Skip to main content

ஜோர்ஜ்டௌன் அனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்

 

2. ஜோர்ஜ்டௌன் அனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்

    


ஜெயமோகன் சட்டைக்குப் பொத்தான்கள் போட்டவாறே சற்று நேரத்தில் வெளியே வந்தார். நலம் விசாரித்தபடியே நான் வைத்திருந்த என் கையறு நாவலை  அவரிடம் நீட்டினேன்.தன் வலைத்தளத்தில் கையறு நாவலைப்பற்றி மூன்றுமுறை எழுதியிருந்தார். நவீன், சு.வேணுகோபால் போன்ற நம்பகம் மிகுந்தோரின் ரசனை விமர்னசங்களை வாசித்தபின்னரே மலேசியாவின் முக்கியமான நாவல் கையறு என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவர் அதனை வாசித்திருக்க வாய்ப்பில்லை என்று நான் கனித்தது சரியாக இருந்தது.

"ஜெ நான் ஜீவ கரிகாலனிடம் உங்களுக்கு ஒரு பிரதியை அனுப்பச்சொல்லியிருந்தேன்" என்றேன்.

"இல்லையே ஒரு தபாலைக்கூட மிஸ் பண்ணமாட்டேன், வரவில்லையே" என்றார்.

"அதனால்தான் எடுத்து வந்தேன் " என்றேன்.

"யாருக்கும் கொடுக்க மட்டேன்னு மறைச்சி மறைச்சி வச்சிருக்கீங்களாம்." என்றார்.

" இல்லையே மலேசியாவில் மட்டும் 700 பிரதிகள் விற்றிருக்கின்றன, உங்கள் பதிவால் தமிழ் நாட்டிலும் பரவலான வாசிப்புக்குப் போயிருக்கிறது,"என்றேன்.

"நாவலைக் கையில் வாங்கியவர் நூல் கட்டமைப்பு நல்லா நேர்த்தியாக வந்திருக்கு," என்றார். யாரிடம் கொடுக்காமல் மறச்சி மறச்சி வச்சிருக்கீங்களாம் என்று போட்டுக்கொடுத்தவரை தேடிக்கொண்டிருக்கிறேன்.

அதற்குள் அருண்மொழியும் இணைந்துகொண்டார்.

பின்னர் அன்னபூர்ணாவுக்கு அழைத்துச் சென்று தேநீர் பலகாரம் பரிமாறினோம். 

மை ஸ்கில் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் வித்யாரண்யத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். அவர்கள் சிங்கை கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த சேக்ஸ்பியர் நாடகங்களின் முக்கியமான காட்சிகளை நடித்துக் காட்ட வந்திருந்தனர். ஆசிரியர் விஸ்வநாதன் அந்த நாடகக்காட்சிகளுக்கு இயக்குனராக இருந்தார்.2014 பினாங்கில் அனைத்துலகக் கதைசொல்லிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். தமிழில் கதை சொல்ல என்னையும் அழைத்திருந்தார்கள். அந்நிகழ்ச்சியில் தமிழில் கதை சொல்ல இன்னொருவரும் வந்திருந்தார். மைஸ்கில் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்த அதே நபர்தான் அந்த இன்னொருவர் என்று என் instinct  என்னைத் தட்டிகொண்டிருந்தது.. அந்த விஸ்வநாதனா இவர்?. என் வலைத்தள  பதிவில் பழைய கோப்புகளை புரட்டி அதனை உறுதிப்படுத்தினேன், அதே விஸ்வநாதன்தான்.

பினாங்கில் 2014 அனைத்துலக கதைசொல்லிகள்




                           2014 ல் அனைத்துல கதைசொல்லிகள் நிகழ்ச்சியில்           மாணவர்களுக்குக் கதை சொன்ன விஸ்வநாதன்

அனைத்துலக இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் முன்னெடுப்பதில் பினாங்கு அரசு முன்னோடியாய் விளங்குகிறது. மற்ற மாநிலத்துக்கோ மலேசிய அரசுக்கோ மலாய் இலக்கியம் இலக்கியவாதிகள் மட்டுமே முக்கியம்.பிற மொழி இக்கியங்கள் கற்றால் அறிவாளியாகிவிடுவார்கள் என்ற அச்சம் போலும்! பதவி ஏற்றிருக்கும் புதிய அரசு இந்தக்கறையைப் போக்க வேண்டும்.

