அன்பழகன்,சைமன், முனைவர் குறிஞ்சி வேந்தன், கோ.புண்ணியவான் |
7. ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்
நவம்பர் 28 காலை ரம்யாஸ் விடுதியின் ஐந்தாவது மாடியில் காலை உணவு வகைகள் 100க்கு மேல் இருந்தன. You name it என்று சொல்வதற்கொப்ப எண்ணற்ற வகைகள். ஆனால் என் வயிறு ஒரு இட்லிக்கு மட்டுமே திறந்து மூடிக்கொள்ளும். ஒரு கப் காப்பி அவ்வளவே.
மணி 11.00 காலையில் வாடகைக் கார் வரும் கல்லணை பார்க்கலாம் என்று சொன்னார் சைமன்.நான் கல்லணையை ஏற்கனவே இருமுறை பார்த்துவிட்டேன். என்னைக் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டிருந்தது.கடந்த மாதம் மனைவியோடு போனபோதுகூட பார்த்துவிட்டுத்தான் வந்தேன். எனக்கு விருப்பமில்லை என்றாலும் நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.கலந்து கொண்டேன். திரண்டுவந்து மோதிச் சீறும் ஆற்றைப்பார்ப்பது எப்போதுமே மனம் களிப்புறும். பஞ்சுப்பொதிகளாய் விம்மிப் புடைத்து உடையும் குமிழிகள் நிலையில்லாத மானுட வாழ்வைப் பிரதிபலிப்பவை.பரந்து விரிந்து காட்சிதரும் நதியை கண்கள் தரிசிப்பது ஒரு வகை சுகானுபவம். குளிர்மை உள்ளுடல் முழுதும் நிலத்திலிருந்து ஊறும் ஊற்றெனப் பரவும்.
தொலைபேசியில் முனைவர் குறிஞ்சி வேந்தனிடமிருந்து வந்த இரு அழைப்புகளை தவறவிட்டிருக்கிறேன் என்று தெரிந்தது. இம்முறை நான் அழைத்தேன். நான் கையறு நாவலைப் பற்றி மாணவர்களோடு பேசவேண்டும் என்றார். 2,30 மணிக்கு நிகழ்ச்சி.ஆனால் கல்லணையைப் பார்த்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட இயலுமா என்று தெரியவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் உறுதி படுத்துகிறேன் என்றேன்.
ஓட்டுனரிடம் சொன்னேன் நான் 2.30க்கெல்லாம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் இருக்கவேண்டும் என்று. "போய்ர்லாம் சார்" என்றார். குறிஞ்சி வேந்தனிடம் 3.00க்குள் வந்துவிடுவேன் என்று உறுதியளித்தேன்.
கையறு நாவலைக் கண்டிப்பாய் மாணவர்கள் வாசித்திருக்க மாட்டார்கள் என்று தெரியும்.கரிகாற்சோழன் புத்தக விருதுக்கு 5 நூல்கள் மட்டுமே அனுப்பிவைத்திருந்தேன். அவை நடுவர்களுக்குப் போயிருக்கும். எனக்குத் தெரிந்து முனைவர் வெற்றிச் செல்வன் வாசித்திருந்தார். முனைவர் குறிஞ்சி வேந்தன் சயாம் மரண ரயில் பற்றிய விரிவான கள ஆய்வு செய்து குறுந்தட்டும் அது பற்றிய நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார் என்றும் தெரியும். முன்னர் அவருடைய சயாம் மரண ரயில் தொடர்பான குறுந்தட்டு வேண்டுமென்று கேட்டேன். அதில் சில திருத்தங்கள் செய்துதான் தர இயலும் என்றார், இதன் காரணமாக அவர் கையறுவை வாசித்திருக்க வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.
மாணவர்களுக்கு இந்த வரலாறு முழுமையாகத் தெரிந்திருக்காது என்று முடிவெடுத்து அந்த வரலாறையும் நாவல் மையமிடும் பொருண்மையையும் பேசலாம் என்று முடிவெடுத்து அது பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
அரைமணி நேரப் பயணத்தில் கல்லணையைச் சேர்ந்திருந்தோம்.
