வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் நிழல் போல நம்முடன் நடந்து வருபவை. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது முன்னர் எப்போதோ பதிந்து கிடந்த சம்பவங்களை, மூளை சட்டென இழுத்து வந்து நினைவுப்பட்டியலின் வரிசையில் முதல் ஆளாக நிற்க வைத்துவிடும். குறிப்பாக நண்பர்களுடனான உரையாடலில்போது நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு ஈடான பேச்சு எழுந்தால் இதுபோன்ற அதிசயங்கள் நடந்துவிடும். நாம் படித்து சேமித்து வைத்ததை விடவும், அனுபவித்தவைதான் அதிக அளவில் பதிவாகி வைத்திருக்கும் மூளை. எழுத்துக்களைவிட மனித பிம்பங்களும், அவர்கள் ஏற்படுத்தித்தந்த அனுவங்களும் தாமாகவே மச்சங்கள்போல் அழுத்தமான இடத்தைப்பிடித்து வைத்துக்கொள்கின்றன மூலையின் எங்கோ ஒரு மூலையில். பின்னர் சந்தர்ப்பம் பார்த்து வெளியாகின்றன போலும்.
நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நடந்த சம்பவம் இது.
மாணவர்கள் பள்ளியில் அதிகம் விரும்பும் நேரம் ஓய்வு நேரம். ஏழு எட்டு மணிநேர தொடர் பாட வேளையில் அவர்களுக்குக்கிடைக்கும் ஓய்வு நேரம் சொற்பமான 20 நிமிடங்கள் மட்டுமே. பாடங்களைவிடவும், பிரம்போடும் வன்மமான முகத்தோடும், சமரசமற்ற வார்த்தைகளோடும், எட்டு மணி நேரமும் மாணவர்கள் சந்திக்கும் ஆசியர்களோடு ஒப்பிடும்போது ஓய்வு நேரம் அவர்களுக்குத்தாய்மை சுகம் தரக்கூடியவை. அதனையும் சோதனையின் முடிவுகளை நோக்கிப்போய்க்கொண்டிருக்கும் கல்வியுலகம் சிலசமயம் மாணவர்களிடமிருந்து கொஞ்சமும் கரிசனமின்றிப் பிடுங்கிக்கொள்கிறது.
ஓய்வு நேரத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி சொல்லவரும்போது ஏதேதோ குறுக்கே வருகிறது.
எட்டு மணி நேரக்களைப்பை 20 நிமிடத்தில் தீர்த்துவிட மாணவர்கள் வியர்க்க வியர்க்க விளையாடுவதைப்பார்க்கமுடியும். அப்படி விளையாடும்போது ஒரு மாணவன் கீழே விழுந்து பயங்கர வலியோடு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டான். கையில் சிராய்ப்போ காயமோ இல்லை ஆனால் அடிபட்ட இடம் வீட்டுக்குள் வெள்ளம் ஏறுவதுபோல மெதுவாக வீங்க ஆரம்பித்திருந்தது. எலும்பு முறிந்திருந்தால் மட்டுமே வீக்கத்தின் வேகம் அதிகரிக்கும். உடனே கடமை ஆசியரைக்கூப்பிட்டு மாணவனை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறினேன். மலேசியப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிகமான பதவி உயர்வு உண்டாக்கும்பொருட்டு துணத்தலைமை ஆசிரியர்களே நாலைந்து பேர் இருப்பார்கள்.அப்படிப்பட்டவர்களுள் மாணவ நலத் துணைத்தலைமை ஆசிரியர் ஒருவர் இருப்பார். பையனை அவரிடம் கொண்டு சென்றார் ஆசிரியர். துணத்தலைமை ஆசிரியர் பையனை என்னிடம் மீண்டும் அழைத்து வந்து, “சார் மருத்துவ மனைக்கு வேண்டாம், அங்கே போனால் பையனின் எலும்பு முறிவாக இருந்தால், கையை அசைக்க முடியாத அளவுக்கு பிலாஸ்டர்சின் கட்டு போட்டுவிடுவார்கள் . 3 மாசம் 4 மாசம் நாள் கடந்திடும். அறிப்பு தாங்க முடியாது. போமோவிடம் (மலாய்க்காரகளிடையே கிராமத்துக்கு முப்பது போமோக்கள் (மந்திரவாதி)இருப்பார்கள்.) அழைத்துச்சென்றால் ஒரே நாளில் உருவி சரியாக்கிவிடுவார்கள்,” என்றார்.
“இது சாதாரண வீக்கம்போல் தெரியவில்லை முறிவு ஏற்பட்டிருக்கலாம்,” என்று சொன்னேன். “ தாமதிக்காமல் கொண்டு போங்கள்,” என்று வலியுறுத்தினேன். பையன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான்.
“சார் வேண்டாம் சார் எனக்குத்தெரியும், இது வெறும் சதை பிசகல்தான் போமோ சரியாக்கி விடுவார்,” என்றார் மீண்டும். என்னிடம் விவாதித்துக்கொண்டிருந்தவர் செம்ம்பிறைச்சங்கத்தில் முக்கிய பதவி வகிப்பவர். முதலுதவி தெரிந்தவர். அவர் அப்படி வாதிடுவது எனக்கு வியப்பாக இருந்தது.
“ ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேண்டாம் நீங்கள் மருத்துவ மனைக்குக்கொண்டு போங்கள்,” என வலியுறுத்தினேன்
“இப்படி நெறைய கேஸ பாத்திருக்கேன் போமோதான் சீக்கிரம் சரியாக்குவார்,” என்றார் மீண்டும் . பையன் அழ ஆரம்பித்திருந்தான்.
“வேண்டாம் நான் சொல்வதைக்கேளுங்கள் ஏதாவது எசகு பெசகாயிட்டா நாந்தான் பொறுப்பேற்கணும், நீங்க நான் சொல்றபடி செய்யுங்க,” என்றேன் சற்று கறாறான தொனியில்.
“ வேண்டா வெறுப்பாய் பையனைக் கொண்டு போனார்கள்.
ஒரு 30 நிமிடத்துக்குள் மீண்டும் அவர்களின் கார் பள்ளி வாளாகத்துக்குள் நுழைந்தது. மருத்துமனைக்குச்சென்றிருந்தால் இவ்வளவு விரைவில் திரும்பியிருக்கமுடியாது. எக்ஸிரே எடுத்து பிலஸ்டர்சின் போட நேரமெடுத்திருக்கும். அவனுக்கு எலும்பு முறிந்திருக்காதோ! என அனுமானம் பிழையோ என சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் காரை விட்டு இறங்கி வந்ததும்தான் பார்த்தேன், அது மருத்துவ மனைகட்டு மாதிரி தெரியவில்லை. பழைய கைலி ஒன்றைக் கிழித்துக் கட்டியிருந்ததால் நான் சொல்வதைக் கேட்காமல் போமோவிடமே அழைத்துப்போனதை யூகித்துக்கொண்டேன்.
“ஒன்னுமில்ல சார், பிரக்ச்சர்ல்லாம் கெடையாது சார் வெறும் சதைப் பிசகியிருக்குன்னிட்டான் போமோ,” என்றார்.
பயனைப்பார்த்தேன் கொஞ்சம் தெளிவாயிருந்ததுபோல இருந்தான். மருத்துவம் நடந்துவிட்டது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே எனக்குச் சரியாகிவிடும் என்ற திருப்தி அவன் மனதில் ஓடியிருக்ககூடும்.
“இதற்குமேல் பேசுவதற்கு ஏதுமில்லை.பிரச்னை வந்தால் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்றேன். எனக்கென்னவோ மனசு சரியில்லை. எனக்கென்னவோ நேரப்போகிறது என்று உள் மனம் உறுத்திக்கொண்டிருந்தது.
“ சரிங்க சார் நான் பாத்துக்கிறேன்,” என்றார்.
