Skip to main content

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                               

                     

                 குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள் 



   பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்தவுடன் நான் அதனை விரும்பி ஏற்றேன். தாய்மொழி என்னை உந்தியதுதான் காரணம். அதிகாலை எழுச்சிமிகு பொழுதை ரசித்து நெடுங்காலமாகிவிட்டதால் அன்றைய புலர் காலை தெய்வீகம் நிறைந்திறைந்தது. பாலிங்கிலிருந்து மலையேறும்போதே மலை முகடுகளின் பனிமூட்டங்கள் பூப்போல சரிந்து காணாமற்போய்க்கொண்டிருந்தன. இளங்குளிர் காற்றின் தழுவலுக்காக சன்னல்களை திறந்துவைத்து உள்நுழைய அனுமதித்தேன். அது மென்வருடலாக நீவிச்சென்றபடி இருந்தது. பாறை மலைகள் செங்குத்தாய் வளர்ந்திருந்தன. பச்சை மூடிய நெடுவனத்தில் பறவைகள் இலைக்கூட்டங்களில் மறைந்து பறக்கத் தயாராக இருக்கலாம். கதிர் ஒளிக்காகக் காத்திருக்கலாம்.


மிகச் சிறிய அழகிய பட்டணம் குரோஹ். மனித நடமாட்டத்தையோ வாகனங்களையோ அதிகம் காண முடியவில்லை. சுங்கைப்பட்டாணி போன்ற பட்டண நெருக்கடி நிறைந்த ஊரிலிருந்து தப்பித்து வந்ததுபோன்ற உணர்வை குரோஹ்வில் அனுபவிக்கலாம். உங்களைச் சுற்றி பாறைமலை மூடியிருக்கும். ஒரு திறந்த பிரும்மாண்டாமான குகைக்குள் நுழைந்துவிட்டது போன்ற தனிமையை அனுபவிக்கலாம். கூரையற்ற குகை.

குரோஹ் தமிழ்ப்பள்ளி வளாகம் பெரிதாக இருந்தது. நாங்கள் பள்ளி வாயிலை அடைந்ததும் பள்ளி வரவேற்பு வாசல் பேரமைதியில் இருந்தது. இரண்டாவது மாடியில் நான் வருவதற்காக காத்திருந்த தலைமை ஆசிரியர் பால்ராஜ் உடனே துணைத் தலைமை ஆசிரியர் திருமதி ரேவதியை  அனுப்பி எங்களை வரவேற்கச் செய்தார். 

பள்ளி அழகிய இரண்டு மாடிக்கட்டடம் கம்பீரமாக எழுந்து நின்றன..அதற்குப் பின்புறம் மேலுமொரு கட்டடம். அதற்கும் மேலே பள்ளிச் சிற்றுண்டி. அது ஒரு மலை அடுக்கு. பள்ளியில் 500 மாணவர்களுக்கு மேல் படிப்பதற்கான வசதி கொண்ட வகுப்பறைகள் உள்ளன. ஆனால் அங்கே ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். இன்றைக்கு சிற்றூர் பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்னை இதுதான்.தலைமை ஆசிரியர்  பொதுமக்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும், சமூக அமைப்புகளும் போராடி பெற்ற பள்ளிக் கட்டடங்கள் மாணவர் குறைந்தமையால் இந்த நிலைக்கு ஆளாகிக் கிடக்கின்றன. அப்பள்ளி முன்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்றிருக்கிறது. எனவே பள்ளி அருகிலேயே இருந்த குன்றின் மேலே குமரன் குடிகொண்ட கோயிலைப் போய்ப்பார்த்தோம். மலைப்பகுதிக்குப் பொறுத்தமான குன்றேறிய குமரன்.

தலைமை ஆசிரியர், து,தலைமை ஆசிரியை திருமதி ரேவதி(நின்றிருப்பவர்)

பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜும் , துணைத் தலைமை ஆசிரியர் திருமதி ரேவதியும் உடனிருந்துகொண்டு எங்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசிரித்தனர்,

தலைமை ஆசிரியர் பால்ராஜ்

பால்ராஜ் மிக இளமையான தோற்றமுடையவர். 33 வயதில் தலைமை ஆசிரியராக பதவியை ஏற்றிருக்கிறார்.ஆறாண்டுகளுக்கு மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்த இளம் வயதிலேயே அவர் தலைமை பொறுப்புக்கு வந்ததற்குக் காரணங்களை அவரோடு 3 மணிநேரம் பழகியபோதே தெரிந்துகொண்டேன். அவரிடம் உள்ள பணிவு, பொறுப்புணர்ச்சி, ஆசிரியர்களுடனான நல்லுறவு, சுறுசுறுப்பு என அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தார். பள்ளி வேலைகளை ஆசிரியர்களிடம் சரிசமமாக பங்கிட்டளித்து அரவணைக்கும் அரிய பண்பை நான் அவதானித்தேன். அந்தப் பள்ளி ஆசிரியர்களும் அவரைப் போன்றே குணமுடையவர்களாக இருந்தார்கள். அவரின் குணநலன்கள் ஆசிரியர்களிடமும் மரபணுபோலக் கடத்தப்பட்டு நிலைத்துவிட்டிருப்பதைக் கவனித்தேன்.

