நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்வதில் பொதுவாகவே சிக்கல் உண்டு.
ஒரு சராசரி வாசகனுக்கு மட்டுமல்ல ஒரு நல்ல நவீனக் கவிஞனும் இதே பிரச்னையைத்தான் எதிர்நோக்குகிறான்.
இது ஏனெனில் கவிதைகள் ஒருவரின் அக எழுச்சிலியிலிருந்து பிறக்கிறது. அவர் அதற்கு கொடுக்கும் வடிவம் அவரின் உள்மனத்தில் தோன்றியவண்ணமே அமைகிறது- ஒரு கச்சா பொருள் போல.அந்த அசல் வடிவத்தை தேடலின் வழி வாசித்து இன்புறக்கூடிய வடிவத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்குக் கொஞ்சம் உழைப்பு தேவை.
இந்தப் புரிதல் சிக்கலைக் கலைவதற்கான ஒரு களமாகத்தான் வல்லினம் தமிழில் மிக முக்கியமான பாடைப்பாளுமைகளில் ஒருவரான யுவன் சந்தரசேகரைக் கொண்டுவந்திருந்தது.
ஜூன் 11/12 முழுநாள்களும் அவருடனான உரையாடல் நிகழ்ச்சியாக இது நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்ச்சி நிறைவாகவும் பயனாகவும் இருந்தது.
நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடந்ததற்குக் வல்லினம் இதனை கட்டமைத்த விதம்தாம் காரணம். இதனைச் சற்றும் சோர்வில்லாமல் வழிநடத்திய யுவனின் யுக்தியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னது, நான் ஆசிரியரல்ல, நீங்கள் மாணவர்களும் அல்ல. நாம் இரு தரப்பனருமே நவீனக் கவிதையை எப்படி உளவாங்கிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியாகவே இது அமையும் என்றார். என்னிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்வதைவிட உங்களிடமிருந்தே நான் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என்றார். இந்த எளிமையான சொற்களைச் சம்பிரதாயமானதாக நான் எடுத்துக்கொள்கிறேன். இந்தச் எளிய சொல்லிலிருந்து அவரின் ஆளுமையைக் கட்டமைத்துக்கொள்வது அபத்தமாகிவிடும். அவர் புனைவுகளின் வழியும் அபுனைவுகளின் ஊடாகவும் அவர் தன்னை அறிவுசார்ந்து கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறார். இந்த முகாம் முதிர முதிர அவரின் அறிவார்ந்த பின்புலம் விரிந்துகொண்டேதான் இருந்தது. முகாமின்போது அவர் உபயோகித்த உவமைகள், வாழ்க்கையின் தரிசனங்கள். அவருக்கு அந்தந்தத் தருணத்தில் வெளிப்பட்ட கருத்தியல்கள், தத்துவ விசாரஙகளாக உதிர்ந்துகொண்டே இருந்தன.
அவர் கையில் எந்தக் குறிப்புகளுமே வைத்திருக்கவில்லை. குறிப்புகள் இல்லாமல் இந்த மனுஷன் எப்படி இரண்டு நாள் கருத்தாடலை சமாளிக்கப்போகிறார் என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது.
