Skip to main content

விருதுகள் கண நேர மகிழ்ச்சியே ( தமிழ் மலர் ஞாயிறு மலரில் என் நேர்காணல்)






விருதுகள் கண நேர மகிழ்ச்சியே

கோ.புண்ணியவான்
தமிழ் படைப்பிலக்கியத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமை கோ.புண்ணியவான். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர். மூன்று சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு கவிதை நூல், கெடா மாநில எழுத்தாளர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என 7 நூல்களை இலக்கிய உலகுக்கு அளித்தவர். இப்போது ஆகக் கடைசியாக சிறார் நாவலானவன தேவதையைக்  பதிப்பித்து எண்ணிக்கையை எட்டாக்கியிருக்கிறார். தமிழ் படைப்புகளுக்கு மலேசிய வாசகர்களிடம் அபரிமித வரவேற்பு இல்லையென்றாலும், எழுதுவதிலிருந்து அவர் ஒதுங்கிவிடவில்லை. எழுதுவதை ஒரு சமூகக் கடமையென  எண்ணுபவர்களில் கோ.புண்ணியவானும் ஒருவர். அவரின் தொடர் இயக்கம், எழுத்துக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கையளிப்பு செய்தாக வேண்டும்  என்ற நோக்கமுடையது. சமீப காலமாக எழுத்துலகில் அதிகம் விருதுகள் பெறுபராக ஊடகங்கள் அறிவிக்கின்றன. குறிப்பாக அவர் எழுதிய எதிர்வினைகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கும்,செலாஞ்சார் அம்பாட் என்ற நாவலுக்கும்மலேசிய எழுத்தாளர் சங்கம், மாணிக்க வாசகம் புத்தகப்பரிசையும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க கலை இலக்கிய அறவாரியம்,2013 ,2014 ஆண்டுகளில் வந்த மலேசிய நூல்களில் சிறந்ததாக தேர்வு செய்து அவரை கௌரவித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக் தொடர்ந்து பரிசுகள் பெறுவதைச் சர்ச்சைக்குள்ளாக்கி இருக்கிறார் ஒருவாசகர்’. இதன் சூட்சமம் அறிய அவரோடு ஒரு வெளிப்படையான உரையாடலை நிகழ்த்தியது தமிழ்மலர் இலக்கிய ஏடு.

கேள்வி: தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் கலை இலக்கிய அறவாரியம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்க வாசகம் புத்தகப் பரிசு, நாவல் பரிசு என தொடர்ந்து புத்தகப் பரிசுகள் பெறுவது குறித்து நீங்கள் சொல்வதற்கு ஏதேனும் உண்டா?
பதில்: தொடக்கக் கேள்வியே வில்லங்கமாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு என் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். படைப்பாளன் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திகொண்டே இருக்கவேண்டும். அவன் இயங்குவது கலை சார்ந்தது. கலை என்பது  சிரங்கு பிடித்த கை மாதிரி சொரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது சுகமாகவும் இருக்கும். சொரிவதுதான், கலை இயங்குவதற்கான மருந்து. கலை என்று இறங்கிவிட்டால் கலைஞனுக்கு அது கொடுக்கும்  பரவசத் தருணங்களே அவனுடைய கிரியா ஊக்கி. எனவே எழுதிக்கொண்டே இருக்கிறேன். எழுதி வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனை அங்கீகரிக்கும் ஊடகத்துக்கு அனுப்பவேண்டும். அங்கீகாரம் இல்லை என்றால் தேடல் ஸ்தம்பித்துவிட வாய்ப்பு உண்டு. அப்படி அனுப்பியதுதான் முக்கால்வாசி படைப்புகள். என் செலாஞ்சார் அம்பாட் நாவலை முதலில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், அஸ்ட்ரோ வான்வில்லும் நடத்திய போட்டிக்கு அனுப்பினேன். இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றது. எழுதிய நாவலை அப்படியே கிடப்பில் போட்டுவிடவும் முடியாது. அதனைப் பதிவு செய்யவேண்டும்நூலாக்கினேன். நூலாக்கினால் மட்டும் போதாது . நாவலுக்கான எதிர்வினை என்ன என்று படைத்தவனைத் தூண்டிக்கொண்டே இருக்கும். தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க