கரிகால சோழ மன்னனால் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்லணை ஒரு மாபெரும் சாதனை. கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று தோராயமாய்ச் சொல்லலாம்.நான் ஆய்வு செய்தவரை கரிகாலன் கல்லணை அமைப்பதில் ஒரு முன்னோடி. அதற்கு முன்னர் பெருகிவரும் நீரைத் தடுத்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யும் நீர்பாசன முறை உலகில் எங்கேயும் இருந்ததில்லை என்றே வாசித்திருந்தேன். எனவே கரிகாலன் கல்லணை உலக அறிவியல்/ பொறியியல் சாதனைக்கு ஒரு தொடக்கப் புள்ளி. கல்லணை வளாகத்தில் Ani cut என்றே ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அணைக்கட்டுதான் அனிகட் ஆகியிருக்கிறது. மாங்காய் mango ஆனதுபோல அரிசி rice என்ற ஆங்கில சொல்லானதுபோல அணைக்கட்டு ani cut ஆகியிருக்கிறது. இந்த வார்த்தையை வைத்தே ஐரோப்பியர்களுக்கு அணைக்கட்டு தமிழகத் தஞ்சையிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். ஒரு நொடிக்கு 2 லட்சம் கன நீர் பாயும் காவிரி அணைக்கட்டு இது.(வரலாற்றாசிரியர்களுக்கு, மாற்றுக் கருத்திருந்தால் சொல்லலாம்)
அதனால்தான் கரிகாலன் தமிழகத்தின் மாபெரும் ஆளுமை என்றே கொண்டாடப்படுகிறார். பெருகிவரும் காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் விவசாய மக்கள் படும் சிரமத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே கரிகாலன் அணை கட்டுமானம் பற்றி கரிசனத்தோடு யோசித்ததன் பயன்தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்று சொல்வதில் நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது/ பெருமைகொள்கிறது.
அணைக்கட்டின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்துவிட்டுப் புறப்பட்டு விட்டோம். வழியில் சாப்பிட ஒரு சாலையோர உணவகத்தில் நின்றோம். அந்த உணவகத்தின் உணவுபற்றி ஓட்டுனர் விதந்தோதியதுபோல சுவை இல்லை. எனக்கு காமாட்சி உணவகத்தில் சாப்பிடவே விருப்பமாக இருந்தது. அங்கே சாப்பிட்ட சுவை என்னை அங்கு அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அங்கு போகவேண்டும் என்பதற்கு ஓட்டுனர் செவிகொடுக்கவில்லை.
உணவுக்கு அழைப்பாணை கொடுத்துவிட்டு அமர்ந்தபோது எழுத்துத்தோழர் சிங்கை ஷாநவாஸ் நண்பர்களோடு புடைசூழ வந்திருந்தார். அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு கீழே இறங்கியதும் என்னோடு தங்கும் வசதி குறித்து தகவல் தெரிவித்துக்கொண்டிருந்த நண்பர் செழியன் வந்து சேர்ந்திருந்தார். செழியனை ஏற்கனவே இருமுறை சந்தித்திருக்கிறேன். எனவே அவரோடு பழகுவதில் எந்த முகமனும் தேவையில்லை. வந்தோரை வரவேற்று உபசரிக்கும் நற்குணத்தான் அவர்.
மணி இன்னும் 2 ஆகியிருக்கவில்லை. அந்த உணவகத்திலிருந்து தஞ்சை பல்கலை ஐந்து நிமிடத்தில் சேர்ந்துவிடலாம் என்று சொன்னார் செழியன். எனவே குறித்த நேரத்துக்கு முன்னரே அடைந்துவிட இயலும். செழியன் நான் கிள்ம்பிவிட்டதாகத் தகவல் தெரிவித்தார். எனக்கு நேரம் தவாறாமையும் தாழ்த்தாமையும் முக்கியம்.
