Skip to main content

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama
                            Mr.Velan
 எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ?

என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது. 

by

தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.

 நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் 50 பேருக்குக் குறைவாகவே வந்திருந்தனர். எஞ்சியிருந்த 100 நூல்களும் தீர்ந்துபோகவே மேலும் 100 நாவல்களை யாவரும் பதிப்பாளரிடமிருந்து தருவித்தேன். இப்படி நான்கு முறை தருவித்திருக்கிறேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 1000 நூல்களைக் கூட மலேசியாவில் விற்றுவிட முடியாத நிலை உண்டு. மலேசிய வாசகர்களில் பெரும்பாலோர் வானம்பாடி , நயனம் போன்ற கேளிக்கை இதழ்களை வாசிப்பவர்கள்.அந்தத் தரப்பினர் ஒருபோதும் சீரிய வாசிப்பை மேற்கொள்ளாதவர்கள். அவர்களுக்கு அதுவே உவப்பூட்டும் பெருங்கலை. அதன் பின்னர் சித்தியவான் நிகழ்ச்சியில் 30 நாவல்கள் ஓடின,

கடைசியாக 1.10 .23 ஞாயிற்றுக்கிழமை சிறம்பானில் சிறிய அளவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனை ராம்சா என்ற கல்விக் கழகம் முன்னின்று நடத்தியது. நான்தான் அவர்களை நூல் அறிமுக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யச்சொல்லிக் கேட்டுக்கொண்டேன். பல இடையூறுகளுக்குப் பின்னர் அவர்கள் நிகழ்ச்சி நடத்த இணங்கினர். இதில் முக்கியமான தடை, ஏன் அவருக்குச் செய்கிறீர்கள், அவருக்குச் செய்யாதீர்கள், அவர் பணக்காரர்  என்றே ராம்சா கல்விக் கழக நிறுவனரான ராமச்சந்திரனை தொலைபேசியில் அழைத்து தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்புக்குரல் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார் ராமச்சந்திரன். ஒரு கட்டத்தில் அதனைக் கைவிடலாமா என்றுகூட  அவர் கருதியிருக்கக்கூடும். அவருடைய உற்சாகம் சரிந்து குரல் தணிந்து ஒலித்துக் கொண்டிருப்பதைச் சில உரையாடல்களில் நான் உணர்ந்தேன்.

 "ராமா நீங்கள் அறிவார்ந்த விடயங்களை மக்களுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியில் இருக்கிறீர்கள். இந்தத் தடைகளால்தான் நாம் இரட்டிப்பு உற்சாகம் கொண்டு செயல் படவைக்கும்." என்றேன். அந்த வார்த்தைகள் அவரைச் சூடேற்றியிருக்க வேண்டும். அவரும் ராம்சா கல்விக் கழகத்தின் செயலாளர் கோவினும் , பொருளாளர் வேலனும் கூடுதல் உற்சாகத்தோடு நிகழ்ச்சியைச் செய்து முடித்தனர். இராமச்சந்திரன் இடையில் ஒருமுறை சொன்னார், சார் உங்களை இங்கே பல வாசகர்களுக்குத் தெரிகிறது நாம் இன்னும் பெரிய மண்டபத்தில் செய்வோம்." என்றார்.

நான் சொன்னேன்," வேண்டாம் என் நிகழ்ச்சிக்கு வாசகர்கள் வந்தாலே  போதும் அவர்களின் வரவே படைப்பளுக்கான மனநிறைவு. நீங்கள் உங்கள் இடத்திலேயே வையுங்கள், பெரிய மண்டபத்திலும் உண்மை வாசகர்கள் 40 பேருக்கு மேல் வரமாட்டார்கள் என்றேன், இது எல்லாப் பெரு நகரங்களிலும் உள்ள உண்மை நிலைதான்.

 "அமுக்கி அமுக்கி ஒக்காந்தாலும் இந்த மண்டபம் 40 பேரைத்தான் கொள்ளும்" என்றார்.

நான் அதுவே நிறைவான கூட்டம் என்றேன். 

