Skip to main content

சிதையும் முன் அபிப்பராயங்கள் ( டாக்டர் ரெ.கார்த்திகேசு)

சிதையும் முன் அபிப்பராயங்கள்
டாக்டர் ரெ.காவின் கொல்லவரும் புலி’.
கோ.புண்ணியவான்

இந்த மார்ச் மாதம் 20ல் மலாயா பல்கலைக் கழகத்தில் நடக்கவிருக்கும் டாக்டர் ரெ.கா படைப்பின் மீதான இலக்கிய கருத்தங்குக்கு அவரின் சிறுகதைகள் குறித்தான கட்டுரை எழுத, ‘இன்னொரு தடவைசிறுகதைத் தொகுப்பைப் பலமுறை தேடியும் என் வீட்டு நூலகம் தேடிக் கொடுக்க மறுத்தது. வேலைக் காரியின் மேலும் வீட்டுக்காரியின் மேலும் கோபம் வந்தது. நூல்களைத் தூசு தட்டி அடுக்க வேண்டும் என்ற கட்டளைக்கு நூல்களை அடுக்களைப் பாத்திரங்கள் போல அடுக்கிவைத்து நல்ல பேர் வாங்கிக்கொண்டாள் வேலைக்காரி. பிற நூல்கள் கிடைத்துவிட்டன. ‘இன்னொரு தடவையைப்பல தடவை தேடியும் கிடைக்கவில்லை. சலித்து கைவிட்டுவிட்டேன். கிடைத்த நான்கு தொகுப்புகளை வைத்து கட்டுரையை முடித்தேன். ஆனால் எனக்கு நிறைவளிக்கவில்லை. எல்லாக் கதைகளையும் அலசி ஆராய வாய்ப்பில்லையே என்ற ஆதங்கம்தான் காரணம். கட்டுரையையும் அனுப்பியாயிற்று. ஒரு மாதம் கழித்து ஒரு நண்பர் பேரவைக் கதைகள் நூல் வேண்டுமென்று கேட்டார். அதைத் தேடப் போய்இன்னொரு தடவைசிக்கியது. இங்கேதான் எங்கேயோ பதுங்கி இருக்கிறது என்ற என் அனுமானம் வீண் போகவில்லை. ஒன்றைத் தேடும் போது கிடைக்காமல் பிறவற்றைத் தேடும்போதே முன்னர் தேடியது கிடைப்பதென்பது பெரும்பாலும் நடக்கக் கூடியதுதான். தேடல் எப்போது ஒரு முனையை நோக்கிப் பயணிப்பதில்லை அவை கிளை விடும். கிளகளில்தான் சுவாரஸ்யம் கிடைக்கும். அதுதான் தேடலின் மகத்துவம். ரெ.கா கதைகளைகத் தேடுவதிலும்  அந்த மகத்துவம் கிட்டும்.
இன்னொரு தடவையில்ஐந்தாறு கதைகளை வாசித்த பிறகு,பல பக்கங்கள் தள்ளி உறுமிய வண்ணம் இருந்த  ‘கொல்ல வரும் புலியை வாசிக்க உந்துதலை புறந்தள்ள முடியவில்லை . புலி என்ற சொல் என் விரட்டிக் கொண்டே இருந்தது. புலி என்ற சொல்லே கிலியைக் கிளப்பக் கூடியது. அது அடர்காட்டுப் புலியாக இருந்தாலும் சரி, விடுதலைப் புலியாக இருந்தாலும் சரி. 2001ல் வாசித்த நினைவில், அதன் கதைப் பொருள் விடுதலைப் புலிகள் சம்பந்தமானது  என்றே  நினைவுறுத்திக்கொண்டிருந்தது. வாசித்து முடித்த பிறகே விடுதலைப் புலிக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை என்று முடிவுக்கு வந்தேன்.
