Skip to main content

இறந்தவனைப்பற்றிய வாக்குமூலம்

ஆறுமுகம் ஆடுன ஆட்டத்துக்கு ஆறடி பெட்டிக்குள் அடக்கமாகிப்படுத்துக்கிடந்தான். தகவல் அறிந்து நான்கு ஆண்டுக்குப்பிறகு அவன் மனைவி நான்கு வயது மகனோடு வந்திருந்தாள்.எல்லாம் சமூக சம்பிரதாயத்துக்குப் பயந்துதான். உயிரா இருக்கும்போதுதான் அவனோட வாழ முடியவில்லை, செத்தபிறகாவது சரியா வழிஅனுப்பி வச்சிருக்கலாமில்ல என்ற ஊர் உலகம் வாய்க்கு அவல் போடக்கூடாது என்பதற்காகவே வந்திருந்தாள்.இருந்தாலும் அவன்மேல் அவளுக்கு எந்த ஒட்டுதலும் இல்லாத மனஓட்டத்தோடுதான் பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அவன் உயிராய் இருக்கும்போதே ஒரு விதவைபோல வாழ்ந்துவிட்டவளுக்கு இந்தச் சம்பவம் அவளுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப்போவதில்லை!

வெளியே நீண்ட நாளைக்குப் பிறகு நச நசவென வானத்தைத் துளை போட்டதுபோல மழை ஊற்றிகொண்டிருந்தது. ஆமாம் மழை நல்ல சகுனமா கெட்ட சகுனமா? புழுதி மேயும் கோடையில் நல்ல சகுணம்!மழைநாள் நீண்டு போனால் கெட்ட சகுணம். மோட்டார் சைக்கில்களும் , கார்களும் சில சமயங்களில் கடந்து செல்லும் லாரிகளும் ஈவிரக்கமில்லாமல் கிளப்பிய தூசு மண்டலம் வர்ண பகவானுக்கு அஞ்சி வாய்பொத்தி மண்ணோடு அடங்கி சகதியாய் அழுது தீர்த்துக்கொண்டிருந்தது. தகரம் வேய்ந்த தற்காலிக கூடாரத்தின் விட்டத்திலிருந்து, தகரப்பள்ளத்தின் வழியாக ஊர்ந்து சென்று தன் மரியாதையைக் காவந்து செய்து கொள்ளவேண்டிய மழைநீர் வேண்டுமென்றே தகரத்தின் ஆணித்துளையைத் தேடிப்பிடித்து கூடாரத்தில் அமர்ந்திருந்தவர் தலையில் சொட்ட, அங்கே அமர்த்தவர்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட, அங்கேயும் சகதியை தன் அடையாளமாய் குழைத்துவிட்டிருந்தது.மழைத்துளிக்கே அஞ்சி ஒதுங்கும் மனிதர்கள் மரணத்துக்கு எப்படியோ? அதுவும் பிணம் சாவாகாசமாய் காலை நீட்டிப்படுத்து மரணம் சாசுவதமய்யா என்று ‘உரக்க’ பிரகடனப்படுத்தும் இடத்தில் மழைத்துளிக்கு பயந்து ஒதுங்கும் மனிதர்கள்.ஆமாம் ஜலதோஷம் போதுமே மரண சாக்குக்கு! ஒரு மரணம் மட்டுமா இன்னொரு மரணத்துக்கு அதிகார்ப்பூர்வ அச்சத்தைக்கிளப்ப, துக்கணூண்டு துளி போதாதா எச்சரிக்க? மவனே வரண்டா........

“எவன் செத்தாலும் எவன் வாழ்ந்தாலும் இவனுங்களுக்கு ஆவப்போறது ஒன்னுமில்ல,டெண்டு போட்டா போதும். எங்கேர்ந்துதான் வருவானுங்கனு தெரியாது சீட்டு கட்டெ தூக்கிகிட்டு. வேல வெட்டிக்குப்போகாம மேல கீலன்னு போட.”

“சாவு சேதி சொந்தம் பந்தங்களுக்கு தெரியிறதுக்கு முன்னால இவனுங்களுக்கு எப்படித்தான் தெரியுமோ தெரில, நாதாரிப்பசங்க........அங்க ஒருத்தன் செத்துக்கெடக்கிறான்.......இங்க ஆரம்பிச்சிட்டானுங்க........சாவுல சந்தோசப்படற மொத ஜன்ம இவனுங்களாத்தான் இருக்கணும்.”

