ஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்
இரண்டாயிரத்தில் தொடக்கத்தில்
சை. பீர் முகம்மது ஜெயகாந்தனை உங்கள் ஊருக்கு அழைத்து வருகிறேன் என்ற
தகவலைச் சொன்னதும்,. அவரிடம் நான் மேலதிக விபரம் கேட்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன் சில நொடிகள். தமிழ் எழுத்துலகின் ஒரு மாபெரும் ஆளுமை, நவீன
சிந்தனையாளர், சுங்கைப் பட்டாணிக்கு வரும் வாய்ப்பு உண்டா? நடக்கும் செயலா அது? என்று சந்தேகத்தை கிளப்பிய வண்ணம் இருந்தது. சற்று தாமதித்தே “உண்மையாகவா பீர்? என்று கேட்டேன்.
“யோவ்… நான் என்ன விளையாட்டுக்கு சொல்றேன்ன்னு
நெனக்கிறியா? என்றார் .
யோவ் என்று நெருங்கிய நண்பரை மட்டுமே விளிக்கும்
சொல்லாகப் பயன்டுத்துவது அவரின் இயல்பு.
அந்த ‘யோவில்’
எனக்கு நம்பிக்கை மலரத் துவங்கியது.
நான் அதற்காகச் செயலூக்கம் பெற ஆரம்பித்தேன்.
மலேசியாவில்
நூறு எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து அதனை “வேரும் விழுதுகளும்” என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருந்தார் சை.பீர். அதில் என்னுடைய ‘நிஜம்’ கதையும் பதிவாகியிருந்தது. அந்த நூலைப் பார்க்கும் ஆர்வம் பொங்கிக்கொண்டிருந்த காலம் அது. அதனை நாடு முழுதும் அறிமுகம் செய்யவே ஜெயகாந்தனை அழைத்திருந்ததாகச் சொன்னார். அந்தப் சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கவேண்டும் அதில் என் கதையும் அச்சாகியிருக்கும் ஏட்டைத் தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை மிஞ்சி ஜெயகாந்தனைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் முந்திக்கொண்டு நின்றது அவர்
வருகையின் அறிவிப்பு. நான் அச்சமயம் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். இங்கே அவருக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய என்னைப் பணித்திருந்தார்
பீர் முகம்மது.
ஜெயகாந்தனின்
சிறுகதைகளை ஆனந்த விகடன் வார இதழ்களில்தான் அதிகம் வாசித்திருந்தேன். மிகத்தீவிர இலக்கியத்தை ஜெயகாந்தன் மூலமே வெகுஜன இதழ் அறிமுகப்படுத்திய காலம் அது. அவற்றுள் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதை ஜெயகாந்தனை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருந்தது. அதே வேளையில் மிகப்பெரிய சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்தது. விமர்சங்களுக்கு ஒருபோதும் அஞ்சியதே இல்லை ஜெகே.
கதை
இதுதான்.
ஒரு
பிராமண இளம்பெண் கங்கா கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்ப பேருந்துக்குக் காத்திருக்கிறாள். மழை
பிடித்துக்கொள்கிறது. அவளுடன் காத்திருந்த அனைவரும் ஒவ்வொருவராய்
விடைபெற அவள் பேய் மழையில் தன்னந் தனியே காத்திருக்க வேண்டியதாயிற்று. மழையினூடே இருள் கவிந்துவிடுகிறது. பேருந்தும் வந்தபாடில்லை.
மின்னல் இடியும் தெறிக்க, மரங்கள் முறிந்துவிழ
கல்லூரி வளாகத்துக்கு ஓடி ஒண்டிக்கொள்கிறாள். மழையில் உடல் நனைந்து உடல்வாகு வெளித்தெரிகிறது.