அனைத்துலக புத்தகப் போட்டிக்கு அனுப்பினேன். தேர்வு பெற்று பரவலாகப் பேசுவதற்குரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது படைப்பாளனுக்கான படைப்புப்  பலன் கிடைத்துவிடுகிறது தொடர்ந்து எழுதவும் பெரிய ஊக்கியாக அமைத்துக்கொடுக்கிறது அந்த எதிர்வினைகள். ஒருகால் போட்டிக்கு அனுப்பப் படவில்லை என்றால் ஒரு கலைப்படைப்பின் பயன்மதிப்பு பெரும்பாலும் சீண்டப் படாத ஒன்றாக  கிடப்பில் கிடந்துவிடுகிறது. இது ஒரு வரலாற்றுப் புனைவு என்பதால் அதன் வரலாற்று உண்மைகள் வாசகனை அதிர வைக்கிறது. மேலும் வரலாறு சார்ந்த புனைவுகளைத் தெரிந்துகொள்ள அவனை ஊக்குவிக்கிறது. புனைவு என்பது சிந்திக்கவைக்கும் திறனுடையது. வாசகனைச் சிந்திக்கத் தூண்டும் புனைவு முதலில் பேசப்படவேண்டும். விருதுகள் பெறும்போது அந்த குறிப்பிட்ட நூலை தேடிச் சென்று வாங்க வைக்கும் உத்தியை உண்டாக்குகிறது  அந்த நூலுக்கான அங்கீகாரம். எனவேதான் நான் போட்டிக்கு எழுதுகிறேன்.
கே. உங்கள் செலாஞ்சார் அம்பாட் நாவல் பற்றியும் நாவலுக்குக் கிடைத்த விருதுகள் பற்றியும் கல்லெறிதல் நடைபெறுகிறதே.

முதலில் இதனை இலக்கியச் சர்ச்சையாக்காமல் தனி மனித தாக்குதலாக இருப்பதால் சர்ச்சையையே அரசியலாக்கிவிடுகிறார்கள். அவ்வாறான ஆற்றாமைக்குப் பதில் சொன்னால் அது வெற்றுத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவதாக ஆகிவிடும். அவர்கள் ஆற்றாமையில் கொஞ்சமாவது இலக்கிய விவாத்தை எழுப்பவுதாக இருக்க வேண்டும். அது வாசகர்களுக்குப் பயன்மதிப்பை உண்டாக்கும் . அவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. விருது கொடுத்த சங்கத்தின் மீது கல்லெறிகிறார்கள். மறைந்திருந்து கல்லெறிவதால் அந்தக் கல் ஏந்திவரும் குற்றச்சாட்டில் நிஜத்தன்மை பிசுபிசுத்துப் போகும். தீவிரமாக இயங்கும் இயக்கத்துக்கு எதிராக  இது போன்ற முரணியக்கம் தேவைதான். அப்போதுதான் அதன் செயல் மேலும் தீவிரமடையும். அது ஒரு புறம் இருக்கட்டும்.
 என்னை நோக்கி  வந்த குற்றச்சாட்டை நானே இலக்கிய வகைமையாக மாற்றி பதிலிறுக்கிறேன். செலாஞ்சார் அம்பாட்டில் வரலாற்றுப் பிழை இருப்பதாகசக் குற்றம் சாட்டி இருந்தார்  ஒரு பேராசிரியர். ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். செலாஞ்சார் அம்பாட் ஒரு வரலாற்றுப் புனைவு. வரலாற்றை கற்பனை கலந்து எழுதினால்தான் அது நாவலாக முழுமை பெறும். அதனை வெறும் வரலாற்று நூலாக எழுதுவோமாயின் அதில் நடந்த  உண்மைகள் அச்சு அசலாய் நிறுவப்படவேண்டும். அதில் பிழை இருக்கக் கூடாது. வரலாறை வேண்டுமென்றே பிழையாக எழுதப்படும் ஒன்றில் எழுதுபவரின் தீய நோக்கம் நிறைவேறியிருக்குமேயன்றி உண்மை இருக்காது. அந்த ஆவனம் பின்னர் வரலாற்றாசிரியர்களால் தூக்கியெறியப்படும். ஓர் உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் பள்ளி சோதனை வினாவொன்றில்  எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த மலேசியர் யார் என்ற கேள்விக்கு மலாய்க்கார் பெயர் மட்டுமே  குறிப்பிடப்பட்டு, மகேந்திரன் மோகன்தாஸ் பெயர் இருட்டடிப்பு செய்யப் பட்டிருந்தது. இது வரலாற்றுப் பிழை. ஆனால் நாவல் என்ற வடிவம் கற்பனையும் அழகியலும் கலந்து புனையப்படும் ஒன்று என்பதால்  வரலாற்றில் வரும் சில நிகழ்வுகளைப் படைப்பாளனே வாசகச் சுவைக்கேற்ப மெருகேற்றலாம் . ஆனால் அதன் அடிப்படை வரலாறு கண்டிப்பாய் நாவலின் மையச்சரடாக இருக்கவேண்டும். செலாஞ்சார் அம்பாட்டில் அந்த மையச்சரடு ஒருபோதும் நீக்கப்படவில்லை. அது நடந்த உண்மைகளைச் சொல்கிறது. அங்குள்ள கொத்தடிமைகளைக் காப்பாற்ற முயற்சி எடுத்ததில் தனி மனிதனும், சமூக இயக்கங்களும் முற்பட்டன என்பது உண்மையே.
