Skip to main content

பின் இருக்கையில் ஒரு கிழவி

சிறுகதை

பின் இருக்கையில் ஒரு கிழவி


ஊர் அடங்கிய நேரம்.
எல்லா ஊரிலும் ஒரே நேரத்தில் ஊர் அடங்கிவிடுவதில்லை.  உட்புறப்பகுதியில் அமைந்தது என்பதால் எங்கள் ஊர்  இரவு இளமையாக இருக்கும்போதே அடங்கி விடும். தனித்தனி நிலப்பட்டாவில் கட்டப்பட்ட நான்கு வீடுகளுக்கு மத்தியில் அடக்கமாய் அமைந்திருந்தது.
உள் தாழ்ப்பாளிட்டு விருந்தினர் அறை விளக்கை அடைத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தபோது  கதவு பவ்வியமாக  தட்டப்படும் ஓசை கேட்டது.
அந்த நேரத்தில் கதவு தட்டப்படுவது அபூர்வமாகவே நடக்கும். அபூர்வம் என்று சொல்வதைவிட அறவே இருக்காது எனச் சொல்வதே சரியானது.
என் மனைவியும் நானும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ‘யாரது இந்த நேரத்தில்?” என்ற புதிர்க் கணைகள் கண்களில் தெறித்தன. மூடப்பட்ட கதவு வழியே பார்த்து தெரிந்துகொள்வதற்கு அது நூதன கதவு அல்ல. திருடன் வரும் அகால நேரமல்ல அது. உறவினராகவும் இருக்க வாய்ப்பில்லை!
கதவைத் திறந்தேன். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆளாக இருக்கும் என்று கணிக்கும் முன்னரே சாராய வாடை திரண்டு வந்து தாக்கியது. எங்கோ பார்த்த முகம் அல்லது முன்பின் அறிமுகமற்ற முகம் என்ற குழப்பத்தை உண்டாக்கியது.
“என்ன வேண்டும்?” என்று மிரட்டும் தொனியில் கேட்கலாம் என்ற துணிவைக் கொடுத்த புறத்தோற்றம். அவனே பேச ஆரம்பித்தான்.
“சார்.. நான் உள்ள ஒரு கம்பத்துல இருக்கேன்ஸ அம்மாவுக்கு திடீர்னு ஒடம்புக்கு முடியாம போச்சு. மூச்சு பேச்சில்லாம இருக்காங்க.. ஒடனே  ஆஸ்பித்திரிக்குக் கொண்டு போகணும்..”  போதையில் குரல் தள்ளாடாமல் நடித்தான். என்றான். “நான் வரல” என்று உள்மனம் சொன்னாலும் ‘அம்மா’ என்ற சொல் என்னை உலுக்கியது. அவன் மூச்சிலிருந்து என் சுவாசத்தைத் திணறடிக்கும் சாராய நெடி என்னை ‘வேண்டாம்’ என்று தடுத்தாலும்..ஒரு உயிர் பிரிவதைப் படிமமாக்கிய ஒரு கரிசனக்குரல் ‘ உதவு..போ’ என்று உள்ளிருந்து எழுந்தது. என்னை உரசியபடி பின்னால் நின்று உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்த மனைவி , போங்கஸ போய் ஒதவுங்க, ஒங்கள நம்பித்தான வந்திருக்காரு..?’ என்றாள். அவளின் பச்சாதாபம் தர்மசங்கடமாகவும் இருந்தது;  அதே வேளையில், என்னைக் காரை எடுக்கவும் உந்தியது.
மறு கணம் கார் சாவியை எடுத்து கையில் திணித்தாள். காரில் உட்கார்ந்து பாதை காட்ட ஆரம்பித்தான். சற்றுத் தள்ளித்தான் அவன் வீடு அமைந்தருந்தாலும் அங்கு செல்ல மண்சாலை கூட இல்லை என்பது கார் முன்னகர நகரத்தான் தெரிந்து கொண்டது என் தரப்பில் தப்புதான். அங்கே சில வீடுகள் இருப்பது தெரிந்திருந்தாலும் தொடர்புச் சாலை இல்லாமைபற்றித்  முன்னமேயே அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு எனக்கு அங்கே வேலை ஏதும் இல்லை. ரப்பர் மரக்காட்டு வழியே நுழையச் சொன்னான்.
