Skip to main content

விளையாட்டுப்பருவத்தைக் கபளீகரம் செய்யும் கல்வித்திட்டம்

நேற்று என் பேரன் முதலாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறான்.

பள்ளி ஆண்டு துவங்குவதற்கு முன்னாலிருந்தே அவனைப்பதிவதற்கான முன்னேற்பாடுகளின் போது

அவன் காட்டிய ஆர்வமும் பரபரப்பும் அவன்பால் அதிகம் ஈர்க்கவைத்தது.



அவனுக்காக வாங்கப்பட்ட புத்தகப்பையை என்னிடம் காட்டி அவன் ஆத்தா வாங்கிக்கொடுத்ததாக சொல்லி அதனைப் பயன்படுத்தும் முறையை என்னிடம் விளக்க ஆரம்பித்தான். புத்தகப்பையைத் தூரமாக எடுத்துச்செல்லும்போது அதனை இலகுவாக இழுத்துச்செல்லமுடியும் எனச்செய்து காட்டினான். அதனை முதுகிலும் சுமந்து செல்வதற்கான முறையையும் செய்து காட்டினான். தன் புதிய வெள்ளைக்காலணிகளையும் காலுறைகளையும் போட்டுக்காட்டி அவை பள்ளியில் சுத்தமாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கினான்.

அவனுக்கு வாங்கித்தரப்பட்ட பென்சில் பெட்டியையும் காட்டி, அவற்றுக்குள் என்னென்ன இருக்கிறது அதன் பயன்பாடு என்ன என்பதையும் விளக்கிய வண்ணமிருந்தான். அப்போது அவன் முகத்திலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் வெளிப்பட்ட வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. அவன் பெறப்போகும் புதிய அனுபவத்தின் படிமங்களை ரசித்தது சுகானுபவமாக இருந்தது. தனக்கான ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி அதில் மிதந்து சுகம் காணும் இளம் வயது அவர்களுக்கு. ஒருவகையான ஆழ்நிலை படிமத்தில் அவன் சஞ்சரிப்பதை பள்ளிப்பாட அழுத்தங்கள் சிதைத்துவிடும் என்பதை உணராத குழந்தைகள் பள்ளியின் வாசலை மிதிக்கிறார்கள், பாவம்.



அவனைப்பிரமிக்க வைத்த விஷயங்கள் நமக்கு புதியவை இல்லைதான் இருப்பினும் அதனை அவன் அனுபவித்துச்சொல்லும் அழகில்தான் நாம் நம்மை மறந்துபோகிறோம். பள்ளிக்குச் செல்வதற்குமுன் பள்ளி வாழ்க்கைப்பற்றிய அவனுடைய கனவுகள் அலாதியாய் இருந்திருக்கக்கூடும். பள்ளி செல்வதற்கு முன்னரே புதிய புதிய பொருட்களுக்கு தான் சொந்தக்காரராகிவிட்டோமே, பள்ளி வாழ்க்கை தொடங்கியதும் இன்னும் என்னென்னவெல்லாமோ கிடைக்குமே என்ற கற்பனையில் அவன் திளைத்திருக்கக்கூடும்.

ஆனால் இன்றைய பள்ளி வாழ்க்கை அவன் கற்பனைக்கு முரணான ஒன்றை வடிவமைத்து வைத்திருக்கிறது, என்பது அவனுக்குத்தெரியாதிருப்பது வியப்பதிற்கில்லைதான். பள்ளியில் நுழைந்தது தொடங்கி ஆறாண்டுகள் கலாச்சார அதிர்ச்சியில் சிக்கி பின்னர் மெதுவாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் பக்குவத்தை அடைந்துவிடுவான் என்பதுவும் உண்மைதான்.

இருப்பினும்......

ஆறாண்டுகளில் அவனிடமிருந்து என்னென்னவெல்லாமோ பறித்துவிடப்போகிறது இந்த புதிய ‘வாழ்விடம்’.....!

என் இன்னொரு பேத்தி முன்னர் படித்த பாலர் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறாள்.

பள்ளி விட்டு அவளை வீட்டுக்கு ஏற்றிக்கொண்டு வரும் போது, “பள்ளி பிடித்திருக்கிறதா?” என்று கேட்டேன்.

“பிடிச்சிருக்கு” என்றாள்.

“ முன்ன படிச்சியே அநத ஸ்கூல் பிடிச்சிருந்ததா?” என்று கேட்டேன்.

“ இல்ல” என்றாள்.

