Skip to main content

படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்

சிறுகதை

படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்
                                                   
                                     1
கவிஞர் சோழவேந்தனின் ‘கரும்புத்தோட்டம்’ நூல் வெளியீட்டு அழைப்பிதழ் சேர்ந்த சில மணி நேரத்திலேயே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும் வந்தது. தபால் மூலம் வந்து சேரும் நேரத்தை ஜோசியரிடம் கணித்திருப்பார் போலும்! அழைப்பிதழ் கிடைத்திருக்கும் என்றும் நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு வழங்கும்படியும் பின்னூட்டத் தகவலுக்காக போன் செய்தேன் என்றார்.
அவர் நூல்வெளியீட்டை சற்றுத் தடபுடலாகவே செய்யவிருப்பதாகச் சொன்னபோது எனக்குக் கொசுறாக கல்யாண மேளம் நாதஸ்வர ஓசை கேட்டது. உற்றார் உறவினரையும் நண்பர்களையும் எழுத்தாளர்களையயும், தான் வாடிக்கையாளனாக இருக்கும் மீன்காரன், மளிகைக் கடைக் காரர் தன்னைச் சிகை அலங்காரம் செய்பவர், தினசரி கடந்து போகும்போது புன்னகை சொரிபவன், திரும்பாத மொய் கடனாளி,(ஆயிரம் அழைப்பு அடித்ததே அதனை கொடுத்த முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில்தான்) என ஒருவர் விடாமல் அழைப்பு கொடுத்திருப்பதால் அனைவரும் கண்டிப்பாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார். எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். நூல் போட்டவர்கள் நொந்து நூடல்சாகப் போன எண்ணற்ற கதைகள் என் மனம் மடல்களாக தேக்கி வைத்திருந்தமையால் இந்தக் கேள்வி. நான் அன்னைக்கு கெடா வெட்டி தலைவாழையிலை விருந்து வைத்திருப்பதாக அழைப்பில் போட்டிருக்கிறேன் என்றார். ஒரு தமிழ் நூலாசிரியரின் கையறு நிலை அவனை எவ்வளவு பணிந்து குறுக வைத்துச் செயல்படவைத்திருக்கிறது, இந்த வாழையிலை விருந்தோடான விருந்து உபசரிப்பு!  விருந்து முடிந்ததும் நூல் வெளியீடு காணும் என்றார்.’ நூல் வெளியீட்டுக்கு எவன் வர்றான் இப்போல்லாம். இப்படி ஏதாவது செஞ்சாத்தான் போட்ட காச பாக்கமுடியும்’ என்றார்.
நான் நிகழ்ச்சிக்குப் போகவில்லை. எழுத்தாளனுக்கு ஏறியிருக்கும் தலைக்கனம் எனக்கும் இருப்பதில் வியப்பு இல்லைதானே. அதென்னஸ? சோறுபோடுகிறேன் என்று தான் எழுதிய நூலுக்காகத் தூண்டில் போடுவது தன்னைத் தானே மலினப்படுத்திக்கொள்ளும் செயலல்லவா?.  சோற்றுக்காக வருபவன் நூலுக்காக வருபவனா என்ன? சோற்றைப்போட்டு நூல்விற்பவன் வனிகத் தந்திரம் செய்பவன்தானே? அதானால் போகவில்லை. விழா முடிந்து எனக்கொரு நூல் அனுப்பியும் வைத்தார்.
விழாவெல்லாம் எப்படி நடந்தது என்றேன். அடேங்கப்பா எட்டு நூறு பேரு வந்துட்டாங்க. நல்ல வேளையா 850 பேருக்கு சாப்பாடு கேட்டர் பண்ணிட்டேன் என்றார். பணம் பார்த்திருப்பார். எத்தனை நூல்கள் போனது என்றேன். நானூறு என்றார். மத்தவனெல்லாம், தின்னுபுட்டு கைகழுவிட்டு கெளம்பிட்டானுங்க என்றார். நல்ல வேளை போனவர்கள் நூல் வாங்கி இருந்தால் கவிதைத் தாள்களைக் கிழித்து எச்சில் கையைத்துடைத்துக் கசக்கி எறிந்திருப்பார்கள். சில நூல்கள் மண்டப நாற்காலியிலும் தரையிலும் கிடந்ததாகச் சொன்னார்.