என் கதைக்கேற்ப நான் சில மாற்றங்களைச் செய்துகொண்டேன். அதனை சம்பந்தப்பட்டவர்கள் வரலாற்றுப் பிழை என்கிறார்கள் . அவ்வளவுதான். மீண்டும் சொல்கிறேன் அது நாவல். வரலாற்று நூல் அல்ல!
கே:மலேசியாவில் தமிழ்ப் புனைவை வாசிக்க ஆளில்லை என்று குறைபட்டுக்கொண்ட செல்லியல் பேட்டியில் குறிப்பிட காரணப் பின்புலம் என்ன?
மலேசியாவில்  வானொலி ஊடகம் மட்டுமே இயங்கிய 50 ஆண்டுக்குப் பின்னால் உங்களை அழைத்துச் செல்கிறேன். காகித ஊடகமாக நாளேடுகள் சில சஞ்சிகைகள் இருந்தன. வானொலி நாடகம் , சிறுகதை. இசை சொல்லும் கதை என இலக்கியம் இப்போதும் போலவே அப்போதும் இருந்தது. ஆனால் இவை மட்டுமே இருந்ததால் இதற்கும் ரசிகப் பெருமக்கள் நிறைந்திருந்தனர். வானொலி நாடகத்தை கூட்டமாய் குடும்பம் குடுமபமாய்க் கேட்டு ரசித்ததை நான் பார்த்திருக்கிறேன்ஞாயிறு இலக்கிய ஏடுகள் கைமாறி மாறி வாசிக்கப் பட்டன. தமிழகத்திலிருந்து வரும் குமுதம் ஆனந்த விகடன், கற்கண்டு கல்கி வாசிப்பும் இலக்கியப் பசிக்கு தீனி போட்டனஇலக்கிய ஆக்கங்களுக்கு இவை துணை நின்றன. என்ன சொல்ல வருகிறேன் என்றால் இலக்கியம் கேட்டலும் வாசித்தலுமே நுகர் பொருளாக இருந்த காலம் அது. ஆனால் இந்த கால் நூற்றாண்டில் எல்லாம் புரட்டிப்போடப்பட்டு தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெரும்பாலான பெண்களைத் தொலைகாட்சி தொடர்கள் கட்டிப்போட்டு அடிமையாக்கி விட்டன. குழந்தைகள் மின்விளையாட்டுகளிலும் . இளையோர் வாட்சாப்பிலும், முக நூலிலும், டிவிட்டரிலும் தங்களை இழந்து விட்டனர். அவர்களை மீண்டும் வாசிக்க வைப்பது தண்ணீர் ஓடாத ஆற்றில் மீன் பிடிப்பதற்குச் சமம். எனவே அவர்களை மறந்து விடலாம். குழந்தைகளை, சிறார்களை, தொடக்கப் பள்ளி மாணவர்களை வாசிக்க பழக்க வேண்டும். ஏன் பள்ளியில் அது நடக்கவில்லையா என்று கேட்கலாம். பள்ளிகள் அவர்களுக்கு சர்க்கஸில் சாகசம் செய்யும் மிருகங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. பாடம்-பயிற்சி-சோதனை என்ற ரீதியிலேயே அங்கே பாடம் நடக்கிறது. கல்வி என்பது என்ன? அது எல்லையற்றது. பயிற்சி பரீட்சைக்கு மட்டுமே உதவும். எதிர் கால