Skip to main content

மலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கத்துக்கு அக்கினியாக தகித்தவன்


புதுக்கவிதைக்கான அடிநாள் கவிஞன் அக்கினி
கோ.புண்ணியவான்.

எனக்கும் அக்கினிக்கும் அவ்வளவு நெருக்கமான நட்பு நிகழ சந்த்ரப்பங்கள் குறைவாகவே இருந்தன. நான் கூலிமுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வளர்ந்தவன். அக்கினி வாழ்ந்தது கோலாலம்பூரில். அப்போதுள்ள பொருளாதாரச் சூழலில் எனக்கது நியூ யோர்க் தூரம். தோ இருக்கிற கூலிமுக்கு போவதே மாதம் ஒருமுறைதான் நிகழும். ஆனால் கவிதையில் எனக்கு அவர் மிக அணமையில் இருந்தார்.
 புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகமானபோது உதித்த முதல் தலைமுறை கவிஞர் அக்கினி. பல போராட்டங்களின் சிதைவுகளிலிருந்து புதுக்கவிதையைக் கட்டியெழுப்பியவர்களிலன் பட்டியலில் அக்கினியும் சேர்கிறார். அதன் நீட்சியாக இரண்டாம் தலைமுறையில் நான் உதிக்கிறேன். நான் பரீட்சார்த்தமாக அக்கவிதை வடிவத்தை எழுதிப் பார்த்தேன். வானம்பாடி வாரப் பதிரிகைக்கும் அனுப்பினேன், அவை தவறாமல் பிரசுரமாயின. அக்கினி, ராஜ்குமாரன், இளஞ்செல்வன், ஆதி.குமணன், கோ.முனியாண்டி போன்றவர்களை அடியொற்றி  உருவானவன் நான். அவர்களுடைய கவிதைதான் எனக்கு பால பாடம். தமிழ் நாட்டிலிருந்து எழுதும் பிரசித்திபெற்ற  கவிஞர்களான மீரா, அப்துல் ரஹ்மான், வைரமுத்து, மேத்தா போன்றவர்களை அப்போது நான் கேளிப்பட்டதுகூட இல்லை. எனவே உள்நாட்டு இலக்கிய ஊடக படைப்பாளர்களே என் ஆதர்சங்கள். ஆனால் சில பத்தாண்டுகள் கழித்து  அக்கவிதைகளையும் என் கவிதைகளையும் மீள்வாசிப்புக்குக் கொணர்ந்தபோது அதன் பலவீனம் கொஞ்சம் கூச்சத்தை தருவிப்பதாக உணர்ந்தேன். நவீனக் கவிதைகளின் அகவயத் தன்மையும், நுட்ப வெளிப்பாடும் புதுக் கவிதைகளின் புறவயத் தன்மைக்கும் வெளிப்படையான போக்கும் முரணாகத் தோன்றியதால் உண்டான தாக்கம் எனலாம். அதற்காக புதுக்கவிதையில் அகவயம் இல்லை என்று அருதியிட்டுச் சொல்லிவிட முடியாது.  
 அப்போதைய புதுச் சூழலுக்கு அந்தப் புதிய வடிவம்  அறிமுகமான தருணத்தில திரளான வாசிப்புத் தளத்தை  ஈர்த்துக் கொண்டது. அவை உணர்ச்சியைத் தூண்டின. அவ்வுணர்ச்சி என்னையும் தடுத்தாட்கொண்டு அதனுள் என்னையும் ஒருவனாக இணைத்துக்கொண்டது. அக்கவிதைகள் பெரும்பாலும் லட்சியவாதக் கோட்பாட்டை அடிச்  சரடாகக் கொண்டிருந்தது. சமூகத்தைச் சீர்திருத்தும் இளரத்த உத்வேகத்துக்கு அது ராஜபாட்டை அமைத்துக் கொடுத்திருந்தது. இயல்பாகவே கவிதா மனங்கள் யாப்பிலக்கண வடிவக் கறாரிலும் இருண்மையிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி மகா வித்வான்களால் தள்ளிவைக்கப்பட்டபோது புதுக்கவிதை துறை அதற்கு மாற்றாக அமைந்தது. புதுக்கவிதை கோட்டுப்பால் போல இழுத்த இழுப்புக்கு இணங்கி வந்ததாலும் அவ்வடிவத்தை சிக்கென பிடித்துக்கொண்ட இளைஞர் பட்டாளத்தில் நானும் ஒருவனேன். அக்கினி அப்போது வெளியிட்ட கனா மகுடம் கவிதை, புதுக் கவிதைக்கான தொடக்க கால நூல்களில் ஒன்று, அத்துறையில் எழுதபவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய்த்தான் புதுக்கவிதை நூல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன.அவற்றுள் கனா மகுடம் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றிருந்தது. அவர் எடுத்துக்கொண்ட பாடுபொருள் அவற்றை கோட்பாட்டு ரீதியிலான வைப்பு முறை அவற்றை பரவலாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது.