                                      2    
நான் என் கவிதைக்காக ஒரு வைர நெக்லஸ் பரிசாகப் பெற்றிருந்தேன். 1000த்துக்கும் மேற்பட்ட கவிதைகள் போட்டிக்குப் போனதாம். , அதில் சிறந்த பத்து கவிதைகளில் இறுதித் தேர்வுக்குத் தகுதியாகி, என்னுடைய ‘சிகரத்தைத் தொட்டவன்’ வைர அட்டிகையை பெற்றிருந்தது. தொலைக் காட்சியிலெல்லாம் அன்றைக்குச் செய்திகளிலும் மறுநாள் எல்லாத் தமிழ்ப்பத்திரிகையிலும் பரபரப்பான செய்தியாகிப்போனது. என்னோடு  நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் மனைவியிடம், “ நீ அணிந்துகொள்ளேன் இப்போதே என்றேன்,” ஏன் நான் கழுத்தோட வீடு போய் சேரனும்னு தோணுலையா உங்களுக்கு? டி வியிலெல்லாம் நம்ம படம் போட்டு சேதியப் போட்டிருப்பான்ல!” என்றாள். கழுத்துக்கு மேல்தானே வாயே இருக்கிறது என்று சுதாரித்துக்கொண்ட நான், “பராவல நான் இருக்கேன்” என்றேன்.”அதாங்க நீஙக இருப்பீங்க நான் இருக்கமாட்டேனே!” என்றாள். இந்த முறை பிழைத்துப் போகட்டும். எட்ஜஸ் பண்ணிதான் வாழ்க்கை நடத்தவேண்டும். இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே!
“நீங்கதானே வைர நெக்லஸ் ஜெயிச்சது உங்களுக்குத்தானே வைரம் கெடச்சது. 30,000 வெள்ளி பெருமானம் பெறுமாமேஸ என்று ஒரு நூறு பேராவது என்னைக் கேட்டிருப்பார்கள். புல் அறித்தது. மெய் சிலிர்த்தது. மனமெல்லாம் நெகிழ்ந்தது. பதிலிறுக்க முடியாமல் வாய் உளறியது எச்சில் வரண்டு போய்.
“மறுநாள் பள்ளியிலும் ஆசிரியர்கள், “சார் வைர நெக்லசை கொண்டு வாங்க சார், இந்தக் கண்ணால பாத்தாவது திருப்தி பட்டுக்கிறோம்.” என்றனர். அந்த அட்டிகையின் பணமதிப்பு மேலும் எகிறுவதாகப் பட்டது அப்போது. மனைவியிடம் சொன்னேன். “வேணா நீங்க அத பொறுப்பா திரும்பி கொண்டார மாட்டிங்க,” என்று சொன்னாள். வைரத்தின் மீதான பற்றால் என் மீதான மதிப்பீடு எந்த அளவுக்குச் சரிந்துவிட்டது என்பதை இதைவிட வேறு காரணம் வேண்டாம்.
கொசுறாக ஒரு செய்தி.
“எனக்குத் தெரிந்த ஒரு பெண் வழக்கறிஞர்..” சார் நகைய குடும்பச் சொத்தா வச்சிருங்கள். ஒங்க எதிர்கால சந்ததி உங்க பேரச் சொல்லிக்கிட்டே இருக்கும்” என்றார்.
 சரிதான் என் தாத்தாவின் பெயர் எனக்குத் தெரியாமல் போனது அவர் இதுபோன்று ஏதும் சாதிக்காததால்தான் இருக்கலாம்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொல்வதன் மூலமே இந்த நெக்லஸ் மோட்சம் அடையும்.
காந்தி மண்டபத்துக்காக  வீடு வீடாகச் சென்று  நிதி கேட்டு அலைந்த தருணத்தில் நிகழ்ந்தது இது. பரிசு வாங்கி இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். ஒரு பெண்மணி அவள். ‘மணி’ என்ற சொல்லின் உட்பொருளுக்கு எப்படியெல்லாம் குந்தகம் உண்டாகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு சான்று.
“நீங்கதானே நெக்லஸ் ஜெயிச்சது?” என்று ஆர்வத்தோடு கேட்டார். ஆண்களோடு பேசும்போது இயல்பை மீறிய உடல்மொழியும், செயற்கையாக தருவிக்கப்பட்ட நாணமும் நெளிவும் கூடிக்கொண்டு போவதாக இருந்தது. அதனை உடனிருந்து பார்ப்பவர்க்குச் சற்று அசூசையாக இருக்கும். அவளுக்கு அது பழகிப்போய்விட்டது.
