Skip to main content

ஸ்டாபிசாக்ரியா -பிணத்தோடு பாலுறவு

ஸ்டாபிசாக்ரியா -பிணத்தோடு பாலுறவு




நினைவுகளில் உள்ள பதிவுகளின் அலைக்கழிப்பே ஒரு தருணத்தில் படைப்பிலக்கியமாக உருக்கொள்கிறது. அந்த அலைக்கழிப்புகளின் துவக்கப்புள்ளி எது என்பது மர்மமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதன் கரு மட்டும் மனதுக்குள் தீராத ஆட்டம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. எத்தனை காலம் கடந்தாலும், சில காலம்  அதனை மறந்தாலும், கலைமனம் மீண்டும் அதனை நம் நினைவு சுழற்சிக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது ஒரு சந்தர்ப்பத்தில். அது படைப்பாக பரிணாமம் காணும் வரை இந்த மன ஆட்டம் நடந்தபடியே இருக்கும். படைத்த பின்னர்தான் அந்த ஆட்டம் மோட்சம் கொள்கிறது. எனவே கலைமனம்  கொண்டவனுக்குப் பதிவுபெற்ற நினைவுகள், படைப்பை நோக்கி உந்தித்தள்ளும் ஒரு விசை.
சிறுகதைகள் பெரும்பாலும் அனுபவப் பகிர்வாகத்தான் படைக்கப்படுகின்றன.  கலைநயம் மிகுந்திருப்பின் சாதாரண கருவைக் கூட சிறந்த கதையாக்க முடியும். சுஜாதா இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தன் அழகியலால் சாதாரணத்துவத்தை அசாதாரணமான ஒன்றாக படைத்துகாட்டும் வல்லமை கொண்டவர். தன் வசீகர நடையால் வாசகனைக் காந்தம் கவர்ந்ததுப்போல தன்வசம் வைத்திருப்பார்.
தெ. வெற்றிச்செல்வன் கதையாடலும் வாசகனை வலைத்துப்போடும் சாகசம் நிறைந்தவை. தன் அனுபவத்தை வாசகனிடம் கொண்டு சேர்ப்பதற்கான வார்த்தைகளைக்  கைவசம் வைத்திருப்பவர்.