அங்கேதான் நிகழ்ச்சி அமைந்தது. 41 பேர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி 4 மணி நேரம் நடந்தது, யாரும் இடையில் கூட்டத்தைவிட்டு எழுந்து போய்விடவில்லை. நான் சமூக வளர்ச்சிக்கு இலக்கியத்தின் தேவை என்ற தலைப்பில் அரை மணி நேரம் பேசினேன். மக்கள் மிகுந்த கவனத்துடன் செவிமடுத்தனர். அதற்கு முன்னர் ஒரு சிறிய இசை நிகழ்ச்சி, பின்னர் இடைநிலைப் பள்ளி முதல்வர் திரு வேலன் கையறு நாவலை அறிமுகம் செய்து 40 நிமிடங்கள் பேசினார். நாவல் அவரை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். அவர் பேச்சில் உற்சாகமும் உண்மையும் இருந்தது, போலியான பாராட்டை அவர் வைக்கவில்லை. ஓரிரு குறையையும் சொன்னார். நான் வெளியீடு செய்த நிகழ்ச்சிகளில் கையறு நாவலுக்கு இவ்வளவு அடியாழத்துக்குள் நுழைந்து யாரும் விதந்தோதியதில்லை. 41 பேருக்கும் அது ஒரு இலக்கிய விருந்தாக அமைந்திருந்தது. அதனை அடுத்து ராம்சா கல்விக் கழகத்தின் தலைவர் இராமச்சந்திரன் அக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து நகைச்சுவை ததும்ப பேசினார். கோவின் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார், இவர் கல்வி இலாகாவின் முக்கிய அதிகாரியும் ஆவார், எனவேதான் நேர நிர்வாகத்தை நேரத்தையாகக் கையாண்டார். 


மலேசிய ஸ்ரீகாந்தன் என்ற புனைப்பெயரில் புகழ்பெற்ற இணையதளங்களில் சிறுகதைகளை எழுதிப் புகழடைந்துகொண்டிருக்கும்  என் இனிய நண்பர் ஸ்ரீஇராமுலு என் கே.எல் சிறம்பான் பயணப் பணிகளில் உடன் இருந்தார். முதல் நாள் இரவு அவர் வீட்டு பெல்கனியில் நல்லிரவு வரை முயக்க நிலை எய்தி இலக்கியத்தில் கிரங்கி இருந்தோம்., belcony யை பால்கனி என்று தமிழில் கூகல் சொல்கிறது. பலவகைப் பால் சுவைகொண்ட பழங்களை அங்கிருந்தே கையில் பறித்துவிடலாம் என்பதால் இந்த மொழிபெயெர்ப்பாக இருக்கலாம்.

நிகழ்ச்சி முடிந்து நான் ரயிலில் அன்றிரவே  வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடமிருந்து  ஒரு அழைப்பு வந்தது. 

"சார் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னரும் எதிர்ப்பு இருந்தது, அது முடிவுற்றும் தொடர்கிறதே சார், ஏன் சார் உங்க மேல இவ்ளோ பிரச்னை?" என்றார்,

"யாரு பேசியது?:"

" அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர்," என்றார்.

நான்," யாரு அதன் நடப்புத் தலைவரா?" என்று கேட்டேன்.

"இல்லை, நான் பேர் சொல்லமாட்டேன் என்றார்"

இந்த மாதிரி சில்லுண்டித்தனத்தை சைமன் செய்யமாட்டார் என்று எனக்குத் தெரியும், அவர் எனக்கு நல்ல நண்பர். 

"அதன் முன்னால் தலைவரா? என்றேன்.

"நான் யார்ன்னு சொல்ல மாட்டேன்," என்றார் மீண்டும்.

"சரி என்னதான் சொன்னார்?"

"நாங்கதான் எழுத்தாளருக்கு நூல் வெளியீடு செய்து தருவதற்கு இருக்கமே, நீங்க ஏன் செய்றீங்க?" என்றாராம்.

அவர் நான் பேர் சொல்லமாட்டேன் என்று சொல்லும்போதே அவரின்  உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று இங்கே அழுத்தத் திருத்தமாய் சொல்ல வேண்டியதில்லை. (ராமாவெல்லாம் படிப்பறிவு உள்ளவர்)

அந்த அநாமதேய 'கரிசன' வாக்கியத்தைத் தொட்டு எனக்குச் சில கேள்விகள் எழுந்தன.

1.  கையறு வெளிவந்து கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட நாங்கள் வெளியீடு செய்து தருகிறோம் என்று அவர் என்னைக் கேட்டதில்லை.