தொடக்கத்திலேயே, நீங்கள் இந்தபப்பட்டறையில் என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஒவ்வொருவரையும் பேசச்சொன்னார் யுவன். பெரும்பாலானோர் கேட்ட வினா, நவீனக் கவிதைகள் புரியவில்லை என்பதே. சிலர் அதற்குள்ளேயே நுழைய முடியவில்லை என்றார்கள். (மொத்தம் 25 பேர்தான் கலந்துகொண்டார்கள். இவர்கள் தணிக்கை செய்யப்பட்டுச் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் கலந்து பயன்பெற கறாரான விதிமுறைகளைப் பின்பற்ற முடியாதவர்களை இணைத்துக்கொள்ளவில்லை. விதிமுறைகளைப் பின்பற்ற முடியாதவர்கள கலந்துகொள்ளவும் இல்லை. இலக்கியம் கேளிக்கை பிரியர்களுக்கானதல்ல. உள்ளபடியே கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உண்மையான நோக்கமுடையவர்களுக்கானது மட்டுமே என்பதை வல்லினம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வந்திருக்கிறது. அதன் பொருட்டே பங்கேற்பாளர்கள் தணிக்கை செய்யப்பட்டே முகாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதனால்தான் பங்கேற்பாளர் பட்டியலில் 25 பேர் மட்டுமே இருந்தனர். இவர்களில் பலர் நல்ல வாசிப்புப் பழக்கம் உடையவரகள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்துகொண்டேன். சிலர் எழுத வந்துவிட்டவர்கள்.
இலக்கியத்தை விரும்பி ஏற்றவர்களுக்கு உரையாடல்கள்தான் பெரும் திறப்பைக் கொடுக்கும் வாசல். பெரும்பாலும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த உரையாடல் உத்தி தங்களை மேலும் வளர்த்துக்கொள்ள கைகொடுக்கும். இவர்கள் பங்கேற்பாளர்கள் நிலையிலிருந்து பங்களிப்பாளர்கள் தரத்துக்கு மடைமாற்றியது இந்தத் தொடர்ச்சியான உரையாடல் வழிதான். சுவாரஸ்யம் குன்றாமல் நிகழ்ச்சியை யுவன் கையாண்ட விதத்தால் நவீனக் கவிதைகளின் பொருண்மையும், அவற்றின் உள்பொருளும், கவித்துவமும் திரண்டுவந்துகொண்டே இருந்தது . பலர் சேர்ந்து ஒரு கவிதையை அலசும்போதுதான் கவிதைக்குள் உள்ளடங்கியிருந்த பன்முகத் தன்மை மலர்ந்து மணம் பரப்பத் துவங்குகிறது.
தன்னை முற்றாக மூடிக்கொண்டிருந்த கவிதை எப்படி பொருள் விரிவு கொள்கிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு கவிதையின் மூலம் விளக்கினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். வாசகர்களுக்காக ஒரு எளிமையான கவிதை எடுத்துக்கொள்கிறேன். அதனை எளிமை என்று சொல்லிவிடலாகாது. முதல் வாசிப்பில் அது எளிய ஒன்றாகத் தோன்றலாம். வாசிக்க வாசிக்க அது தனக்குள்ளே வைத்திருக்கும் உணர்ச்சிகள் எவ்வாறு கசிந்து கலையுரு பெறுகிறது என்பதைக் காட்டுவதைக் கவனியுங்கள்.
பொருள்வயின் பிரிவு.
விகரமாதித்யன்
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல்மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்து சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர்வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பிவைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காகப்
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனம் கிடந்து அடித்துக்கொண்டது.
இக்கவிதை ஒரு குடும்பத் தலைவனின் பிரிவைச் சொல்வதாகத்தான் காட்சிப்படுத்திக்கொள்கிறோம். ஆனால் சொற்களுக்குள் புதைந்திருக்கும் கவித்துவம் ஒரு கூட்டு முயற்சியில் எவ்வாறு வெளிப்படுகிறது என்று பார்ப்போம்.
