Skip to main content

எனக்குத்தெரியாமலே எனக்குள்ளிருந்து என்னை

என்னை அடையாளப்படுத்தும் விதமாக என்

இவன் நட்ட மரங்கள்

நிமிர்ந்துவிட்டன

இவன் நடும்போது குனிந்தவன்

இன்னும்

நிமிரவே இல்லை

என்ற கவிதை எழுபதுகளின் இறுதியில் எழுதப்பட்ட கவிதை, முன்னிலும் உயிர்ப்போடு இயங்கி வருவது பெருமையின் நிழலாக பின்தெடர்ந்தாலும், அந்த நிழலே ஏதோ ஒர் உருவமாய் என்னைத்தொடர்வது போன்ற பிரம்மையால் நான் சிறுமையடையவும் செய்கிறேன். அக்கவிதை என்னுடைய ஐ டி என்கின்றனர் பலர். இது செவ்வியல் இலக்கியம் என்கிறார் டாக்டர் கார்த்திகேசு. முன்பின் அறியா ஒருவர் பினாங்கு பெர்ரியில் என்னைப்பார்த்தவாறு இருந்து பின்னர் தயங்கித்தயங்கி என்னை நெருங்கி, “நீங்கள் புண்ணியவானா? இவன் நட்ட மரங்கள் கவிதையை நீங்கள்தானே எழுதினீர்கள்,” என உணர்ச்சிவசத்தால் என் கைகளைப்பிடித்துக்கொண்டார்.(அப்போது அவர் பொன்னாடை வைத்திருக்கிறாரா என்று நோட்டமிட்டேன்) இப்படிச் சில நிகழ்வுகள். பல பிரபல எழுத்தாளர்களுக்கும் ஓரிரு படைப்புகள்தான் அவர்களை நினைவு கொள்ள வைக்கின்றன என்றார் பேராசிரியர், சாகித்திய அக்காதமி உச்சமன்ற உறுப்பினர் இரா மோகன். உதாரணத்துக்குக் கலாப்பிரியா எழுதிய

நீ அழகாய் இல்லாததால்

எனக்குத் தங்கையானாய்

என்ற கவிதையை எடுத்துக்காட்டுக்குச்சொல்கிறார்.

(இக்கவிதையை முரண் அணிகொண்டு சிந்தித்துப்பாருங்கள், விகாரமான அர்த்த பரிமாணத்தைக் கொடுக்கும்.....

உன் தங்கை அழகாயிருந்தால் ......என்ற முரண்தான் அது!)