 ‘ஸ்டாபிசாக்ரியா’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து என்னை வாசிக்கத் தூண்டிய முதல் கதை ‘ஸ்டாபிசாக்ரியா’ கூட இல்லை, ‘கி.பி 2500’ சிறுகதைதான். மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது அவரே அக்கதையின் சாரத்தைப் பிழிந்தபோது, அதனைத் துய்த்துணரும் ஆவல் மேலோங்கிக்கொண்டிருந்தது. தூக்கமில்லாத முதல்நாள் இரவின் களைப்பை உடல் தேக்கிவைத்து இம்சித்துக் கொண்டிருந்ததால் சொச்ச தூக்கக் கடனையும் ஒழித்துவிட்டு படிக்கலாம் என்று மறுநாள் என்னை எழுப்பி வாசிக்கச்செய்த முதல் கதை ‘கி.பி 2500’.
படித்துவிட்டு புத்தகத்தை கீழே வைத்துவிட்டேன்.  2500 ஆண்டின் என் சந்ததிகளின் வாழ்க்கை நிலையை எண்ணும்போது கதிகலங்கியது. இந்த நிகழ்காலத்திலேயே (2015)  நாம் எதிர்நோக்கும் சூழியல் கற்பழிப்புகள் இயற்கை ஏற்பாட்டின் நேர்த்தியை எந்த அளவுக்கு பாழாக்கி இருக்கிறது என்பதை எச்சரித்த வண்ணம் இருக்கிறது சூழியல் கரிசன உலகம். தாங்க முடியாத வெக்கை, கிஞ்சிற்றும் எதிர்பாராத சுனாமி பேரிடர், கரை உடைத்து வீடுகளை அதன் உயிர்களை கருணையின்றி கடத்திச்செல்லும் வெள்ளம் என என்று மில்லாத ஏகப்பட்ட இயற்கைத் தாக்குதல்கள் நம் கண்முன்னே அரங்கேறிற்று. எதிர்காலத்தில் இன்னும் மோசமாக இருக்கும் என சுட்டுவிரல் ஆட்டி எச்சரித்துக்கொண்டே இருக்கிறது இந்த அபாய அறிகுறிகள். 2500 ஆண்டின் சூழ்களம் புனைவு வழியே காட்டப்பட்டாலும், அது கொடுக்கும் அதிர்ச்சியிலிருந்து மீள ஒரு சில நிமிடங்கள் ஆகின்றது.
திசு வளர்ச்சி முறையில் அரிதினும் அரிதாக ஒரைச் சட்டைவா முழுக்க முழுக்க குளிர்பதன ஆய்வகத்தில் உருவாக்கி வளர்த்த 2500ல் இல்லாமல் போன நெல்வயலை உருவாக்கி ஒரு காதல் காட்சியை படமாக்கி அதற்காக விருது பெறுகிறார் தென்னவா கி.பி 2500  ஆண்டில். நமக்கு என்ன தோன்றுகிறது என்றால் இன்றைக்கு நாம் உண்ணும் அரிசி உணவோ பச்சை நிலமோ, சுவாசிக்க இயற்கை காற்றோ அற்ற 2500 ஆண்டின் பயங்கர திணைக் காட்சி மட்டுமே. இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்த பிற்பகல் பொழுதில்   சன்னல் வழியே வீசும் காற்றும், அசையும் மாமர இலைகளும் அதில் தாவிதாவி அமர்ந்து இறக்கை விரித்துப் பறக்கும் சிட்டுக்குருவியும் 2500ரிலோ, அல்லது அதற்கு முன்பான காலத்திலோ இல்லாமல் போகும் தருணம் உளமனதை பூட்ஸ் காலால் உதைக்காமல் என்ன செய்யும்? இப்போதெ அதன் பிம்பம் மனதில் நிழலாட்டம் செய்கிறது.
நூலின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிற ‘ஸ்டாபிசாக்ரியா’ வை வாசித்தேன். பிணத்தோடு படுத்தால்தான் சாவக்கிடக்கிற கிழடு உயிர் பிழைக்கும் என்ற மிகப் புராதன சடங்கில் மூழ்கியிருக்கும் கிராம மக்கள் நம்பிக்கையை மையமிடும் கதை. குமட்டுகிறது வாசகனுக்கு. செத்த பிணத்தோடு உறவு கொள்ள வேண்டும். உறவு நடந்தாதா இல்லையா என்பதை  பரியேறியின் மனைவி பரிசோதித்துச் உறுதிப்படுத்துவாள். யோனியில் விந்து ஈரம் படிந்திருக்கவேண்டும். ஆண்மைக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை இது. என்ன செய்ய? இதனை எதிர்த்துப்போராட முடியாத அளவுக்குக் கெட்டிதட்டிப்போயிருக்கிறது கிராம வழக்கம். ஆனால் பிணத்தோடு உறவு கொண்டவனுக்கு பின்னர் சொந்த மனைவியோடு படுக்க முடியவில்லை. உறவு கொள்ளும் நேரத்தில் பிணவாடை பின்னாலிருந்து பிறடியை நெறுக்குகிறது. இதனைக் குணப்படுத்த உதவும் ஹோமியோபதி மருந்தின் பெயர்தான் ஸ்டாபிசாக்ரியா. ஹோமியோபதி மருத்துவத்தை முன்னிறுத்தப்பட்ட பிரச்சாரத் தொனி கேட்கிறது கதையை வாசித்து முடித்ததும். ஆனால் கதைக் கருவும், அதனை விரித்துக்காட்டிய பாங்கும் வலிமையாக நிற்கிறது.