அந்த நேரத்தில்தான் ஒரு கார் அவளை உரசிக்கொண்டு நிற்கிறது. அவன் காருக்குள் ஏறிக்கொள்ளச் சொல்கிறான். வீட்டில் கொண்டுபோய்
விட்டுவிடுவதாக கரிசனமாய்ப் பேசுகிறான். அவள் தயங்கித் தயங்கியே
அதற்கு உடன்படுகிறாள். அவள் வீட்டுக்குப் போயாகவேண்டும் என்ற
எண்ணத்தில். அவளின் நனைந்த உடல் அவனை அசைத்துவிடுகிறது. காரின்
உள் அமைப்பு அவளைக் கவர்ந்துவிடுகிறது. மெல்லிய இசை காருக்குள்
ஒரு யவ்வனத்தை உண்டாக்குகிறது. அவனின் கம்பீரத் தோற்றத்தில் இவளும்
மெல்ல மெல்ல ஈர்க்கப்படுகிறாள். அவனின் பேச்சிலும் செயலிலும்
அவள் மனம் அவன் பக்கம் சாயும் நிலை உண்டாகிறது. ஆனாலும் எதோ தவறு நடப்பதை அவள் உணர்கிறாள். புத்தி வெறித்தாலும் உடல் அவன் தொடுதலை ஸ்பரிசத்தை விரும்புகிறது.மழையில் ஒரு ஆணும்
பெண்ணும் தனியே இருந்தால் வேறென்ன எண்ணம்தான் வரும்? அவன் அவளோடு உறவுகொள்ளும் அளவுக்கு
மழையும், தனிமையும் குளிரும், உடல் இச்சையும்
துணை போகின்றன. அவ்வளவும் அவள் விருப்பத்துக்கு மீறி நடக்கிறது. எல்லாம்
முடிந்தவுடன்தான் அவள் தன்னிலைக்கு வருகிறாள். பதறுகிறாள்.
பேயறைந்த முகத்தோடு வீட்டுக்கு
வருகிறாள். எப்போதுமற்ற அவளின் கையறு நிலையும் வெளெறிய முகத்தையும்
கண்ட தாய் அவளை ஏதும் விபரீதம் நடந்ததா என்று கேட்கிறாள். அவளால்
எதையும் மறைக்க முடியவில்லை. தாய் துடிதுடித்துப்போகிறாள்.
ஆனால் விரைவிலேயே சுதாரித்துக்கொண்டு, தண்ணீர்த்
தொட்டியின் அருகே அவளை உட்காரவைத்து சில குட நீரை தலையில் கவிழ்த்துவிட்டுச் சொல்கிறாள்.
“இந்த ஒன்றுமறியா பேதையின் மீது விழுந்த கலங்கத்தைப் போக்கிவிடுவேண்டும்
என்று இறைவனைக் வேன்டிக்கொள்கிறாள்.” இப்போதிருந்த நீ கற்புடையவள்.
யாருக்கிட்டேயும் இதப்பத்தி பேசாதே, இந்த ஒரு விஷயத்திலே
நெருங்கினவா, வேண்டப்பட்டவான்னு கெடையாது. இத யாருக்கிட்டேயும் சொல்லமாட்டான்னு சத்தியம் பண்ணுன்னு,” உறுதி மொழி வாங்கிக் கொள்கிறாள்.
இந்தக் கதையை பிற கதைகளைப்போல சாதரணமாகக் கடந்து வந்துவிட முடியவில்லை. சமூக
அறங்கள் சடங்குகள் என்ற கெட்டிச் சுவர்களை தெறித்து உடைபடுவதை பல சொற்கள் வழி செய்து
காட்டுகிறார்.
அறுபதுகளில் கூட பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடக்க வேண்டும்
என்ற கெடுபிடியை விடாமல் தற்காத்து வந்தது- குறிப்பாக பிராமணச் சமூகம்.ஒரு பெண்ணுக்கு அணிகலன் கற்புதான் என்ற கற்பிதத்தை முரட்டுத்தனமாக முன்னெடுத்தது
இந்திய சமூகம். கற்பு என்பது உடலளவில் சோரம் போகாதிருத்தல் என்ற
அறத்தை பெண்கள் மீது ஏற்றியிருந்தது. இத்தனை ஒழுங்கையும் சிதறடிக்கிறது
கதை. கங்கா கல்லூரிக்குப் போகிறாள். கற்பை
இழக்கிறாள். அவள் தாயோ மற்ற கலங்கத்தைப் போலவே புனிதா நீராட்டி
அவள் செய்த பாவத்தைக் கழுவுகிறாள்.