“ இந்த ஸ்கூல் ஏன் பிடிச்சிருக்கு ?” என்று மேலும் கேட்டேன்.

“ இங்க ஹோம் வர்க் இல்லை !” என்றாள்.

அவள் ஒராண்டுகள் படித்த பழைய பள்ளியை வீட்டுப்பாடத்தினாலேயே வெறுத்திருக்கிறாள் என்ற செய்தி என்னை வியக்க வைத்தது. புதிய பள்ளியில் இது முதல் நாள்தான் - போகப்போக இங்கேயும் வீட்டுப்பாடங்கள் மலிந்துவிடும் என்று உணராத பால்யம்.

“ பாலர் பள்ளியிலேயே வீட்டுப்பாடங்களைத் திணிக்க ஆரம்பிக்கும் இன்றைய கல்விமுறையை மாணவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை என்ற புரிதலை நாம் எளிதில் அடைந்துவிடுகிறோம்.

அமெரிக்காவின் கல்வி முறையோடு ஒப்பிடும்போது நம் கல்வி முறை பின்னடைவை நோக்கி நகரும் ஒன்று என நாம் உணருவதில்ல..

அமெரிக்காவில் தொடக்கக் கல்வியைபடித்து இங்கே தொடர்ந்து பயில நேர்ந்த ஒரு மாணவி எதிர்கொண்ட சிக்கலை கேள்வியுற்று திகைப்புக்குள்ளானேன்.

மாணவியை பள்ளியில் சேர்க்க அவளுக்கு எழுத்துச்சோதனையை நடத்தினார்களாம். அந்த எழுத்துச்சோதனையை எதிர்ப்பார்க்காத மாணவி எழுதுவதிலும் பதிலளிப்பதிலும் மிகுந்த கலாச்சார அதிர்ச்சியை அடைந்திருக்கிறாள். அமெரிக்காவில் கல்வி கற்கும் மாணவர்கள் practical முறையிலேயே போதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையுமே தேடல், கண்டடைதல், பிறகு செய்முறையில் ஒப்புவித்தல் என்பதான உத்தியே அதிகம் பயன்படுத்தப்படுவதாக உள்ளதாம்.

இங்கே என்ன நடக்கிறது? மாணவர்கள் சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டுமென்பதற்காக இன்ன கேள்விக்கு இன்ன பதில் என்ற முறையே பரவலாகவும், பலாத்காரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் கற்றல் கற்பித்தல் முறை தேடலையும் கண்டடைதலையும் உள்ளடிக்கியது என்பது உண்மைதான் என்றாலும் ஆண்டுக்கு இரண்டு சோதனைப்பருவங்கள், மாதச்சோதனைகள், பின்னர் ஆறாண்டுகள் நிறைவுபெறும் தருவாயில் upsr என்று சொல்லக்கூடிய ஆறாம் ஆண்டு அடைவு நிலைச் சோதனைகளை பள்ளி வாழ்வு நெடுக்க மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அடிப்படைக்கல்வி ஆறாண்டுகள் முடிவுபெறுவதற்குள் ஒரு மாணவன் எதிர்நோக்கும் சோதனைகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 100ஐ எட்டிவிடுகிறது. இந்த 100 சோதனைகளுக்கு அவனைத்தயார் செய்வது எதற்கென்றால், ஆறாம் ஆண்டு அடைவு நிலைச்சோதனையில் அவன் சிறந்த மதிப்பெண்கள் பெறவெண்டுமென்பதற்காகத்தான். 12 வயது முடிவடைவதற்குள் அவனுக்குச்சோதனைமேல் சோதனை.

பள்ளியும் பெற்றோரும் அதிகம் எதிர்பார்க்கும் upsr முடிவுகளுக்காக தன் விளையாட்டுப்பொருளை யாரோ பலாத்காரமாய் பறித்துவிடுவதுபோல, தன் பால்ய பிராயத்தை கபளீகரம் செய்துவிடுகிறது இன்றைய கல்விமுறை.