 நான் தான் அவன் என்று அவளுக்குக் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கும். ஆனாலும் ஒரு ஆணுடனான உரையாடலைத் திறப்பதற்கு வார்த்தை சாவி வேண்டுமல்லவா? ‘ஆம்’ என்று அடக்கமாகத் தலையை மட்டும் அசைத்தேன். “அத உங்க மிசஸ்சுக்கு கொடுத்திட்டீங்களா?” என்று மறு கேள்வியைக் கேட்டபோது மெல்லிய நாண அசைவு வெளிப்பட்டது எனக்கும். அதற்கும் தலையாட்டினேன். தலைக்கணத்தை உதற கொஞ்சம் தலையசைப்பது நல்லது.
அடுத்து அவர் சொன்னதை மீண்டும் உங்களுக்கும் சொல்கிறேன் 109வது முறையாக. எண்ணிக்கையில் ஒன்றிரண்டும் கூடக்குறைய போயிருக்கலாம்.
“அந்த நெக்லசை எங்க மாதிரி ஆளுங்க கழுத்துக்கு போட்டு அழகு பாக்கணும்”. என்றார். (அப்படியொன்றும் மயில் கழுத்தல்ல அவளுக்கு) எனக்கு அப்போது விதிர்க்கத் தொடங்கியது. பக்கத்தில கமிட்டி மெம்பர்கள் வேறு இருந்தார்கள். தங்கமே பெண்களை வீட்டில் தங்கவிடாமல் செய்யும் போது வைரம் என்ன சும்மா விட்டுவைக்குமா என்ன?
“எங்க மாறி ஆளுங்க’ என்றாளே? என்ன பொருளில் அவள் சொன்னாள் என்பது இதை எழுதும் தருணம் வரை புரியவில்லை!
இரவு உணவு வேளையில் நினைவு வரவே நான் என் மனைவியிடம்  இதனைச் சொன்னேன். அவள் சொன்ன வார்த்தையும் அந்த நெக்சஸ் பரிசின் சம்பவத்தோடே  என் இலக்கிய வரலாற்றில்  பதிவாகிக்கிடக்கிறது.நெக்லஸ் கதையை எடுத்தால் ‘எங்க மாறி ஆளுங்க கழுத்துக்குத்தான்’ தகவலும் இணைபிரியாது ஒட்டிக்கொள்ளும்.
“ எவவ? செருப்பால  அடி”. என்றாள் உடனே. மறந்துவிட்டேன்  “தேஞ்சிப்போன” என்றும் சொன்னாள்.  தனிமனித நடத்தை கோளாறை விமர்சிக்க மிக மோசமான சொல்லாடல் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெறும் சொல் அதுவல்லவா?
 பாராட்டில் நனைந்ததெல்லாம், அது கால ஓட்டத்தில் வெயிலில் காய்ந்த மிளகாய்போல் சுருங்கி வடிவிழந்து போனபிறகு,  ஞானம் கிடைத்தது போல கேள்வி ஒன்றை எழுப்புகிறது.
   வைரத்தைப் பற்றியே கேடடவர்களில் ஒருவர்கூட மருந்துக்கும் கவிதையைக் கேட்காமல் போனது , இலக்கியம் சார்ந்த வெகுஜன மதிப்பீட்டை மிட்டுருவாக்கம் செய்யத்தூண்டுகிறது?
                             3            
நான் ஒரு உணவுக்கடையில் ராஜுவை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்ததே என் துர் அதிர்ஸ்டம் தான். அன்றைக்கான என் கிரகரபலனை பார்க்காமல் போனது தப்புதான்.  அரசு பணியில் உயர் பதிவியில் இருக்கிறார் . தமிழ் மொழி தொடர்பான பணிதான் அவருக்கு. தொடக்க காலத்தில் புதுக்கவிதையில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டி, ஒரு ஆளுமையாக வளர்வேண்டிய அரிய வாய்ப்பை சுய சோர்வாலும் சோமபலாலும் தவறவிட்டவர். அந்தத் துறையிலிருந்து விலகி, விவாகரத்தாகி, கண்மறைவாகிப்போனவர்.. முகமன் பேச்செல்லாம் முடிந்து இரண்டு வரியாவது, இலக்கியம் பேசுவதுதானே இலக்கியவாதிகளுக்கு இயல்பு. என்னதான் பயன்படுத்த மறந்து கிடப்பில் கிடந்த பழைய பெருங்காய டப்பாவாக இருந்தாலும் திறக்கு போது வீறிட்டு முகத்தில் அறைய அதன் வாசம் எஞ்சி இருக்கத்தானே செய்யும்!