கதையில் பேராசிரியர் பொன்னம்பலம்  தஞ்சாவூருக்கு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்க்கு ஒரு கட்டுரையை அனுப்பி வைக்கிறார். தஞ்சை பல்கலையிலிருந்து மாநாடு நடக்கும் நாள் வரை கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றியோ, மாநாட்டு அழைப்போ எதுவுமே வரவில்லை. மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பியும் அங்கிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து விசா பெற்ற பின்னர், தமிழ் நாட்டையும். ஆராய்ச்சி மாநாட்டையும் ஆர்வத்தோடு தரிசிக்கக் டிக்கட் வாங்கி சென்னைக்குப் பறக்கிறார்.  கிட்டதட்ட அழையா விருந்தாளியாக புறப்பட ஆயத்தமானபோதே ஏதோ தப்பு நடக்கப் போகிறது என்ற முன் அனுமானம் வாசகனை வந்தடைகிறது. கதைப்பொருளை வாசகனுக்குக் கடத்தி அவனை கதைக்குள் கவனப்படுத்த முயல்வது ஒரு நுணுக்க வகை கதை சொல்லல் முறை. பேராசிரியருக்குத் தமிழ் நாட்டுக்கு முதல் பயணம் இதுஎனவே தமிழ் நாட்டைப் பற்றிய அவரின் முன் அபிப்பிராயங்கள் அவரை ஒரு தூய்மையான கற்பனை உலகை கனவு காண வைக்கிறது. தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கான முதல் பயணம் பெரும்பாலும் ஒரு கனவுலகை நிர்மாணித்துக் கொள்ளும். தன் முன்னோர் பிறந்த மண் என்ற நுண்ணர்வும். தன்னுடைய மரபணுக்கள் அங்கிருந்தே தனக்குள் கிடைக்கப் பெற்ற  பெருமையும், வள்ளுவர், கம்பர், அப்பர் சுந்தரர், ஆளுடைப்பிள்ளை, மணிவாசகர், பாரதி என்ற தழிழ் தொன்ம ஆளுமைகள் தம் நினைவை பெரு பிம்பங்களாக வரிசை பிடித்து நிற்க அவர் அம்முடிவை எடுக்கிறார். தமிழ் பிறந்த மண் என்ற உயர் எண்ணம் தமிழ் நிலத்தை பெருமையோடு நினைக்க வைக்க, அந்த எண்ணங்களே அவரின் கால்களை இழுத்த வண்ணம் இருக்கின்றது. அவர் ஆர்வம் அந்த மண்ணின் மீதும், அதனை அள்ளி வழங்கிய தமிழின் மீது பாலைப் போலப் பொங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆர்வத்தோடே கடல் கடந்து பயணம் செய்கிறார்.
      பெரும்பாலும், கதைக்குள் மனிதப் பாத்திரங்களே மைய இடத்தைப் பிடித்துக்கொள்ளும். இக்கதையில் வரும் பொன்னம்மபலம் ஒரு உதிரி பாத்திரமாகவே இருக்க கதைக் களம் பெருவாரியான மையத்தை தன்வசம் கொண்டிருந்தது. கதைக் களத்தை மையப் பொருளாக கட்டமைப்பது சிரமம். பாத்திரங்களுக்கு உயிரோட்டத்தை கொண்டு வருவது எளிது. ஆனால் கதை நடைபெறும் நிலத்துக்கு ஜீவனைக் கொண்டுவந்து காட்டுவது அத்துணை எளிதல்ல. அவருக்கு அது எளிமையாக்க் கைகூடியிருக்கிறது.
முதல் பயணம் என்பதால் தமிழ் நாட்டை தன் கற்பனை மூலம் ஒருஆளுமைச்”  .சித்திரமாக வரித்துக் கொள்கிறார். அது எத்தனை பெரிய தவறு என்பதைக் கதை வளர்ச்சியில் நிரூபித்துக் கொண்டே வருகிறார். சென்னை விமான நிலையத்தை அடைந்து வெளியே வந்ததும் ,டேக்சி டிரைவரின் சேரி மொழி அவரைச் சற்றே விதிர்க்கவைக்கிறது. அவர் எதிர்பார்த்த  தமிழ்  இதுவல்ல! தமிழ் நாட்டிலேயே தமிழ் சிதைந்து கிடப்பதைக் கேட்டு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியடைகிறார். சென்னையிலிருந்து தஞ்சைக்குத் வாடகைக் கார் சேவையைத் தவிர வேறு வழியில்லை என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர் தமிழ் நிலத்தின் மேல் வைத்திருந்த நல் அபிப்பிராயம்  உடைந்து நொறுங்குகிறது. வேறு வழியில்லாமல் டேக்சி ஓட்டுனரின் தொடர் தொல்லையைத் தவிர்க்க பயணம் செய்கிறார். இடையில் உணவுக் கடையின் அசுத்தமும், பயணத்தின் போது உண்டாகும் நெரிசலும், டேக்சியை மாடு முட்டி உண்டாகும் கலேபரமும், அதனால் உண்டாகும் நேர விரயமும் பொன்னம்பலத்தை நிலைகுலைய வைக்கிறது. தஞ்சையைக் கால விரையமின்றி அடைய, மாடு முட்டி டேக்சிக்கு உண்டான பாதிப்புக்கு தானே பணம் அழுது தொடர்ந்து பயணம் செய்கிறார். வளாகத்தை அடைந்ததும் ஓட்டுனர் கூடுதல் வாடகை கேட்டுத் தொல்லை தரும்போது , அவர் அந்த மண்ணின் மீது வைத்திருந்த உயர் அபிப்பிராயம் மேலும் சிதைவதைக் காண்கிறோம்.
    உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துபவர்களின் பொறுப்பற்ற தன்மையையும் மொழி சார்ந்த அவரின் கனவை மேலும் உடைத்தெறிகிறது. இதுதான் தான் அபாரமாகக் கற்பனை செய்த தமிழ் நாடா என்று வெறுப்போடு இருக்கும் தருணத்தில் காவல் அதிகாரிகள் பொன்னம்பலத்தை விடுதலைப் புலி என்ற சந்தேகத்தின் பேரில்  உடனடியாக மலேசியாவுக்கே கிளம்பிப் போக கட்டளை பிறப்பிக்கிறார்கள். கொல்ல வரும் புலி இங்கே எது என்று நாம் முடிவெடுக்கும் தருணம் வந்துவிட்டது. அதனை வாசகனின் அனுமானத்துக்கு விட்டு விடுகிறார். விடுதலைப் புலி என்ற சந்தேகிக்க நேரும் காரணம் ஒன்றைக் கதைக்குள் செருகி வைத்தாலும் , கதைப்படி அது ஒரு காரணமே அல்ல. அவர் பயணத்தில் தமிழக மண்ணில்  நடக்கும் கதைக் களத்தையே புலியாகக் கட்டமைத்து விடுகிறது. விடுதலைப் புலியைவிட தமிழையும் அதன் விழுமியங்களையும், தொன்று தொட்டு வரும்  பண்பாட்டையும் மொழியையும் இன்றைய தமிழகம் சிதைப்பதையேகொல்ல வரும் புலிஎன்ற குறியீட்டின் வழி காட்டுகிறார். தான் மனதளவில் நிறுவிய தூய்மைவாத  நிதர்சனம் மெல்ல மெல்ல நிலைகுலைந்து போவதை கதை நெடுகிலும் நேர்த்தியாகச் சொல்லப்படுகிறது.
    தமிழக பயணத்தின் போது பொன்னம்ம்பலத்துகு உண்டாகும் கெடுபிடிகளை வாசகன் சமன் செய்து கொள்ள கதையின் ஊடுபாவாக நகைச்சுவையும் உண்டு.  அவர் ஏறி அமர்ந்த டேக்சி மோசமான நிலையில் இருக்கிறது, டேக்சியில்  இந்து தெய்வங்கள் படங்களைப் பார்க்கிறார், இந்த மோசமான நிலையில் இருக்கும் டேகிசியின் பயணிகளைக் காப்பாற்றத்தான் இத்தனை தெய்வங்கள் படம் வைக்கப்பட்டிருக்கிறதோ என்று சொல்லும்போது நமக்கு பயண இடர்களினூடே சிரிப்பும் வரத்தான் செய்கிறது. ‘பேமாணிஎன்று டேக்சி ஓட்டுனர் தன்னைத் திட்டிய  சொல்லின்  பொருளை தஞ்சை பல்கலை நூலகத்தில்,தான் தேடவேண்டும் என்று ஒருகட்டத்தில் சொல்வதிலும் பகடி இருக்கத்தான் செய்கிறது.
      ஒரு செம்மொழியின் சொந்தக்காரர்களே அதன் விழுமியங்களை புறந்தள்வதைச் சகித்துகொள்ளாத மனநிலையே  கதை நெடுக்கக் காண்கிறோம். தனக்குப் பிறந்த சிசுவை தானே வதை செய்வது எவ்வளவு தன்னிரக்கமற்றதோ அவ்வளவு கொடுமையானது சுய தாய்மொழிப் பண்பாட்டுக் கொலை. கொல்ல வரும் புலி காட்டில் இல்லை நாட்டின் நிலமிங்கும் சுற்றி அலைந்து கொண்டுதான் இருக்கிறது. படைப்பாளன் நிறுவிக்கொள்ளும்முன் அபிப்பிராயங்கள் சிதையும் தருணம் அறச்சீற்றம் கனன்றெரியத்தான் செய்கிறதுகொல்ல வரும் புலியில்’.


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...