வாழ்க்கைச் சவாலுக்கு உதவாது. ஒரு குரங்காட்டி தன்  குரங்குக்கு , பானை எடுத்து வரவும், பல்டி அடிக்கவும், இரு கால்களில் நடக்கவும், வளையத்தில் புகுந்து போகவுமே பயிற்சி அளித்து சாகசம் செய்யப் பயன்படுத்துவான். அந்த நேரத்துக்கு மட்டுமே அந்தப் பயிற்சி அதற்கு உதவும். ஆனால் கல்வி என்பது காட்டுக் குரங்கு போல. காட்டை முழுதும் அது அறிந்திருக்கும் . மரத்துக்கு மரம் பாயும், சிங்கத்தை சீண்டும், காட்டின் ஒவ்வொரு வேரின் அல்லது இலையின் வாசத்தை நன்றாக அறிந்திருக்கும். காட்டின் சுவாசம் அதற்கு அத்துப்படியாயிருக்கும். கல்வி காட்டுக் குரங்கு போல கட்டற்ற ஒன்றாக்கப் படவேண்டும். எந்நேரமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சாகசம் என்ற பெயரில் போலிச் சமூகத்தை வளர்த்துவிடக் கூடாது.
சோதனைக்கு மட்டுமே தாயார் செய்வதால் மாணவர்களுக்கு வாசிக்கப் பழக்கத்தை  அளிக்க வாய்பை ஏற்படுத்துவதில்லை. அதனால்தான் இன்றைய சமூகம் வாசிக்காத சமூகமாக இருக்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். எனவேதான் நான் இப்போதுவன தேவதைஎன்ற சிறுவர் நாவலை எழுதியிருக்கிறேன். அதன் தொடக்க அலை சிறு மாற்றத்தைக் கொண்டு வரும். அவர்களுக்கு வாசிப்பு பரவசம் அளிக்கக் கூடியது, உயர் நிலைச் சிந்தனைக்கு பயிற்சி அளிக்க வல்லது, வாழக்கையை முழுமையாய் வாழக் கற்றுக்கொடுப்பது என உணரவைக்க வேண்டும். அதன் காரணத்தால்தான் நான் சிறுவர்களை நோக்கி என் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். நான் இன்றைய எழுத்தாளர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்வேன். உங்கள் வட்டாரத்து தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு  நீங்கள் தரமான கற்பனைக் கதையை எழுதி வினியோகிக்கலாம், மலிவு விலையில் விற்கலாம். அவர்களை வாசிக்கப் பழக்குங்கள். நாளைக்கு நிறைய சிந்தனையாளர்களை உருவாக்க உதவும் இது.
 
கேஎண்ணற்ற பரிசுகள், எத்தனையோ விருதுகள் வாங்கியுள்ளீர்கள். இதையும் கடந்து இலக்கியச் செயல்பாடு உங்களை எத்தருணத்திலாவது கீழ்மைபடும்படி செய்திருக்கிறதா அல்லது பாதித்திருக்கிறதா?