அக்கினியைச் ஓரிரு முறை மக்கள் ஓசை அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். இளஞ்செல்வனின் சிறுகதை நூல் வெளியீட்டில்  ஒருமுறை லுனாசிலும் சந்தித்திருக்கிறேன். அதிகம் பேச வாய்ப்பற்ற சூழலில் அச்சந்திப்பு இருந்தது. 2017ல் வணக்கம் மலேசிய இணைய இதழ் நடத்திய மாணவர் முழக்கம் நிகழ்ச்சிக்கு என்னை நடுவராக அழைத்திருந்தார்கள். அக்கினி அந்த இணைய இதழின் ஆசிராகப் பணியாற்றிக்கொண்டிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரியும். அப்போட்டிக்கு அவரும் ஒரு நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்து என்னை விடுதிக்கு அனுப்பும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. என்னை பிரிக்பில்சில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அந்த விடுதியின் அறைச்சூழல் எனக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணவே , எனக்கு மேலும் இரண்டு விடுதிக்கு அழைத்துச் சென்று காட்டினார். அதிலும் எனக்கு அதிருப்தி உண்டானது நான் சுங்ஙைப் பட்டாணிக்கு பேருந்தில் பயணமாக முடிவெடுத்திருக்கிறேன் என்றேன் அவரிடம். நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது. மெல்லிய நெகிழியால் திரையிட்டதுபோல இரவு தன்னை மூடிக்கொண்டிருந்தது. சரி உணவருந்திவிட்டுப் போகலாம் என்றார். அதற்கிடையே அவர் வீட்டிலிருந்து அவருக்கு அழைப்புகள் வந்துகொண்டிருந்தன.  நீங்கள் வீட்டுக்குப் போங்கள் நான் போய்க்கொள்கிறேன் என்றேன். உங்களை நிர்க்கதியாய் விட்டு விட்டு நான் எப்படிப் போவது? என்று கூறி என்னை டி பி எஸ் பேருந்து நிலையம் வரை அழைத்துச் சென்றார். டிக்கட் உறுதியானவுடன்தான் வீடு திடும்பினார். . அந்த ஒரு சந்தர்ப்பம்தான் அவரை நெருக்கமாக அறிந்து கொள்ள உதவியது. அதுதான் கடைசியாக நான் அவரோடு நீண்ட நேரம் இருந்த நாள்.
அவரின் கவிதைகள் அங்கதச் சுவையுடையவை. பெண்களை  பழங்காலம் தொட்டு அடக்கியாளும் ஆண் வர்க்கத்தை மறைமுகமாகச் சீண்டுகிறது கீழ்வரும் ஒரு கவிதை.தது ஒரு மாஸ்டர் பீஸ். அதே வேளையில் எவ்வளவுதான் பெண்களை விடுதலை நோக்கி நகர்த்த இயக்கங்கள் கூவி அழைத்தாலும், எழுத்துகள் பாடித் தேய்ந்தாலும் அவர்கள் அடிமை மரபணு மாறப்போவதில்லை. அவர்களுக்கு அவர்களே விலங்கிட்டுக்கொண்டிருந்தனர்.  வாழ்வைச் சவாலாக ஏற்ற ஆண்களுக்கு ஈடாக எதிர்நீச்சலிட்டு போராடுவதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்களின் ஆதரவு வேண்டும்.அவர்கள் இல்லையென்றால் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான நிலை இது இந்தக் கவிதை சொல்லும் செய்தியைப் பாருங்கள். பெண்கள் விரும்பி ஏற்ற அடிமை வில்லங்கம் பற்றி விரித்துரைப்பதை.

