ஜெகே கைவிடப்பட்டவர்களின் கதைசொல்லி
தமிழில் அடித்தட்டு மக்களின்
வாழ்க்கை 50 களிலும்
60களிலும் அதிகம் எழுதப்படாமலேயே இருந்தது. தலித்துகள் அல்லது
தீண்டப்படாதவர்கள் எழுத்திலக்கியம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. எழுத்து
மூலமாகவும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே இருந்தார்கள். பாரதிக்குப் பின்னர் புதுமைப்பித்தன் காத்திரமாக முன்னெடுத்தார். பாரதியாரை
ஆதர்ஸமாகக் கொண்டதனாலேயே ஜெயகாந்தனால்
அதனை அடியொற்றி வளர முடிந்தது. பாரதி காலக்கட்டத்துக்குப் பிறகு புதுமைப்பித்தன் அவர்
வழித்தோன்றலாக உருவாகிறார். உரை
நடையில் நவீன இலக்கியத்தை எழுதவேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர் புதுமைப்பித்தன். அவர் காலக்கட்டத்துக்குப் பிறகு ஒரு பெரும் எழுத்துப் புயலாகக் கிளம்பியவர் ஜெயகாந்தன். மற்றெல்லா சமகால புனைகதை எழுத்தாளர்களையெல்லாம் பின்தள்ளி தன்னை முற்போக்கு சித்தாந்தம் கொண்ட படைப்பாளனாக அடையாளம் காட்டிக்கொள்கிறார் ஜெகே. அவருடைய எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் இதற்குச் சான்று.
என்னை
மிகவும் பாதித்த கதை ஒன்றிலிருந்தே நான் ஜெகேவை தேடத் துவங்குகிறேன். ஜெயகாந்தனை
எனக்கு அணுக்கமாகக் கொண்டு வந்ததே அச்சிறுகதைதான். ‘தாம்பத்யம்’
என்ற சிறுகதைதான் அது.
பிலாட்பார மக்களின் கையறு வாழ்க்கையைச் சொல்லும் கதை.
பிலாட்பாரம்
என்பது ரயில்
பயணிகளின் ஏறி இறங்கும் இடம். அற்றைக் கூலிக்காக பயணிகளின்
பெட்டி படுக்கைகளைத் தூக்கிச்செல்லும் தலை சுமைக்காரர்கள் காத்திருக்கும் நிலையம். அன்றைக்கு வயிறு காயாமல் இருக்கவேண்டுமென்றால் யாராவது தன் சுமையைத் துக்கிவரும்படி பணித்தால்தான் ஆயிற்று. அந்த வேலைக்காகக் கிடைக்கும் சொற்ப கூலிப்பணத்தை வைத்தே அன்றைய பொழுது பசியைப்போக்க முடியும். பிரதி தினமும் சங்கிலித்தொடர்
போல இந்த அற்றைப் பிழைப்பு விதிக்கப்பட்டிருக்கும்
இந்த அடித்தட்டு வர்க்கத்துக்கு.
வேலைக்கு பயணிகள் அழைக்கவில்லையென்றால் அன்றைக்கு வயிற்றில் ஈரத்துணி
கட்டிக்கொள்ள வேண்டியதுதான். நிலையற்ற பிழைப்பு!. இந்தத் தினக்கூலிகளுக்குக் குடியிருக்க கூரை கிடையாது! பிலாட்பார வளாகத்தில்தான் ஒவ்வொரு நாள் இரவையும் கழித்தாக வேண்டும். குடும்பம்
குடும்பமாக அங்கேதான் குடியிருப்பார்கள். தட்டி தடுப்பு எதுவும் கிடையாது. வானமே
கூரை.
‘தாம்பத்யத்தம்,
கதையில் வரும் மருதமுத்து
தன் முறைப் பெண்ணான ரஞ்சிதத்தைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறான். அதற்காக இருவருமே அன்றன்றைக்குக் கிடைக்கும் கூலியை சேமித்து வைக்கிறார்கள். அந்தச் சேமிப்பு மேளதாள கலயாணம் நடத்தவெல்லாம் ஆகாது!. அதற்கு அவர்கள் உழைப்பும் சேமிப்பும் கைகொடுக்காது. ஒரு கூரைச் சேலை, ஒரு வேட்டி சட்டை, மண அடையாளமாகத் தொங்கும் மஞ்சள் கயிறு
அவ்வள்வுதான்.. மஞ்சள் கயிற்றுக்குள் தங்கத் தாலியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் நினைப்பதற்கு அவர்கள் வாழ்வாதாரம் வாய்ப்பளிக்குமா என்ன?