ஒரு கவிதையை ஒரு வரிவிடாமல் வாசிக்கவேண்டும் என்பது முதல் விதி. நாம் பெரும்பாலும் தலைப்பை ஒரு சம்பிரதாயமாக வைக்கப்பட்டது என்று மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். கவிதைக்குள் தலைப்பு வைக்கிறவர்கள் மிகுந்து பொறுப்புணர்ச்சியைக் கையாள்கிறார்கள். விக்ரமாதித்யன் தமிழில் மிக முக்கியமான படைப்பாளி. அதனால் அவர் கவிதையை மேலோட்டமான புரிதலுக்குள் அடங்கும் ஒன்றாக படைத்திருக்க வாய்ப்பில்லை. இதன் தலைப்பே குடும்பத்தின் அத்தனை வயிற்றுக்காகப் பொருள்தேடி வெளியூர் போகும் ஒருவனின் உணர்ச்சையை வாசகனுக்கும் கடத்த முனைகிறது. அந்த உணர்ச்சி நிலை தலைப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
இந்தக் கவிதை மெல்ல மெல்ல வளர்ந்து முதிரும் போது அந்த ஆடவன் அவன் வசிக்கும் ஊருக்கும் வெகுதூரத்தில் இருக்கும் வெளியூர் ஒன்றுக்கு தன் அன்பான குடும்பத்தைப் பிரிந்து செல்கிறான் என்பது தெளிவாகிறது. அவன் காலையில் வேலைக்குப் போய் மாலையில் வீட்டுக்குத் திரும்புபவனாக இருந்தால் இதற்குள் இவ்வளவு ஆலாபனை எதற்கு? தேவை இல்லைதானே? அதனால்தான் பல இடங்களில் அவன் பிரிந்து விடைபெறுவது ஒரு தூரதேசமாக இருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
'அன்றைக்கு' என்று ஆரம்பிக்கும்போது இது என்றைக்கோ நடந்து முடிந்தது என்று சொல்ல வருகிறது. அவன் பிரிந்து வந்து வேலை செய்யும் இடத்திலிருந்து அவன் விடைபெறும்போது அன்றைக்கான காலைக் காட்சியை மீட்டுணர்ந்து பார்க்கிறான். அந்தப் பிரிதல் அவனை வருத்துகிறது.
அவன் குடும்பத்தைப் பிரிந்த அந்தக் காலைப்பொழுதில் சாரல்மழை பொழிகிறது. வாசகனுக்கு இங்கே ஒரு சகுனமொழி நினைவுக்கு வரவேண்டும். தூறல் வேளையிலும் தும்மல் வேளையிலும் வெளியே போவது கெட்ட சகுனமாக கருதப்பட்டது. அதனைச் சகுனம் சரியில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த வாக்கியத்தை வாசிக்கும்போது அவனுக்கு தூரதேசத்தில் என்னாகுமோ என்ற பிரக்ஞை வாசகனைத் தொட்டுச் செல்கிறது. இது ஒரு அனுமானம்தான் என்றாலும் மனம் பதைப்பதை முடுக்கிவிடுகிறது இந்த வரிகள். அவன் கிளம்பும் நேரம் நிசப்தமாக இருக்கிறது என்றும் சொல்கிறார். நிசப்தம் சோகத்தின் குறியீடு. இந்தச் சூழலை மேலும் சோகமயமாக்கிவிடுகிறது அவன் பிரியும் தருணம். சுகமான குளிர் வியாபித்திருக்கிறது என்று வேறு கூடுதலாகச் சொல்கிறார். அவன் நினைக்கும்போது அந்த சுகமான வேளையில் குடும்பத்தோடு இருக்கத்தானே தோணும். அதற்கும் வழியில்லாமல் செய்து அவனை வெகுதூரம் அனுப்பத் தயாராகிறது அந்த விடிந்தும் விடியாத காலை வேளை. இந்த இடம் பயணப்படுபவனுக்குள் எவ்வளவு குரூரத்தை வீசிவிடுகிறது!
பெரியவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு விவரம் தெரிந்த வயது இருக்கலாம் என்று காட்டுகிறார். அவனை எழுப்பி விடைபெறுவதாகச் சொன்னால் அவன் அப்பாவின் பிரிதலால் அழக் கூடும். அது இன்னும் சோகத்தில் ஆழ்த்திவிடும். அந்த அழுகையை அவர் எதிர்கொள்ள முடியாது இல்லையா. அதனால் அவனை எழுப்பவில்லை. சின்னவன் விபரம் தெரியாத வயது போலும். அவன் சிரித்து விளையாடுவதாகச் சொல்கிறார். அவர் பிரிவு அவனைப் பாதிக்கவில்லை என்றாலும், அவனைப் பிரிந்துப் போவது அப்பாவைப் பெரிதும் பாதித்திருக்கிறது. எங்கோ தூரதேசத்தில் அவர் தனிமையில் இருக்கும்போது , அவன் விளையாடுவது சித்திரமாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவ்வாறு நினைத்து எவ்வளவு இம்சை பட்டிருப்பார்! வாசகனுக்கும் இவ்வாறு நடந்திருந்தால் அவனுக்குள்ளும் சோகத்தை புகுத்தியிருக்கும் இந்த அவரின் இந்த நினைவுகள்.
மனைவி வெந்நீர் வைத்துக் கொடுத்தாள் என்று எழுதுவது எதனால்? அவர் தூரதேசத்தில் இருக்கும்போது இந்தக் கரிசனமும் அன்பும் அவருக்குக் கண்டிப்பாய்க் கிடைக்கப்பாவதில்லை., அவள் உடன் இல்லாமை அவரைத் துன்புறுத்தப்போகிறது . அவர் பிரியும் தருணத்தில் அவள் வாசல்வரை வந்து நிற்கும்போது அவள் கண்களைப் பார்க்கிறார். அவள் விழிகளில் ஈரம் மின்னுகிறது.வாசல் வரை வந்து நிற்பவள் அழாமல் என்ன செய்வாள். வாசகனுக்கும் அதனைக் கடத்திப் ஒரு படிமமாக்கிவிடுகிறார் கவிஞர்.
அவர் ஏறிய பேருந்து அன்றைக்கான முதல் பேருந்து. ஒரு பக்கம் விடியுமுன்னே வந்து நிற்கும் வாகனம். பேருந்தில் அவர் எங்கே உட்காருகிறார் என்பதுதான் ஆகக்டைசியான துன்பியலைக் காட்சியாக்குகிறது. அவர் தேர்ந்தெடுத்தது பின்புற கடைசி இருக்ககை. பின்புற இருக்கையிலிருந்துதான் அவர் மனைவியை ஒரு சிறு புல்லியாகத் தோன்றி மறையும் வரை பார்க்க ஏதுவாகும். இந்தக் காட்சி, பேருந்து குலுங்கிச் செல்வதுபோல நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடுகிறது.
இப்படி ஒவ்வொரு சொல்லிலும் பொருள் துலங்கி வருவதைக் காண்கிறோம். கவிதையைப் பற்றி.உரையாட உரையாட, கடையக் கடைய நெகிழ்ந்து வெளியாகும் நெய்போல தளும்பி மேலேறிவருக்கிறது இதன் உணர்ச்சிகள்.
ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கவனக் கூர்மையோடு வாசிக்கவேண்டும் என்று சொல்கிறார் யுவன். புரியவில்லை என்பதற்காக் முதல் வாசிப்பிலேயே அதனை விட்டு ஒதுங்கிவிடக் கூடாது. ஒருமுறை எவ்வளவு வாசித்தும் தனக்கே புரியாமல் கண்ணாமூச்சு ஆடியதைச் சொல்கிறார். ஆனால் சில காலம் கழித்து அது தன்னைத் திறந்து காட்டியது என்று சொன்னார். எனவே கரடுமுரடான ஒன்று அடுத்தடுத்த வாசிப்பின் மூலம் தன்னை நம் முன் அடையாளப்படுத்திக்கொள்ளும்.