“இதுல கார் ஓடுமா?” என்றேன்.
“ போவும் சார்..கிட்டத்திலதான்.” என்றான்.
 முண்டும் முடிச்சுகளுமாய் மர வேர்கள் சின்ன சின்ன முதலைகள் மேய்வது போலத் துருத்தி நின்றன. வேர்களில் ஏறி குழிகளில் இறங்கி குலுங்கிக் குலுங்கிதான் சென்றது கார். காரின் விளக்கு வெளிச்சத்தில் மரத் தண்டுகள் ராட்சன்களின் ஒற்றைக் கால்களாய் நின்றிருந்தன. எனக்கு தொடர்ந்து காரைச் செலுத்த மனம் ஒப்பவில்லை.திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் ‘அம்மா’ என்ற மந்திரச் சொல் என்னை முன்னகர்த்தியது. வீடு அருகில்தான் என்று அவன் சத்தியம் செய்திருந்தாலும் அது கண்ணில் தென்படவில்லை. இன்னும் எவ்வளவு தூரமோ?
பதினைந்து நிமிட ஓட்டத்துக்குப் பிறகு, “சார் இங்க நிப்பாட்டுங்க,” என்றான். ஒரு முப்பது மீட்டர் தூரத்தில் மினுக் மினுக்கென சிறிய வெளிச்சம் ` கொழுந்தாய் அசைந்தது. மண்ணெண்ணையில் எரியும் திரி விளக்கு அது. யாரோ அதனைக் கையில் பிடித்திருக்கும் கரிய உருவம் மட்டுமே புலனானது.
 “தோ வந்துர்றேன்” என்று காரிலிருந்து இறங்கினான். நான் காரிலிருந்தபடியே அவன் போகும் திசையை நோக்கினேன். அந்தத் திரி விளக்கொளியில் அவன் இன்னொரு உருவமானான். என் காரின் விளக்கொலி விரிந்த கும்மிருட்டில் பிடிபட்ட மிகப்பெரிய வெளிச்சப் பறவையாய் பரவி நின்றது. காரின் இயந்திரம் சீராய் இயங்கிக்கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் காரின் ஒலியும் வெளிச்சமும் என் தனிமைக்குத் துணையாய் இருப்பதாகப்பட்டது.
திடீரென்று“ஒடுங்கிய இரவைக் குலுக்கியது போன்று குபீரென்று கதறும் அலறல் அந்த இடத்திலிருந்து பாய்ந்து வந்தது. “பாட்டி  பாட்டி” என ஐந்தாறு பிள்ளைகளின் குரல் நாரசமாய்க் கேட்டது”.  நான் அதிர்ந்தேன். சிணுங்கி எரியும் திரி விளக்கை ஒருத்தி கையில் ஏந்த, அவன் அம்மாவை இரு விரிந்த கைகளில் சுமந்து என் காரின் பின் இருக்கையில் வைத்தான். ஒளி மங்கிய இருளில் தசைகள் சுருங்கித் தொங்கிய முகம் கிழவினுடையது. அவளிடம் எந்த அசைவோ சலனமோ இல்லை.மூச்சுப் பேச்சன்றி இருக்கலாம்.
அவன் காரில் அமர அந்த விளக்கை ஏந்தி வந்தவள் வந்த திசைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள்.
“போலாம் சார்.” என்றான். அதே பாதைக்குக் காரைச் செலுத்தினேன். “அம்மாவுக்கு என்ன?” என்றேன். பின் இருக்கையின் அசைவற்ற நிலை என்னைக் கேட்கத் தீண்டியது.
“கொஞ்ச நாளா சீக்கா இருந்தாங்க.. இப்போ முடியாம போயிடுச்சு.”