2, சரி என்னைத்தான் கேட்கவில்லை, எனக்கும் அவருக்கும் ஆகாது என்பதால். நூல் எழுதிய பிற படைப்பாளர் யாரையும் கேட்டதுமில்லை. நான் சில ஆண்டுகளுக்கு  முன்னர் என் 'செலாஞ்சார் அம்பாட்' நாவலுக்கு ஒரு வெளியீடு செய்து கொடுங்கள் என்று உதவி கேட்டதற்கு அவர் இல்லை முடியாது அப்படிச் செய்தால் எல்லா எழுத்தாளர்களுக்கும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்,  ஆனால் வைரமுத்துவுக்கு சிகப்புக் கம்பளம் விரித்த வரவேற்று செய்துகொடுப்பார்.( ராமாவிடம் அவர் சொன்னதற்கும் , முன்பு என்னிடம்  முடியாது என்றதற்குமான உள்ள முரண்பாட்டை கவனிக்கவேண்டும்.

3. ஏன் மெனக்கட்டு  ராமாவை அழைத்துச் சொல்லவேண்டும் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. என் முந்தைய கட்டுரையில் சை பீர் முகம்மதுவின் வேரும் விழுதுகளும் பெருந்தொக்குப்புக்கு  எழுத்தாளர் சங்கம் அவருக்குச் சிறப்பு விருது வழங்கியிருக்க வேண்டும் என்று விமர்சனத்தற்கான எதிரொலி இது.நான் முன்னரும் சிலமுறை விமர்சித்திருக்கிறேன். 

நாங்கள் செய்ய மாட்டோமா என்றால் நீங்களும் செய்யக் கூடாது என்றுதான் அர்த்தம் வரும் என்று ராமாவுக்கே தெரியும்போது  அவரை  விமர்சிக்கும் எனக்குத் புரியாமல் போய்விடுமா என்ன?

நான் நூல் வெளியீட்டில் ஒரு ஒழுங்கான வரையறையைக் கொண்டிருப்பவன். 

1. நூலின் அடக்க விலைக்குக் குறைவாகக் கொடுப்பேனே ஒழிய நிகழ்ச்சியில் அதிக விலைக்கு  வைக்கவே மாட்டேன்.

2. வாசகர்கள்தான் என் குறிக்கோள், மந்திரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெரும் தொழிலதிபர்களை நான் அழைப்பதில்லை. அவர்களுக்கு கும்பிடு போட்டு வார்த்தைகளால் கூரை மேல் உட்கார வைக்கும் கலாச்சாரம் எழுத்தாளனுக்கு இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். 

3. என் நூலை வெளியிட பெரும் பிருஷ்டக்காரர்கள் வீடு வரைக்கும் சென்று அழைப்புவிடுப்பவனல்ல நான் .

4. பிரபல பத்திரிகை நிழலில் அடையாளம் தேடிக்கொள்பவனல்ல நான்..

5, மேடையில் அவர்களுக்கு மாலை மரியாதை செய்து அவர்களிடம் இல்லாத வீரதீரப் பிரதாபங்களைக் முரசொலித்துக் கூவி பெரும் பையை நிரப்பும் குறிக்கோளன் அல்ல நான்.  (இவர்களெல்லாம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்று தெரியாத உங்களுக்கு?)

சில நாட்களுக்கு முன்னரான என் வலைத்தள கட்டுரையில்  யாரெல்லாம் அந்தச் சங்கத்தை விமர்சிக்கிறார்களோ அவர்களையெல்லாம் அது கவனமாகக் குறித்துவைத்துக்கொள்ளும் என்று எழுதியிருந்தேனல்லவா. அந்தக் குறித்துவைத்தலில் ஒரு சான்றுதான் இந்த இடையூறு.http://kopunniavan.blogspot.com/2023/09/blog-post_27.html

 உங்களுக்கு ஒரு  துப்பு clue கொடுக்கிறேன். .'தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்'  அதனை உங்கள் மேலான நினைவுக்குக் கொண்டுவாருங்கள். . 

இன்னொருவர் அவர் பணக்காரர் அவருக்கு ஏன் செய்தீர்கள் என்று சொல்லியிருக்கிறார். (நான்  பணக்காரனாக இருப்பதைக் கனவுகாணும்போது சௌகரியமாகத்தான் இருக்கிறது.) அப்படியென்றால் நூல் வெளியீடு கண்டிப்பாக வணிக நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பது அவர்களின் கருத்து. இந்த வணிக நோக்கம் நூல்வெளியீடுகளுக்கு அவசியம் தேவை எனற நிலை  இங்கே மரபாகிக் கிடக்கிறது. வணிக நோக்கம் மட்டுமே அவர்கள் படைப்பின் தரத்தை நிர்ணயம் செய்யும்போல்! அந்த வகையிலாவது தரத்தை எய்தட்டும். 