அம்மையப்பன்
 அவன் கருத்தறிந்த நாளிலிருந்து தன்னைப்பெற்றவன் யாரென்ற மர்மமே கதைக்குள் நம்மை, பூச்சியைச் சுண்டியிழுக்கும் பள்ளியின் நாபோல இழுத்துக்கொள்கிறது. பள்ளியில், பொதுவில், என் மயில்சாமியை விரட்டும் ஒரே கேள்வி அப்பா யார்? அம்மாவிடமிருந்து தீர்க்கமான பதில் வரவில்லை. வராது! அதனை மகனிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத கீழ்மை உணர்வுச் சிக்கல். ஒரு பெண்ணால், ஒரு அம்மாவால் எப்படி முடியும்? அப்படியானால் முறைகேடு நடந்திருக்கிறது என்ற சந்தேகம் மயில்சாமிக்கு. அம்மா இறந்த பின்னர்கூட அவள் மீதான, சமூகம் விட்டெறிந்து  கல்லாக காயப்பட, அம்மாவின் பிணத்தையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத கோபம்  கனன்றெரிகிறது. அப்பா யார். தன்னைக் கூனிக்குருக வைக்கும் மர்மம் என்ன? அவர் யாராய் இருந்தால் என்ன? பெற்ற அப்பா இன்னார் என்ற பிரகடனம் ஒன்றே மனச்சுமையை இறக்கும் மருந்து.  அதில்தான் அமுங்கி ஒளிந்துகிடக்கிறது அம்மாவின் தூய்மையும். அவை இரண்டுமே  ஒரு புள்ளியில் தீர்வைத்தரும் கதை அம்மையப்பன். நம்மையும் மயில்சாமியின் அம்மாவைத் தேடச்சொல்லி அலையவைத்திருக்கிறது. கதையின் ஆணாதிக்கம் மெல்லிய சரடாக இழையோடுகிறது. அம்மாவுக்கு நேர்ந்த அதே பழியை மயில்சாமியும் தன் மனைவிகளின்மீது காட்டுவது ஆணாதிக்க மனோபாவம்தான். அம்மாவின் தூய்மை மீதான சந்தேகக் கனலை நான்கு மனைவிகளின் மீதும் இறக்கிவைப்பதே அந்த ஆணாதிக்க வன்மம். அப்பாவின் ஆணாதிக்கப் பாதிப்பை வெறுக்கும் மயில்சாமி நான்கு பெண்களை வாழாவெட்டியாக்கியது சரிதானா என்ற வினாவை என்முன் எழுப்பியது.

ஒளிவிலகல்
 ஆணாத்திக்க மனோபாவத்துக்கு எதிராக போர்தொடுக்கும் ஒரு சமூகப் பிரக்ஞை கொண்ட பெண்ணின் கதை. ஆனாதிக்கம் வலுவாக வேரூன்றிவிட்ட ஒன்று. இந்த நவீன யுகத்தின் பெண்கள்கூட ஆணியத்துக்கு எதிராக நிற்கும்போது மேலும் மேலும் புதிய சவால்களே குறுக்கெ பாய்கின்றன. அவள் கலை நோக்கு உள்ளவள். இவன் பாலியல் சார்ந்தே சினிமாவை பார்க்கிறான். அவள் பொதுத்தொண்டு மனம் உள்ளவள் இவன் சுனாமி நேரத்தில் அடித்துவரும் சவங்களின் நகைகளைக் கொள்ளையடித்துப் பணம் பார்க்கிறான். இதனை ஒரு சமூக சேவகி எப்படி பொறுத்துக்கொள்வாள்? அவனை புறந்தள்ளுகிறாள். கல்லானாலும் கணவன் என்ற மரபான சொலவடையைச் செல்லாக்காசாக ஆக்குகிறது கதை. திருந்தாத ஆணிடம் தன்னைத் தொடர்ந்து பலிகொடுக்க அவள் தயாராயில்லை. பணப்பையையும் சேர்த்து அவனையும் தூக்கியெறிகிறாள்.
 நேரெதிர் பாத்திர வார்ப்பு கதையின் சுவையை மேலேற்றுகிறது. ஒருவருக்கொருவர் முரணாக நின்றாலும் பெண்ணியம் சற்று தூக்கலான திமிறோடு நிற்கிறது.