“ஆமா நீங்க கூட நூல் வெளியிட்டீங்களே?” பெருங்காய வாசம் அவரிடமிருந்தே கசிந்தது. “சிறுகதையா? கவிதையாஸ? பேப்பர்ல பாத்தேன்.” நான் பருகிக்கொண்டிருந்த குளிர்பானம் அக்கணத்தில்தான் நாவிலிருந்து உடலெல்லாம் ஊர்ந்து சுவைப்பதாகப்பட்டது. மெல்லிய புன்னகையுடன் தலையை ஆட்டினேன்.” நான் வரமுடியல..வேல” என்றார். அவரின்  கனத்து, தொண்டைச் சதையை உரசி வரும் இனிமையைவிட்டு விலகி வரும் ஹஸ்கியான குரல் அவருடையது. சற்றே பிசிறாக ஒலிக்கும் துருவேறிய குரல். ஆனால் என் நூல் பற்றித் தொட்டபோது குரலில் இனிமையும் மென்மையும் கலந்தே ஒலிப்பதாக இருந்தது.
நான் தொடர்ந்து அதுதொட்டு உரையாடியிருக்கக் கூடாது என்றே உணரவைத்த அடுத்த சொற்றொடர் அவருடையதாக ஒலித்தது அப்போது.
அவர் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்.
தன் படைப்பு பற்றிப்பேசும் போது  உற்சாகம் ஊறுவது இயல்புக்கு மாறானதில்லையே.
“கார்ல என் அந்தப் புத்தகம் இருக்கு..போகும்போது உங்களுக்குத் ஒரு நூல் தருகிறேன்,” என்று எழுந்தேன்.
“நான் உங்களை நேரில் வந்து பாக்கிறேன். அப்போ வாங்கிக்கிறேன்”. என்றார் இடைவெட்டி. நான் அவரைச் சந்தித்து இந்த நான்கைந்து ஆண்டு இடைவெளியில் ஒரு நாளேனும் போன் செய்திருப்பானா இவன்? பத்து ரிங்கிட் என் ‘மயிருக்கு’ சமானம்.  அந்த மெல்லிய புறக்கணிப்பு படைப்பாளனின் ஆன்மாவைச் சிதைத்துவிடும் என்று உணராதவனா இவன்? நான் அருந்திக்கொண்டிருந்த குளிர்பானம் லேசாகக் கசப்பதாகப் பட்டது. தொடர்ந்து அவன் முன்னால் அதனைப் பருக மனமில்லை! பானம் அரை கிண்ணம் எஞ்சியிருந்த்தை அவன் பார்க்கவேண்டும்.

      இதேபோன்ற சம்பவம் நாங்கள் பயணம் செய்த காருக்குள் நடந்தது. நான் புத்தகம் எழுதியிருக்கிறேன். பாருங்கள் என்று கையில் நீட்டினேன். அது என் முதல் நூல். அவர் அதைக் கண்கொண்டு பார்க்காமல், மெல்ல புறங்கையால் என் பக்கமே தள்ளினார். காரில் மேலும் மூவர் இருந்தனர்.
மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் சொல்லித்தருவதில் தன்னைவிட்டால் வேறு ஆள் இல்லை என்ற மமதை அவரிடமிருந்தே கசிந்ததாகச் சக ஆசிரியர்கள் சொல்லக் கேள்வி. இலக்கியம் போதிக்கும் ஆசிரியராயிற்றே என்றுதான் நூலை நீட்டினேன். இதே காட்டில் இன்னொரு சிங்கமா? ம்ஹூம் இருக்கவே கூடாது என்ற இறுமாப்பில் என் கோரிக்கை  ‘அற்பப் புழுவே’ என்று ‘கர்ஜித்து’ புறக்கணிக்கப் பட்டது.
                                  4
அழைப்பில் 5.00 மணி என்று ஒரு போட்டு, 5.30 மணிக்கு ஆரம்பித்துவிடலாம் என்றே உத்தேசித்திருந்தேன். அரை மணி நேர தாமதத் துவக்கம் என்பது இந்திய மனநிலை நேர நிர்வாகத்தைக் உள்வாங்கி, அனுசரித்து, கருத்தில் கொண்டு!