நான் அதற்கு மேல் ஏதும் விசாரிக்கவில்லை. காரைச் செலுத்துவதில் கவனமானேன். அவன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் இருந்தான். கார் ரப்பர் மரக்காட்டைக் கடந்து செம்மண் சாலைக்குள் நுழைந்து பின்னர் தார் சாலைக்கு வந்தடைந்தது. சீரான ஓட்டம் காரை விரைந்து செலுத்த ஏதுவானது.  வெறிச்சோடிப்போய் இருந்தது சாலை. நெளியும் மலைப் பாம்புபோல வளைந்து சென்று கொண்டிருந்தது சாலை. காரின் வெளிச்சம் 20 மீட்டர் முன்னால் பாய்ந்து வெள்ளை மலைப்பாம்பின் வளைந்த உருவத்தை தெளிவாக் காட்டியபடி சென்றுகொண்டிருந்தது. பட்டண மருத்துவ மனையை அரை மணி நேரத்தில் பிடித்துவிடலாம். நான் அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக்கொண்டே காரைச் செலுத்தினேன். அவன் ஏதும் பேசாமல் சலனமற்றுக் கிடந்தான். உறங்கிவிட்டிருப்பானோ எனச் சந்தேகம் எழவே., ” இன்னும் இருபது நிமிடத்தில் அடைந்துவிடலாம், அம்மா எப்படி இருக்காங்க” என்றேன்.
“மயக்கமா இருக்கலாம்,” பின்னால் கழுத்தைத் திருப்பாமல். எனக்கு அந்த பதிலில் திருப்தியில்லை. மருத்துவனையில் சேர்த்தால் போதும் என்றிருந்தது அப்போதைக்கு. ஒரே ஒரு வாகனம் எதிர்த்திசையில் வர கண்களில் ஒளி மின்னி அடங்கியது
ஒரு முச்சந்தியை அடையும் தருணத்தில் “சார் .நீங்க எடது கைப்பக்கம் வளைஞ்சிடுங்க,” என்றான்.
“ஆஸ்பிட்டலுக்கு நேரா இல்ல போகணும்..” என்றேன் அதிர்ச்சியுற்றவனாய்.
“இல்ல சார் தம்பி வீடு கொஞ்ச தூரத்திலதான் இருக்கு..அங்க விட்ருவோம்.”
“ ஒடம்புக்கு முடியாம இருக்காங்க..ஆஸ்பிட்டலுக்கு இல்ல கொண்டு போணும்?”
“ தம்பி பாத்துக்குவான், நம்ப ஒப்படைச்சிட்டு திரும்பிடலாம்.” அவனோடு எதிர்வாதிட இருளும் தனிமையும் என்னை ஊக்குவிக்கவில்லை.
காரில் பெட்ரோல் குறைந்து கொண்டிருந்தது. அவன் சொல்லும் இடத்தின் தூரம் தெரியவில்லை. பெட்ரோல் காலியாகி விட்டால் என்ற புதிர் உள்மனதை திகிலடையச் செய்தது.
“கிட்டத்திலதான்” என்றான்.
“எத்தன கிலோ மீட்டர் இருக்கும்?” என்றேன்.
“மூனு நாலு..” இன்னும் மூன்று கே எம் கூடுதலாக இருந்தாலும் சமாளிக்கும் என்றே தோன்றியது. மீட்டர் சிவப்பு எச்சரிக்கையை மினுக்கவில்லை.
“ஏம்பா.. உங்கம்மாக்கிட்டேருந்து முச்சு சத்தம் கூட வரலையே..அசையக்கூட இல்லியே.,” என்றேன்.
அவன்” செத்துட்டாங்க சார்..” என்றான். நான் குலுங்கி அதிர்ந்தேன். குப்பென்று வியர்வை நெற்றியில் வெடித்து நெஞ்சு துடிக்கத் தொடங்கியது. ஒரு கணம் உறைந்து போனேன். அவனைப் பார்த்தேன். எனக்கு பேச்சு நின்று போனதுபோல மேற்கொண்டு வினாக்கள் எழவில்லை. என்னையும் மீறி என் முகத்தில் உக்கிரம் சீறத் துவங்கியது. பின் கண்ணாடியில் கிழவியை நோக்க மனம் துணியவில்லை. வேண்டாம் பார்க்கமாட்டேன்.