அதனை அடுத்து ஜெயமோகனோடு ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பத்து பேர் கலந்துகொண்டோம். வழக்கம் போல அவரேதான் பேசினார். இந்து சமயத்தில் இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நன்னெறி வாக்கியங்கள் தத்துவங்கள் வெவ்வேறு சொற்களில் சமய அறிஞர்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். wise men think alike என்ற சொற்றொடரே அப்போது  எனக்கு நினைவுக்கு வந்தது/


வாசகர் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி



இரவு உணவுக்குப் பின்னர் நான் இல்லம் திரும்பினேன். 

23ம் நாள் காலை கடாரத்தில் சோழ அடையாளங்களான பூஜாங் பள்ளத்தாக்கு அழைத்துச் சென்று நேராக என் இருப்பிடம் வந்தார்கள். சென்னை கறி ஹௌசில் மதிய உணவை முடித்துக்கொண்டு சுவாமி குமாரசாமி ஜெயமோகன், அருண்மொழி ஆகியோர் ஜிட் ரா புறப்பட்டனர். அன்றிரவு அங்கு தங்கல்.

மறுநாள் அதாவது 24.11.22ல் தான் ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழா துவங்குகிறது. நான் ஜெயமோகனையும் அருண்மொழியையும் அழைத்துக்கொண்டு பினாங்கின் இலக்கிய விழாவுக்குச் செல்லவேண்டும். நான் சுங்கைப்பட்டாணியை விட்டுக் கிளம்பும் நேரத்தில் குமாரசாமியைத் தொடர்பு கொண்டு கேட்டேன். நான் அழைத்து வருகிறேன். பின்னர் ஜெமோவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் திரும்ப்விடுவேன் என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். நான் முதலில் போய் எனக்கு ஒதுக்கப்பட்ட விக்டோரியா இன் ஓட்டலில் காத்திருந்தேன். அ.பாண்டியனும் அங்கு வந்து சேர்ந்திருந்தார். நான் என் பையை அறையில் வைத்துவிட்டு கீழ்த்தளத்தில் காத்திருந்தேன். ஜெயமோகன் தம்பதியரை வரவேற்று ரிசெப்சனிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை அருகில் உள்ள பிர்ஸ்டிஜ் ஓட்டலில். அது ஓர் 5 நட்சத்திர விடுதி. அவரை அங்குக் கொண்டு சென்றதும் சிங்கை கனகலதாவும் லோஷினியும் சந்தித்தேன். லதாவை சிங்கயில் சந்தித்திருக்கிறேன். லோஷினியை அப்போதுதான் பார்க்கிறேன். சிங்கை கலை மன்றத்தின் ஒரு முக்கிய அதிகாரி அவர். 

எங்களை விருந்து ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழா திறப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு ஏற்றிச்செல்ல 2  பேருந்துகள் காத்திருந்தன. அந்த இடத்தில் வாகனம் நிறுத்தும் வசதி இல்லையென்று எச்சரிக்கப்பட்டது. ஜெயமோகன் வரத் தாமதமானதால் பேருந்து புறப்பட்டுவிட்டது. நாங்கள் பாண்டியன் காரில் அங்கே சென்றோம். எப்படியோ காரை நிறுத்த இடம் கிடைத்தது. 

                                                         லோஷினி தேவகுமார்

பரிமாறப்பட்ட உணவு வகை பெரும்பாலும் ஐரோப்பிய வகைமை. நாவின் இந்திய உணவுச் சுவை தேவையிலிருந்து ஐரோப்பிய உணவுச் சுவைக்கு மடை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சுவையை ருசிப்பதற்கு அந்த உளவியல் உபாயத்தை மேற்கொண்டால் சுவைக்கலாம்.ஜெமோ இரவில் பழங்கள் உண்பவர். எனவே அங்கே பரிமாறப்பட்ட திராட்சை பழங்களை அவருக்காக கொண்டு வந்து பரிமாறினேன். நிகழ்ச்சியின் தலைவர் போலின் ஜெயமோகனை அறிமுகப்படுத்த பலர் சூழ்ந்து கொண்டு உரையாடியபடி இருந்தனர்.