“அத பார்ரா கட்டையில போறது.......பொட்டியில எடம் இருக்குன்னு சொல்லு அனுப்பிடுவம்.கூவுது பாரு.....கூப்பிட்றான்......கை பத்தலன்னு.”

“சாவு வூட்ல கூட்டம் இருக்கணும்னுதான் சீட்டாட்டம் ஆடட்டும்னு உட்டுராங்கலோ!”

“ஆறுமொவம் புள்ளையாம்ல, அப்பன் செத்துக்கெடக்கிறதுகூட தெரியாம விளையாடிக்கிட்டிருக்கான்.”

“ஆமாம் அப்படியேதான் அப்பன் வளத்துட்டான் போறியா......கை கொலந்தையா இருக்கும்போதே வுட்டுட்டு வந்தவந்தான்....... அதுக்கப்பறம் அந்தப்பக்கமே திரும்பலயாம்......அப்பன் மகன்ங்கிற பாசம் எப்படி வரும்? அவனுங்க அம்மா வரும்போதே யாரும்மா செத்துட்டாங்க அப்டின்னுதான் கேட்டிருப்பான்........ “

“இவன் குடிச்ச குடிக்கும், ஆடுன ஆட்டத்துக்கும், சம்பாதிக்கிற காச வூட்டுக்குக்கூட காட்டாம குடிச்சே அலிச்சதும்,புள்ளத்தாசின்னுகூடபாக்காம அடி ஒதன்னு கொடுத்ததும் , பொறுத்துக்கமுடியாமதான் சேத்துக்கலயாம்......அதவிட மோசம் என்னிய வூட்ல சேக்காம யாரடி சேத்து வச்சிருக்கங்கிற வார்த்த அவன அருதியா வெறுக்க வச்சிடுச்சி. அவனுக்குப்பயந்து வூட்டவுட்டு அம்மா வூட்டுக்குப்போனவ திரும்ப வரலியாம் இப்பதான் வந்திருக்கா.நாலு வயசிருக்குமா அந்த புள்ளைக்கு?”

“பொண்டாட்டி எதுக்கு சேக்கலான்னாலு ....அதுக்காவது சேத்ருக்கலாம்ல.......அதுக்கேகூட புருஷன் வேணாண்ட்டாளாம்......அப்டியாப்பட்ட குடி! அடி!

“வூட்டுப்பக்கம் தல வச்சு படுக்காதன்னிட்டாளாம்.......இன்னிக்கி உசிரா இருந்திருந்தான்னா அவந்தான் மொத ஆளா இருந்திருப்பான் மேல கீலன்னு தாள் போட;பாருங்க அம்மாகாரி நெஞ்சில அடிச்சிக்கிட்டு ஒயாம அழுவுறா,பொண்டாட்டி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர காணம்; சொம்மா கடமைக்காக ஒக்காந்திருக்கிறமாரிதான் இருக்கு!”

“யோவ் என்னையா இது நாலு மணிக்கி எடுத்துடனும்கிறாங்க நீ என்னடான்னா, நெற மாச புள்ளத்தாச்சி கணக்கா ஆடி அசஞ்சி வர......மல வேற மூலியாட்டம் அலுதுகிட்டேருக்கு. சாங்கியம் செய்றவன் நீ...... இப்டி தாமஸா வந்தா எப்டி.?”

“ன்னுந்தான்யா பொறதவிக்கிறான்......”

“எனக்கு தெரியும். நா எப்ப வரணும் என்னா செய்னம்னு......பொத்திக்கிட்டு இருக்கியா......ஒனக்கு தெரிஞ்சா நீ எடுத்துக்கட்டி செய்யவேண்டியதான.......செய்யத்தெரிலனா வாய மூடிக்கிட்டு சும்மா இருக்கணும், ஊருக்கு உபதேசம் பண்ணக்கூடாது......”

“ ஒனக்குதான் எல்லாந்தெரியுங்கிற கெப்புறு .......அதான் ந்த அடாவிடி.....”

“ டேய் செத்த பொத்திக்கிட்டு இருக்கியா......பொசுக்குனு கோவம் வரும் அவனுக்கு.....எல்லாத்தெயும் அப்பிடியப்பிடியே போட்டுட்டு போயிரப்போறான்.....அப்புறம் அங்க நாறிக்கிட்டு கெடக்கும்”.

