Skip to main content

ஒரு தடுப்புச்சுவரிலிருந்து படரும் இருள்

1.



அந்தக்கம்பத்தில் கால்வைத்தபோது அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டதுபோன்ற குற்றமனம் உறுத்தியது.. கம்பத்துக்குள் நுழைவது அதுதான் முதன்முறை என்பதனால்..

கரீம்தான் கண்டிப்பாய் வரவேண்டும் என்று கையைப்பிடித்து வலிய கேட்டுக்கொண்டான். எல்.சி.இக்கு நான்கு மாதமே இருக்க நானும் அவனும் மிக நெருக்கமாகிக்கொண்டிருந்தோம். என் மலாய் மொழியின் சந்தேகத்தை அவனிடமும், அவனின் கணிதப்பாட சந்தேகத்தை நானும் தீர்த்துக்கொண்டதில் உண்டான எங்கள் நட்பு, ஒரே தட்டில் சாப்பிடப் பழக்கமாகி, ஹரிராயாவுக்கு அவன் வீடுவரை என்னை இழுத்து வந்திருக்கிறது.

அவன் வீடு இன்னதுதான் என்று அவன் கொடுத்த பத்தாவது மைல் கல், பள்ளிவாசல், இரு கிளைகள் ஓடிய தென்னை அச்சு அசலாய் அடையாளம் காட்ட, எங்களை வரச்சொன்ன அவனை வாசலில் காணமல் ஏமாற்றம் சின்னதாய் கோபத்தைக்கிளறியது. எனக்குப்பரிச்சியமான ஒரே முகம் கரீமுடையதுதான்.

நான் வீட்டு முன் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்று சொன்னவனைக் காணாததால் அந்த அந்நியம் எங்களுக்குள் நுழைந்திருக்கலாம்.

ஓங்கி வளர்ந்து நீண்டிருந்த தென்னை மரங்கள் அந்தக் கிராமத்தைத்தாங்கும் தூண்கள் போன்று நின்றிருந்தன. அப்போதுதான் வீட்டு முற்றத்தின் மண்தரையைக் கூட்டிப்பெருக்கியிருந்ததால் சீரான சித்திர அலைகள் மாதிரி மண்ணில் வரி வரியாய் நேர்த்தியான கோடுகள் வரைந்துவிட்டிருந்தது, மூங்கிற் துடைப்பம். அடர்ந்து வளர்ந்திருந்த மங்கிஸ் மரத்திலிருந்து விழுந்த காய்ந்த இலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மூங்கிற் துடைப்பம் வரைந்த கோடுகள் மீது அப்போதுதான் மண்ணிலிருந்து பூத்த இலைகள் மாதிரி மடல் விரித்து நெளிந்து கிடந்தது. காய்ந்து தொங்கிய மட்டைகள் உரித்துவிடப்பட்ட வாழைமரம், மழு மழுப்பான சட்டை அணிந்து தானும் பெருநாளைக் கொண்டாடுவதுபோல காட்சி தந்தது. வீட்டைச்சுற்றியும் ரம்புத்தான் மரங்களும் சிக்கு மரங்களும் வெயிற்காலத்துக் குடைகளாவும் விரிந்து கிடந்தன. அத்தாப்புக்கூரை தன் மடிமேல் இலைகளைச்சுமந்திருந்தது. பத்து மணிக்கீற்று விரல்கள் மரங்களை ஊடுருவி மண்தரையில் வெளிச்சக்கோலங்களைப் போட்டிருந்தது. அவை இலைகளின் அடர்த்தியிலிருந்து தப்பித்து ஊடுருவி மண்ணில் தவழ்ந்தவை. எங்களுக்கு முன்னால் ஒரு புதிய உலகம் விரிந்து அவதானிப்புக்கு வைக்கப்பட்டது போன்ற பிரம்மை தட்டியது.

“வாடா வீட்டுக்குத் திரும்பிடலாம்.....” ஒரு அடி என்பின்னால் தயங்கித்தயங்கித் தொடர்ந்த மணி, என் கையைப்பிடித்து இழுத்தான்.

“பொறு இவ்ளோ தூரம் வந்தாச்சு...கண்டிப்பா இதான் அவன் வீடு..”

நாங்கள் தயங்கித்தயங்கி வீட்டு வாசலை அடைவதற்கு முன்னாலேயே வீட்டு வாசலில் பிரசன்னமானார்- கரீமின் அப்பாவாக இருக்கலாம்- “வாங்க வாங்க,” என்று வரவேற்றார். கரீம் இப்ப வந்திடுவான்.. ரெண்டு பேரும் ஒன்னாதான் தொழுகைக்குப் போனோம்.. வாங்க வாங்க கரீம் நீங்க வருவீங்கண்ணு சொன்னான்.” அவரோடு இன்னொரு பெண்மணி, முன்று நான்கு குடும்ப உறுப்பினர்கள் வாசலில் ஓடிவந்து நின்று, “நாய்க்லா ஜாஙான் செகான் செகான்.” என்றனர். முகங்களில் புன்முறுவல் ஊடுறுவ, பாசாங்கற்ற வரவேற்பு நல்கினர். வீட்டைச்சுற்றியுள்ள பூமரங்களில் மட்டுமல்ல அவர்கள் முகங்களும் பூத்திருந்தன. அப்போதே அவர்களின் அந்நியோன்யத்தால் எங்களுக்குள் வியாப்பித்துக்கொண்டிருந்த அந்நிய வாசம் மெல்ல விடைபெற்றுக்கொண்டிருந்தது.