 கலை இலக்கிய வளர்ச்சியின் மீது தே நி நி கூ சங்கம் காட்டும் அக்கறை பிற இயக்கங்களும் காட்டவேண்டும்.   மலேசிய கலை இலக்கிய வளர்ச்சிக்கு தே நி நி கூட்டுறவு சங்க அறவாரியத்தின் பங்களிப்பு இந்த நாட்டில் வேறெந்த  இயக்கமும் செய்ய முடியாத அளவுக்கு மிக அபரிமிதமானது. தே நி நி கூ சங்கத்தின் மேல்  எப்போதுமே  எனக்கு மரியாதை உண்டு. . 

இந்தச் சில மனிதர்களின் இடையூறிலும் ஒரு வலைப்பின்னல் தொடர்பு இருக்கிறது. இவர்கள் எல்லாருமே ஒரே குழுமத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

மிகச் சாதாரண நூல் அறிமுக நிகச்சிக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு கிளம்ப வேண்டும்? அவர்களின் தரமான இலக்கிய வளர்ச்சியை நோக்கி செயல்படவேண்டி    நாம் விமர்சனத்துக்குள்ளாக்குகிறோம். விமர்சனம் என்பது ஒரு செயலின் குறைபாட்டைக் கலைத்து நிறைவைக் கொண்டுவரும்  தூய நோக்கம் கொண்டது. எடுத்துக் காட்டுக்கு மாணவர் குறைபாட்டை நீக்கவில்லையென்றால் அவன் அடுத்தடுத்த சோதனையில் மதிப்பெண்கள் பெற முடியாது. கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் விமர்சிக்கவில்லையென்றால் அவர்களிடமுள்ள அகம்பாவத்தால் உறவில் விரிசல் காணும். ஒரு நிறுவனம் பொருளீட்ட தங்களுக்குள்ளாகவே விமர்சனம் செய்துகொள்ளவில்லையென்றால்  அந்நிறுவனம் போட்டியுள்ள உலகில் வெற்றிகாண முடியாது. இப்படித்தான்  எல்லாத்துறையும் விமர்சனத்தை உள்வாங்கி அதன் மேன்மையை நோக்கி  இயங்கிவருகிறது. இல்லையெனில் அது எங்காவது ஒரு முடுக்கில் முட்டி முடங்கிப் போகும்.

பாவம் மலேசிய இலக்கியம் அனைத்துலக சபை ஏறாமல் இருப்பதற்குக் காரணங்களை இன்னும் சொல்லவேண்டுமா என்ன?

கடைசியாக ஒன்று சொல்கிறேன். எல்லாக் கதவுகளையும் உங்களால் அடைத்துவிட முடியாது. உங்கள் அதிகாரத்தையெல்லாம் விருதை எதிர்ப்பார்ப்பவர்களிடம் காட்டுங்கள். 

முன்னர் எழுதப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் சாதிக்கும் அதே கள்ள மௌனத்தை இக்கட்டுரைக்கும் அவர் கடைபிடிப்பார், ஏனெனில் கிணறு வெட்ட பூதம் கிளம்பினால் என்ன செய்வது என்ற பதட்டம் அவருக்கு,


 முன்னர் நடந்த சிறுகதைப் போட்டிகளில்  இறுதிச் சுற்றுக்குத் தன் சொல்லைக் கேட்கும் தமிழ்நாட்டு நீதிபதிகளை நியமிப்பது. புத்தகப்போட்டிகளில் தன் சொந்தங்களை நடுவர்களாகக் கொண்டுவருவது, இப்படி எண்ணற்ற புகார்கள் இன்னும் பஞ்சாயத்துக்கு வரலாம் என்ற பதட்டம் அவருக்கு.

இப்போதைக்கு இது போதும்!

இந்த கையறு நாவல் அறிமுக நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வழக்கறிஞர் முத்துவேல் அவர்களின் அன்புக்கும், தமிழ்நேசன் முன்னால் நிருபர் மாரியப்பன் அவர்களின் ஆதரவுக்கும் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.




.





Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...