்சியான ஒரு காலச்
சூழலை வகுத்துவிட்டதால் குடை எப்படி விற்கும்? ஆசை காட்டியல்லவா மோசம் செய்தது மழை.
வெனிசில்

பைசாவை பார்த்து முடித்தாயிற்று. கிளம்ப வேண்டியதுதான் என்றால் ரயில் நிலையத்தை அடைய மேலும் 4 கிலோ மீட்டர் நடக்கவேண்டும்.சரி டேக்சி பேசலாம் என்றால், அந்த குறுகிய நேரப் பயணத்துக்கு அள்ளிக்கொடுக்க வேண்டி யிருந்தது. எனக்கும் கால் வலிதான். பரவாயில்லை இது நடை நகர்தானே !நடந்து போவதுதானே அந்தப் பெயருக்கு நாம் செய்யும் தார்மீகம். மழை நேரத்தில் குடை விரித்து அதனைக் கேவலம் செய்யாதே என்று கவிப்பேரரசு வைரமுத்து சொல்வானே. அதுபோல நடை நகரை நடந்தே கடப்பதுதானே நாம் அதற்குச் செய்யும் நியாயம். நடந்தோம். வலிக்க வலிக்க நடந்தோம். கண்கள் பராக்குப் பார்க்க நிறையவே காட்சிகள் இருந்தபடியால்
கால்களின் நோவு பெரிதாகத் தெரியவில்லை. நான் நினைப்பதெல்லாம் ஒன்றுதான். வலிக்க வலிக்க நடந்த பிறகே அக்கடா என்று அமர்வதில் ஒரு பேருவகை இருக்கும். தூக்கம் வரவில்லை என்பவர்கள், உடலை வருத்தியிருந்தால் அப்படி சொல்வற்கே வாய்ப்பில்லாமல் போகும். ஒவ்வொரு நாளும் இப்படி நடப்பதாலேயே மூன்று நான்கு மணி நேரம் தூங்கக் கிடைத்தாலும் சுகமான ஆழமான தூக்கமாக அமைந்துவிடுகிறது. உடற்கலைப்பு மறுநாள் இல்லாமல் போகிறது. அதனால் நட.

திருமபிக் கொண்டிருக்கும் போது மீண்டும் அந்தச் சிலை மனிதனைப் பார்த்தோம். அசையாது நின்று கொண்டிருந்தான். ஐரோப்பா முழுதும் இதனை ஒரு கலையாகவே சிலர் மேற்கொள்வதைப் பார்க்க முடிந்தது.நெடு நேரம் அசையாமல் நிற்பது ஒரு தவம்தானே.

ஸ்டேசனை அடைந்ததும் ஒரு ஆளுக்கு 36 யூரோ கொடுத்து புல்லட் டிரேய்னில் பிரன்சியாவுக்குத் திரும்ப   4 டிக்கட் எடுத்துக்கொண்டோம். மனிதன் டிக்கட் விறபதில்லை.  ஒரு மணி நேரப் பயணம்தான்.

தன்னிச்சையாக இயங்கும் பூத்தில்தான் டிக்கட் எடுத்துக்கொண்டோம். டிக்கட் விற்பனை  செய்வதில் மனிதவலத்துக்குத் தேவையே இல்லை ஐரோப்பாவில். எனவே மலேசியாவைப் போல ஊழல் நடக்கவும் வாய்ப்பு மிகக்குறைவு.
வெனிஸ்

மழை வாங்கிய மண் ஈரமாக இருந்தது. மண் ஈரமானால் போதும் ஐரோப்பாவில் குளிர்நிலை வந்துவிடும். வெயில்கூடச் சுடாது. இதமாகவே இருக்கும். மழையின் ஈரத்தை ஐரோப்பிய நாடுகளில் நன்றாகச் சுகிக்க முடிந்தது.
வெனிஸ் ரயில்வே ஸ்டேசன்

மழைநீர் நனைத்த பாதையில் நடப்பது தனி சுகம்.
ரயில் ஸ்டேசனில் சில மணித்துளிகள் காத்திருந்து பிரன்சியாவுக்குப் போய் விடுதியைக் காலி செய்து அன்றிரவே வெனிசியா போகவேண்டும். ஆம் வெனிஸ்தான். நீரில் மிதக்கும் ஊர். இந்த ஊர் என்ன சொர்க்கம் மாதிரி இருக்கிறது என்று படங்களைப் பார்த்துப் பார்த்து வியந்துபோன நாட்கள் அதிகம். உள்ளபடியே வெனிஸ் போகவேண்டும் என்று  முன்யோசனைகூட இல்லை. என் மருமகன் நாம் நாளை வெனிஸ் போகப் போகிறோம் என்று சொன்னவுடன் என் கனவு என் ஊர் நனவின் முன் நின்றது. அவர் வரைப்படத்தை பார்த்தே ஊரை, இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பார்.அவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் வெனிஸ் என்ற ஊர் ப்ரான்சியாவிலிருந்து வெகுதூரமில்லை என்று பட்டது. அலாவிதுனின் அற்புத விளக்கைத் தேய்த்து ஒரு விடுதியை புக் செய்தார். பிரான்சியாவிலிருந்து மூன்று மணி நேரத்தில் புல்லட் ரயிலில் வெனீஸ் பயணமானோம். பல சமயங்களில் புல்லட் டிரேய்னை விட நாங்களே வேகமாக ஓடி ரயிலைப் பிடிக்கவேண்டியிருந்தது. ஒரு பிலாட்பார்மில் இறங்கி இன்னொரு பிலாட்பாமை தேடி ஓடும்போது நேரம் ஓடிவிடுகிறது. தவறான பிலாட்பார்முக்குப் போய்விடும்போதுதான் பிரச்னை வந்துவிடும். ஆனால் எங்கேயும் ரயிலை விட்டுவிடவில்லை. மூச்சு வாங்க வாங்க ஓடி ஒரு நிமிடம் முன்னமேயே போய்ச் சேர்ந்துவிடுவோம். வெளிநாட்டுக்குப் போனால் நம் விழிப்பு நிலை பல மடங்கு விரிவாகிக்கொள்ளும்.

குலோசாப்பில் என் இல்லாள்
நாங்கள் வெனிசுக்கு ரயில் ஏறியபோது இருள் சூழத் தொடங்கியது.
பின்னிரவில்தான் வெனிசில் போய் இறங்க முடியும். ஸ்டேசனுக்குப் பக்கத்திலேயே கொலம்போ விடுதி கிடைத்தது என்பதால் பின்னிரவு பயம் விடியலைப் போல பயத்தை நீக்கியது. ஆனால் அரை கிலோ மீட்டர் நடந்து போவதற்குள் தனிமை இருள் அச்சத்தை ஊட்டியது.



தொடரும்.....




Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...