ஒருநாள் வேலி ஓரத்தில் எழுந்தருளியுள்ள புள்ளையார் கோயிலில்
இருவருக்கும் மிக எளிய முறையில் திருமணம் முடிகிறது. மணம் முடிந்தால் முதலிரவு
இருக்கவேண்டுமல்லவா? கல்யாணம்தானே ஆண்பெண் உடற்பசியைத்
தீர்த்துக்கொள்ள அங்கீகாரம் வழங்குகிறது.
திருமணம் முடிந்தது உடலில் கனல் கனன்று அலைக்கழிக்கிறது. ரஞ்சிதத்தின் காற்று படும்போதும், சேலை சரசரக்கும் போது அவன் இச்சை மேலும் தூண்டப்படுகிறது.
மருதமுத்து வீசும் ஏக்கப் பார்வை ரஞ்சிததைக் கிரங்கடிக்கிறது. அவளைத்
தொட்டுப்பார்க்கக் கூட மக்கள் நடமாட்டம் பெருஞ் சுவராக குறுக்கே நிற்கிறது.
அவர்கள் இரவாகட்டும் என்று காத்திருக்கிறார்கள்.
மெல்ல இரவு கவிகிறது. எப்போதும் உறங்கும் இடத்தைவிட்டு
தள்ளிப் போய் தனியிடம் தேடுகிறார்கள். இரவும், தனிமையும் உடல் இச்சை
கொந்தளித்து எழுகிறது. பாவம் இளம்
தம்பதிகள்! உரசிக் கொண்டே நடக்கிறார்கள். இரவுகுளிர் இதமாக வீசுகிறது. நிலவொலி
வேறு. சாலையில் கார்கள் நடமாட்டம் சன்னஞ் சன்னமாய்க் குறைகிறது. செடிமறைவில்
ஒதுங்கி பாயில் படுத்திருக்கும் ரஞ்சைதத்தைத் நோக்கிப்போகிறான் மருதமுத்து.
வாகனக்களின் விளக்கொளி அவர்களின் தனிமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நிலைமை சரிபட்டு வரவில்லை. பார்க்கில் ஒரு பெஞ்சு காலியாக இருப்பதைப் பார்த்தவுடன்
இருவர் கால்களும் தன்னிச்சையாக அவ்விடத்தை நோக்கி நகர்கிறது. அவன் மெல்ல அவளைத்
தொடுகிறான். அந்நேரம் பார்த்து ஒரு கார் விளக்கொளி அவர்கள் மேல் வெளிச்சத்தை வீசி
விலகுகிறது. இருவரும் தங்களை விலக்கிக்கொண்டு வேறிடம் தேடுகிறார்கள். ஒரு மறைவிடம்
உடல்கள் இணைய தோதாக இருப்பது உவப்பளிக்கிறது இருவருக்கும். பின்னர் அவ்விடமும் ‘அதற்கு’த் தோதாக அமையவில்லை. இப்படியே நேரம்
நள்ளிரவைத் தாண்டுகிறது. ஆள் நடமாட்டமோ, வாகன ஊர்தலோ அறவே
இல்லாமல் போக, இப்போது ரஞ்சிதத்தை கட்டி அணைக்கிறான் மருது. காமம் விளம்பில் நின்று
துடிக்கிறது இருவருக்கும். தேகம் காய்ச்சலெனச் சூடேறிக் கொதிக்கிறது.
அத்தருணம் பார்த்து டக் டக் டக் என்ற பூட்ஸ் அடியோசை மிக
அருகில் கேட்கிறது. போலிஸ்தான் மோப்பம் அறிந்து இருவரையும் கைது செய்கிறது.
நாங்கள் புதுமணத் தம்பதிகள் என்றெல்லாம் விளக்கம் சொல்கிறாள் ரஞ்சி. தன் புது
மஞ்சள் கயிற்றை ஆதாரமாக் காட்டுகிறாள்.
சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலிஸ்காரனால் தலையை
நிமிர்த்தி மஞ்சள் கயிற்றைப் பார்க்க
முடியவில்லை . அந்த மண இணைப்பு சின்னம்
நிஜத்தை மறைக்க உபயோகிக்கும் போலியெனக் கருத வைக்கிறது காலங்காலமாய்
இயங்கிய குற்றம் தேடும் அறிவு. எங்கேயோ. ‘கிராக்கியை’த்
தள்ளிக்கொண்டு வந்திருக்கிறான் என்றே நிறுவுகிறது போலிஸ் குற்றம் தேடும் மனம். “ஒன்றும்
பேசாதெ’ நட ஸ்டேசனுக்கு’ என்கிறது அந்த
அதிகாரக்குரல்.