“வெட்டி பரிசோதிச்ச ஒடம்புல்ல,சுருக்கா எடுத்திடணும்;அதுக்குத்தான் சொல்றன்”

“தோ பாருய்யா செத்துப்போனவன் சுத்தி இருக்கிற சனங்களவிட, சீட்டுக்கட்ட சுத்தி இருக்கிற சனம்தான் அதிகமா இருக்கு. இவன் சேத்து வச்ச பெரிய சொத்து இவனுங்கதான்யா”

“லோக்கப்ல இருக்கும்போது செத்தவன் தான, அவனுக்கு என்ன மரியாத இருக்கும்?”

“லொக்காப்ல இல்லையா....... ஆஸ்பித்திரியிலதான்யா உயிர் போயிருக்கு!”

“லோக்காப்ல இருந்து மூச்சு தெனறிக்கிட்டு இருக்கும்போது ஆஸ்பித்திரிக்கி கொண்டு போயிருக்காங்க, அன்னிக்கி நடுராத்திரி உசிர வுட்டான்யா”

“லோக்காப்ல இருந்ததுல பாதி உயிரு போயிரும்ல”

“சொம்மா இருந்தா யான் போலிஸ் பிடிக்கிறான்? கூலிம்ல குடும்பம் அவன சேக்காதப்பியே, கோண்ட்ரேக்ல அத்த கூலியா வேல செஞ்சிக்கிட்டு, அதல குடிச்ச்¢க்கிட்டு, கோயில்ல, கட வாசல்லயும் படுத்துக்கிட்டு இருந்திருக்கான். குடிக்கிறதுக்குன்னே வேலைக்கு போறவன்.அப்புறம் குடிச்சிட்டே வேலக்கி போற நெல வந்துடுச்சி! அதுக்கப்புறம் எவனா வேல தருவானா?பொண்டாட்டியும் வூட்ல சேக்கல, அம்மாக்காரி அண்ணன்காரன் இருக்காங்களேன்னு பொறப்பட்டு இங்க வந்துட்டான்.படுக்கிறதுக்காவது ஒரு எடம் வேணும்ல?”

“ ஆமாய்யா அவன் அண்ணங்காரங்கூட அவன சேக்க மாட்டின்டா, பெத்த வயிறு சொம்மா வுட்டுடுமா, மவங்காரங்கிட்ட கெஞ்சி கூத்தாடி வூட்ல சேத்துக்குச்சி. அண்ணங்காரனுக்காக கொஞ்ச நா குடிக்காம இருந்திருக்கான். அண்ணங்காரன் எவ எவனையோ பாத்து வேல வாங்கி கொடுத்து நல்லாதான் பாத்திருக்கான், ஆன ¡ கையில காச பாத்தவொடனே குடிக்கிற ஆச வந்து, அண்ணனுக்கு தெரியம குடிக்க ஆரம்பிச்சிட்டான்.பழைய பழக்கமெல்லாம் வுட்டுப்போகுமா.ரத்தத்தோட ஊறிப்போன ஒன்னாச்சே?தெனைக்கும் ஊத்திக்கிட்டு வந்தவன் அண்ணனுக்கு தெரியாம போய் படுத்திடுவான்.வார்த்தைய வுடல்னாதான் கண்டுபிடிக்க முடியாது, வாடையிலியுமா முடியாது. எவ்ளோ சொல்லிபாத்திருக்கான். அவன மாத்த முடில.எக்கேடாவது கெட்டுப்போன்னு வுட்டுட்டான்.அதிலேர்ந்து அவங்கிட்ட மொகங்கொடுத்துப் பேசுறதுமில்ல.”

மழை விட்டபாடில்லை.ஒரே சீராக பெய்யும் மழை லேசில் விடாது.அவசரமாய் வரும் மழைதான் வந்த திசை தெரியாமல் போய்விடும்.வெளியே சில குடைகளும் செருப்புகளும் மழை நீரைத்தேக்கிவைத்துக்கொண்டிருந்தன.குடைகள் காற்றில் குடை சாய்ந்து நீர்த்தேக்கமாக மறு பரிணாமம் கண்டிருந்தது. மழையில் சொதசொதத்துபோன காலணிகளிடமிருந்து விரும்பாத வீச்சம் வந்துகொண்டிருந்தது.காலணிகளின் பாதங்களிலும் பக்கவாட்டிலும் சேறு சேர்ந்துவிட்டிருந்தது.காரியம் நடக்கின்ற வீட்டு வாசலின் சிமிந்துத்தரையிலும் சேறு திப்பித்திப்பியாய் வேறு ஒட்டிக்கொண்டிருந்தது.