ஆறாம் ஆண்டு அடைவு நிலைசோதனை நெருங்க நெருங்க அவனுக்கு உடற்பயிற்சி பாடம் அபகரிக்கப்பட்டுவிடும். ஓவியம் என்று சொல்லக்கூடிய கலைக்கல்வி பிடுங்கப்பட்டுவிடும். பிற சோதனைக்குட்படுத்தாத நன்னெறிக்கல்வியும் போதிக்கப்படாது. அந்தப்பாட வேளைகளில் சோதனைக்குட்படுத்தப்பட்ட பாடங்கள் மட்டுமே போதிக்கப்படும். வீட்டுப்பாடங்கள் பை நிரம்பி வழியும். வீட்டுப்பாடம் கொடுக்கும் ஆசிரியர்களும் பிற ஆசிரியர் எவ்வளவு பாடம் கொடுத்திருக்கிறார் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. வீட்டுப்பாடம் செய்து வரவில்லையென்றால் பல்வகைத் தண்டனைக்குள்ளாவான் என்பது கூடுதல் செய்தி.

பள்ளி நேரம் முடிய மாலையில் சிறப்புப்பாட வேளைகள் இருக்கும். வெள்ளி சனி மற்றும் பருவ விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாடம் போதிக்கப்படுவார்கள் . இது போதாதென்று பெற்றோர் சிறப்பு வகுப்புகளுக்கு (tution) அனுப்பிவிடுவார்கள். இவை யெல்லாமே ஒரே நோக்கமுடையதுதான். upsr சோதனையில் அவன் பெறப்போகும் மதிப்பெண்களே அடிநாதமாகிப்போன அவலம்தான் அது.

நான் பணிபுரிந்த ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட மாணவன் செவ்வாய் வியாழக்கிழமைகளில் பள்ளிக்கு வருவான், ஏனைய மூன்று தினங்களில் மட்டம் போட்டுவிடுவான். வகுப்பு பதிவேட்டிலிருந்து இது துல்லிதமாகத் தெரிய வந்தது. இந்த இரு கிழமைகளில் மட்டுமே அவன் பள்ளிக்கு வந்து, மீதமிருக்கும் வாரத்தின் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு வராதிருப்பது ஏனென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் பெற்றோருக்கோ, வகுப்பு ஆசிரியருக்கோ கூடத் தெரியவில்லை. ஒருநாள் அவனைப் பள்ளிச் சிற்றுண்டிக்கொண்டுபோய் அவனைக்குளிரவைத்து அன்போடு விசாரித்தபோதுதான் ஒரு உண்மை புரிந்தது. குறிப்பிட்ட அந்த இரு தினங்களில் உடற்கல்வி இருப்பதால் விளையாடுவதற்கென்றே தான் பள்ளிக்கு வருவதாகச்சொன்னான். அவன் நமக்குத் தந்த செய்தி மிக அத்தியாவசியமான மாணவ உளவியல் சார்ந்த பிரதிநிதித்துவம் வாய்ந்தது. எந்த அளவுக்கு நாம் அச்செய்தியை உள்வாங்கிக்கொள்வோம் எனத்தெரியவில்லை!

பள்ளிக்கூடம் முற்றிலும் குழந்தைகளுக்கான உலகம். மதிப்பெண்களின் மேல் செலுத்தப்படும் அதீத அக்கறையில் எத்தனையோ வகைக் கல்வி தெரிந்தோ தெரியாமலோ புறக்கணிக்கப்படுகிறது. இசை வழிக்கல்வியின் மீதான பாடம் நடப்பது குறைவாகிப்போகிறது. நாடக் வழிக்கல்வியை கிட்டதட்ட புறக்கணித்துவிட்டோம். கதை சொல்வதிலும் வாசித்துக்காட்டுவதற்கும் நாம் நேரத்தை ஒதுக்குவதில்லை. விளையாடு வழிக்கல்விக்கும் நமக்குமான தூரம் அதிகரித்தவண்ணம் உள்ளது. குழந்தைகளுக்கான திட்டமிடல் நம் கற்றல் கற்பித்தலில் இருந்தாலும் சோதனைப்பேய் அதற்கு உரித்தான இடத்தை அபகரித்துவிடுகிறது. குழந்தைகளை மனிதமயமாக்கும் செய்முறைலிருந்து தவறிவிடுகின்றன இன்றைய பள்ளிகள்.

இதில் நகைச்சுவைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், 15 வயதில் ஒரு மாணவன் எதிர்நோக்கும் pmr சோதனையைவிட, 17 வயதில் எதிர்நோக்கும் spm சோதனையைவிட, 19 வயதில் எதிர்நோக்கும் stpm சோதனையைவிட, ஏன் பல்கலைக்கழகப் படிப்பைவிட upsr க்கு நம் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மிகப்பெரியது.

வாழ்க்கைக்கல்விக்குக் கொடுக்கும் இடம் மிகச்சிறியது.

(கபலீகரத்தைக் கபளீகரம் செய்துவிட்டேன்)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...