அப்போது ஜெகே இப்படி எழுதுகிறார்.
அவன் சட்டம் இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி
என்றுதான் சொல்கிறது. மனசைத்துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.
சட்டத்தின் இருதயத் துடிப்பு போல் பூட்ஸ் காலடி சத்தம் கேட்கிறது’
என்று முடித்திருப்பார்.
இந்தக் கதை எனக்கு மிகப்பெரிய பாதிப்பைக் கொடுத்தது.
இக்கதைக்குள் ஊடுறுத்தும் அரசியல் என்ன என்று வாசகன் உற்று
கவனிக்கவேண்டும். ஐயோ பாவம் புது
தம்பதிகள் இணையக்கூட விடவில்லையே இந்த சமூகம், என்று அவரகள்
மேல் பாவப்பட்டு, சனமில்லாமல்லாமல் கடந்து செல்வதற்கானதல்ல
இக்கதை. அதற்குள் படைப்பாளனின் ஆன்மா புதைந்திருக்கிறது. அந்த ஆன்மாவுக்குள்
பயணிக்கவேண்டும்.
கதையின்
முடிவு அதிகாரத்துக்கு அபலைகளின் குரல்
கேட்பதில்லை என்பதை வலிந்து நிறுவுகிறது. தான் தொட்டுத் தாலிகட்டிய மனைவியோடு
முதலிரவு கொண்டாடமுடியாத அவலத்தைச் சொல்லும் இக்கதைகக்குள்,
ஏன் அவ்வாறு நேர்ந்தது என்ற நீட்சியை சொல்ல முனைகிறார் ஜெகே. வாசகனின் பஙகளிப்பு
இந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது. பராரி ஏழைகள் சொந்த நிலமோ வீடோ இல்லாத
நிர்க்கதி நிலைமையை எதிர்நோக்குவதன் முன் வரலாறு என்ன?
நகரமயமாதலில் இவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி
நிலைதான் காரணம். அதனை மிக நுணுக்கமாகச் சொல்லிவிடுகிறார் ஜெகே. சமுக
அடுக்கில் கீழ் நிலையில் வாழும் மக்களின் நிதர்சன நிலையை முன்னெடுப்பதே அவரின் நோக்கம என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
ஜேகே எப்போதும் புறவயமாகவே சிந்திக்கக்
கூடியவர். லா.ச.ரா., மௌனி, கோணங்கி, நகுலன் போன்றவர்கள் தங்கள் அகவய மனம் செயல்படுதைக் கதைகளாக வடிப்பார்கள். அது இருண்மையானது. சராசரி
வாசகன் துய்க்க முடியாத தூரத்தில்
இருக்கும் வடிவம்தான் அகவயக் கதைகள். ஆனால் ஜெகே சாதாரண வாசகனுக்கு மிக அருகே
கதையைக் கொண்டு வந்து நிறுத்துவார். தன் அவதானிக்கும் உலக நடப்புகளில், குறிப்பாக ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையை காட்சிப்படுத்தி ஆயிரக்கணக்கான
மனங்களை நெகிழ வைப்பவர். இவர்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டுவர மேல்தட்டு
புனைகதையாளர்களில் பெரும்பாலோர் மத்தியதர வாழ்க்கையை மையமிட்டு வெகுஜன வாசிப்பை கோரிய தருணத்தில், ஜேகே ஒரு முன்னோடியாக நின்று வஞ்சிக்கப்பட்டவர்களின் ,
சுரண்டப்பட்டவர்களின் வாழ்வை உணர்ச்சிப்பூர்மாக சொல்லி கதை வெளியை புதிய பரிமாணத்துக்குக் கொண்டுவந்தார்.. அவரின் ஆளுமைக்காகவே
அவரைத் தேடிக் கண்டடைந்து கொண்டாடியது வாசக உலகம்.
அவர் எழுதிய நூல்களில் வழியே நீண்ட நெடும்பயணத்தில்
இருப்பார் ஜெகே.
Comments
ஐயா
அவர் அழிந்தாலும் அவரின் சுவடுகள் நிச்சயம் இருக்கும். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-