பள்ளியில் நல்லது கெட்டது நடந்தால் எல்லாவற்றுக்கும் தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு. மாணவர் பென்சில் இல்லாமல் வந்தாலும், ஆசிரியர் மாணவரைதண்டித்திருந்தாலும், தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், பள்ளிவிட்டு மாணவர் வீட்டுக்குச்செல்லும் வேலையில் விபத்தில் சிக்கினாலும் தலைமை ஆசிரியர்தான் பதில் சொல்லவேண்டும்.
மறுநாள் பையனைப் போமோவிடம் அழைத்துச்சென்றதற்கான பொறுப்பின்மையையும் நானே பொறுப்பேற்கவேண்டிய நிர்பந்தம் வலிய தேடி வந்துகொண்டிருந்ததை என்னால் யூகிக்கமுடிந்தது. இரு பெண்மணிகளுடன் அந்தப்பையனும் என் அலுவலகம் நெருங்கிவிட்டார்கள். அன்றைக்கு நான் விடுமுறை எடுத்திருக்க வேண்டும்! தெரியாமல் பள்ளிக்கு வந்துவிட்டேன்.
“இங்கே யார் தலைமை ஆசிரியர்?,” என்று என்னிடமே ஆங்கிலத்தில் கேட்டார் அவர்களில் ஒருவர்.
“நாந்தான் ..... பிலீஸ் உட்காருங்கள்,” என்றேன்.
“ நான் உக்காரெல்லாம் வரல, இவன ஏன் போமோகிட்ட கொண்டு போனிங்க, பள்ளி சடட்திட்டத்துல போமோக்கிட்ட அழச்சிட்டுப்போனும்னு ஏதும் இருக்கா?” என்றார் தடாலடியாய். “பிரக்ச்சருக்கு உடனே மருத்துவ மனைக்கு அனுப்பனும்னு தெரியாதா ஒரு தலைமை ஆசிரியருக்கு?”
ஒரு முட்டாளைப்போல நான் விழிபிதுங்க ஆரம்பித்தேன். என்ன பதில் சொல்வது என்று வாத்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் இருந்தால்தானே கிடைக்க!
“ நான் உங்க மேல நெக்லிஜன்சுக்காக கேஸ் போடப்போறேன்” என்றார். எனக்கு வெளவெளக்க ஆரம்பித்தது.
“ நான் ஒரு ஸ்டாப் நெர்ஸ், எம்பிள்ளையவே போமோக்கிட்ட அனுப்பினான். மத்த பிள்ளைங்க கதி என்னாவரது? என்று பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார். இப்படியா மாட்டுவேன்.
‘எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும்’ பிடிவாதத்தில் பேசிக்கொண்டே இருந்தார் அவர்.
என்னால் அதற்குமேல் உட்கார்ந்திருக்க முடியவில்லை. உடல் சூடு நாற்காலிக்கும் பரவிக்கொண்டிருந்தது. “excuse me” கேட்டுவிட்டு அலுவலகத்தைவிட்டு வெளியேறி, அந்தத்துணைத்தலைமை ஆசிரியரை அழைத்துக்கொண்டு வந்து,” பதில் சொல்லுங்கள்,” என்றேன்.
என்னிடம் கேட்டதையே அவரிடமும் ஒப்புவித்தார் அந்தப்பெண்மணி. வசவுகளையெல்லாம் இருவரும் பாராபட்சமின்றி சரிபாதியாய் பகிர்ந்துகொண்டோம்.
துணைத்தலைமை ஆசிரியர் தேமே என்று விழித்ததுதான் மிச்சம். நான் வாய்மூடி அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி மனதுக்குள் உலாவிக்கொண்டிருந்தது. சொன்னா கேக்கனும்!
பிறகு அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்டு அம்மையாரைச்சாந்தப்படுத்தி ஒருவழியாய் அனுப்பிவைத்தாயிற்று என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
இப்படிப்பட்ட நிறைய சம்பவங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமோ?
Comments