மண்ணின் மைந்தர்கள்.
ஆழ்மனதுக்குள் பதிந்த காயத்தின் வலி அதனைப் பற்றி நினைவுகூரும்போதெல்லாம்  துன்புறுத்துகிறது நிலவழகி டீச்சரை. தனித்திருந்த தன் மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நினைவு ஆறாத வடுவாக நிலைகொண்டு, அப்பாதகர்களின் பெயர்கள் சொல்லப்படும்போதெல்லாம், அவள் நிலகுலைந்து சந்நதம் வந்ததுபோல ஆவேசம் கொள்கிறாள். டீச்சரின் கையறு நிலை கதையில் ஆழமாக பதிவாகியிருக்கிறது.

முன்மாதிரி
கிழவனும் கிழவியும்தான் மையப்பாத்திரம். இறுதிக்கட்டம் வரை அவர்களின் அன்பும் அந்நியோன்னியமும் வாசக மனதை கவ்வுகிறது. ஆனால் கதையில் இறுதிப் புள்ளியில் கலைஞனும் கலையும் ஏன் மையப்படுத்தப்படுகிறது? கிழவனுக்கும் கிழவிக்கான கதையோட்டத்தின் சரடு அறுபடுவதாகப்படுகிறது.

ஒட்டார்கள்
‘ரோஸ் டீச்சர்கள்’ தன்னை சமூகத் நல்லறத்துக்கு முன்மாதிரியாக நினைத்துக்கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் அலட்டிக்கொள்வதும், பிறர் குற்றத்தை பெருதாகி ஊதிப் பெருக்கவைத்துக் காட்டுவதும் சமூகம் அவதானித்தே வருகிறது. இதெல்லாம் எதற்கு என்றால் சுய குறையை மறைத்துக்கொள்ளவே! தான் சரியாகத்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற பறைசாற்றிக்கொள்ளும் தருணத்திலேயே பிழைகளைச் செய்துவிடுகிறார்கள். யார் யாரைத் திருத்துவது? யார் யாருக்குப் புத்திசொல்வது? முதலில் உன்முதுகில் மண்டிக்கிடக்கும் அழுக்கைப் பார் என்று சொல்கிறது கதை. ரோஸ் டீச்சர் பாத்திரம் ‘அப்பழுக்கிலாமல்’ வந்திருக்கிறது.  அவர்கள் ஒட்டர்கள்தான், ரோஸ் போன்றவர்கள்தான் சமூகத்தோடு ஒட்டார்கள். பண்பாட்டு வன்முறைக்கெதிரான எழுத்துவகை.

சோரம்
சமூகத்தில் சோரம் போகும் பட்டியல் எழுதப்பட்டால் அதிகாரவர்க்கத்தினரே எண்ணிக்கையில் அதிகம் இருப்பர். இதில் சோகம் என்னவென்றால் அதிகாரவர்க்கத்துக்குதான் சோரம் போகிறவர்கள் இன்னாரென்று சுட்டிக்காட்டும் அதிகாரம் உள்ளது. ஆமாம் கதைக்குள்ளே நுழைந்து பார்த்தால் பரத்தையர் சோரம் போகிறவர்கள் என்று சொல்லாமல் சொல்வதாக உள்ளது. அவர்கள் பல்வேறு காரணங்களால் அதற்குள் தள்ளப்பட்டவர்கள் அல்லவா? சமூகத்தில் முகமூடி அணிந்து ஊழல் செய்பவர்களே உள்ளபடி சோரம் போகிறவர்கள். அதைச் சரியாகவே  சொல்கிறது கதை.