ஒரு கவிதையைக் கூட்டாக இருந்து யோசிக்கும்போது அது கிளைகளாக முளைத்து எழுகிறது. அவரவருக்குத் தோணியதை சொல்லும்போதுதான், பல சன்னல்கள் வழியே ஒளி நுழைவதைப்போல, மேலோட்டமான புரிதலிலிருந்த கவிதை திரண்டு மேலெழுவதைப் பார்க்கிறோம். எழுத்தை யோசனையின் தளமாக மாற்றும்போதுதான், அது அறிவுப்பூர்வமான இயக்கமாக மாறுகிறது. யுவன் கவிதையின் பொருள் விரிவடைய மீண்டும் மீண்டும் வினாக்களையும் சந்தேகங்களையும் பங்கேற்பாளர்களை நோக்கித் தொடுக்கிறார். உரையாடல் விவாதமாக மாறி ஒரு கவிதையை வாசகனுக்கு மிக அணமைக்குக் கொண்டுவந்து விடுகிறது. ஒரு கவிதையை முழுதாய்ப் புரிந்துகொள்ளவேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. அது காட்சியாக மாறினாலே போதுமானது என்பது யுவனின் வாதம். காட்சியாக மாற்றிக்கொண்டதிலிருந்து அது அர்த்தமாகத் துலங்கி வரும் என்கிறார்.
மேற்சொன்ன இந்தக் கவிதை இப்படி விஸ்வரூபம் கொண்டு எழுந்தது எதனால்? கூட்டு வாசிப்பின் மூலம்தான் இது சாத்தியமானது. தன் வாழ்வனுபவம் சார்ந்து இந்தக் கவிதையைப் புரிந்துகொண்டவர்களால் இதன் பொருள் பேருருவமாகத் திரண்டு வருவதை கவனித்திருக்கலாம். முகாமில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் வழியாகவே இந்த கவிதை வாசிப்பின்பம் சாத்தியமாகியிருக்கிறது.
இப்படித்தான் பத்துக்கு மேற்பட்ட கவிதைகளை அலசி ஆராய்ந்தோம். அவற்றின் அர்த்த பரிமாணம் அலாதியாக விரிவடைந்து இரு நாட்களையும் இனிமையான பொழுதாக மாற்றிக் காட்டியது. அவற்றின் அடர்த்தியான கவித்துவம் மனதில் ஏறும் சுகானுபவம் தனிமையாக வாசிக்கும்போது கிட்டாதது என்றே எண்ணுகிறேன்.
நவீனக் கவிதைகள் என்றால் இருளான பிரதேசம் என்ற கருத்தியலே உள்ளது. அந்தக் கருத்தியலை உடைக்கும் வண்ணம் அவர் அதன் சன்னல்களையும் கதவுகளையும் அகலத் திறந்துகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். இறுக்கமான கவிதைகளைப் பலாத்காரமாகத் திறக்க ஒரு கவிதையை இங்கே சொல்லலாம் என நினைக்கிறேன்.
சாத்திக் கிடக்கும் சன்னல் கதவுகள்
(பசுவய்யா)
சாத்திக் கிடக்கும் சன்னல் கதவுகள் சிக்கிக்கொள்ளும்
அவ்வப்போது திறக்காதது தப்பு
இப்போது குத்து, உள்ளங்கையால் பலங்கொண்டமட்டும்
மணிக்கட்டு நரம்புகள் விர்ரென்று தெறிக்கும்
குத்து
தெறிக்கும்
விடாதே
ஒரு உபகரணம் தேடியேனும் அதனைத் திறந்துவிடு
வானத்தைப் பார்க்க உனக்குப் பல இடங்களுண்டு
வானம் உன் அறையைப் பார்க்க வேறு வழி ஏதுமில்லை
சிக்கும் கதவுகளைத் திறந்துவிடு.
யுவனின் உதவியால் வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சிக்கான பூர்வாங்கப் புள்ளி. இனி மெல்லத் துலக்கம் காணும்.
இதற்கு முக்கிய விசையாக இருந்து செயல்பட்ட யுவன் சந்திரசேகருக்கு மலேசிய நவீனக் கவிதை உலகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
வல்லினம் குழு இதனை அழகுற அரங்கேற்றியதற்கு என் அன்பும் வாழ்த்தும்.
Comments