Skip to main content

2.தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

2. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்.





டானோக்கில் பானுவுக்காக காத்திருந்த வேளையில் கழிப்பிடம் தேடி அலைந்தேன். பொதுக் கழிப்பறையைக் காணவில்லை. அப்படியே இருந்தாலும் அது அழையா விருந்தாளியாய் நம்மை விரட்டும். ஒரு விடுதி இருந்தது . உள்ளே நுழைந்து பாத்ரோம்' என்றேன் . அவள் வலது பக்கம் கையை காட்டினாள். படியேறியதும் சீருடை அணிந்த பெண்கள் பலர் லோபியின் சோபாவில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். என்னைப் பார்த்ததும் எழுந்து " கம் கம்" என்று அன்பொழுக அழைத்தார்கள். நான் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டேன். இளம் வயதில் என் நண்பனை கொனோரியா நோயில் பார்த்த அச்சம் என்னை  விரட்டியபடியே இருக்கிறது)

"ஏன் கழிப்பறை போகவில்லை?" பானு கேட்டார். அங்கே பெண்கள் சீருடையில் அமர்ந்து என்னை அழைத்தார்கள் என்றேன். எனக்கு ஒவ்வவில்லை திரும்பிவிட்டேன் என்றேன்.

தாய்லாந்தில் இதெல்லாம் சகஜம்யா? அவளுங்க அவளுங்க வேலைய செய்றாளுங்க, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே என்றார்.

"என்னால் அப்படி முடியாது," என்றேன். அவளுங்க ஏன் சீருடை போட்டிருக்காளுங்க? சீருடை அணிவது ஒழுங்கின் குறியீடல்லாவா? என்றேன்.

சீருடை அணிந்தவனெல்லாம் ஒழுங்காவா இருக்காணுங்க?  என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

ஓ அதுவும் ஒருவகை வி......ம் தானோ? என்றேன்.

"யெஸ்யு  ஆர் கரெக்ட்," என்றார்.


இருநாடுகளின் எல்லை டானோட்டிலிருந்து, சாலை விரிந்து வாகனம் செல்வதற்குப் போதுமான வசதியை அளித்திருந்தது. புயல் போல பறக்கத் தூண்டும் அகன்ற சாலைதான். ஆனால் எல்லா வாகனங்களும் 80/90 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பயணப் பட்டுக்கொண்டிருந்தன.பானு அடிக்கடி தாய்லாந்துக்குக் காரில் செல்பவர். அவரிடம் கொஞ்சம் வேகமாகப் ஓட்டுங்கள் என்றேன். இங்கே இதுதான் ஆகக் கூடுதல் வேகக் கட்டுப்பாடு என்றார். சாலையின் விரிசல் நம்மைச் சவாலுக்கு அழைக்கிறது. மலேசிய மனநிலை அது. வேகமாக செலுத்திய பழக்க தோசம்  அது. 110ல் ஓடலாம் என்ற விதியை வைத்துவிட்டு,  வேகத்தைக் கொஞ்சம் தாண்டினால், 2 வார்த்தில் சமன் வந்து சேரும். நாம் சமநிலை குலைந்துவிடுவோம்.

 இது அந்நிய மண். வீணான வில்லங்கத்தில் முடிந்தால் இரண்டு ஓய்வு நாட்களைப் பலி கொடுக்க நேரலாம். மொழி மிகப்பெரிய தடைச் சுவர். ஒரு பயலுக்கு ஆங்கிலம் தெரியாது. தாய் பாசையில்தான் பேசுவான். சாலை விதி மீறலை எதிர்கொண்டது மட்டுமல்ல, அவன் மொழியே நம்மை இம்சித்துக் கொன்றுவிடும்.

இன்னொரு வசதி இங்கே டோல் கட்டணம் கிடையாது. தாய்லாந்து முழுவதிலுமே. மலேசியாவில் டோல் கட்டணத்தை ஏன் அதிகரிக்கிறீர்கள் என்று கூச்சலிட்டால், "உங்களுக்குத்தான் பழைய சலை இருக்கிறதே என்று ஒரு புத்திசாலித் தனமான ஆலோசனை சொல்வார்கள். கங்காரிலிருந்து ஜோகூர் பாரு வரை பழைய சாலையைப் பயன்படுத்தச் சொல்லும் அவர்களின்  அரிய ஆலோசனைக்கு, பின்னர்,"  ஏன் நெடுஞ்சலை போட்டீர்கள் என்று கேட்க வேண்டும்?"  அது நாட்டு முன்னேற்றத்துக்கு என்பார்கள். அவர்களுக்கு நாடு வேறு குடிமக்கள் வேறாகிவிட்டார்கள்.சமீபத்தில் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர்  என் சம்பளத்தை அரசாங்கதான் கொடுக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இல்லை என்று சொல்லி தன் அறிவின் ஆழத்தைப் பொதுவில் வைத்து கும்மாங்குத்து வாங்கிக் கொண்டார். எங்களுக்கு ஒரு வழி சொலுன்னு கேட்டா ..மேலும் வலியைக் கொடுக்கிறியே ஏன்? பாரதி இவர்களுக்காகவே பாடினான்... என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்...என்று.