மனநிறைவான கூட்டம்தான் துணை அமைச்சர் வருகிறார் என்பதற்காக இருக்கலாம்.  .ஆனால் அமைச்சர் வந்தது 6.00மணிக்கு. அமைச்சரை அழைத்துவிட்டு, அன்னார் வருவதற்கு முன் நிகழ்ச்சியை தொடங்குவது நாகரீகமற்றது எனபதும் இந்திய மனநிலைதான். தாமதமாக வருவது அவர்க்குப் பழகிப்போனது- தேர்ந்தெடுத்த மக்களுக்கும் பழகிப்போனது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு மட்டும் பதட்டத்துக்குள்ளாக்குவது.
அமைச்சர் பேசுவதற்கு நேரத்தைச் சேமிக்க நூல்விமர்சனததை ஐந்து நிமிடத்துக்கு வைத்துக்கொள்ளச்சொல்லி அமைச்சர் தரப்பிடமிருந்து ஆணை வந்திருந்தது. வேறு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமாம். தாமத வருகையால் நிறைந்திருந்த மண்டப நாற்காலிகள் மெல்லக் காலியாகிக் கொண்டிருந்தன.
அமைச்சர் வந்ததும் முன் வரிசை நிறைந்துவிட்டது. எனக்கு ஒரு வரிசை தள்ளி. அடக்கம் அமரருள் உய்க்கும்.
அமைச்சர் பேச ஆரம்பித்தார். தன்னுடைய சேவையைப் பற்றி, தன்னுடைய அரசியல் வழிகாட்டிப்ற்றி. தன்னுடைய அரசியல் விரோதிகள் பற்றி நவரசங்களோடு. சிரிப்பதற்கும் கைதட்டுவதற்கும்தான் அமைச்சர் என்ற உச்சத் தகுதிக்கு மந்தைகள் இல்லாமல் போன வரலாறு உண்டா? கூட்டம் பேச்சை வெகுவாக ரசித்தது. (அரசியல் கூட்டங்களுக்குக் கூடும் கூட்டம், இலக்கியத்துக்கு வருவதில்லை- தமிழ் கூறு நல்லுலகம் அறிந்த ஒன்று) அவரின் நோக்கம் முடியும் தருவாயில்ஸ
“அந்த புக்க எடுப்பா. எழுத்தாளர் பேர் என்னாஸம்ஸ?”
“காரிகாலன் டத்தோஸ”
“நல்ல பேர் அந்தக் கரிகாலன் கல்லனை கட்டினான். நம்ம ஆளு புக்கு எழுதியிருக்காரு”
அவர் பேசி முடித்து நூல் வெளியிட்டதும் கிளம்பிப் போய்விட்டார். எஞ்சி இருந்த கூட்டமும் கலைந்தது.

                              5.
 “ இதான் கடைசி நூல். இனிமே புக்கே போடமாட்டேன்,சத்தியமா.”
   “நான் வரமாட்டேன் “ என்றால் மனைவி. அப்போது அவள் குரலில் அழுத்தமாகவும், வெறுப்போடும் தொனித்து நீண்டது.
   இவ வந்து வாழ்த்துரையா வழங்கப்போறா.?
   “எதுக்குங்க மத்தவன் கால்லாம் போய் விழுந்துகிட்டு? நாமென்ன சோத்துக்கா கஷ்டப்படுறோம், நல்லாதான இருக்கோம்”
அவளுக்குச் சொல்லி புரியவைப்பதில் வெற்றிபெற்றது என் வரலாற்றிலேயே இல்லை. நாவல் எழுதி 25 வாரங்கள் ஞாயிறு பதிப்பில் வெளியானது. நாலைந்து பேர் நல்ல நாவல் என்று கருத்து எழுதியும் இருந்தார்கள், இந்த 25 வாரத்தில். இதனை நூலாக்க வில்லையென்றால் என் எழுத்து விமோசனம் அடையப்போவதில்லை.தன் படைப்பின் மேல்  புழுதி மேய்வதில் எந்த எழுத்தாளனுக்கு உடன்பாடும் இல்லை.(ஆனாலும் மானாவரியாய் மேய்ந்துகொண்டுதான் இருக்கிறது, கரையான் துணைகொண்டு)
நூலாகிய தருணம் நூலுக்கு ஆன்மா உருக்கொண்டு விடுகிறது. அப்போது படைப்பாளனின் ஆன்மாவும் ஒன்றிணையும் உன்னதத் தருணம் அது. படைப்பாளன் அல்லாதவர்க்கு அந்த நுட்பத்தை விளக்கிச் சொல்ல முடியாது. சாதாரண மனிதனே தன் மன உணர்வை பிறர் புரிந்துகொள்ள முடியாது போது, ஒரு ஆழ் மனக் கலைஞனின் நுட்ப அறிவை- கலை பிரக்ஞ்யை சாதாரண மனிதன் உள்வாங்க முடியுமா என்ன? ஞான சூன்யங்கள்!  படைப்பாளன் உள்ளுணர்வை, பிறரிடம் சொல்லும் பட்சத்தில் அது பகடியாகி கேலிச் சிரிப்புக்கும் ஆளாகிவிடும் துர்சம்பவத்தால் பலமுறை புண்பட்ட சம்பவங்கள் அவனை எச்சரிக்கை செய்கிறது.