“அத ஏண்டா கேக்கிற, லோக்கப்புக்குப் போறதுக்கு முன்னயே, அடதடியில அவனுக்கு சரியான அடி விழுந்திருக்கு”

“அவனுக்குன்னு கூட்டாளிங்க இங்க வந்ததும் சேந்திருக்கு. எனம் எனத்தோட தானயா சேரும்.அவனுங்களூக்குள்ளாற குடியோட சேத்து கூட்டும் வெலையாடிருக்கானுங்க,கொஞ்ச நாளு நல்லாதான் இருந்திருக்காணுங்க, அதுக்குப்பெறகுதான் வந்தது வென!”

“கூட்டு இவனுக்கு வுலுந்தததோட, இவன் கட்டாம வுட்டுட்டான்.கேட்டதுக்கு சம்பளம் வரல, தோ தரன், நாளைக்கு தரன்னிட்டு, நாள கடத்திருக்கான். கேட்டு கேட்டு பாத்தானுங்க பணம் வரல. அவன் அண்னன்காரங்கிட்ட சொல்லியிருக்கானுங்க, அண்ணங்காரன் அம்மா காரிக்கிட்ட சொல்லி குடிய நிப்பாட்டிட்டு ஒலுங்கா அவன கடன கட்ட சொல்லி சொல்லிருக்கான்.இவன் கடன கட்டுன பாடுல்ல. கேட்டுக்கேட்டு பாத்திருக்கானுங்க . வுடாம வூட்டுக்கு வந்து மெரட்டிருக்காணுங்க. அண்ணனுக்கு தெரிஞ்சிபோச்சேன்னு, பொறுக்க போட்டுட்டு நேரா அவனுங்க்கிட்ட போயி கெட்ட கெட்ட வார்த்தையில கண்டபடி திட்டிருக்கான்.அப்பியே அவன வெரட்டிட்டு வந்து, வூட்டுக்குள்ள நொலஞ்சி எல்லாம் இருக்குபோதே சாத்துசாத்துன்னு சாத்திருக்கானுங்க,ஹெல்மட்ல வேற மண்ணடையிலியே அடிச்சிருக்கானுங்க. அங்கியே அவனுக்கு பாதி மயக்கம் வந்துடுச்சி.அண்ணனுக்கும் அம்மாவுக்கும் புள்ளைங்களுக்கும் வேற அடி. போலிஸ் சகட்டுமேனிக்கு இவனையும் அடிக்க வந்தவனையும், புடிச்சி உள்ளுக்கு வச்சிடிச்சி.”

இரண்டு மேசையைச்சுற்றி மழையைப்போல சீட்டாட்டக்கூட்டம் விடாமல் பிடித்திருந்தது. இன்னும் ஒருவர் நுழையக்காத்திருந்தான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு இடம்பிடிக்கும் அவனின் பிரயத்தனங்கள் பலனளிக்கவில்லை. மேசையின்மேல் சீட்டுக்கட்டுகளைவிட பண நோட்டுகளே ஆக்கிரமிப்புச்செய்திருந்தது. சேறு அதன் எல்லையைத்தாண்டி அவர்கள் சிலுவாரிலும் ஏறியிருந்தது. அதனை அவர்கள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை! பிணத்தைத்தூக்கும் வரை ஆட்டம் ஓயாது போலிருந்தது.

ஆட்டத்தின் நடுவே அவர்கள் போடும் கூச்சல் மழைநீரோடு சேர்ந்து ஓயாது மிதிபட்ட, கூடாரத்து வாசல் மண் மாதிரி நசநசத்துப்போய்க்கொண்டிருந்தது. மேசையைச்சுற்றியுள்ள இடமும் சேறும் சகதியுமாக சொதசொததுக்கொண்டிருந்தது. உழவுக்கு தயாராகிவிட்டது போல!