சில நிமிடங்களில் சமநிலைக்குத் திரும்பி, “ஒங்களுக்குத் எப்படித் தெரியும்?” என்றேன் நடுங்கிய குரலில்.
“எனக்குத் தெரியும் சார்..மூச்சு நின்னு போச்சி!”
“நீ திரும்பிக்கூடப் பாக்கல.. எப்படி உறுதியா சொல்ற?”
“ இல்ல பாத்தேன் சார்.. நெஞ்சு அசையில.” என்றான். அவன் பொய் சொல்கிறான். கிழவி வரும் வழியில் சாகவில்லை. வீட்டிலேயே செத்துப்போய் இருக்கிறது. கிழவியைக் கொண்டு வந்து காரில் ஏற்றும்போது உண்டான ஓங்கி ஓலமிட்ட அவலக் குரல். கிழவி அசையாமல் கிடந்தது. அவன் ஒருமுறையேனும் திரும்பிப் பார்க்காதது, மருத்துமனைக்குக் கொண்டு செல்லாமல் சமாளித்தது, என வரிசையாய் நினைவில் எழுந்து உறுதிப் படுத்திக்கொண்டிருந்தது.  கொதிக்கும் நீரைப் போல கோபம் கொந்தளித்தது எனக்கு. அவனிடம் தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு தொண்டை வரை வந்த சொற்கள் சினத்தால் மடை உடைந்து சிதறின.
மேய்ன் சாலையில் நான்கு கே எம் கடந்திருப்பேன். “வலது பக்கம் போங்க  சார்,” என்ற கையைக் காட்டியபடி சொன்னான். நீர்க்குமிழியைப் போல சினம் அடங்காது தகித்தது எனக்கு. வலது பக்கம் திருப்பி ஒரு மேட்டில் ஏறியது கார். அடர்ந்த புதர் மண்டிய இடமாக தோற்றமளித்தது. கார் சக்கரங்கள் சர சரத்து காய்ந்த சருகுகள் நசுங்கி நொருங்கிக்கொண்டிருந்தது..  
ஒரு 100 மீட்டர் தூரம் சென்றபின் காரை நிறுத்தச் சொன்னான்.காட்டு மரங்கள் நிறைந்த இடம். உச்சியில் மர இலைகள் பெரிய நிழலாய் கவிந்து கிடந்தது. பூச்சிகளின் சப்தம் நின்று போயிருந்தது. மணி என்ன இருக்கும்? காரின் கடிகாரம் இயங்காமல் கிடந்ததால் துல்லிதமான நேரம் தெரியவில்லை. கிளம்பும் அவசரத்தில் கடிகாரத்தை கட்ட மறந்திருந்தேன். நள்ளிரவை அடைந்திருக்கலாம் அல்லது கடந்திருக்கலாம்.
“சார் ..தோ வந்திர்றேன்..” என்று சொல்லிவிட்டுவிடு விடு வென இறங்கினான்..
 “எங்க?” என்றேன்.
“தம்பிய கூட்டியாந்திர்றேன்” என்று சொல்லிக்கொண்டே  நடந்து இருளில் மறைந்தான். எனக்குப் பின் இருக்கையை பார்க்க பயமாக இருந்தது. கார் இயந்திரத்தை நிறுத்திவிட்டேன். காரின் விளக்கையும் அணைத்தேன். பெட்ரோல் காலியாகிவிடலாம் என்ற சந்தேகத்தில்.
வெளியே கரிய இருள் சுருண்டு கிடந்தது. கனத்த மௌனம் சிறைபட்டு பீதியைக் கிளப்பியது. ரப்பர் மரத் தோப்பை ஒட்டிய காடாக இருக்கலாம் அது. ஏதோ ஒரு மறைவான பாதை வழியே கொண்டு வந்து ரகசியமாய் பிணத்தை புதைக்கும் தந்திரத்தை மிக நேர்த்தியாய்த் திட்டமிட்டிருக்கிறான்.  எனக்குத் தெரியாமலே நான் பிணத்தைக் கடத்துவதற்கு என்னையும் உடந்தையாக்கி இருக்கிறான்.