சிங்கை எழுத்தாளர் லதா.
                                                   

ஜோஜ்டௌன் இலக்கிய விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பிரிட்டிசார் காலனித்துவ ஆட்சியில் வனிக மையமாகத் திகழ்ந்த  பினாங்கு எஸ்பிலேனேட் கடற்கரை ஓரம். அங்கேதான் பிரிட்டிசார் நிறுவிய புராதனக் கட்டடங்கள் அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அதில் பல இன்றைக்கும் அலுவலகங்கங்களாகவும் காட்சிப்பொருளாகவும் விள்ங்குகின்றன. அந்த நிகழ்ச்சியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மிகப் பொருத்தமானது. ஏனெனில் அந்த இடத்தின் பெயரே ஜோர்ஜ்டௌந்தான். 1786ல் பினாங்கை பிரான்சிஸ் லைட் கண்டுபிடிதத்து, நிறுவிய வரலாற்றை துல்லிதமாகச் சொல்லும் இடம் அதுதான்.பினாங்கின் புராதன காலனித்துவ வரலாற்றின் அடயாளங்கள் மாறாமல் பாதுகாப்பதை அங்கேதான் பார்க்க முடியும். வெள்ளை நிறத்திலான ஐரோப்பிய வடிவமைப்பைக் கொண்ட கட்டடங்களை அச்சு மாறாமல் அங்கேதான் பார்க்க முடியும். நான் இத்தாலி பிராண்ஸ் ஸ்பேய்ன்   நாடுகளுக்குச் சென்றபோது புராதன வரலாற்றிடங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதைப் பார்த்து பிரமிக்க முடிந்தது. பழையதில் வரலாற்றைப் பார்க்காமல் வயதைப் பார்த்து மறக்கடிக்கும் போக்கு நம்மிடையே அதிகம் என்றே சொல்லலாம்.



உணவுக்குப்பின்னர் பாண்டியன் காரில் அறுவரும் அருகிலுள்ள எஸ்பிலேனெட் கடற்கரைக்கு சென்றோம்.

இரவில் கூட்டம் அதிகமாகவே காணப்படும் இடம் அது. 

அலைகள் வெள்ளி மீன்கள் போல கடற்பரப்பின் மேலே நீந்தி அலையாடிக்கொண்டிருந்தன. மழை  பெய்து மண்ணை புணர்ந்த ஈரம் மாறாமல் இருந்தது. காற்றில் கலந்து குளிர்மை பட்டும் படாமல் வருடிக்கொண்டிருந்தது. அக்கறையில் பட்டற்வொர்த் நகரத்தில் விண்மீன்கள் சிமிட்டிக்கொண்டிருந்தன. சரக்குக் கப்பல்கள் கடல் நடுவிலும், உல்லாசக் கப்பல்கள் கரையை அணைத்தபடி இருந்தன. கம்மியான ஒளியை உள்வாங்கி கடல் பரப்பு வண்ண வண்ண பிம்பங்களை பிரதிபலித்துக்கொண்டிருந்தது. கடலின் மேற்பரப்பு ஒரு கரிய படுதாவல் மூடப்பட்டது போல இருந்தது. அலைகள் அடக்கி வாசித்துக்கொண்டிருந்தது. உல்லாசக் கப்பல்களைப் பார்த்த ஜெமோ ஸ்வீடனில்  தன் குடும்பத்தோடு  ஒரு நாள் முழுதும் உல்லாசக் கப்பலிலேயே குதூகளித்ததைச் சொன்னார்.

மழை துறல் போட ஆரம்பித்தது மீண்டும் காரில் ஏறி ஓட்டலுக்கு வந்துவிட்டோம். 

25 காலையில் மீண்டும் வித்யாரண்யம் புறப்பட வேண்டும். மாலை 5 மணிக்கு தமிழ் விக்கி அறிமுக விழாவும், அதனையடுத்து சேக்ஸ்பியர் நாடகப் முக்கியப் பகுதிகள் அரங்கேற்றம் காணவிருந்தது. 

குறுகிய காலவரையறையில் இடம் மாறி மாறி இலக்கியம் வளர்ப்பது திகைப்பான அனுபவமாக இருந்தது.




இணையுங்கள்.





Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...