வானவேடிக்கை
அடித்தட்டு மக்களின் வாழ்வு நிறைவாவது, அந்த இனக்குழுக்குள்ளே ஒருவர் இன்னொருவருக்கும் பிரதிபலன் பார்க்காது செய்யும் உதவியின் மூலமே. ஒரு இறப்பின் போது காட்சிப்படுத்தப்படும் மனித ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவும் பண்பு மனிதநேயம், சுயநலபோக்குச் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் மிக முக்கியமாக ஒன்று, சுயநலமிகுந்து சித்தரிக்கப்பட்ட கதைசொல்லி, பின்னர் சம்பந்தமில்லாத அந்த குறிப்பிட்ட இனக்குழு எதிர்நோக்கி பிரச்னைக்கு, தான் தள்ளி நின்று பார்க்காமல், தன்னையும் அர்ப்பணித்துகொள்வது எதைக்காட்டுகிறது என்றால், எல்லா மனித மனங்களிலும் இயல்பாகவே ‘நற்குணங்களே உறைந்துள்ளது’  என்பதை.


கரு
கடிவாளத்தை இழுத்த குதிரையைப் போல கதை பாய்ந்து ஓடுகிறது. அடுத்த வாக்கியத்தின் பொருளைப் பிடிக்க மீண்டும் மேலேயுள்ள வாக்கியத்தைப் படிக்கவேண்டியுள்ளது. அவ்வளவு விரைவு. நான் அதன் கதைச்சூழல் பணபாட்டு வட்டத்துக்குள் இல்லையென்பதால் நேரும் இடையூறு. இருந்தாலும் அதன் ஊகித்தறிந்து வாசிக்கும்ப்போது உவப்பாக உள்ளது.
கரு மட்டுமே முக்கியம்.கேமாராவுக்குள் சிக்கிய சம்பவங்கள் மனிதர்கள் கலைஞர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல சில கலைஞர்களுக்கு.. கண்முன்னே குழந்தை இறந்ததையும் நல்ல கருவாக மட்டுமே பார்க்கும் கலைஞன் எந்த விதத்தில் சமூகத்துக்கு உதவமுடியும்? கலை புகழையும் பொருளையும் சேர்க்கத் துடிக்கும் கருவி மட்டும்தானா? ‘நல்லா வருவாங்க’ என்று பேராசிரியர் சொன்னதை நான் பகடியாகவே எடுத்துக்கொள்கிறேன்.
.
எரியும் கடல்
எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் அளவுக்கு நடக்கும் இனக்குழு ரத்தக்களரி சண்டையின் காரணம் மிகச்சாதாரண ஒன்றுதான் என்றாலும் இதில் அரசியல் லாபம் தேடும் அரசியல் கட்சிகளைக் கண்டிக்கும் கதை.
பெரியவன்
பேர் மட்டும்தான் பெரியவன். சமூகம் அவனைச் சிறியவனாகவே கருதுகிறது. தாயின் மரணத்தைக்கூட உணராத மனப்பிரழ்வு கொண்டவன். இருந்தாலும் கொல்லிவைக்க கொல்லிச்சட்டியயை அவன் கேட்கும்போது இது இறந்துபோன தாயுள்ளத்தின் ஆதங்கம் என்றே உணரவைக்கும் கதை.