ஆனால் நூல்வெளியீட்டின் முன்னரும் பின்னரும் எதிர்கொள்ளும் மெல்லிய அவமானங்களை அவளும் அனுபவித்த பின்னரே, “கதை எழுதுறீங்களாஸ அதோட விட்டுடுங்கஸ நூல் பதிப்பு அதற்குப் பின்னர் வரும் ரத்தக் கொதிப்பு, இதெல்லாம், வேலியில போற ஓணான விடாப்புடயா புடிச்சு வேட்டிக்குள்ளாற போட்டுக்குற மாதிரி,” என்று, மூன்றாவது வெளியீட்டுக்குப் பிறகு தன் அவதானிப்பை தத்துவமாக மாற்றிய அபூர்வ சந்தர்ப்பம் அது. வாழ்க்கையில் தத்துவங்கள் சாதாரணமாய்க் கிடைத்துவிடாது! அது நூல் வெளியீட்டு  அனுபவங்களில்தான் பெருவாரியாகச் சுரக்கும்.
“நீங்களே நூல அச்சாக்கிறது, தேடிப்போய் வரச்சொல்லி அழைக்கிறது, அரசியல், பணக்கார வீட்டு வாசல்ல தவம் கெடக்கிறது, நிகழ்ச்சி அன்றைக்கு ஆளுங்க வருவாங்களா வரமாட்டாங்களானு வாசல பாத்துக்கிட்டு பதட்டமா காத்துக் கெடக்கிறது, , 500 அழைப்பிதழுக்கு 50 பேராவது வரமாடாங்களான்னு ஏங்குறது,  , கூட்டம் வரலேன்னு வெக்கப் படுறது, அப்போ உங்க எழுத்தே உங்கள ஏமாத்தினமாரி உணர்ரது, வெளியீட்டன்னைக்கு அரசியல் வாதிங்க, பணக்காரன் முன்னால குறுகி நிக்கிறது.. , சபையில தட்ட ஏந்தி நிக்கிறது, இதெல்லாம் யாசகம் பண்ற மாரியே இருக்கு? நிகழ்ச்சியின் நாயகன் என்ற அந்தஸ்தை பிரமுகரிடம் பறிகொடுத்து நிற்பது, அதனால் நீங்கள் நீங்கள் ஓரங்கட்டப்படுவது, நீங்களே புக் பண்ண மண்டபத்துல, நீங்களே வரச்சொன்ன மக்கள் முன்னால- சுயமரியாதைய  செலவி செஞ்சி பறிகொடுக்கிற மாரி.
அறிவு கூவி கூவி விக்கிற பொருள் இல்ல. வேண்டி வந்து வாங்கவேண்டிய ஒன்னு!
                              6.
“சார் நாவல படிச்சீங்களா?”
“ஐயோ சார் அன்னிக்கி வாங்கி மேசையில வச்சதுதான். தொடக்கூட நேரமில்ல, படிக்கணும் சார்ஸ..”. தயங்கித் தயங்கி கேட்கும்போது உண்டான மெல்லிய கூச்சம், இப்போது மேலும் இப்போது பாரம் மிகுந்து  கனத்தது. ஜப்பானில் கழிவறை டிஷ்யு காகிதத்தில் வாசகங்கள் எழுதப்பட்டிருக்குமாம். அதனை உபயோகப்படுத்துவதற்கு முன்னர் அதிலுள்ள வாசகத்தை வாசித்தறிய. கழிவறையில்உட்கார்ந்திருக்கும நேரத்தின் பயன்மதிப்பை அறிந்தவர்கள் ஜப்பானியர்கள் .தமிழர்களுக்கு வாசிக்க நேரமில்லை! சன் மியூசிக் பார்க்க, அது இது எது பார்க்க, ஆதித்யா அரைத்த மாவைப்பார்க்க எல்லாம் நேரமிருக்கிறது. வாசிக்க நேரமில்லையாம். “அறிவு எனக்கு வேண்டாம்யா. எனக்கு தொலைகாட்சி கொடுக்கிற அறிவை உள்வாங்கவே மூளையில் இடம் போதவில்லை! இதுல புக்கா?”  இவர் போன்றவர்க்கு பிரத்தியேக சலுகையாக, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கூட்டிக்கொடிக்கும்படி கால தேவனுக்கு சிறப்பு மனு செய்தாக வேண்டும்.