படைப்பிலக்கிய வாதிக்குள் ஒரு ஆன்மா இருக்கிறது. அதை கலை சார்ந்த வாழ்க்கை என்று சொல்லிக்கொள்ளலாம். இது அவனுடைய புற வாழ்க்கையோடு முரண்பட்டது. அக வாழ்க்கை சேர்ந்தது. என்னுடைய படைப்பு அங்கீகரிக்கப் படும்போது நான் உவப்படைகிறேன்.  . நீங்கள் குறிப்பிட்ட பரிசு .விருதுகள் அந்த தருணத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஆனால் அவை நீடிப்பதில்லை. அக வாழ்க்கை என்று நான் சொல்வது என் கலைமனம் என்னை கலை சார்ந்து உயிர்ப்போடு இயங்க வைத்துக்கொண்டிருப்பதை. ஆனால் அந்த அக வாழ்க்கையை அல்லது இன்னும் துல்லிதமாய்ச் சொல்ல வேண்டுமென்றால் அந்த ஆன்மாவை நம்மைச் சுற்றியுள்ளவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஏதோ ஒரு பொழுதுபோக்கு போல நினைத்துக்கொள்வார்கள். அவ்வாறு நினைப்பது என் உள் இயங்கும் ஆன்மாவை அவர்கள் அவமதிக்கிறார்கள் என்ற கீழ்மை உணர்வை உண்டாக்கும். என்ன இது என் கலை வாழ்க்கையை இவ்வளவு துச்ச்மாக மதிக்கிறார்களே என்ற பின்னடையச் செய்யும். நாம் ஏதாவது வாசித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கும் போதுசும்மாதான இருக்கீங்க’ ‘சும்மா ஒக்காந்திருப்பாருபோன்ற வார்த்தைகள் புண்படுத்தும்ஒரு முறை நான் எழுதிய  சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கச் சொல்லி ஒரு ஆசிரியரிடம் நீட்டினேன். அவர் அதனைத் தொடாமலேயே புறங்கையால்  என் பக்கமே தள்ளினார். அதைக் கையில் வாங்கிப் பார்த்தாவது திருப்பிக் கொடுத்திருக்கலாம். கலைஞனைக் கொல்வது இப்படித்தான்.இப்படி நிறைய சம்பவங்கள் படைப்பாளனை படைப்பை அவமதித்ததுண்டு. ஆனாலும் ஒரு படைப்பு, பாராட்டப்படும் போது அங்கீகரிக்கப்படும் போதும் இந்தக் கீழ்மைகளை, அந்தக் கண நேர மகிழ்ச்சி சமன் செய்துவிடும்.

கே: இதையெல்லாம் கடந்து எழுதிக்கொண்டே இருக்கிறீர்களே எப்படி?
கலைஞனுக்கு என்னதான் பின்னடைவுகள் நேர்ந்தாலும், அதிலிலுள்ள காந்தம் அவனை ஈர்த்துக்கொண்டே இருக்கும். எழுத்தும் கலைதான். நான் வாசிப்பதைத் தீவிரமாகவே செய்கிறேன். 95 விகிதம் வாசிக்கிறேன் என்றால் 5 விகிதம் மட்டுமே எழுதுகிறேன். ஒரு எழுத்தாளனின் அடிப்படைத் தகுதி சிறந்த வாசகனாக இருப்பதே. வாசிப்பதில் பரவசம் உண்டு. அது படைப்பை நோக்கியே இழுத்துச் செல்லும். வாசித்துக்கொண்டிருக்கும்போதே அது எழுதுவதில் போய்தான் நிறுத்தும். எழுதுவது இயற்கை எனக்களித்த வரம். எழுதும் போதும் , எழுத்து அச்சாகிப் பார்க்கும்போதும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இச்செயல் பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பதாலும் எழுதுகிறேன். எழுதும் கணம் வாழ்க்கையை  முழுமையாக வாழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது. உண்டு உறங்கி, வேலை செய்து சம்பாதித்து,  வீடு கார் வாங்கி வாழ்வது வாழக்கையல்ல! அது பிழைப்பு ! வாழ்வது பரவசம் நிறைந்தது. கலை சார்ந்து இயங்கும் யாருக்கும் இந்த பேரானந்தம் நிகழும். இந்த உண்மை கலைஞன் மட்டுமே அறிந்த சூத்திரம்.
தமிழ்மலர்: உங்களை அடையாளப் படுத்தும் வண்ணமாகநீங்கள் 80களில் எழுதிய, இவன் நட்ட மரங்கள் நிமிர்ந்துவிட்டன,
இவன் நடும்போது குனிந்தவன்தான்,
இன்னும்
நிமிரவே இல்லை
என்ற கவிதை திரும்பத் திரும்பச் சொல்லபடுகிறதே, அப்போது உங்கள் மன நிலை எவ்வாறிருக்கும்?