நாங்கள்
திட்டமிட்டே போட்ட
பரமபதத்து கட்டத்துக்குள்
பெண்ணே நீ வகையறியாமல்
மாட்டிக்கொண்டாய்
எங்களின் உதட்டுக்கு மேலே
கறுத்து அடர்ந்த
ஆண்மையில் கைவத்த வாறு
நாங்கள் புன்னகைக்கிறோம்
உங்கள் குலத்திற்கே
நாங்கள் வேலிபோட்டவர்கள்

எங்களது சொப்பன தேச

எல்லைக்கோடுகளை எப்படியெப்படியோ
திருத்தினோம் விஸ்தரித்தோம்
அப்போதெல்லாம் நாங்கள் போட்ட விடுகதை
உங்களுக்குப் புரியவே இல்லை
உங்களது கண்களுக்குள்
இருட்டைப் பிழிந்து
வெளிச்சத்தை அபகரித்தோம்

உனக்குக் கல்லைக் காட்டினோம்
கணவன் என்றாய்
புல்லைக் காட்டினோம்
புருஷன் என்றாய்.
உங்களை வலைத்துப் போட்டு ஆண்களாகிய நாங்கள் எப்படியெல்லாம் சாதித்துக்கொண்டோம், இன்புற்றோம். இவை எல்லாம் நாங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்தியதால் நீங்கள் மனமுவந்தளித்தவை என்று எள்ளலான மொழியில் கூறிச் செல்கிறார். ஆனால் இந்தச் சீண்டலுக்குப் பின்னால் இருப்பவை நவீன படைப்பாளுனுக்கே உரித்தான பெண்விடுதலை கோரிக்கை மட்டுமே. ஒரு கவிஞனின் அப்பழுக்கற்ற குரல்! பெண்களுக்கு ஒருவித அகத் திறத்தல் நிகழவேண்டும் என்ற நோக்கமுடைய கவிதை இது.
பெண் உரிமை என்ற தலைப்பிட்ட கவிதை கூறும் செய்தி இன்னும் கூர்மையானது. இதில் எள்ளல் இல்லை.சீண்டும் தன்மை இல்லை. ஆனால் இச்சமூக அமைப்புக்குள்  பெண்நிலை சார்ந்த பொதுபுத்தியைத் தீவிரமாக எதிர்க்கிறார்.

என்றோ ஒருநாள்
சன்னல் இடுக்கினில்
தலையை நீட்ட
ஒளி மருட்டவே
உள்ளடங்கிக் கிடக்கும்
இருட்டறை ரோஜாக்கள்
அவை 
தவசிகளானதோ
அதே சூரிய தரிசனதுக்குத்தான்

ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னரான காலக்க்ட்டத்தில் எழுதப்பட்ட கவிதை இது. அப்போதுள்ள பெண்களுக்கு இவ்வளவு மோசமான அடைத்துவைத்த நிலை நிகழ்ந்திருக்காது. அவருக்கு இந்தக் கவிதை மீசை முறுக்கிய பாரதி எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்
என்று பெண்ணியச் சிந்தனைக்காகப் பாடிய பாரதியின் நீட்சிக் கவிதை இது.  கொஞ்சம் மிகையாக்கினால்தானே கவிதை சுவைக்கிறது. ஆண் வர்கத்துக்கு நிகரான வெளி உலகச் சுதந்திரம் பெண்களுக்கு வாய்க்கவில்லையே என்ற கவலையை அவர் வலிந்து சொல்வதாக இருக்கிறது.

பருவம் கனிந்து
உருவம் திரண்டு
பார்வை தவசிகள்
பசியைப் போக்கினாலும்
நீ நித்திய கன்னியே
உனக்குச் சாந்தி முகூர்த்தம்
எந்த விமர்சகப் புருஷன்
எங்கு பிறப்பானோ
ஆண்களின் கண்கள் பெண்களை மேய்பவை. பெண் மேனி மீது பார்வை படர்ந்திருக்கும் இச்சை கொண்டவை. ஆனால் தனக்கானத் துணையை மட்டும் த்ட்டிப் பார்த்து தேர்ந்தெடுத்து வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள்.பார்வையால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் நிலையை எண்ணி வருந்துவதாக கவிதையை எழுதிப் பார்க்கிறார்.

ஏய் நித்திய கன்னியே
நடக்க வேண்டிய்
உனது திருமனம் மட்டும்
நரகத்திலா நிச்சயமானது.
முதிர்க் கன்னிகளை நோக்கிய கரிசனப் பார்வையையும் எழுதிப் பார்க்கிறார். திருமணமே கூடிவராமல் போன கன்னிகளின் கல்யாணம் நரகத்திலா நிச்சயமானது என்று அவர் கேட்குபோது, இந்தப் பெண்களின் வாழ்வின் துயரத்தை நம்மிடமும் கடத்தி விடுகிறார்.
அக்கினி அபலைகளை மட்டும் கவிதைகளில் பாடவில்லை.பரவலான சமூகச் சிக்கல்களையும் புனைந்து காட்டுகிறார். கனா மகுடம் என்ற முதலும் கடைசியுமான அவரின் கவிதை நூல் புதுக்கவிதை தோன்றிய தொடக்காகாலத்தின் சாட்சித்தொகுப்பாக விளங்குகிறது. அதிலிருந்த சில  கவிதைகளைத் தன்னிசையாய் நினைவுகூர்ந்து பார்க்கிறது என் மனம். நான் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இக்கட்டுரையை எழுதுகிறேன்.


  


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...