                                7.
 “ யாரோ உங்க நாவல படிக்கணும்னு சொன்னாங்கப்பாஸ அவர் போன் நம்பர் கொடுத்தாரு..” என்று சொல்லி தேட ஆரம்பித்தாள். நான் நெடுநேரம் எலி புதுவலையை தோண்டுவதுபோல கைப்பைக்குள் நெடுநேரம் தேடிக்கொண்டே இருந்தாள். காத்திருந்து, காத்திருந்து பின்னர் போன் நம்பர் கிடைக்காது என்று முடிவுக்கு வந்து ஆவலை பரிதாபமாய் முறித்துக்கொண்டேன்.

                                 8.        
ஒரு விருந்தில் சந்தித்த வேணுவை “சார் ஒங்க போன் நம்பர் கொடுக்கறீங்களா? எப்படியோ உங்க நம்பர் காணாமப் போயிடுச்சி.”
“ஏன் சார் நூல் ஏதும் வெளியிடப்போறீங்களா?”
இவருக்கு எப்படித்தெரியும்? படைப்பாளன் முகத்திலிருந்து வேறு என்ன வார்த்தைதான் கிடைக்கும்?
                                  9.        
 “இவர் நாட்டில் சிறந்த எழுத்தாளர்.” பெருமாள் சொன்னவுடன் நான் அவர் கண்களை பெருமையோடு நோக்கினேன்.
  “மொதல்ல லைட்டர் இருந்தா கொடு” சிகெரெட்டை வாயில் வைத்து வேறு பக்கம் திரும்பினார்.
சிகெரெட் பற்ற வைத்தவன், ஆழ இழுத்த முதல் புகை நுரையீரலேல்லாம் சுகானுபவத்தில் திளைக்கவைத்து, அதில் முயங்கி, பின்னர் அந்த அறிமுகத்தில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாமல் இரண்டாவது இழுப்புக்குத் தயாரானார்.
“பெருமாள், பிலீஸ் என்னை இனி எழுத்தாளர்னு அறிமுகப்படுத்தாத,  வாசிக்கிறவனுக்கு என்னைத் தெரியும்.அவனிடமிருந்து ஒரு புன்னகைகூட எனக்கான அங்கீகாரம்தான் , அதுப்போதும்...” என்றேன்.


                            10.
 நான் சிறந்து நூலுக்கான விருது வாங்கிய பின்னர் இது நடந்துகொண்டிருக்கிறது..
.என் இலக்கிய நண்பர்கள் ஐந்தாரு பேரும் திடீரென்று சலனமின்றி ‘காணாமற்போனது’ நான் என் நாவலுக்கு சிறந்த தேசிய விருது பெற்றதுதான் காரணம் என்று உத்தேசமாய்ப் புரியத் தொடங்கியது. அப்படியொன்றும் முன் விரோதமில்லை. மாதாந்திர இலக்கியச் சந்திப்பில்கூட அபிப்பிராயங்கள், விவாதமாகி, விவாதங்கள் சர்ச்சையாகி, சர்ச்சைகள் வாய்ச்சண்டையாகி, வாய்ச்சண்டை கைகலப்பாபாகி, கைகலப்பு காவல் நிலையக்  கதவைத் தட்டிவிடவுமில்லை. அந்த அளவுக்கு இலக்கியம் தீவிரத்தை தொட்டுவிட்டிருந்தால் இங்கேயும் கோட்பாட்டு முரண்பாடோ, இடது சாரி வலது சாரி சிந்தனை எதிர்முகமோ, பிற்போக்கு மித வாதமோ, முற்போக்கு குத வாத எழுத்து சர்ச்சையோ வளர்ந்திருந்தாலும் பரவாயில்லை. அந்த அளவுக்கு அதன் எல்லை விரிசல் கண்டு விடவுமில்லை.  குறைந்தபட்சம்  எனக்கு ஒரு தொலைபேசி வாழ்த்தோ, குறுந்தகவலில் ஒரு சொல் வாழ்த்தோ அனுப்பியிருக்கலாம்தானே. நான் வாங்கிய விருதுதான் இவர்களை என்னிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது என்றால், அந்த விருது உறவை அறுத்துக்கொள்ள, நட்பை முறித்துக்கொள்ள செய்யுமென்றால், அதுவும் படைப்பாளனைச் சிறுமைப்படுத்தும் ஒன்றுதான்!
