Wednesday, October 28, 2009

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

கோ.புண்ணியவான்ராணியின் அப்பா ஆலமர முனீஸ்வரர் ஆலயத்துக்கு நேந்துவிட்ட கடா ஆடு, முனியம்மா வீட்டுக்கு கொல்லைப்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது கொழு கொழுவென்று வளர்ந்து சாமிக்கு விட்டது என்ற பெருமையோடு, ‘சாமி குத்தமாகிவிடுமே’ என்று,யார் தொந்தரவுக்கும் ஆளாகாமல் சாவகாசமாய் சுற்றிக்கொண்டிருந்தது.ராணி ஆறாம் ஆண்டு அரசாங்க சோதனையில் ஏழு ஏ பெற முனீஸ்வரரின் கிருபை கிட்ட, நெருங்கிய உற்றார் உறவினரை அழைத்து, நல்ல நேரம் பார்த்து, மருதமுத்து பூசாரியை வைத்து, செய்ய வேண்டிய சடங்கு பூஜை புனஸ்காரமெல்லாம் செய்து, அதனை முனீஸ்வரனுக்கே தண்ணீர் தெளித்து விடப்பட்டது.அன்றிலிருந்து அந்த ஆடு தன்னிஷ்டம்போல் சுற்றிக்கொண்டிருந்தது.

.......................................................ஓய்வு நேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்களே பாக்கியிருந்தன.கொடுத்த இருபது நிமிடத்தில் கென்டினில் வரிசைப்பிடித்து நின்று வாங்கிச்சாப்பிடுவதற்குள் பத்து பதினோரு நிமிடங்கள் கடந்துபோய்விடுகின்றது.எஞ்சிய நேரத்தில்தான் கிளித்தட்டு விளையாடமுடியும்.ஓய்வுக்கு முந்திய பாடவேளையை ஆசிரியர்கள் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் கெண்டினுக்குப்போகவும் வாங்கவும் வாயில் போட்டு மென்றபடியே மீண்டும் அடுத்த பாடத்துக்கு வகுப்புக்குள் நுழைவுமே சரியாக இருக்கும்.

ஆசிரியர் கண்களில் படாதவாறு கழிப்பறைக்குபின்னால் இடத்தைத் தேர்வு செய்து எல்லாரிடமும் தெரிவித்தாயிற்று.

சோதனை முடியும் வரை வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதென்று அப்பா புதிய சட்டம் விதித்திருந்தார். காலையில் விளயாடலாம் என்றால் ஒருசேர எல்லாரையும் பார்க்க முடியாது. ஆண்டு துவக்கத்திலேயா உடற்பயிற்சி பாடத்தைப் பெனுலிசான் பஹாசாவுக்கு தாரை வார்த்தாயிற்று.

கண்ணன், விக்னேஷ்,சுப்ரமணி.நவீனா,முனிமா,ரத்னா வந்துவிட்டார்கள்.ரவியையும்

கனகாவையும் காணவில்லை.விடு விடுவென்று ஓடிப்போய் வரிசையில் இடம்பிடித்து வாங்கிச்சாப்பிட்டுவிட்டு வந்தோமென்றில்லாமல் .....ஆடி அசைந்து நகர்ந்தால் இப்படித்தான். இன்னும் ஏழோ எட்டு நிமிடங்களோதான் எஞ்சி இருந்தன.

“தோ வதாங்க ரெந்து பேதும்.....”உற்சாகமாய் எழுந்தது சுப்ரமணியின் குரல். எதையோ வாயில் அதக்கி வார்த்தைகளை மென்றுவிட்டிருந்தான்.

“ரா....ணி..... சார்! சார்......!” என்று அமுங்கிய குரலில் எச்சரிப்பு விடுத்தாள் முனிமா.

“ ராணி...... நீ என்னா பண்றே அதுங்களோட.....”

“போச்சி..... நிக்கி வெள்ளாண்ட மாரிதாங்”என்று நசுங்கிய குரலில் முனுமுனுத்தவள்....... “சார்...”....என்று பவ்வியமாக குரல்கொடுத்தவாறே கிருஷ்ணன் சாரை நோக்கி ஓடினாள்.

“ராணி கொஞ்ச நேரங்கூட நீ வீணாக்கக்கூடதுன்னு சொல்லியிருக்கேன்ல..... இங்க என்ன பண்ணிட்டிருக்கே......?

“இல்ல சார்.......ச்சும்மாதான் சார்.......”

“இந்த வருஷம் ஒன்னமட்டுந்தான் முழுசா நம்பியிருக்கோம்......போன வருஷம் மதுநிஷா ஆறு ஏதான் போட்டு பள்ளிக்கூடத்த எதிர்பார்ப்பையே ஏமாத்திட்டா.....ந்த வருஷம் நீயும் அதையே பண்ணிடாத......என்னோட மெண்டி நீ இல்லியா.....?போ..... போயி ...... நான் கொடுத்த கணக்கு அட்டைய.....பின்னல் கணக்கு.....எடுத்துட்டு வா....... பிலேக் குருக்கு. மூனு வருஷமா.....இந்த ஸ்கூலுக்கு ஏழு ஏ கெடைக்காம பள்ளிகூடத்தையும் வாத்தியாரையும் எவனு மதிக்கமாட்டேங்கிறான்...இருந்த கெட்டிக்கார பிள்ளைகளையும் வேற ஸ்கூலுக்கு மாத்திக்கிட்டாங்க......ந்த லட்சணத்துல நீயும் இப்டிருந்தா எப்பிடி....?”ஆசிரியரைப் பின்தொடர்ந்தபடியே,திரும்பிபார்க்கிறாள். மற்ற மாணவர்கள் ஆட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர்.

இரண்டாம் தவணைச்சோதணையில் ராணி பெற்றிருந்த ஏழு ஏ மதிப்பெண்களைத் தெரிந்துகொண்ட தலைமை ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை சபைகூடலில் ராணியின் பெயரை அறிவித்து, இந்த ஆண்டின் ஏழு ஏ பெறக்கூடிய தகுதி ராணிக்கு உண்டு சொன்னதும் கூடியிருந்த எல்லா மாணவர்களும் கைதட்டியது, ஆரம்பத்தில் அவளுக்கு உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த உற்சாகம் மன ஆழத்தில் போய் பதியுமுன் காரணமற்ற புதிய பதற்றம் அவளுக்குள் ஊடுருவி நாகத்தின் நாக்கெனத் ‘விசுக்’ ‘விசுக்’கென நீட்டி பயமுறுத்தியது...!

‘என்னால் முடியுமா.....?’கடந்த மூன்று ஆண்டுகளின் பள்ளி எதிர்பாரதவிதமாய் கண்ட தோல்வி .அவளை அச்சுறுத்தியது. ‘ச்சே என்ன தேவையற்ற அச்சம் இது.?.....என்னால் முடியும்’.........................................“ராணி வீட்டுப்பாடமிருந்தா போய் செய்டா கண்ணு.... பரீட்சை முடியிர வரைக்கும் நீ குசினி பக்கம் வராதேன்னு சொல்லியிருக்கேன்ல....நான் செஞ்சிக்கிறண்டா.....நீ........போ...... போய் படி....” தோளைத்தொட்டு மெல்ல வருடியபடி சொன்னால் ராணியின் தாய்.

“ இல்லம்மா எல்ல நேரமும் படிச்சிக்கிட்டே இருக்க போரடிக்குதும்மா .....இப்படி எதாவது வேற வேல செஞ்சிட்டு போய் படிக்கிறனே.. “

“ இல்லடா கண்ணு ..... வேணா நீ ஏழு ஏ எடுக்கணும் அதான் எங்களோட

லட்சியம்....அத்தை மக போன வருஷம் ஏழு போட்டு டத்தோ சிரி சாமிவேலுக்கிட்ட பரிசு வாங்கினத டி விலெல்லாம் போட்டு காட்டுணாங்க..... அவங்க அப்பா அம்மா எவ்ளோ பெருமை பட்டாங்க தெரியுமா...... அந்த பெருமைய எங்களுக்கும் நீ தான் தேடித்தரணும்.......” ராணியின் கையில் சவர்க்கார நுரையோடிரிருந்த பீங்கானை வாங்கிக்கழுவிக்கொண்டே........ “போடா கண்ணு நெறைய பாடமிருக்கும்.... செஞ்சிட்டு போய் கொஞ்ச நேரம் படு.....ராத்திரிக்கி ரொம்ப நேரம் படிக்கலாம்ல.....! ந்த வருஷம் நீ கண்டிப்பா ஏழு போடுவேன்னு ஒங்க பெரிய வாத்தியாரு ஒங்கப்பாகிட்ட சொல்லியிருக்காரு.” கயிறாய் முறுகியிருக்கும் அவர்களின் நம்பிக்கையை நிரைவேற்றுவதற்கு தான் முழுப்பொறுப்பேற்க நிர்பந்திக்கும் அச்சம் அவளுக்குள் நங்கூரமிட்டுக்கொண்டிருந்தது.

“நேத்திக்கு நடந்த பி ஐ பி ஜி கமிட்டி கூட்டத்துலியும் இந்த வருஷமாவது ஸ்கூலுக்கு ஏழு ஏ கெடைக்குமான்னுதான் பெரிய வாத்தியார கேட்டாங்களாம். பெரிய வாத்தியாரு மறுபடியும் ஒம்பேர சொன்னாராம்.அப்பா போயிட்டு வந்து சொன்னாரு.....”அம்மா பெருமையாக வேறு சொல்லிக்கொண்டிருந்தாள்.ஒரே சுற்றில் எல்லாத்துணிகளையும் துவைத்துவிடவேண்டுமென்று வாஷிங் மெஷினின் கொள்ளளவுக்கு அதிகமாகவே துணிகளைத் திணித்துக்கொண்டிருந்தாள் அம்மா.

சோதனை நெருங்கிகொண்டிருந்தது.செப்டம்பர் 10 அவளைக் கனவிலும் விரட்டிய வண்ணம் இருந்தது. பள்ளியில் கொடுத்த பாடத்தைத் தவிர மாமா, அப்பா வாங்கிகொடுத்த பயிற்சிபுத்தகங்கள் வேறு மேசையில் நிரம்பியிருந்தன. ராணி அவற்றையெல்லாம் சுமையாக கருதுவதில்லை.சோதனை வருவதற்குள் மீள்பார்வை செய்துவிடமுடியும்.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அந்த ஏழு ஏ ..........

“என்னால் முடியுமா...?” ச்சே என்ன இது? போன மாதம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தன்னூக்கப்பயிற்சியில் காதர் இப்ராஹிம் என்ன சொன்னார்.....மனிதனால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை.....இந்த மந்திரச்சொல்லை ஆழமாக உங்கள் மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஒவ்வொருவராலும் முடியும்”

“ ஆமாம்..... ஆமாம் என்னால் முடியும்.”.......................................................

.

நேரம் பின்னிரவைதாண்டிக்கொண்டிருந்தது.இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு சோதனைத்தாளின் கணிதம், மலேசிய மொழி பெமஹாமான், அறிவியல், ஆங்கிலம் போன்ற நான்கு பாடங்களையும் கொடுக்கப்பட்ட நேரத்தைவிட குறுகிய நேரத்திலேயே அவளால் செய்து முடிக்க முடிந்ததில் அவளுக்கு மனநிறைவை அளித்திருந்தது.பின் அட்டையில் கொடுக்கப்பட்ட பதில்களோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் அவள் அந்த எல்லா பாடத்திலும் தொண்ணூற்ரைந்துக்குமேல் பெற்றிருந்ததில் மகிழிச்சி கரைபுரண்டது.கணிதத்தில் முப்பத்திரண்டாவது வினாவுக்கான அவளின் பதில் சரியாகப்பட்டது.ஆனால் விடைத்தாளில் பதிவாகியிருந்த பதிலில் அவள் குழப்பமுற்றிருந்தாள்.சாரைக் கேட்டுத்தெளிவு பெற வேண்டும் என்று யோசித்தவாறிருந்தாள்.

நீண்ட நேரம் நாற்கலியிலேயே வஜ்ஜிரமிட்டதுபோல அமர்ந்திருந்தது அவள்

உடலை இறுக்கமாக்கிவிட்டிருந்தது.எழுந்து தலைக்கு மேல் கையை நீட்டி நெட்டி முறித்தாள்.கொஞ்சம் சுகமாக இருந்தது.அப்பாவின் குரட்டை ஒலி இருளையும் அச்சுறுத்திக்கொண்டிருந்தது.

தன்னுடைய அறையிலிருந்து வெளியேறி விருந்தினர் அறையை எட்டிப்பார்த்தாள்.

தொலைகாட்சியின் ஆன் பட்டனிலிருந்த வந்த மெல்லிய ஒளி அறைக்குள் சன்னமான சிவப்பு நிறத்தை தூவியிருந்தது.

தூக்கம் இப்போது வருவதாயில்லை.வெகுநேரம் குவிமயமிட்டு பாடத்தில் ஈடுபட்டிருந்ததால் உறக்கம் தழுவ சற்று நேரமாகலாம்.

தொலைகாட்சியைத் திறந்தாள்.

ஏதோ தமிழ் பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.நாயகன் நாயகியை விரட்டி விரட்டி பாடிக்கொண்டிருந்தான்.மனம் அந்தக்காட்சியில் லயிக்கவில்லை.தொலைகாட்சி நேரத்தைத்தின்றுவிடும் என்ற மாமாவின் எச்சரிக்கை ஊர்ந்து நினைவூட்டியது.சோதனயில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமே நீர்க்குமிழியென மேலெழும்பி குதித்தவண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தின் ஊடே சோதனையைப்பற்றிய நினைவுகள் மேலெழும்பி பகீரெனத்துடித்தது அடிமனது! இமைகள் மூடும் வரை யூபிஎஸ்ஆர் பேரலைகள் மோதியவண்ணமிருந்தன!.............................................................................

பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது நேந்துவிடப்பட்ட கடா ஆடு குப்பைத்தொட்டியில் முன்கால்களை வைத்து எம்பி எதையோ மேய ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.ராணி நடையைத் துரிதப்படுத்தி அதனைக் குப்பைத்தொட்டியிலிருந்து விரட்டி விட்டாள்.அது தலையை ஆட்டியவாறு வேறு திசையை நோக்கி நடந்தது.

சோதனை முடிவுகள் விடுமுறைக்கு முன்னால் கடைசி வாரத்தில் வந்து விடும்.அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை வேண்டிக்கொண்டபடி முனீஸ்வரருக்கு பூஜை போட்டு பலியிடுவதாக ராணியின் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.திரும்பும் திசையெல்லாம் யுபிஎஸார் பற்றிய நினைவிலிருந்து அவளால் தப்ப முடிவதில்லை.நீண்டு வளர்ந்த நிழலைப்போல இருளிலும் அவளின் எண்ணங்களை விரட்டியவண்ணம் இருந்தது..............................................................................சோதனை முடிவுகள் கடைசி வாரத்தின் புதன் கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. பால் பொங்குதல் மீது நீர் விழுந்துவிட்டதுபோல எல்லாரின் எதிர்பார்ப்புப் பொங்குதலை அடக்கிவிட்டிருந்தது ராணியின் சோதனை முடிவு.நெஞ்சு குலுங்கி பதற்றம் மேலிட்டது.தீக்காற்று முகத்தில் பீய்ச்சி அடித்தது போன்று துடித்தாள். விழிநீர் அடங்க மறுத்து ஊற்றென பிரவாகித்தது.

முடிவு எப்படி அமைந்தாலும், ஆறுதலுக்கு குடும்பம் என்று ஒன்று உண்டு.இருந்தாலும் முடிவு பதிவாகிய துண்டுக்காகிதம் பெரும்பாறையாக சுமக்கிறது.இதனை எப்படிப்பெற்றோரிடம் தெரிவிப்பது என்ற தவிப்பு உள்ளக்கிடக்கையில் நிலைகுத்தியது.புதிர் நிறைந்த பயத்தோடு வீட்டுக்கு நடந்தாள்.

என்றுமில்லாமல் பக்கத்து வீட்டில் ஒரே கொண்டாட்டக் கலை கட்டியிருந்தது.தேசியப்பள்ளியில் ஆறாம் ஆண்டு அடைவுநிலை தேர்வு எழுதிய ஏஞ்சலா ஐந்து ஏக்கள் பெற்றிருந்ததுதான் காரணம். அவளின் அப்பாவும் அம்மாவும் கைப்பேசியில் உறவினரையும் நண்பர்களையும் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுமட்டுமல்லாமல் அவர்களை அன்றிரவு நடக்கும் விருந்திலும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தவண்ணம் இருந்தனர்.இன்றிரவு அவளுக்கு நிறைய விதவிதமான பரிசுகள் கிடைக்கலாம்.பாராட்டுகள் குவியலாம்.

பள்ளியில் தேர்வு அறிக்கையைப்பெறும்போதே ஆசிரியர் சொன்னது அவள் மனதில் புதிய காயமாகவே வலித்தது.”உன்னை மட்டும்தான் எதிர்பார்த்தோம், நீயும் கால வாரிட்டயே” தலைமை ஆசிரியர் பிபிடியிலிருந்து வந்ததுமே பொறுப்பாசிரியரிடம் தேர்வு முடிவுகளைக்கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தவர் வெளியே வரவே இல்லை.”ராணி..... ராணி.....” என்று அழைத்து உற்சாகமாகப்பேசுபவர், முடிவு வந்தவுடன் ஊமையாகிப்போனார்.

தேர்வுத்தாளை மீண்டும் பார்க்க அவளின் மனம் இடம் தரவில்லை.பார்த்து என்ன லாபம் ?அதே ஆறு ஏ வும் ஒரு பியும்தான் தெரியும்.ஏழு ஏ கனவு நொடிப்பொழுதில் கலைந்துபோனது. சிம்ம சொப்பனமாகவே இருந்த பஹாசா மெலாயு பெனுலிசானில் அவள் இடறியிருந்தாள்! இதுகாறும் தன் மீது பயணித்த, கௌரவ பிம்பம் மெல்ல கலைந்து போவதாய் பட்டது.

போதாக்குறைக்குப் பக்கத்துவீட்டில் நடைபெறும் கொண்டாட்டம் ராணியின் மகுடத்தை யாரோ கழற்றி எரிந்துவிட்டது போன்ற ஏமாற்றத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்தது.

முடிவு தெரிந்ததும் அம்மா “இதை நான் ஒங்கிட்டேர்ந்து எதிர்பாக்கவே இல்ல..... அவளைப்பாத்தியா.... ..?” என்ற ஒற்றை வாக்கியத்தோடு முகத்தை திருப்பிகொண்டவள் பேச்சையும் நிறுத்திக்கொண்டாள்.

அம்மா வாழ்க்கையில இதுதான் கடைசி பரிட்சை இல்லம்மா, இது ஆரம்பம்தாம்மா..இனிமே வரப்போர பரீட்சைதாம்மா முக்கியம், அதல நான் சாதிச்சி காட்டுவம்மா.....”

“ஆமா இதலியே கிழிக்க முடியலையாம்..!”. அம்மா முனு முனுப்பது அவள் செவிகளில் விழவேண்டுமென்பதற்கான ஏற்பாடாக இருகலாம்.அந்த கணத்தில்தான் அவள் முகம் நிறைய வெட்கத்தை அப்பிவிட்டதாக தலைக்குனிவு உண்டானது. .அதற்குப்பிறகு அம்மாவிடம் என்ன கூறியும் அது எடுபடாமலேயே போனது.எந்தக் காரணத்தையும் அவள் ஏற்றுக்கொண்டதாய் தெரியவில்லை.மறு பேச்சு பேசாமலே முகத்தைத் திருப்பிக்கொண்டவண்ணம் இருந்தாள். அம்மா சமைக்கும்போது ஆறுதல் கூற பின்னாலேயே போனாள். அவள் பிடிகொடுக்கவில்லை. வெளியே நைலான் கயிற்றுக்கொடியில் துணி உலர்த்தும்போது பின்தொடர்ந்துபோய் அம்மாவின் விரலை நெருடி ஆசுவாசப்படுத்த முயன்றாள்.அவள் கையை உதறிவிட்டு கண்டுகொள்ளவில்லை.

முழுநேரமும் அவளின் முதுகோடுதான் அவள் பேசவேண்டியிருந்தது சங்கடமாக இருந்தது.

அண்டை வீட்டின் அல்லோலகல்லோலம் அவளை மேலும் உசுப்பேற்றி இருக்கவேண்டும்.அவர்களோடு பேசி மாதக்கணக்காகிவிட்டது.’பக்கத்து வீடு’ என்ற ஒரே காரணம்தான், வேறென்ன?. அவளைவிட தான் ஒரு ஏ அதிகம் வாங்கியிருப்பதுகூட உள்வாங்கிக்கொள்ளவில்லையே அம்மா.

அப்பா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முடிவைத்தெரிந்துகொண்டவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.வேலைவிட்டு வீடு வந்து சேர்ந்துக்கூட அப்பாவின் கோபம் தீரவில்லை போலும்.பேச்சை முறித்துக்கொண்ட அம்மாவோடு கூட்டு சேர்ந்துகொண்டார்.சாப்பிடும்போதுகூட சாப்பிடு என்று ஒரு வார்த்தை அழைக்கவில்லை.இதற்குபதிலாக தன்னை இரண்டு அடி அடித்திருக்கலாம்!

தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இருவரும் தன்னிடம் பேசாமல் இருப்பது அவளுக்குப்புதிய அனுபவம்.

வீட்டுத்தொலைபேசி அலரத்துவங்கியது.

அம்மாதான் எடுத்தார்.”ராணிக்கு என்னா கெடைச்சிச்சி?சுரேஷ் ஏழு ஏ போட்டான்,”சிரம்பானிலிருந்து வந்த ராணியின் சித்தியின் அழைப்பில் அவள் பட்டும் படாமல் பதிலைச்சொல்லி உரையாடலை நீட்டிக்காமல் வைத்துவிட்டாள்.

சற்று நேரம் கழித்து மீண்டும் அழைப்பு!

“அதை எடுத்துத்தொலையாத, இவளோட லட்சணத்தத்தான் கேப்பாங்க!டமாரம் அடிக்கிற நல்ல செய்தியா இது? வேணா எடுக்காத,”என்று கடிந்தார்.

‘அப்பாவுமா!’ஏற்கனவே ஆமையென உள்ளொடுங்கிய பாழாய்ப்போன மனம் மேலும் குறுகியது.

ஏஞ்சலாவின் வீடு சாயங்கால வே¨ளையானதும் மேலும் களைகட்ட ஆரம்பித்தது.

அப்பாவும் அம்மாவும் வெளியே கிளம்பிப்போய்விட்டார்கள்.

வெளியே போகும்போதெல்லாம் ராணியிடம் சொல்லிவிட்டுப்போகும் வழக்கம் உள்ளவர்கள் இந்த முறை அதற்கு மாறாகவே நடந்து கொண்டார்கள். அப்பாவின் ஏமாற்றக் குறியீடாக மோட்டார் சைக்கிளின் சத்தம்கூட இரட்டிப்பாக உறுமியே கிளம்பியது. தன் இருப்பைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத தன் பெற்றோரின் போக்கு வேதனை அளித்தது.அவள் கறையில் ஒதுக்கப்பட்ட மீனாய்த்துடித்தாள்.

மூச்சுக்கு மூன்று முறை ‘கண்ணு’ ‘கண்ணு’ என்று கொஞ்சும் அம்மா, ஆறுதலுக்குக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை.

ஏஞ்சலாவின் வீடு பலூனால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.தீபாவளி வந்துவிட்டதுபோன்ற மின்விளக்குகள் ஒளி வெள்ளத்தை அள்ளித்தெளித்திருந்தன.விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களால் ஏஞ்சலாவின் வீடு கொண்டாட்ட ‘அமளியை’ ஆரம்பித்துவிட்ட நிலையில், இவளின் வீடோ சுவாசம் இழந்து கிடக்கிறது.எப்போதுமல்லாத தன் பெற்றோரின் போக்கின் பிரதிபலிப்பாய் வீட்டுக்குள்ளும் கனத்த மௌனத்தின் எச்சம் விரவிக்கிடந்தது.

மேற்கு வானத்தில் சூரியன் மலைகளுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்தான்.கரிய மேகங்கள் திப்பித்திப்பியாய் வானத்தை நிரப்பிக்கொண்டிருந்தன.இருள் மெல்ல கவிய ஆரம்பித்தது.அதன் பிடியில் மரங்கள் ஒடுங்க ஆரம்பித்தன.

வெளியே காய்ந்த துணிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் காற்றில் ஆடிய துணிகளின் சமிக்ஞையால் அவள் சுயநினைவுக்கு வந்தவளாய் வெளியே போனாள்.முழு பிரக்ஞையற்று ஈடுபாடின்றி அகற்றினாள். துணிகளை அகற்றியதும் நைலான் கயிறு அவளைப்போலவே மீண்டும் ஒற்றையாகி ஆடியது.

சிங்கப்பூரிலிருக்கும் மாமாவுக்கு செய்தி சேரவில்லைபோலும்.அவரின் போக்கு இப்படி இருக்காது. கண்டிப்பாய் பாராட்டுவார்.இப்போதைக்கு அவரிடம் பேச ஏனோ மனம் வரவில்லை.

‘கண்ணு’ ‘கண்ணு’ என்று அம்மா அழைக்கும் குரலுக்கும்,மென் வருடலுக்கும் ஏங்கியது மனம்.

“படிச்சிட்டு வெறும் வைத்தோடு படுக்காத; மைலோ கலக்கி ரொட்டி சாப்பிட்டு படு”என்று வாஞ்சைய்யோடு அரவணைக்கும் அப்பா, வாய்ப்பேச்சை நிறுத்திக்கொண்டதை அவளால் சீரணிக்க முடியவில்லை.அவரின் அன்பையும் இழக்கநேரிட்டதை அவளால் நம்ப முடியவில்லை.அவர்களின் இந்த தீடீர் மௌனம், தான் செய்த சிறிய குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனையாகப்பட்டது.வீட்டைவிட்டுப்போன பெற்றோர் எப்போது திரும்புவார்கள் என்று தெரியவில்லை.அண்டை வீட்டு குதூகலம் முடிவுறுவதற்காகக் காத்திருந்துவிட்டு வரலாம்.ஏஞ்சலா விட்டிலிருந்து வரும் சிரிப்புசத்தம் அபஸ்வரமாய் ஒலித்தது. யாருமற்ற இவள் வீடு வெறிசோடிப்போய் கிடந்தது.

அவள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டவளாய் உணர்ந்தாள்.எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற வெறுமை. மனம் சொல்லொன்னா சுமையால் ,அவள் முகத்தில் வெட்கமும் பீதியும் வெளுத்துப்படர்ந்த வண்ணமிருந்தது. எல்லாரின் எதிர்பார்ப்பிலும் தான் மண்ணை தூவி விட்ட குற்ற உணர்வு பல ஆயிரம் முறை எதிரொலித்தவண்ணமிருந்தது.

”தன் வெற்றிக்காக மெனகெட்டவர்களின் முகத்தில் கரி பூசி விட்டேனோ?”உள்ளுடல் உஷ்ணமேறி தகித்துக்கொண்டிருந்தது.சேமித்து வைக்கப்பட்ட கனவுத்தேக்கத்தின் தாழி உடைந்துவிட்டதாகக் குமைந்தாள்.தான் அந்நியமாக்கப்பட்ட அத்தருணத்தில் அவளின் சுய சமாதான முயற்சிகள் யாவும் காலாவதியாகின்றன!தோல்வியின் கசிவுகள் விட்டகல்வதாக இல்லை!

அம்மாஎங்கிட்ட பேசவேமாட்டியா........?

சன்னல் வழியே வெற்று நைலான் கொடி காற்றில் ஆடிகொண்டிருந்தது.அது கைகளை வீசி அவளையே அழைப்பதுபோன்று இருந்தது.பின்னாலிருந்து ஏதோ ஒரு சக்தி அவளைத்தள்ளியது.தன்னிச்சையாக எழுந்த கால்கள் முன்னகர்ந்தன.

முற்றிலும் சுய நினைவிழந்தவளாய் நைலான் கொடியை நோக்கி நடந்தாள் ராணி.எங்கோயோ சுற்றித்திரிந்துவிட்டு இரவு சாயும் நேரத்தில், ராணியின் வீட்டுப்பக்கம் அடைய வந்தது முன்னிலும் பெரிதாய் வளர்ந்துவிட்ட கடா.Ko.punniavan@gmail.com

4 comments:

ko.punniavan said...

வணக்கம். தங்களின் கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன என்ற கதையைத் தங்களின் கட்டுப்பக்கத்தில் படித்தேன். சற்று நேரம் கதையையே உற்றுப் பார்த்தேன். கதையாகத் தெரிவணக்கம். தங்களின் கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன என்ற கதையைத் தங்களின் கட்டுப்பக்கத்தில் படித்தேன். சற்று நேரம் கதையையே உற்றுப் பார்த்தேன். கதையாகத் தெரியவில்லை.. . . கன்னத்தில் ஓங்கி அறைந்தது மாதிரி இருந்தது. ஆசிரியர் தொழிலுக்குள் இருந்து கொண்டு மாணவர்களை யு.பி.எஸ்.ஆரை நோக்கி மாணவர்களைத் துரத்தும் மனப்போக்கு ஏற்பட்டதற்கு யார் காரணம்? அத்தகைய மனோநிலையைப் பெற்றோர்களிடமும் விதைத்து விட்டிருப்பதற்குக் காரணம் யார் ? இத்தகைய கதையை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். . . இல்லை சுவாசிக்க வேண்டும்…
நிற்க,
தினமும் தங்கள் கட்டுப்பக்கத்தைத் திறந்து பார்க்கிறேன். சிறப்பு. . .
நன்றிகள்
யவில்லை.. . . கன்னத்தில் ஓங்கி அறைந்தது மாதிரி இருந்தது. ஆசிரியர் தொழிலுக்குள் இருந்து கொண்டு மாணவர்களை யு.பி.எஸ்.ஆரை நோக்கி மாணவர்களைத் துரத்தும் மனப்போக்கு ஏற்பட்டதற்கு யார் காரணம்? அத்தகைய மனோநிலையைப் பெற்றோர்களிடமும் விதைத்து விட்டிருப்பதற்குக் காரணம் யார் ? இத்தகைய கதையை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். . . இல்லை சுவாசிக்க வேண்டும்ஸ
நிற்க,
தினமும் தங்கள் கட்டுப்பக்கத்தைத் திறந்து பார்க்கிறேன். சிறப்பு. . .
நன்றிகள்.
வள்ளி ஏழுமலை

geets said...

punniavan, this is a very disturbing story. I'm a mother of a UPSR student and this was my greatest fear, of how my daughter would handle her disappointment if she failed to get straight A's.I started counselling her a week before results were released. Suicide is so common among Indians in Malaysia and they die for stupid reasons. (Like Seetha 4 death of her brother)You write well, do write in tamil newspapers as a community service and stop this suicide mentality, please.

ko.punniavan said...

thank you for your comments.this story is basaed on real event. for your information I have been writting to malaysian megazines n news papers for the past 30 years.just recently I stopped writing.I am concentrating on my blog.Well, results of our local exams has greater impact on students n parents. Let ur daughter prepare for the exam well.Advice after the exam that u would accept any outcome of the results .thank you.

Anonymous said...

For moѕt up-to-date nеωs you have to pay
a quick viѕit the wеb and on web I fοund this website as
a finеst wеb sіte for latest updates.


Loοκ intο my sitе - MintedPoker Bonus