இக்கவிதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை முதலில் சொல்லிவிடுகிறேன். நான் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது, ஒரு தற்காலிக ஆசிரியர், என்னிடம் இந்தக் கவிதை அவர் எழுதிய கவிதையென்றும், அது குறித்த அபிப்பிராயத்தைச் சொல்லும்படியும் கேட்டார். நான் எழுதிய கவிதை அது என்று தெரியாமலேயே என்னிடமே அதைப் பற்றிக் கேட்டார். பின்னர் அவர் புண்படாதவண்ணம் பதில் சொல்லி அனுப்பினேன்.இக் கவிதை திரும்பத் திரும்ப பேசப்பட்டது மட்டுமல்ல, பன்முறை பிற்றால் நகல் எடுக்கவும் பட்டது என்பதையும் பதிவு செய்தாக வேண்டும். மலேசிய தென்னிந்தியரின் வரலாற்றுச் சோகத்தை அங்கதத்தோடு சொன்ன கவிதை இது என்பதால் தமிழறியாத மக்களையும் போய்ச் சேர்ந்தது. அது தொட்ட உச்சம் மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் அதன் வாசகர்கள் அதற்கு மேல் பயணிக்கவில்லையோ, அதாவது இலக்கியத்தை அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செலுத்தவில்லையோ என்ற வருத்தம் எனக்கிருக்கிறது. அதற்குப் பிறகு இன்றைய இளைய எழுத்தாளர்கள் சிலர், .நவஈன், கே. பாலமுருகன், . பாண்டியன், பூங்குழலி, சால்மா, யோகி போன்றவர்கள், அதையும் தாண்டி சிறந்த எழுத்துப் படிவங்களைப் பதிவு செய்தபடி இருக்கிறார்கள். அவை அவர்களைப் போய்ச் சேரவில்லை. இது ஏன் என்றால் இலக்கிய வாசிப்பை அவர்கள் , விரிவாக்காமலும், ஆழமாக்காமலிருப்பதுதான் காரணம். இக்கவிதை  ஏதோ ஒரு காரணத்தால் மீண்டும் மீண்டும் சொல்லப் படும் போது எனக்கு மெல்லியதாய் கோபம் வரத்தான் செய்கிறது. இக்கவிதைத் தரத்தை நான் மிஞ்சிப் போகவில்லையோ என்ற பின்னடைவான அக உணர்வே அதற்குக் காரணம்.


கே: ‘வன தேவதையின் உள்ளடக்கம் பற்றிச் சொல்லுங்களேன்.
முதலாவதாக அதன் திகில்  கதை சொல்லல்இரண்டாவதாக சூழியல் பாதுகாப்பு பற்றிய தகவல்கள். வன உலாவுக்கு கொண்டு செல்லப் பட்ட மாணவர் குழுவிலிருந்த ஒருவன் துரதிர்ஸ்ட வசமாய்க் காட்டில் தொலைந்து போகிறான். அவன் எப்படி தன் உயர் நிலை சிந்தனையைப் பயன் படுத்தி கொடிய மிருகங்களிடமிருந்தும், பசி தாகத்திலிருந்து  மீண்டு வெளியேறுகிறான் என்பதுதான் கதை. ஒரு பையனை ஹீரோவாகக் காட்டுவதே இதன் நோக்கும். கதை சொல்லலினூடே சூழியல் சார்ந்த விழிப்புணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே இயற்கை நமக்களித்த வளத்தை பாதுகாப்பது பற்றிக் கண்டிப்பாய் சொல்வது நம் கடமை. இயற்கை வளத்தை சீர்குலைக்காமல் அப்படியே நம்  அடுத்த சந்த்திக்குக் கொடுத்துச் செல்வது மிக முக்கியம். இல்லையென்றால் சுவாசிகக் கூட ஆக்சிஜன் புட்டியை சுமக்க வேண்டிய நிலை வரும்.

கே: இறுதியாக இந்த நூலின் வெளியீடு பற்றிச் சொல்லுங்கள்.
வன தேவதைசுங்கைப் பட்டாணியில் , சிந்தா சாயாங் வாட்டர் கார்ணிவல் வளாக மண்டபத்தில். எதிர்வரும் 31.10.2015 சனிக்கிழமை மாலை 4.00க்கு வெளியீடு காண்கிறது. இதனை வெளியீடு என்று சொல்வதை விட அன்பளிப்பாக வழங்குதல் என்று சொல்வதே சரியாகும். சில கொடை நெஞ்சங்கள் இந்நூலின் அடக்க விலையைக் கொடுத்து வாங்கி, பள்ளிகளுக்கு அன்பளிக்கிறார்கள். அதே வேளையில் நூலை அதே விலையில் (ஆர் எம் 7மட்டும்) அங்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் யாராவது தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிக்க விரும்பினால் நேரடியாக நிகழ்ச்சிக்கு வரலாம் அல்லது என்னோடு தொடர்பு கொள்ளலாம்.(0195584905). .ன்றி



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...