சரி பயணத்துக்கு வருவோம்.

பானு மிகக் கவனமான கார் ஓட்டி. நான் பையில் என் லைசன்ஸை வைத்திருந்தேன். சும்மா படம் காட்ட. நான் ஓட்டப் போவதில்லை என்று கிளம்புவதற்கு முன்னமேயே முடிவெடுத்திருந்தேன். மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு விதியையாவது மீறி விடுவேன். என் மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தால். "சிக்னல் போடுங்க. பிரேக் போடுங்க.. நாய் போவுது பாருங்க, இப்போ தாண்டாதிங்க," என்று கட்டளைப் பிறப்பித்துக் கொண்டே இருப்பாள். கட்டளைகளைக் கேட்டுக் கேட்டு அவள் இல்லாமல் செலுத்தும்போது கட்டளைப் பிறப்பிக்க ஆள் இல்ல அனாதை நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. பழக்க தோசம்தான்.  பானு மிகக் கறாரான பேர்விழி. முதலில் என் காரை எடுப்பதாகத்தான முடிவில்தான் இருந்தோம். அங்கே டயர்களைப் புதிதாக மாற்றினால் 40 விகிதம் வரை விலை மலிவு என்று மகன் சொன்னான். ஆனால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கிறது 4 நாட்கள் அந்நாட்டில் தங்கி வரவேண்டும். இரண்டாவது, காரின் அசல் உரிமைப் பத்திரம் கையோடு கொண்டு செல்லவேண்டும். உரிமைப் பத்திரம் மே வங்கியில் கடனில் சிறைபட்டிருந்தது. அதனைப் பெற்றுவிடலாம் , ஆனால் 4 நாட்கள் தங்கி வரவேண்டும் என்ற விதிக்கு தான் பின்வாங்க வேண்டியிருந்தது. இரண்டு நாட்களே போதும், மிஞ்சிப் போனால் மூன்று நாட்கள் தங்கலாம். அதற்குமேல் தாங்காது. அந்த ஊர் உணவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வூரின் தொம்யாமை சகிக்க முடியாது. என்றாலும்  . நீங்கள் தொம்யாமை நிராகரித்தாலும் பிற உணவு  வகைகளில் அதன் சாயல் இருந்துவிடும். புளிப்போடு சேர்ந்துகொண்ட கொஞ்சம் இனிப்பு.  அது தேசிய சுவை.

சில கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு என் காரையே எடுத்து வருகிறேன் என்றார். என் கார் டயர்கள் நீண்ட பயணத்துக்குச் சரி வராது என்று அவரே நிராகரித்தார். லைசன்ஸைக் கொண்டு வந்திருக்கிறீர்களா என்றார். ஆமாம் என்றேன். ஆனால் அவர் காரை ஓட்டப்போவதில்ல என்று முடிவை  என் ரகசியமாகவே  வைத்திருந்தேன். ஒரு சிறிய சாலை விதி மீறல் நடந்தாலும் ஊசி மிளகாய் கடித்துவிட்டது போல சினம் கொள்வார். எதற்கு வம்பு? அவரோடு ஐந்து வருடமான நட்பின் பிரதிபலன் அது. அவர் கோபம் நியாமாகத்தான் இருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்தும் தன்மைதான் விவாதத்திற்குரியது.  நான் அவரோடு பயணிக்க உடன் பட்டதற்கு மூன்று  காரணங்கள் சொல்வேன். ஒன்று மிகச் சரளமாக ஆங்கிலம் பேசுவார். முன்னால் ஆங்கிலப் பேராசிரியர். நான் என் ஆங்கிலத்தை பள் பளக்கச் செய்ய  வாய்ப்பு ஒன்று. நெடுக்க ஆங்கிலம்தான், தவறியும் தமிழ் வராது. மலையாளம் வரும். எனக்கு வராது. இரண்டாவது  சோசியலிசம் பேசுவார். நாம் நூலில் கற்பதை விட ஒரு சராசரி மனிதனின் சோசியலிச நடைமுறை வழக்கம் எப்படியுள்ளது என்று ஆழமாக அறிந்து கொள்ளலாம். ஒரு படைப்பாளனுக்கு சோசியலிசம் ஆழமாகத் தெரிந்தாக வேண்டும். அதுதான் விளிம்பு நிலை மக்களுக்காக்  குரல் கொடுக்கும் எழுத்து  அரசியல் முறையைக் கற்றுத் தரும்.  மூன்றாவது முக்கியமானது. என் சகிப்புத் தன்மையை வளர்த்து கொள்ள.

ஐந்து ஆண்டுகளாயும் சகிப்புத் தன்மை வளரவில்லையா என்று கேட்கலாம். நமக்குள் உடன் பிறப்பாய் இருக்கும் அகந்தை அதற்கு எளிதில் வழிவிடாது.

நான்கு பேர் கிளம்புவதாகத் முன்திட்டம். ஆனால் இருவர் பயணய்த்திலிருந்து கழட்டிக் கொண்டனர்.
பயணத்தின் போது அவர் இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குறைபட்டுக்கொண்டே வந்தார். "கடைசி நேரத்தில் இப்படிச் செய்யக் கூடாது,"  என்று சினந்தார்.

நான் சொன்னேன். "அதற்கு யார் காரணம் தெரியுமா?" என்றேன். சாலையிலுருந்து கண்களை எடுத்துவிட்டு ஒரு கணம் என்னைப் பார்த்தார்.
நான்," நீங்கள்தான்," என்றேன். அவருடைய் விழிகள் விரிவதைப் பார்த்தேன்.
நீங்கள் நேரடியாகப் பேசக் கூடியவர். உங்களை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் என்றேன். சகிப்புத் தன்மையை நான் மட்டுமே வளர்த்துக் கொண்டால் போதுமா? அவருக்கு...?

"யெஸ் ஐ எம் அவுட் ஸ்போக்கன்," என்று ஒத்துக் கொண்டார்.

ஜனநாயக நாட்டில் சோசியலிஸ்ட்டுகள் ஒத்துப் போக முடியாது. இரண்டுமே எதிரெதிர் முனை.குறிப்பாக ஜனநாயம் பணநாயகமாக பரிணமித்த பிறகு சோசியலிசத்துக்கு இடமற்றுப் போகும். இந்நாட்டில் சோசியலிஸ் கட்சி இருக்கிறது. ஒரே ஒரு நாடாளுமன்ற சீட்தான் அதற்குக் கிடைத்திருக்கிறது- சுஙை சிப்புட். அதுவும் எதிர்க் கட்சியோடு இணைந்திருந்ததால். தமிழர்கள் கிட்டதட்ட அனைவருமே ஜனநாயக மனநிலை கொண்டவர்கள் அவர்கள் கொள்கையோடு சோசியலிஸ்ட் மோதி மாறறிவிட முடியாது. எங்கள் நடைப்பயிற்சியில் இக்காரணத்தாலேயே நண்பர்களிடையே விரிசல் உண்டாகும். அவர் அரசியல் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரும் பிறருக்கு வழி கொடுக்க மாட்டார்.  அதனால் முடிந்தவரை உரையாடலில் அரசியல் நுழையாமல் கவனமாக இருப்போம். மலேசிய அரசியலைப் பேச்சில் கலந்துவிடாமல் இருக்க அது  உப்பு சப்பற்றதா என்ன?

ஹாட்யாயை நெருங்கிக் கொண்டிருந்தோம். பெரும் பட்டண  நுழைவாசல் தெரியத் தொடங்கியது. மூலை முடுக்கெல்லாம் தாய் மன்னரின் பதாகைகள். பள்ளியில், அரசு கட்டடங்களில், புத்தர் ஆலயங்களில், சாலை முடுக்குகளில் அங்கெங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருந்தார். தாய் மன்னர் பூமிபால் அங்கே மாபெரும் ஆளுமை. கடவுளுக்கு நிகரானவர்.  நாட்டு ஆட்சியின் கடைசியான தீர்க்கமான சொல் அவருடையதுதான். மக்கள் நலனை முன்வைக்கும் தீர்ப்பாகும். நியாயமானதும் கூட.

தொடரும்....


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...