பிணப்பெட்டி வீட்டு வராந்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு. சாங்கியங்கள் தொடங்கின.விளயாடிக்கொண்டிருந்த அவள் மகனைப்பிடித்துவந்து குளிப்பாட்டி, துண்டை வேட்டியாக்கி, ஈர உடலின் நெற்றியில், நெஞ்சில், வயிறில்,கைகளில் வெள்ளையடிக்கப்பட்டதுபோல் திருநீறு பூசப்பட்டது. அப்போதே மலங்க மலங்க முழிக்க ஆரம்பித்தான். தன்னை ஏன் இதில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற பிரம்மையில் அவன் கண்கள் அவன் அம்மாவைத்தேடின. திருநீறு நிறைந்த தன் உடம்பை வியப்போடு பார்த்தான். இறந்தவனுக்கு எண்ணெய் வைப்பதும், தேவாரம் பாடுவதுமாக ஈமச்சடங்குகளுக்கு நடுவே ஆறுமுகத்தின் தாயின் குரல் தனித்தே ஒலிக்கிறது. மனைவிக்காரி எல்லாவற்றிலும் சுய விருப்பமின்றியே கலந்துகொள்வதுபோலப்படுகிறது. அவளிடமிருந்து பறிக்கப்பட்ட பூவுவிலும் பொட்டிலும்கூட அவளின் கண்ணீரில் துளி படாமலேயெ போனது.

பிணம் ஏற்றப்பட்ட சவ வாகனம் நகர ஆரம்பிக்கிறது. கூட்டம் ஒன்றும் அதிகமில்லை என்றாலும் அவனோடு இருந்த நண்பர்கள் சில கிழங்கள் என சிறு கூட்டம் காரிலும்.மோட்டார் சைக்கிளிலும் பின் தொடர்கிறது.

“என்னையா பெரிசா வாழ்ந்துட்டான். முப்பத்து நாலு முப்பத்து அஞ்சி வயசுதான் இருக்கும் அதுக்குள்ள அவன் விதி முடிஞ்சிடுச்சி.கட்டுன பொண்டாட்டிய பாக்காம்,பொறந்த குழந்தய கிட்ட இருந்து வளக்க முடியாம, இப்படி கெட்டு குட்டிச்சுவரா போயி கடசீல பொட்டியில படுத்தாச்சி. இவனால ஒரு பொண்ணோட வாழ்க்கையே பாலாப்போச்சி”

“அந்தப்பய கதி என்னாகுமோ?”

“என்னாய்யா பேசுற?அவன் வயித்தில இருக்கும்போது வந்தவன்.நாலு வருஷமா அவதான வலத்தா.நாலு வருஷமா வளத்தவளுக்கு அவன ஆளாக்க முடியாதா?”

“என்ன இருந்தாலும் ஆம்பல தொண இருந்தா அது வேறதான்.”

“ இவனெயெல்லாம் ஆம்பல தொணையின்னு எப்படிய்யா ஏத்துக்கிறது?

வண்டி நடுக்காட்டை அடைந்து ,பிணம் திசை மாற்றப்பட்டு செய்ய வேண்டிய சாங்கியஙகள் முடித்து சுடுகாட்டுக்குப் பயணத்தைத்தொடர்ந்தது. மழை பெய்வது நின்றுவிட்டிருந்தது.சாலையெங்கும் நீர்தேக்கம் சிறு சிறு குளங்களைக்கட்டி நின்றன. தலை சீவப்பட்ட இளநீர் ஒன்று நேர்ந்துவிட்ட புதிய இறப்பு அடையாளத்தின் சாட்சியாய் நடுக்காட்டில் வைக்கப்பட்டிருந்தது..

தீச்சட்டி ஏந்தி தந்தை உடலின் தலைமாட்டில் அமர்ந்திருந்த மகன் இதெல்லாம் எதற்காக் நடக்கிறது என்ற பிரம்மையிலிருந்து மீளாதவனாய் இருந்தான். இவ்வளவு நேரம் பிணத்தோடு அமர்ந்திருந்தவள் தன்னோடு ஏன் வரவில்லை என்ற கேள்வி அவனுள் எழுந்த வண்ணம் இருந்தது. வீட்டுக்குப்போனால் அம்மாவை இவர் யார்? இதெல்லாம்/ என்ன என்று கேட்கவேண்டும் என்ற தாகம் அவனுள் பெரிதாய் உருவெடுத்துக்கொண்டிருந்தது.