நான் விருந்தினர் வளாகத்தை அடைந்துவுடன் ஒரு மாணவர் என்னை விரிவுரை அறைக்கு அழைக்க விந்திருந்தார். நான் குளித்துவிட்டுக் கிளம்பலாம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் மாணவர்கள் காத்திருப்பார்களே என்பதற்காக முகத்தைமட்டும் கழுவிக்கொண்டு கிளம்பிவிட்டேன். முனைவர் தன்னுடைய புதிய காரில் ஏற்றிக்கொண்டு. தட்டு மலர்களோடு என்னை சில மாணவர்கள் வரவேற்றார்கள். குங்குமத்தை பெற்றுக்கொண்டு விரிவுரை அறைக்குள் நுழைந்தேன். 200 மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆண்டு ஒன்றிலிருந்து ஆண்டு ஐந்து வரையிலான மாணவர்கள் இருந்தார்கள். மிகுந்த களைப்போடு இருப்பதை அவர்களின் முகங்கள் பிரதிபலித்தன. காலையிலிருந்தே அங்கே உரைகளைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர். களைப்பின் சமிக்ஞயை காட்டியபடியேதான் இருந்தனர். நான் 15 நிமிடமே பேசுதாக இருந்தேன். மிகுந்த சலிப்பைத் தரும் விடயம் ஒன்று நான் பலமுறை தமிழ்நாட்டில் அவதானித்ததைச் சொல்ல வேண்டும். காலையிலிருந்தே மாணவர்கள் அங்கே அமர்ந்திருக்கின்றனர்.கரிகாற்சோழன் விருது பெற வந்த ஒரு சிலர் அவர்களோடு உரையாடிய பின்னர் நானும் அவர்களின் ஒருவனாகப் பேசவிருந்தேன். இத்தனை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் என்னையும் கையறு நாவலையும் அறிமுகப்படுத்தி மூவர் பேசினர். ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் கிட்டதட்ட முக்கால் மணி நேரம். மாணவர்கள் களைப்போடு இருப்பதை நான் முதல் பார்வையிலேயே அவதானித்துவிட்டேன். விருந்தினர் சற்று விரிவாகப் பேச எண்ணி மாணவர் நிலையைப் பார்த்துப் பரிதாபபட்டு நேரத்தை சுறுக்கிக் கொண்டால், பேச்சின் மையப்பொருண்மையை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள வாய்ப்பில்லாமலேயே போய்விடும் அல்லவா! துணைவேந்தர் வெறும் ஐந்து நிமிடங்களே பேசி விடைபெற்றுக்கொண்டார்.
இருப்பினும் அந்த வாய்ப்பை நான் பெருமையாகவே கருதுகிறேன். என் நேரத்தைக் குறைத்துக் கொண்டாலும் நான் அதனை நிறைவாகவே பயன்படுத்திக்கொண்டேன்.
நிகழ்ச்சி முடிந்து ஒரே ஒரு மாணவர் மட்டுமே கேள்வியை எழுப்பினார். அருமையான வினா அது. அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்திடமிருந்து சப்பானியர்களுக்கு எதிர்ப்பாக போராட்டம் எழவில்லையா என்பதே அவர் வினா. ஒடுக்கப்பட்ட சமூகத்திடமிருந்து போராட்டம் எழவில்லையென்றாலும், காட்டுக்குள் அடைக்களமாகிய கம்யூனிஸ் போராளிகள் சப்பானியர்களை அச்சுறுத்திக்கொண்டேதான் இருந்தனர்.இந்த கொரில்லாக்கள் சப்பானியர் ஆகரமிப்புக்கு முன்னர் காலனித்துவவாதிகளான பிரிட்டிசாரை எதிர்த்தவர்கள் ஆவர். தொடர்ந்து வினாக்கள் எழாமல் இருந்ததைப் பார்க்கும்ப்போது மாணவர்கள் 'எப்படா விடுவாங்க' என்பதான சமிக்ஞ்சையாகப் பட்டது. இதில் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் கலந்துகொள்ளவில்லை. கரிகாற்சோழன் விருதுவிழாவை ஒருங்கிணைக்கும் பரபரப்பில் இருந்தார்.
நான் குளித்துவிட்டு உடைமாற்றிக்கொள்ள நேரம் இருந்தது.
இணையுங்கள்.......
Comments