காலை உணவை முடித்துவிட்டு நேராக தாய்மொழி தின நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். பள்ளியின் புறப்பாட துணைத் தலைமை ஆசிரியர் ஷாலினி நாயர் நிகிழ்ச்சியை நற்றமிழில் நெறியாளுகை செய்தார். மாணவர் நல ஆசிரியை பொறுப்புரை வழங்கினார். திரு பால்ராஜின் சிறிய தலைமை உரைக்குப் பின் கோலாட்ட சிலம்பாட்ட நிகழ்த்துக்கலைகள் மேடையேறின.அதன் பின்னர் அரங்கம் முழுக்க முழுக்க என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கே அமர்ந்திருக்கும் முதல் படிநிலை மாணவர்களுக்குப் புரியும்படி  தமிழ்மொழியின் மாண்பை எப்படிப் பேசுவது என்று குழம்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் 5 நிமிடத்துக்குமேல் திருவள்ளுவரே பேசினாலும் கேட்கமாட்டார்கள். இவர்களை  எப்படி சமாளிப்பது  என்று அவர்களையும் என் உரையாடலோடு இணைக்க முற்பட்டேன். அவர்களை வெளியே விடவும் முடியாது. என உரைக்கு நடு நடுவே கேள்விகள் கேட்டு நான் கொண்டுபோன என் சிறுவர் கதைநூலைப் பரிசாக கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் அப்பரிசுகளைப் பெற பெரும்பாலும் ஆறாம் ஐந்தாம் ஆண்டு மாணவர்களே தகுதிபெற்றார்கள். அதன் பின்னர்  என் படைப்பிலக்கியம் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அதற்குள் மாணவப் பிஞ்சுகள் பசியால் நெளியத் தொடங்கினர்.


நிகழ்ச்சி நிறைவாக்க தாய் மொழி தின விழாவை நான் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தேன். என் கைவிரலச்சு கணினித் திரையில் பதிய அந்நாள் பள்ளியின் வரலாற்றில் முக்கியமான நாளாக இடம்பெற்றது. 


பள்ளித் தலைமை ஆசிரியர் எனக்கு ஒரு ரம்புத்தான் கன்றைப் நினைவுச்சின்னமாகப் பரிசளித்தார். என் கண் முன்னாலேயே என் குழந்தைப்போல வளரப்போகும் ஒரு உயிர்மெய்ச் சின்னம்.


நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் ஒவ்வோரு ஆசிரியரும் என் சிறுவர் கதை நூலான மாயமலைத்தீவை என் கையொப்பத்தோடு பெற்றுக்கொண்டது இன்னொரு மனம் நெகிழும் நிகழ்வு. சிலர் என் கையறு நாவலையும் கேட்டும் பெற்றுக்கொண்டனர்.

பள்ளி ஆசிரியர்கள்

அந்தப்பள்ளியின் வியப்ப்புக்குரிய சில விடயங்களைத் திரு பால்ராஜ் சொன்னார். குரொஹ் தாய்லாந்துக்கு காலெட்டும் அருகில்  அமைந்த ஊர். புந்தோங் வழியாக தாய்லாந்துக்குள் நுழைந்துவிடலாம். எனவே சியாமியர்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான உறவு திருமணத்தில் முடிந்திருக்கிறது. அவர்களின் கலப்பால் பிறந்த குழந்தைகள் அப்பள்ளியில் பயின்று வருகிறார்கள். நாளைக்கு ச்ங்கோ தாய் என்ற பெயர்கொண்டவரை தமிழ்த் தலைமை ஆசிரியராக நாம் காண வாய்க்கலாம். இரண்டாவது அது ஒரு வனப்பகுதி நிறைந்த மலைப்பிரதேசம் என்று சொன்னேன். எனவே ஆதிவாசிகளை மணம்கொண்ட தமிழர்களும் அங்கே வசிக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளும் அங்கே படிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நாளைக்கு தமிழில் புனைவுகள் எழுதக்கூடியவராகவோ, தமிழ்ப் பல்கலையில் பேராசிரியராகவோ காணப்போகும் நல்லூழ் தமிழுக்கு வாய்க்கலாம். 


ஆதிகுடி மாணவரோடு ஆசிரியை
















Comments

குரோ என்ற புதிய இடத்தின் அறிமுகம் நன்று. நாமும் ஒரு எட்டு சென்று பார்த்துவிட்டு வருவோமே என்ற எண்ணம் உருவாக்கி விட்டீர்கள்!
ko.punniavan said…
நன்றி சுதன். Kroh என்றுதான் உள்ளது. எனவேதான் குரோஹ் என எழுதினேன். ஆனால் தமிழில் பெரும்பாலும் குரோ என்றே எழுதுகிறார்கள். கிரந்த எழுத்தை நிராகரிக்கிறார்கள் போலும்.
Anonymous said…
வணக்கம், சார். சிறப்பான நிகழ்ச்சி. நான் பல முறை அப்பள்ளிகுச் சென்றிருக்கிறேன். அழகிய ஊர். இப்போது அது குரோ அல்ல, பெங்கலான் ஹுலு (Pengkalan Hulu) அல்லவா?
ko.punniavan said…
பள்ளிப் பெயர்ப்பலகையில் குரோ என்றுதான் உள்ளது. தலைமை ஆசிரியர் என்னை அழைக்கும்போது குரோ தமிழ்ப்பள்ளியொலிருந்து அழைக்கிறேன் என்றார்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...