தன் மகனிடம் அப்பனைக்காட்டக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவளுக்கு இந்தச்செய்தி குறுக்கே வந்து விழுந்திருந்தது.பிள்ளைக்கு பதில் சொல்லியாக வேண்டும். தொனதொனவென்று பேசி கேள்விமேல் கேள்வியைத்தொடுப்பவன்.

சுடுகாட்டில் லாலானும்,காட்டுச்செடியும், கேட்பாரற்று ஏறிக்கிடந்தது.தொட்டார் சிணுங்கி மண்ணின்மேல் வேர் விட்டதுபோல் ஒக்டொபஸ் மாதிரி தன் முட்கரங்களை பரப்பி நின்றது. குழியை அடைவதற்கான வழித்தடம் மட்டும் தற்காலிகமாய்த்தெரிந்தது. ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த காட்டுப்புதரும் முள்செடிகளையும் கவனமாய்ப்பார்த்து தவிர்த்து நடக்க வேண்டியதாயிற்று.பெய்த மழையைத்தாங்கி நின்ற செடிகொடிகள் வெட்கப்பட்டதுபோல தலை குனிந்திருந்தன. மழையில் ஊறிக்கிடந்த செடிகளின் துளிகள் சட்டைகளையும் சிலுவார்களையும் ஈரமாக்கிவிட்டிருந்தது. பூரான் பாம்பு படுத்துக்கிடந்தால்கூட தெரியாத அளவுக்கு மண்ணில் கொடிகளும் வேர்களும் பாய்ந்து இருந்தன.

“எவனா செத்தாதான் சுடுகாட்டுக்கு வராணுங்க. சீட்டாட்டத்துல காட்டுற அக்கறையில துக்குனூண்டு சுடுகாட்ட சுத்தம் பன்றதுல காட்னாணுங்கனா, இன்னிக்கி காடு இப்டி இருக்காதெ?”

பாதிக் குழியை மழை நீர் நிறைத்திருந்தது. குழியிலிருந்து நீக்கப்பட்டு குழிக்குமேல் வீசப்பட்ட மண் சொதசொதத்து இருந்தது.

“பாருய்யா கட்ன பொண்டாட்டிதான் ஏத்துக்கலன்னாலும் ,மண்ணுகூட ஏத்துக்க தயார இல்லியா.”

“உசிரா இருக்கும்போதுதான், அங்க இங்க ஒதபட்டு நாறிக்கெடந்தான்னா, மண்ணுக்கு போறப்பியுமா இப்படியாகணும்!”

சாங்கியம் செய்பவர் ஒவ்வொரு காரியமாக செய்து முடித்தார்.பிணம் குழியில் இறக்கப்பட்டு சேறும் சகதியுமாக இருந்த மண்ணால் மூடப்பட்டது. கூடப்பிறந்த குற்றத்துக்காக அண்ணன்காரன் ஒரு சொட்டு கண்ணீர்விட்டான். பையனை அழைத்து ஒரு நீர் நிரம்பிய மண் குடத்தை அவன் தோளில் வைத்து பிணக்குழியைச் சுற்றி வரச்சொன்னார்.ஒவ்வொரு முறை சுற்றிவரும்போதும் பானையை வெட்டரிவால் முனையால் தட்டி துளையிட்டு அவனை “சொர்க்கம் போ” என்று சொல்லச்சொல்லி நடக்கச்செய்தார்.பையனும் அவரைப்பின்தொடர்ந்து சொன்னான்.குடத்திலிருந்த நீர் கூரையிலிருந்து ஊற்றும் மழைநீர் கணக்காய் குழியைச்சுற்றி ஒழுகிக்கொண்டே இருக்க, எத்தனை முறை பையன் அப்பனைச் சொர்க்கம் போகச்சொல்லி ஓதினானோ தெரியாது.

மூன்றாம் சுற்று முடிய நீர்குடத்தை மண்ணில் போட்டு உடைத்துவிட்டு, பையனைத்திரும்பிப்பார்க்காமல் போ என்று கட்டளையிட்டார் சாங்கியம் செய்துகொண்டிருந்தவர்.



ko.punniavan@gmail.com

என் வலைப்பூவை நுகர்பவர்கள் தாராளமாக விமர்சிக்கலாம். தயவு செய்து எழுதி அனுப்புங்கள்.நன்றி.




¬

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...