நீலக்குரூரம்
பரபரப்பாகத் தொடங்கி, மின்னல் வேகத்தில் பீறிடுகிறது. விரைவில் பணம் சேர்க்க வேண்டுமென்பதற்காக மனைவியையே பணயம் வைக்கும் குரூரக் கணவன். மகிழ்ச்சி தாண்டவமாடும்  குடும்பத்துக்கு குறுக்கே வீசிய புயலை தாக்க விடாமல் திருப்பி அனுப்பும் முயற்சியில் குமாரிடம் ஹீரோயிசம்தான் தெரிகிறது. ஆனால் மாமனாரின் பாத்திரத்தையும், மஞ்சுவின் பாத்திரத்தையும் வஞ்சனை இல்லாமல் வார்த்திருக்கிறார் புனைவாளர்.

தெ. வெற்றிச்செல்வன் கதைகளில் சாதிமைக்கு எதிராக எழுத்துக்குரல் எழுகிறது. எத்தனை பெரியாரிசம் வந்தாலும் அதனை முறியடிக்கும் பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் இரட்டிப்பாகவே கூடிக்கொண்டிருக்கிறது சமூகத்தில். படைப்புக்கு எதிரான அடிப்படைவாதிகளின் வன்முறை மிகச்சமீபமாய் சந்நதம் ஆடுவதைப் பார்க்கும்போது தொய்வடைகிறது மனம். பெருமாள் முருகனைப் எழுத்திலக்கியத்திலிருந்து பின்வாங்க வைத்த நிலையும், புலியூர் முருகேசன் மேல் வன்முறை செலுத்தியதையும் பார்க்கும்போது எழுத்தியக்கத்துக்கு எதிராக அடிப்படிவாதிகளின் கரம் ஓங்கித்தான் இருக்கிறது என்பது புரிகிறது. ஆனாலும் சாதிமைக்கு எதிரான போராட்டத்தில் எழுத்துச் சக்திதான் பெரிய அளவில் ஈடுபட்டது, ஈடுபட்டும் வருகிறது என்பது ஆறுதல் தரும் விஷயம். இந்தத் தொடர்ப் போராட்டத்தை நிகழ்த்தபடவேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது எழுத்துலகம். நீண்ட நெடுங்கால போராட்டமாக இது நீட்சி காணும் அறிகுறி, அதன் முந்தைய போராட்ட காலத்தை திரும்பிப் பார்க்கும்போதே புலனாகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம் வேர்பிடித்து நிலைத்துவிட்ட சாதிமை கீழ்மையை ஒரு நூற்றாண்டில் விரட்டிவிட முடியுமா என்ன? அது மனித மரபனுக்குள் இரண்டரக் கலந்து விட்ட ஒன்றல்லவா? வேரருக்கலாம்.. எழுத்தின் அரிவாள் கொண்டு. மெல்ல மெல்ல!
பெண்ணிய விடுதலை உணர்வும் , ஆணாதிக்கப் போக்கைக்கண்டிக்கும் சமரிலும் ஈடுபடுகிறார் கதாசிரியர். சமூகத்தில் நிலவும் ஒற்றுமையின்மையையும் கதையின் ஊடாக பயணிக்கிறது. இதனை எப்படியெல்லாம் அரசியல் லாபம் தேடுபவர்கள் பயன்படுத்திகொள்கிறார்கள் என்பதை நவீன படைப்பாளனுக்குரிய தன்மையோடு சொல்கிறார்.
தெ. வெற்றிச்செல்வனின் எழுத்து நடை தாவித்தாவி செல்கிறது. அவை இடை யிடையே சொல்லபடாத செய்திகள் வாசகனின் கவனத்தை ஈர்க்கின்றன. இடைச்செருகலை வாசகன் நிரப்பிக்கொள்ளும் போது சிறுகதைக்குள் அவனும் பங்காற்றி மகிழ்கிறான். எல்லாக்கதைகளும் படிம வாசிப்பின்பம் கொடுக்கிறது
பன்முகப் பார்வை கொண்ட கதைத்தொகுப்பு ‘ஸ்டாபிசாக்ரியா’.

Comments

வணக்கம்
ஐயா
கதையை படித்து எங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்பு ஐயா.. எங்களையும் படிக்கதூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின