Skip to main content

எம்ஜியார் -சிறுகதை



                                            
                                               எம்ஜியார்

                    திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்  செவிமடல்களைச் சிலிர்க்கச் செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத்துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள். 
இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம்.
சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று.   நள்ளிரவு 12.00க்குத் திரும்ப பேருந்து டிக்கட் வாங்கியாயிற்று . பத்து நிமிடங்ளுக்கு முன்னாலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் .அது டிக்கெட்டின் கட்டளை. காலை ஆறு மணிக்குத்தான் திரும்பப் போய்ச் சிரம்பான் சேரும்.
தன் பையிலிருந்த நெளிந்து நெகிழ்ந்து நெளிந்த்து, மடிப்புக்கு அடங்கமாட்டேன் என்று வில்லத்தனம் செய்யும்  சிகப்புச் சட்டை. சமீப காலமாய் இனிப்பு நீர் தொல்லையால் இளைத்துப் போன மார்பகத்துக்கும், கை முஷ்டிக்கும் இறுக்கம் தருவதில்லைதான்.  ஆனால் சட்டைக் கையை மடித்துவிட்டால் முஷ்டியைப் சற்றே புடைத்துக் காட்டும். சட்டையைப் பிடித்துத் தைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. கனத்த சந்தனக் கலர் சிலுவார் இடுப்பில் தளர்ந்துவிட்டிருந்ததது. கூடுதலாக மேலுமொரு துளை போடவேண்டியிருந்தது வெள்ளை பெல்டில்.   வெண்பாம்புபோல நீளும் அதில் ஆங்காங்கே நூல் பிரிந்துப் பிய்ந்து மரவட்டையின் கால்களைப்போலத் தொங்கியது. ரசிகர்களின் பார்வைக்கு அது துல்லியமாய்த் தெரியாது. ஒளியில் மின்னும் சந்தனமும் சிகப்பும், கருப்புக் கண்ணாடியும் தூக்கலாகி, பழையதை மறைத்துவிடும். வெள்ளைப் பஞ்சுத் தொப்பி , சிகப்பும் கருப்புமான  கரை வேட்டி, கருப்புக் கண்ணாடி,வெள்ளை நிறக் காலணி எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்தார் எம்ஜியார். இந்தப் பையை முடிந்த வரை மனைவி கண்களில் படாமலேயே வைத்திருப்பார். அதனைப் பார்க்கும் தோறும் இப்போதெல்லாம் அவள் காளி அவதாரம் எடுத்து விடுகிறாள்
எம்ஜியாருக்கான அங்கம் எப்போது என்று சொல்லவில்லை. இங்க வாங்க பேசிக்கலாம் என்றுதான் ஏற்பாட்டாளர் சொன்னார். தொகையும் பேசவில்லை. ஊருக்குச் சில எம்ஜியார்கள் இருக்க,  இவரைச் சிரம்பானிலிருந்து வரச்சொன்னது பெரிய கௌரவமாகப்பட்டது. ரேட்டெல்லாம் கறாராகப் பேசவில்லை.  அந்தப் பழக்கமும் இல்லை. மண்டபம் நிறைந்துவிட்டால் 200 கூட கொடுக்க வாய்ப்புண்டு. முன்பெல்லாம் அவனுக்கு பணமெல்லாம் பொருட்டல்லதான். ஆனால் குடும்பம் என்றான பிறகு அதன் தேவை அவசியமாகிவிடுகிறது.  ரசிகர்களின் கைத்த்ட்டல், ஆரவாரம் அதைவிடப் பெரிது.
பேருந்தில் இறங்கி மண்டபம் வந்து சேர டேக்சிக்கு முப்பது ரிங்கிட் கொடுத்தாயிற்று.  மண்டபம் இருக்குமிடம் எளிதில் கண்டுபிடிக்க பெரும்பாலும் டேக்சிக் காரனையே  நம்பவேண்டியிருந்தது. பஸ் ஸ்டேஷனில் வந்து ஏற்றிக்கொள்ள முடியுமா என்று கேட்டால் எல்லாரும் வேலையா இருப்பாங்க, முடியாதே என்றுதான் கைகள் விரியும்.
நிகழ்ச்சி தொடங்கும் முன்னர், பை பாக்கெட்டில் செருகி வைத்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து சுவரில் சாய்த்து வைத்தார். அது நழுவி நழுவி தரையில் மல்லாந்து, விட்டத்தை ஆட்டியது. மீண்டும்  சரிவதைத் தடுக்க கைக்குக் கிடைத்த சின்ன கல்லை இடுக்கில் வைத்து நிறுத்தினார்.  தண்ணீரில் குழைக்கும் பவுடரை எடுத்து மினரல் வாட்டர் போட்டலில் இருந்த தண்ணீரால் குழைத்தார். சிக்கனமாகப் பாவிக்க வேண்டிய வஸ்து. யானை விலை அது. நான்கு மணி நேரம் நின்று பிடிக்கும். வெப்பம் கக்கும் வெளிச்ச விளக்குகள் இந்த மேக்கப்புக்கு பெரும் மிரட்டல்.  வியர்வை பொங்கி வெடிக்க ஆரம்பித்தால் விகாரமாகிவிடும்.  பளபளக்கும் எம்ஜியார் முகம் பாலம் பாலமாக வெடித்து வயசான நம்பியாராக காட்சியளித்துவிடும்.
“இங்க பொண்ணுங்க மேக்கப் பண்ணப் போறாங், நீங்க பாத்ரோம் பக்கம் போயிடுங்க” யாரோ ஒரு நடுத்தர வயது மாது சொல்ல எம்ஜியார் எல்லாவற்றையும் பையில் போட்டுக்கொண்டு நகர்ந்தார். கழிப்பறையில் மூத்திர நெடி விரட்டியது.

 சில்க் துணியிலான கால் சட்டையையும் சிலுவாரையும் மாட்டிக்கொண்டு பெல்ட்டை  போட்டார். முகத்தில் அரும்பு மீசை வரைந்து கருப்புத் தொப்பியை அணிந்து  கருப்புக் கண்ணாடியை  மாட்டினார். கண்ணாடியைப் பார்த்தார், எண்பது விகிதம்  எம்ஜியாராக மாறியிருந்தார்.  எட்டப் பார்வைக்கு அவர் நூறு விகிதம்  எம்ஜியாராக இருப்பார்.
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே தயாராகி விட வேண்டும்.  அவசரத்துக்கு உதவும் மேகி மீபோல பெரும்பாலும் இடைச் செருகலாகவே அவருக்கான அங்கத்துக்கு  உடனடி அழைப்பு விடுப்பார்கள். சில சமயம் பிற அங்கத்துக்கான நடிகர்கள் பாடகர்கள் தயாராகாத வேளையில் உடனடி அழைப்பு வரும்.  மைக்கப் பிடித்தவுடனேயே குரல் வெளிவந்துவிடாது. அவ்வாறான நேரத்தில் உபரியாக ஏதாவது பேசிக்கொண்டே எம்ஜியார் குரலை எடுக்க முயற்சி செய்துகொண்டிருப்பார். அதனால் முதல் ஆளாய் ரெடியாகவே இருப்பார். தன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்பாட்டாளர் குறுக்கே வரும்போதெல்லாம் சிரித்து கையசைத்து இரண்டு வார்த்தைப் பேசி தன் இருப்பை கவனபப்டுத்துவார்.


சூடு படுவதற்கு முன்பான இளைய இனிய குரலும், சூடுபட்ட பிறகான வழுக்கிப் போகும் குரலும் எம்ஜியாருக்கு அத்துப்படி. அதிலும் ஜனோபாவா, மதுரை வீரன்,தாய் சொல்லைத் தட்டாதே போன்ற ஆரம்ப காலப் படங்களான மிக இளைய எம்ஜியார் குரலை, சில வயது முதிர்ந்த ரசிகர்கள் சீட்டெழுதி கேட்பார்கள் என்பதற்காக  அதற்கும் தயாராகவே இருந்தார். சிலர் தொண்ணூறுகளில் வந்த இதயக் கனி, உலகம் சுற்றும் வாலிபம் வசனங்களையும் கேட்பார்கள். அந்த வழுக்கிய குரலுக்குத்தான் வழக்கமாகவே கைத்தட்டல் அதிகம். இளைய எம்ஜியார் குரலையும் முதிய எம்ஜியார் குரலையும் அவர்  மாறி மாறி ஒரே நேரத்தில் பேசுவதற்காக அவரைப் பலர் வியந்திருக்கிறார்கள்.
நிகழ்சிக்குக் கிளம்புவதற்கு முன்னாலேயே முகச்சவரம் செய்யும் போது தாவட்டைப் பகுதியில் கீறல் பட்டு ரத்தம் துளிர்த்தது. சுண்டு விரலால் ரத்தம் படரும் இடத்தில் வைத்து அழுத்தினார். சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் விரலை விலக்கிப் பார்த்தார். கசிந்துகொண்டுதான் இருந்தது. கோல்கேட் பற்பசையை இட்டு மூடினார். சுளீரென்று எரிந்தது. குளிக்கும்போது மேலும் எரிச்சலை உண்டாக்கும். சிரம்பானைப் போய்ச் சேர்வதற்குள் காய்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. மேக்கப் மேல்பூச்சி காயத்தை முற்றாக மறைத்துவிடும்.
மனைவியிடம் எப்படிச் சொல்லிவிட்டுக் கிளம்புவது என்பதுதான் எப்போதும் தலைதூக்கும் பிரச்னை.
“எங்கியோ கெளம்பிட்ட மாரி இருக்கு?” என்றுதான் கடுப்பாகத் தொடங்குவாள். அவளிடம் ஒரு நாளைக்கு முன்னமேயே, அல்லது சில மணி நேரத்துக்கு முன்னமேயே நிகழ்ச்சிக்குப் போவதை தெரிவித்துவிடுவதில் பெரிய வில்லங்கம் இருக்கிறது.  சொன்ன நொடியிலிருந்து பிலு பிலுவெனப் பிடித்துக் கொள்வாள். அதனால்தான் தயாராகிக் கிளம்பும்போது சொல்லிவிட்டு பஸ் ஏறிவிடுவது என்று  இப்போதெல்லாம் முன் திட்டமிட்டே செய்ல்படுகிறார். அதில் பிடுங்கல் நேரம் குறைச்சல். இல்லையென்றால் சொன்ன நொடியிலிருந்து நடிப்பு மூடையே கெடுத்துவிடும் அளவுக்கு நொய் நொய் காதோரம் சுற்றும் கொசுவாய் ,  நாள் முழுதும் அதுபற்றிப் பேசிக்கொண்டே இருப்பாள்.
“குளியளறையிலிருந்து வெளியேறியதும் ,  படுக்கையறைக்குச் சென்று கதவை மூடி, எம்ஜியார் குரலில் பயிற்சி எடுக்க ஆயத்தமானார். மனைவி அடுக்களையில் இருப்பதால் குரல் கேட்காது. இரண்டொரு வசனப் பயிற்சி மேற்கொண்டிருப்பார், தட தடவென கதவு தட்டப்பட்டது. கோபம் கொண்ட கைகளின் தட்டல் அது.
“ஐயா கெளம்பியாச்சு போலருக்கு.....கதவத் தொறங்க...” 
 “கிட்டத்திலதான் நிகழ்ச்சி. போய்ட்டு வந்துடுறேன்”
“ இப்படி எத்தன தட சொல்லியிருப்பீங்க? நீங்க அப்டியே வேலைக்குக் கெளம்புற ஆளாச்சே.. உங்க அண்டப் புளுகெல்லாம் தெரியாதுக்கும்?”
“ போய்ட்டு வந்துருவேன் மாலா?”
“ போய்ட்டு வந்திருவீங்கதான் யாருக்குத் தெரியாது? என்னமோ கட்டுக் கட்டா சம்பாதிச்சிர்ர மாரி பொண்டாட்டிக்கிட்ட சொல்லாம கொள்ளாம  சட்டுபுட்டுனு  கெளம்பிடுவீங்க ...ல?”
“ காசெல்லாம் பெரிசுல்ல மாலா, ஒரு தாகம் தான”
“காசெல்லாம் பெருசில்லன்னவாசிதான் கைக்கும் வாய்க்குமா கெடக்கு இங்க. இந்த வருமானத்துல ஒரு சேல வாங்கிகொடுக்க வக்கிருக்கா? பையன் நல்ல கிண்டர் கார்டன்ல போட முடியுதா? மத்தவங்க மாரி ஒரு சின்ன காராவது இருக்கா, மத்தவங்க வீட்டு வராந்தாவெல்லாம் பாருங்க. இங்க என்ன வாளுது? நீலியா கெடக்கு! இப்படி பராரியா வாழ வெக்கமா இருக்கு.
“அதெல்லாம் சம்பாதிச்சிக்கலாம் மாலா?”
“எப்படி? ராத்திரி பூரா முழிச்சிருந்து, அவன் கொடுக்கிற அம்பதிலியும் நூறிலியுமா? அதுக்கு ஒரே தவுக்கெக்கிடா லாரி ஓட்னாலாவது நல்ல வருமானம் பாத்திருக்கலாம். நீங்க நிகழ்ச்சிக்குப் போய்ட்டு வந்து வேலைக்கு லேட்டாப் போவீங்க, அவன் சோத்துக்கு சூறா கொடுத்திடுவான். அப்புறம் அடுத்த வேலைக்கு லோ லோன்னு அலைவீங்க. தெரியாத உங்கள பத்தி! இந்த அஞ்சாறு வருஷத்துல எத்தன கம்பனி மாறி இருப்பீங்க?.... ம்.? அன்னைக்கே பெத்தவங்க படிச்சி படிச்சி சொன்னாங்க.. இவன்லாம் சரியா வரமாட்டாம்மான்னு. அன்னைக்கே அவங்க பேச்ச கேட்டிருக்கணும். என்ன  செருப்பால அடிச்சிருக்கணும்.”
அவளிடம் அதற்குமேல் பேச்சு கொடுத்தால் வில்லங்கம் இன்னும் அதிகமாகும். மளமளவெனக் கிளம்பி வீட்டை விட்டு வெளியேறினார் எம்ஜியார்.
“என்னைக்கு இந்த கர்மத்த விடுறீங்களோ, அன்னைக்குத்தான் விடியும்!” என்றாள். அவள் வசவு வீதியைத் தாண்டி ஒளித்தது. காதில் விழாத தூரம் கடந்தவுடன்தான் ஆசுவாசமானது. ‘நான்தான் ரசிகர்கள் கைத்தட்டலுக்கும் விசிலுக்கும் என்ன நான் பறிகொடுக்கிறேன்னா, அதுக்காக என் குடும்பத்த ஏன் பறிகொடுக்கணும்? அவள் கோபம் குடும்ப நலனுக்கானதில்லையா? இந்த முறை அவளுக்கு இருநூறு வெள்ளியிலாவது சேலை வாங்கிவிடவேண்டும்.
மாலா இவனைக் காதல் கல்யாணம் செய்துகொண்டவள். அவனை முதன் முதலில் எம்ஜியாராகத்தான் ஒரு மேடையில் பார்த்தாள். அன்றைய தினம் வெளியே வந்ததும் முதல் ஆளாகப் போய் கைகொடுத்து பாராட்டினாள். “கலக்கிட்டீங்க சார்” என்றாள். நான் நல்லா ரசிச்சேன். சாட்டையச் சொடுக்கி நான் ஆணையிட்டால் பாட்டுக்கு அபிநயம் அப்படித்தான் இருந்திச்சி. தாய் சொல்லைத் தட்டாதே வசனத்த பழைய எம்ஜியார அப்படியே அச்சு அசலா கொண்டாந்தீங்க என்றாள். ஒங்க படத்த போஸ்டர்ல பாத்த ஒடனே டிக்கட் வாங்கிடுவேன்,” என்றாள்.
அவளை அவன் அந்த வட்டார நிகழ்ச்சிகளில் தவறாமல் பார்த்தான் அவன். ஒழிந்த நேரத்தில் சந்தித்துப் பேசினாள். அவனுக்கு அது பெரிய உற்சாகம். அவளுக்கு அதில் மகிழ்ச்சி. அங்கே தொடங்கிதான் இருவருக்கும் . வஜ்ரமாய் ஒட்டிக்கொண்டது.  பெற்றோரை எதிர்த்துக்கொண்டுதான் கல்யாணமும் சாத்தியமானது. ஆனால் அதெல்லாம் வெறும் முகப்பூச்சி கவர்ச்சி என்பதை வாழ்ந்த வாழ்க்கையின் ஒப்பனை கலைந்து விகாரம் கண்டபோதுதான் புலனானது.
ம்ஜியார் வேஷத்துக்குள் தயாரானதும் அவன் உலகம் முற்றிலும் வேறாகிவிடும். அவனுக்கே பட்டா எழுதிக் கொடுக்கப்பட்ட உலகம் அது.
மேடையில் இருந்து பழைய ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டான். இரண்டு முறை இடை இடையே அழைப்பதற்குள் நேரம் ஓடிக்கொண்டே இருக்கும்.  முகப்பூச்சைத் தொட்டுப் பார்த்தான். வழவழவென காய்ந்திருந்தது. முகத்தோலில் லேசான எரிச்சல், நிகழ்ச்சி முடிந்து கழுவினால் போய்விடும்.
“ எனக்கு 12 மணிக்கு பஸ். காலையில வேலைக்குப் போயிடணும். சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க” என்றார் அறிவிப்பாளரிடம்.
“ நீங்க ஏற்பாட்டாளரக் கேளுங்க..இங்க நிகழ்ச்சி நிரல் தொடக்கப் பட்டியல்ல உங்க பேரே இல்லை. அப்புறம் கொடுப்பாங்கன்னு நெனைக்கிறேன்.”
மீண்டும் ஸ்டூலில் அமர்ந்து ஏற்பாட்டாளர் யாரும் மேடையில் இருக்கிறார்களா என்று கண்கள் தேடின. வயிறு கபகபவென்று பசித்தது. பேருந்து பிடிக்கும் வேகத்தில் வயிற்றில் ஒன்று போட முடியவில்லை. மேடைக்கு எதிர்புறத்தில் கடைகளின் மின் விளக்குகள் பளிச்சிட்டன.  தானே இறங்கிப் போய் வாங்க நினைத்தபோது  ஒப்பனை கனம் மேலும்கூடி அழுத்தி கூசச் செய்தது.  யாரையாவது விட்டு நாசி கோரெங் புங்குஸ் வாங்கிவரச் சொல்லணும்.
“சார் எனக்கு பன்னெண்டு மணி பஸ். சீக்கிரமா கொடுங்க. பஸ்ஸை விட்டுட்டா அடுத்த பஸ் காலையிலதான்” நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு செயலாளரிடம் சொன்னார்..
“ஏன்யா கால்ல சுடு தண்ணி ஊத்துக்கிட்டுதான் வருவீங்களோ?”
அதோ இதோ என்று நிகழ்ச்சி தொடங்கி ஒன்றரை மணி நேரம் கழித்து அறிவிப்பாளர்,” நீங்கள் ஆவலோடு காத்திருந்த எம்ஜியார் இதோ,” என்றார். கைத்தட்டலும் கூச்சலும் கிழித்துப் பிளந்துகொண்டு எழுந்தது.
எழுந்து மேடைக்குப் போய் ஒரு சுற்று பழைய எம்ஜியாராக இருந்து, “அடுத்து சூடுபட்ட எம்ஜியாராக அவதாரம் எடுப்பேன் என்று அவரே அறிவித்துவிட்டு மீண்டும் மேடைக்குப் பின்னால் போய் கண்ணாடியைப் பார்த்தார். முகப்பூச்சியை ஊடுருவி  வியர்வைத் துளிகள் எட்டிப்பார்த்தன. ஒற்றி ஒற்றி எடுத்தார். இப்போது கூடுதலாக எரிந்தது.
நேரம் பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இங்கிருந்து டேக்சி பிடித்தால் ஸ்டேசனைப் போய்ச் சேர பதினைந்து நிமிடங்கள் ஆகும். அடுத்த சுற்றுக்குக் காத்திருக்கப் பொறுமையில்லை அவருக்கு. செயலாளரைத் தேடிப்போய் இப்போ இன்னொரு தடவ பேசிட்டு வந்துர்றேன். பஸ்ஸ பிடிக்கணும்,” என்றார்.
“இருய்யா...பிரமுகர இப்போ பேச கூப்பிடப் போறோம். அது முடிஞ்சவுடனே உங்களக் கூப்பிடுவாங்க. முடிச்சி கொடுத்திட்டு போயிடுங்க. ஒங்க பேர அவர் பேசறதுக்கு முன்ன அறிவிச்சிடுவோம். இல்லன்னா  கூட்டம் கலைஞ்சிடும்”
எம்ஜியாருக்குப் பகீரென்றது. இந்த ஆளு ரொம்ப நேரம் பேசினானா?’ இதனால்தான் முன்நாற்காலிகள் பிரமுகர் என்றால் இவருக்கு ஒவ்வாது.
அவர் பேசி முடிக்கப் பத்து நிமிடம்தான் ஆனது. அதில் லயிக்காத கூட்டம் நெளிந்தது. ஆங்காங்கே பேச்சுக்குரல் தொன தொனத்தது.
எம்ஜியார் மீண்டும் அறிவிக்கப்பட்டார். சரி ஐந்தாறு நிமிடத்தில் அங்கத்தை முடித்துவிடலாம் என்று  பிரசன்னமானார். மண்டபம் கைத்தட்டலிலும் விசில் ஒலியிலும் அதிர்ந்தது. தன்னை மறந்து ஆறேழு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். வெளியே வந்து பையை எடுத்துக் கொண்டு செயலாளரைத் தேடினார்.
செயலாளர் ,”பொருளாளர் பிரமுகர வழி யனுப்பப் போயிருக்கார். வந்திருவார்.” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
எம்ஜியாருக்கு நிலைகொள்ளவில்லை. மணி பதினொன்று நாற்பதைத் தொட்டது. பிரமுகரை வழியனுப்பிவிட்டு பொருளாளர் குறுக்கே வந்தார்.
“சார் நான் கெளம்பணும்” என்றார்.
“நீங்க தலைவர பாருங்களேன்......அங்க பேசிட்டு இருக்காரு பாருங்க, வெள்ள ஜிப்பா ,”  என்று சுட்டு விரலில் காட்டினார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
தலைவரிடம் போய் நின்றார். அவரின் பிம்பம் உணர்ந்து திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் பேசியபடி இருந்தார். எம்ஜியாருக்குப் பதற்றம் கூடியது. இடைவெட்டி ,”சார் நான் போகணும்,” என்றார்.
…. உங்ககிட்ட யாரும் சொல்லலியா,  இது தனித்துவாழும் பெண்களுக்கு நிதி சேர்க்கும் நிகழ்ச்சி. உங்கள கெஸ்ட்டாதான் கூப்பிட்டோம். அஞ்சாறு நிமிஷம்தான பேசினீங்க. வந்து சிறப்பித்ததுக்கு  ரொம்ப நன்றி.” என்று சொல்லிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தார். எம்ஜியார் தலைவரின் முகத்தை மிகுந்த ஏமாற்றத்துடன் ஏறிட்டுப் பார்த்தார். அதற்கு மேல் அவருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை!
 பையைத் துக்கிகொண்டு மேய்ன் சாலைக்கு வந்தார். சாலையில் வாகன ஓட்டம் குறைந்திருந்தது. முகத்தின் ஒப்பனையைக்  கலைக்க நேரமில்லை. நிகழ்ச்சி முடிந்து போவோரெல்லாம் இவரைப் பார்த்து சிரிப்பை உதிர்த்துவிட்டு ஏதோ பேசிக்கொண்டே நடந்தனர். தன்னைக் கோமாளியாக உணர்ந்த நேரம் அது. மேடையில்   உண்டான உற்சாகம் இல்லை இப்போது. உடம்பில் ஏதோ ஊர்ந்தது செல்வதுபோல இருந்தது. அதிர்ஸ்ட வசமாக வந்த ஒரு டேக்சியை நிறுத்தி ஏறிக் கொண்டார். மணி பன்னிரண்டைத் தாண்டி ஐந்தாறு நிமிடமாகி இருந்தது. பஸ் நிறுத்தத்தில் அவர் ஏறிப் போக வேண்டிய பஸ் கிளம்பிப் போய்விட்டதைச் சொன்னார்கள். பத்து நிமிடத்துக்கு மேல தாமதம். இந்த அகால நேரத்தில் டேக்சியைப் பிடித்தால் முன்னூறு வெள்ளிக்கு மேல் கேட்பார்கள். பணப்பையில் அவ்வளவு தேறாது. வேறு வழியில்லை. இரவை இங்கேதான் கழித்தாக வேண்டும்.  ஒப்பனை  உடைகளை மாற்றிப் பையில் திணித்துவிட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தார். சில இடங்கள் எளிதில் கலைந்துவிடாது கெட்டிதட்டிப்போயிருந்தது. தாவட்டையில் எஞ்சியிருந்த முகப்பூச்சைத் தேய்த்தார். வரும்போது பிளேடு காயம்பட்டு காய்ந்துகொண்டிருந்த இடம் பக்கு பெயர்ந்து மீண்டும் ரத்தம்  கசியத் தொடங்கியது.
அங்கு நீண்டிருந்த இரும்பு பைப் இருக்கையில் அமர்ந்துகொண்டார். சாய்ந்து படுக்க வசதியற்றது. தரையில் எங்கேயும் தலை சாய்க்க முடியாத அளவுக்கு வாகனங்களில் எண்ணெய்க் கசிவும், அதன் நாற்றமும், மணல் சொரசொரப்பும் நிறைந்திருந்தது. எங்கிருந்தோ வீசிய ஈரக் காற்று ரசாயண வீச்சத்துடன் கடந்து சென்றது. நெடுஞ்சாலை சாலையின் மேம்பாலத்தில்  ஓடும் வாகனங்களின் இரைச்சல் இரவு முழுதும் ஓயாது போலிருந்தது.  எம்ஜியார் அங்கே வந்து சேர்ந்தபோது இருந்த மனித  நடமாட்டமும் முற்றிலும் இல்லாமல் ஆனது. இந்த இரவு உடைந்து உடைந்து நத்தையாய் நகரும்  நீண்ட பொழுதாக நீர்த்துக் கிடந்தது அவன் கண்முன்.  அப்போது இரவெல்லாம் எங்கோ அலைந்து திரிந்த
நாய் ஒன்று  அவர் அமர்ந்திருந்த தூணருகே வந்து ஒரு காலைத் தூக்கிச் சவாகாசமாகச் சிறு நீர் கழிந்துவிட்டுப் போனது.
 உடல் முழுதும் பிசுபிசுத்துத் தூக்கமின்மையால் உஷ்ணமேறி கனத்துக் கொண்டிருந்தது. கண்களில் எரிச்சலும் இருளும் தேங்கிக் கிடந்தது. சாலை விளக்குகள் மங்கிய ஒளியில் சோம்பிக் கிடந்தது வெளி.
காலை ஆறிருக்கும். முனியாண்டியின் பெயர் தொலைபேசித் திரையில் வந்தது
“ எங்கய்யா இருக்க... தவுக்கே சத்தம் போட்டுக்கிட்டு இருக்கான்யா. சீக்கிரம் வந்துத் தொல! இன்னைக்கு சிங்கப்பூருக்குச் சரக்கு கொண்டுபோகணும். தெரியும்ல? வேற டிரைவருக்கு போன் பண்ணி கூப்பிட்டுக்கிட்டிருக்கான்.
கௌண்டர் திறந்ததும் முதல் ஆளாய் டிக்கட் வாங்கிக்கொண்டார்.
 எம்ஜியாரின் ஒப்பனை பொருட்கள் கொண்ட பை அன்று இயல்பை மீறி கனப்பதாய்ப் பட்டது.  பஸ் ஏறும்போது அந்தப் பை அவர் உட்கார்ந்திருந்த இருக்கையின் மீதே இருந்தது.
இந்த முறை அதனை மறக்காமல் எடுத்துப் போகவேண்டும் என்ற எண்ணம் தோணவில்லை எம்ஜியாருக்கு.

நாசி கொரேங் புங்குஸ்= சோறு பிரட்டல் பொட்டலம்
தவுக்கே= முதலாளி








Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...