என் கவிதைக்கு வருகிறேன். இருக்கட்டும். ஒரே ஒரு கவிதை ஐ டி யாக இருப்பது வாசகனுக்கு, கவிதை நேசனுக்கு வேண்டுமானால் எழுதியவன் பேரில் சிலிர்ப்புகள் ஏற்படலாம். ஆனால் இது மட்டும்தானா எழுதினேன்? இக்கவிதை மட்டும்தானே பேசப்படுகிறது என்ற சிறுமை நிழல் என்மீது படிந்தவண்ணம் இருக்கிறதே! கவிஞர் பா.அ.சிவம் சொன்னார், இக்கவிதையைச் சொல்லிச்சொல்லியே புண்ணியவானை இருட்டடிப்பு செய்யப்பார்த்தார்கள் என்று. அவர் சொல்வதற்கு முன்னமேயே என் உள்ளத்தில் இது ஆழமாகப்படிந்துவிட்ட வடுவாகவே இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ம.எ.சஙகச் சிறுகதைக் கருத்தரங்கில் என்னை அறிமுகப்படுத்த வந்த தலைவர் ராஜேந்திரன், இந்தக்கவிதையை முன்வைத்தே என்னைப்பற்றிய அறிமுகத்தை எடுத்துரைத்தார். இதில் என்ன விஷேசம் என்றால், வந்திருந்தவர் அனைவருக்கும் என் அந்தக்கவிதை அறிமுகமானதுபோல என் முகமும் அறிமுகம். இதில் எதற்கு இன்னொரு முகமன்? என் மீது அவர் வைத்திருக்கும் அபிமானம் ஒரு பக்கம் இருக்கட்டும் ( முகமன் பற்றிப்பேசும்போது சிலவற்றைச்சொல்லவேண்டும். சிலர் பொன்னாடைகளையும் சந்தனமாலைகளையும் பெறுவதற்கே எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த தமிழகச்சுற்றுலாவுக்குச் சென்றனர் என் பகடி செய்தனர். ஆமாம் , மூன்று தமிழக இலக்கியச் சுற்றுலாவில் எனக்குப்போடப்பட்ட பொன்னாடைகளையும் சந்தனமாலைகளையும் வாங்கி புளகாங்கிதம் அடைந்ததும், அதற்குப் பின்னரே நான் பொன்னாடைக்கு அடிமை ஆகிவிட்டதும் என்னை அறியாமல் நடந்தவிட்டது. இன்றைக்கும் பட்டண வீதியில், தெருச்சந்து வழியில் யாராவது குறுக்கே வந்தால்கூட பொன்னாடையை பின்கையில் மறைத்து வைத்துக்கொண்டு எனக்குப் போடவருகிறாரா என்ற phobia நோயில் பீடிக்கப்பட்டுவிட்டேனோ என்ற பிரம்மை தட்டியவனாய் அலைகிறேன். அவர்களைத்தாண்டும்போது என்னையறியாமல் வேறு குனிந்து முதுகைக்காட்டுகிறேன். பொன்னாடையால் முதுகு அலங்கரிக்கப்படாதபோது பெருத்த ஏமாற்றம் அடைகிறேன். பாருங்கள் தமிழகத்தில், ஒருநாள் திரைப்பட இடைவேளையில் தேனீர் அருந்த சிலர் அழைத்தும் நான் யாரும் பொன்னாடை போர்த்தினால்தான் கடை நாற்காலியில் அமர்வேன் என்று அடம்பிடித்த அளவுக்கு எனக்கு அந்த phobia வின் பாதிப்பு இருந்தது. இப்போதும் காலையில் துயில் எழும்போதுகூட போர்வையே பொன்னாடை என கண்ணாமூச்ச்சி விளையாடுகிறது. அந்த நேரம் பார்த்தா என் மனைவி கொசு அடிக்கவேண்டும்!அது கைத்தட்டுவது போன்ற என்ணத்தைவேறு உண்டாக்கிவிடுகின்றது. எப்படியோ அன்றைய பொழுது இனிய நினைவுகளோடு ஆரம்பித்து விடுவதில் பரம திருப்தி!(எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா)பொன்னாடை கோவனத்துக்கு ஆகாது என்ற உங்கள் பொன்மொழி ,வந்து வந்து தொல்லைப்படுத்துவது வேறு phobiaவை அதிகப்படுத்துகிறது. இதற்காக ஒரு மன நோய் மருத்துவரைப்போய் பார்த்தேன்.என் பிரச்சினையைக்கேட்டறிந்தவர் இந்த phobiavவைத்தீர்க்க ஒரு வழி சொன்னார்.காலையில் எழுந்ததிலிருந்து இரவில் படுக்கப்போகும்வரை தினத்துக்கு ஒரு பொன்னாடையாக சதா அணிந்தவண்ணம் இருக்கச்சொன்னார்.நான் அவ்வாறே செய்ய ஆரம்பித்த பின்னர் என்னை இப்போது ‘பொன்னாடை கவிஞர் புண்ணியவான்’ என்றே புனைப்பெயரிட்டு அழைக்கின்றனர். பெருமையாகத்தான் இருக்கின்றது! ஆனால் ஒரு தொல்லை!பொன்னாடைகளை யார் துவைப்பது? மனைவி பிடுங்கள் தாங்க முடியவில்லை, இன்னொரு இந்தோநேசியப்பணிப்பெண்னை நியமித்துவிட்டேன். எதையோ சொல்ல வந்து எதை எதையோ சொல்கிறேன்!என் மீது ராஜேந்திரன் வைத்திருக்கும் அபிமானம் ஒரு பக்கம் இருக்கட்டும், என் பிற படைப்புகள் பற்றி சொல்லியிருக்கலாம் அல்லவா? அப்படி என்னையா எழுதினீர் என்று நீங்கள் அங்கலாய்க்கலாம்? (தமாசுக்கு எழுதினேன்.)

இப்போது கவிதைக்கு வருகிறேன். ஐயா சிங்கப்பூர் போனோமல்லவா(அந்த நிகழ்வில் எனக்குப்பொன்னாடை போர்த்தவில்லை உணர்ந்தீரா சை.பீர்? உங்கள் மேல் எனக்குத்தணியாத கோபம் உண்டு,பாலு மணிமாறன் மேலும்தான்) அப்போது நீங்கள், பாலு மணிமாறன், தம்பி பாண்டித்துரை,பாண்டித்துரையின் நண்பர், இன்னொரு தம்பி, பாலமுருகன் என எல்லாரும் ஒரு அறையில் தங்கினோம் விடிய விடிய பேசினோம், சண்டையிட்டோம் யார் யாரையோவெல்லாம் திட்டினோம். அது ஒரு நிகழ்வு. பின்னர் அநங்கம் சிற்றிதழ் அறிமுகத்துக்கு சாத் சாத் அதே அறையை எடுத்திருந்தார் பாண்டி. அப்போதும் பாலு மணிமாறன், நான், பாலமுருகன், பாண்டி, மௌனம் ஆசிரியர் தேவராஜன், இதோ இந்த ஜொகூர் பாருவில் வசித்துவருபவரும், இந்த நிகழ்வுக்கு வரும் சாக்கில் முதல் முதலாக சிங்கையை மிதிக்க பாஸ்போர்ட் எடுத்த சிவா பெரியண்ணனும் அதே அறையில் சாலை வாகனங்கள் கூவும் வரை கதையளந்தோம். அறையை காலி செய்து விட்டு வெளியே வருகிறோம். மின்தூக்கி சற்று தாமதிக்கிறது. நான் காலி செய்யப்பட்டு, பூட்டிய அறைக்குள் ‘அவதானிக்கிறேன்’. அறைக்குள்ளிருந்து நம் எல்லோரின் குரலும் எனக்குக் கேட்கிறது. நாம் விவாதிப்பது, சண்டையிடுவது, புறம்பேசுவது, குரட்டை விடுவது, பாண்டித்துரை அவ்வப்போது தன்னைத்தானே காணடித்து கூடுவிட்டுக்கூடு பாய்வது, தேனீர் அருந்துவது, போனால் போகட்டும் என அவ்வப்போது கவிதைகளைப்பற்றிப்பேசுவது, நடிகையின் நினைவோடு அரைத்துக்கத்தில் (துக்கத்தில்தான், தூக்கம்மில்லை - நடிகை நினைவில்மட்டும் வந்து தொல்லைப்படுத்துவதால்) படுத்து கிடப்பது என இரவின் நடனம் மீண்டும் அரங்கேறுகிறது - அந்த மின்தூக்கி வந்து கதவுகளைத்திறக்கும் கணப்பொழுதில். நண்பர்களை விட்டுப்பிரியப்போகும் நேரத்தை இந்த நிர்வாண அறைக்குள்ளிருந்து வரும் குரல்கள் என்னைத்தொல்லைப்படுத்துகிறது.

விட்டுப்பிரியும்

நண்பர்களைவிடவும்

அறையில்

மிதந்து கொண்டிருக்கும்

அந்த உரையாடல்களை

ஆம், இந்த இரண்டு வார இடைவேளையில் அதே அறையில் நாம் தங்க நேர்ந்ததும், அதே நண்பர்களைச்சந்திக்க நேர்ந்ததும், ஒரே மாதிரியான நிகழ்வுக்காக சிங்கை வந்து அந்த அறையை வாடகைக்கு எடுத்ததும் ஏன் நிகழ்ந்தது. முதல் சந்திப்பில் விடுபட்டுப்போனதைத் தொடரவா? பரிட்சையமான அதே மனிதர்களைச் சந்திக்க விருப்பத்தை வைத்திருந்த அறையின் ஆசையாலா அல்லது, நம்முடைய விவாதத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற அந்த அறையின் உள்நோக்கத்தால் நிகழ்ந்த அமானுட சக்தியாலா என்ற வினாக்களுக்கு இந்தக் கவிதை பதிலளிக்க அப்போதே என்னைவைத்து தன்னை எழுதிக்கொண்டது.

நண்பர்களை விட்டுச் சென்றுவிடலாம். பின்னொரு நாளில் சந்திக்கும் வாய்ப்பு நிகழலாம். ஒருநாள் தங்கிப்பேசிவிட்டுப்பிரிவதில் பெரிய துக்கம் வந்துவிடப்போவதில்லை. சந்திப்பின் நீட்சியாகத் தொலைபேசி வழி சிரித்து மகிழலாம். பழையதை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தும் போகலாம். ஆனால் அறைக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் நம் உரையாடைகளை நாம் எப்படி விட்டுப்பிரிவது? அறைக்குள் எப்போதும் மிதந்தவாறு இருக்கும் அந்த உரையாடல்கள், சிரிப்புகள், ஆதங்கங்கள், ஆத்திரங்களை என்ன செய்வது? அவற்றை எப்படித்தான் விட்டுப்பிரிவது? இன்னொருமுறை அதே நண்பர்கள் சந்திக்கும்போது அச்சு வார்த்தார்போன்று அதே உரையாடல்களை, அதே சிரிப்பினை, அதே விவாதங்களை,அதே கோபதாபங்களை நிகழ்த்திக்காட்டமுடியுமா நம்மால்? ஆனால் இவையெல்லாம் அறையில் மிதந்துகொண்டிருக்கின்றனவே! இவற்றை எப்படி விட்டுப்பிரிவது?

(சிங்கை பாலு மணிமாறன் இக்கவிதையைப்பற்றி சிலாகித்து எழுதினார். நீங்கள் விமர்சனம் செய்யலாமே என்று ஒருமுறை கேட்டதற்கு என் இன்னொரு முகத்தை சிலர் விரும்பமாட்டார்கள் என்றும் சொல்லிவைத்தார். உங்களின் அழகிய முகத்தையா?)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...