லபோ லபோ என்று வாயிலும்
வயிற்றிலும் அடித்து எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று சொல்லவில்லை! அதுவும் பிராமணத்
தாய் இப்படிச் செய்வது அன்றைக்கு, ஏன் இன்றைக்கும் மிகப்பெரிய
புரட்சி. அப்படிப்பட்ட தாயையும் கதையினூடாகப் படைத்து நவீனச்
சிந்தனையை கறாராகவே அறிமுகப்படுத்துகிறார் ஜெகே. சமூகம் கடைபிடித்து
வந்த அத்தனை மதிப்பீடுகளையும் இக்கதை சின்னபின்னமாக்குகிறது. அன்றைய சமூகச் சூழலே அவரை இப்படி கதை சொல்ல வைத்தது. அன்றைக்கான தேவை அது. ஒரு படைப்பாளனின் முதற்கடமை தன்
சமகால சிடுக்குகளை சிக்கெடுப்பது. அதை அவர் செய்தார்.
அதற்கப்புறம் பிராமண சமூகத்திடமிருந்து பூகம்பமே உருவெடுத்தது.
ஆனால் ஜேகே மேலும் மேலும் இவ்வகைக் கதைகளையே எழுதினார்.
60 களில் பெண்ணியத்தை மையமிட்டச் சிறுகதை இது. பெண்ணியத்தை மட்டுமல்ல சுரண்டலை, அதிகாரத்தை,
முதலாளித்துவத்தை அவர் எழுதிய விதம் நவீனக் கதையாடலை விரிவாக்கியது.
அறுபதுகளிலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் முந்தைய சமூகம் கட்டமைத்த
பண்பாட்டை, ஒழுங்கை, அறத்தை அரணாக நின்று போற்றியது.
ஏனெனில் அப்போது படித்த சமூகமாக மேல்தட்டு வர்க்கமும், நடுத்தர வர்க்கமுமே இலக்கியத்தில் ஈடுபாடு காட்டியது. அதனாலேயே அவர்கள் படைத்த இலக்கியம் அந்த குறிப்பிட்ட சமூகத்தை நோக்கியே எழுதப்பட்டது.
அதன் பண்பாட்டு பின்புலத்தை மையமிட்டே எழுதியது. சமூக அறத்தை மீறுவது என்பது, இத்தனை காலம் கட்டிக் காத்து வந்த பண்பாட்டை ஒழுங்கை சீர்குலைப்பதாகும் என்று
எண்ணியது. கலாச்சாரக் காவலர்களாக தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள்
அப்போதைய படைப்பாளர்கள். பெண்ணியத்தையோ, சுரண்டலையோ, முதலாளித்துவத்தையோ,
தலித்தியத்தையோ, ஆணாதிக்கத்தையோ தொட்டு எழுதவில்லை. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன் போன்றவர்களே நவீன சிந்தனை புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
சமூக மூடத்தனங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று
பேனாவை ஏந்தியவர்கள். அதற்குப் பின்னர் நவீனத்தை எழுத பெரும்படையே கிளம்பியது,
ஜேகேவை முன்னுதாரணமாகக் கொண்டு.
அவர் எழுதிய எண்ணற்ற நாவல்களில், சிறுகதைகளில்,
கட்டுரைகளில் சமூகம் கட்டமைத்த ஒழுங்குகளை கேள்விக்குட்படுத்தி விசாரணை செய்வதையே நோக்கமாகக்
கொண்டவை. அதில் அவர் பெருவாரியாக வெற்றி பெற்றார். சாகித்ய அக்கேடெமி, ஞானபீடம், பத்மபூஷன்,
என உயரிய விருதுகள் அவரால் பெருமையடைந்தன. ஜெயகாந்தனுக்கு இன்றைக்கும் உள்ள சமூக மதிப்பே எழுத்தால்
வாய்த்த ஒன்றுதான்.
அவர் எங்கள் ஊருக்கு வருவது எவ்வளவு பெரிய விஷயம். அவர்
வந்தார். முதலில் என் வீட்டுக்கு. அவர் பாதம் பட்ட வீடும், அவர் சுவாசித்த
காற்றும் என் இல்லத்தில் இன்றும் மிதந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.
ஜெகே இன்னும் இருக்கிறார் இனியும் இருப்பார்.
அவரின் படைப்பு அவரைப் பிரதிநிதிக்கும்.
Comments