இருளுக்குள் மறைந்தவன் இன்னும் திரும்பவில்லை. காருக்கு உள்ளே இருக்க முடியாமல் வெளியேறினேன். பெண்ணின்  விரிந்த தலை முடிபோல  இருள் மண்டி மிரட்டியது. எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்ற கணிக்க ஒரு துணுக்குத் தகவல் கூட இல்லை. ஒரு மின் மினி பூச்சி கூடப் பறக்கவில்லை. அதன் சின்னஞ்சிறிய ஒளிச்சிமிழ் கடுகளவு பாதுக்காப்பு உணர்வைக் கொடுத்திருக்கலாம் என ஓர் அற்ப ஆசை ஊடுறுத்துச் சென்றது. சுற்றிக்கவிந்த இருள் மௌனத்தையும் வெறித்த தனிமையையும், அச்சத்தையும் கிளப்பி நின்றது. மரங்களின் அடர்த்தி கருமையைக் கூட்டியது இப்போது மூளையில் குளீர் உறைத்த்து.திடீரென காலுக்கடியில் ஏதோ சரசரத்து ஓடியது. ஒருமுறை சிலிர்த்து அடங்கியது உடல். காருக்குள்ளே போகலாம் என்றால், பிணத்தின் இருப்புணர்வு  இடைவிடாமல் அச்சுறுத்திக்கொண்டே இருந்தது. பின்னால் ஒரு கிழவி பிணமாய்ச் சாய்ந்து கிடக்கிறாள் என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்திக்கொண்டே இருந்தது. வேறு சிந்தனை இல்லாமல் பீதி மட்டுமே அலை அலையாய் விரிந்தது. வெளியே உள்ளே எங்கும் பாதுகாப்பு இல்லை. அவன் திரும்பி வரும் ஓசையை மட்டுமே எதிர்பார்த்து கிடந்தது திகில் கொண்ட மனம். இரவு பனி பொழிவதுபோல ஓசையின்றி நகர்ந்துகொண்டிருந்த்து.
ஒரு டார்ச் லைட்டின் ஒளி சிறுபுள்ளியாய் காற்றில் அசைவது கண்டு சிறிது ஆசுவாசமடைந்தேன். பின்னர் அதன் ஒளிக்கற்றை தாவித் தாவி வருவதைப் பார்த்தேன்.  அருகில் நெருங்க நெருங்க இருவரின் குரல் சன்னமாகக் கேட்டது. அருகே வந்ததும், என் முகத்தில் சில நொடிகள் ஒளி பாய்ச்சி வெளிச்சத்தை கீழ்முகமாக இறக்கினான் .  காரைத் திறந்து பிணத்தைச் சுமந்தான் வந்தவன். நான் அவர்களில் கைகளில் மண்வெட்டி ஏதும் இருக்கிறதா என்று நோட்டமிட்டேன். அப்படி ஏதும் இல்லை. நிம்மதியானது எனக்கு.
“நாளைக்கு காலையில வர்றேன்..” என்றான் என்னோடு வந்தவன். பதிலுக்கு “ம்..” என்ற ஓசை மட்டும் கேட்டது அவனிடமிருந்து.
காரைத் திரும்பச்செலுத்தினேன். அவனிடம் ஏதும் பேசத் தோணவில்லை. பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பட்டது. நாளைக் காலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகிவிடும்! கடைசி வரை ஏதும் பேசாமலேயே வீட்டை அடைந்தேன். உறையில் வைக்கப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைப் போல  கனன்று வரும் கோபத்தை அடக்கி வைத்திருந்தேன். இப்போது பின் இருக்கை காலியாக இருப்பதில் கொஞ்சம் ஆறுதலானேன்.
மறு நாள் கடைத்தெருவுக்குப் போனபோது நேற்று நான் காரில் ஏற்றிய கிழவியை அவள் மகனேதான் அடித்துகொன்றிருக்கிறான் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.
11.10.2015 broadcasted in minnalfm

 





Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...