                                11
      எஞ்சிய புத்தகங்களை கரையான் கரைத்துக் குடிக்க விடாமல், தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு நாவலைச் சுமந்து கொண்டு சென்றேன்.தமிழ் புழங்கு இடம். நூல்கள் வாசிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என் பிரபலம் என் பின்பலம். எதிர்கொள்பவர்களிடம் நூலை நீட்டி. சிறந்து நூலுக்கான பரிசு பெற்றது என்றேன். கையில் வாங்கி முகப்பைப் பார்த்தார். ஏடுகளை பூ விரைந்து விரிவது போல புரட்டினார். ‘எந்திரத்’தில் ரோபோட் ரஜினி புத்த்கம் வாசிப்பது போல. பிறகு  மீண்டும் மீண்டும் அதேபோல புரட்டினார். பின்னர் தலைப்பை பார்த்தார். பின்பக்கம் பார்த்தார். பிறகு ஒவ்வொரு ஏடாய்ப்புரட்டினார். ஒர் வார்த்தைகூட படித்திருக்க வாய்ப்பில்லாத புரட்டல். என் கையில் திரும்ப புத்தகத்தை கொடுத்திருந்தாலும் நான் புரிந்துகொள்வேன். இந்த கேஸ் வேலைக்காவது என்று. ‘ராஸ்கல், இதுனுள் என் கோபம், என் புகார், என் ஏக்கம்- உன் பிரச்னையையும் எழுப்பியிருக்கிறேன்’ . பரவால்ல சார் என்று புத்தகத்தை திரும்ப பெற்றுக்கொண்ட தருணங்கள் இப்படி எண்ணற்றவை.பல தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் 10க்கு ஒன்பது பேர் வாசிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்றே புரிந்துகொள்ள முடிந்தது. அப்புறம் தமிழர் திருநாள், தாய்மொழி தினம் என்பதெல்லாம் யாருக்கு? புத்தகத்துக்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் சம்அந்தம் இருப்பதில்லையோ?                      
                        12
 “ஏங்க எதுக்கு வெட்டிக்கு ஒக்காந்து சும்மா காலத்தப் போக்குறீங்க?” வாசிக்கும் போதும் சில சமயம் எழுதிக்கொண்டிருக்கும்போதும் படைப்பாளனை மதிப்பிடும் குடும்பக் கீழ்மை இது.
      தனக்கு உரிய ஒரு இடைவெளியை, அதன் லயிப்பில் துய்க்கும் பரவசத் தருணத்தை, தேனெடுக்கும் அந்த சுகானுவவத்தை, உள்ளபடியே வாழும் அந்த நொடிகளை, ஆன்மாவின் ஆழ உழுதலை, சூறையாடப் புகும் ஞான சூன்யங்களை மன்னிப்பாயாக!
      அதே வேளையில் படைப்பின் உன்னதத் தருணங்களை உள்வாங்கி , விவாதித்து , சுவீகரித்துக்கொள்ளும் சொற்ப வாசக ஆன்மக்களை ரட்சிப்பாயாக!
                         ஆமென்.
                                 
நன்றி: கணையாழி-மலேசிய இதழ்
.



Comments

வணக்கம் ஐயா.விசயம் ஆழமானது. ஆயினும் அதனை உங்கள் எழுத்தின்வழி இரசனையாய்க் கொண்டு சென்றிருக்கிறீர்கள். உங்கள் எள்ளல் எழுத்து நடை அற்புதம். நம் எழுத்தினை பிறர்க்குத் தின்னக்கொடுப்பதுபோல்தான் இப்பொழுது நடைமுறையாகிவிட்டது. எழுத்தினை இரசித்து, அதன் தாக்கத்தை உணர்ந்து தேடி வந்து வாங்குவது குறைந்து விட்டது. என்ன செய்ய? யாராவது சிலராவது அதன் உள்ளடக்கத்திற்காக வாங்கிறார்களே என காலரத் தூக்கி விட்டுக்கொள்ள வேண்டிய கீழ்மை நிலை.
sivanes said…
மிகவும் ரசனையான பதிவு, சிரிக்கவும், சிந்திக்கவும், வருத்தப்படவும் வைத்தது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...