நாங்கள் படியேறவும் கரீம் சைக்கிலில் வாசலை அடையவும் சரியாக இருந்தது. சைக்கிளை விட்டிறங்கி எங்கள் தோள்களில் கைவைத்து ,”நீங்க மட்டும் வராம இருந்திருந்தா......நல்லகாலம் வந்துட்ட......”என்று பொய்க்கோபத்தோடு கூறிச்சிரித்தான்.

பின்னர் எல்லாரையும் அறிமுகப்படுத்தினான் கரீம்.

சதுப்பு நிலத்தில் வளரும் மாங்கரூவ் இலைகளிலிருந்து வேயப்பட்ட வண்ணப்பாய் பலகையால் ஆன விருந்தினர் அறை முழுவதும் விரிக்கப்பட்டிருந்தது. அதில் சம்மனமிட்டு அமர்ந்தபோது சன்னலனூடே வீசிய காற்று ஈரமாகவே இருந்தது. சன்னல், பலகைத்தரை வரை நீண்டு இறங்கி, காற்றை உள்ளிழுத்தவண்ணம் இருந்தது. காற்றின் சுவரங்களுக்கு அபிநயித்துக்கொண்டிருந்தது திரைச்சீலை. உட்கார்ந்துகொண்டே சன்னலுக்கு வெளியே விரிந்து கிடக்கும் பச்சைவெளி மனதுக்குள்ளும் இறங்கி இதமாகக் குளிர்ந்தது.

வீட்டுப்பெண்கள் ஆளுக்கொரு தட்டாய் ஏந்தி ராயா பலகாரங்களை விரிப்பின் மீது வைக்க ஆரம்பித்தனர். அவர்கள் குனிந்து வைத்துவிட்டு விலகும்போது கைகளைக் கீழ்முகமாக நீட்டி பவ்வியமாக நகரும்போது அவர்களின் நாகரிகம் உள்மனதுக்குள் அவர்களைப்பற்றி உயர்ந்த அபிப்பிராயத்தைக் கட்டமைத்துக்கொண்டிருந்தது.

“ ரெண்டாங் டாகிங், கறி டாகிங் அத ரெண்டுத்தையும் எடுத்திரு, அவங்க சாப்பிடமாட்டாங்க,” என்றார் கரீமின் அப்பா. “மிந்தா மாஆப் யா,” அவை நீக்கப்பட்டன.

“கோழிக்கறி பலகாரமெல்லாம் இருக்கு, எதிலேயும் டாகிங் கலக்கல நீங்க சாப்பிடலாம்” என்றார். டாகிங் என்றால் இறைச்சி என்றே இதுநாள்வரை புரிந்திருந்த எங்கள் புத்திக்கு, அது மாட்டிறைச்சி என்ற அவர்களின் புரிதல் வியப்பளித்தது.

“வேணுங்கிறத சாப்பிடுங்க..... கூச்சப்படாதீங்க. எங்கள பெறத்தியா நெனைக்காதீங்க..... ஒங்க வீடு மாதிரி, ” குனிந்து பரிமாறியவறே கனிவோடு உபசரித்தார் கரீமின் அம்மா. அவர்கள் கரிசனத்தோடு பேசப்பேச அவர்களின் புத்தாடையைவிட அழகாகிகொண்டே போனார்கள்.

வீட்டுக்குத்திரும்பும்போதும் பொட்டலமாய்க்கட்டி கையில் வேறு திணித்தார்கள். அவர்களின் கரிசனத்தில் கூச்சம் நீரின் பிம்பங்களென கலைந்துபோயிருந்தது.

அதன் பிறகு அவர்கள் குடும்பத்தோடு தீபாவளிக்கு வர நாங்கள் அவர்கள் ராயா, நிக்காஹ் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஒரே குடும்பமாக கலந்துவிட்டிருந்தோம். எல்லாமே அன்பு என்ற சின்னபுள்ளியில் ஆரம்பித்தது அழகிய கோலமாகப் பரிணமித்தது.



.........................................



2.

அன்றைய தலைமை ஆசிரியர் கூட்ட நிகழ்வு பொது அம்சத்துக்கு வந்திருந்தது. வழக்கத்துக்கு மாறான ஒரு விவகாரத்தை முன்வைத்து ரங்கநாதன்தான் முதலில் பேசினார்.

“தலைவர் அவர்களே, நாம ஒவ்வொரு முறையும் கல்வி இலாகா..கல்வி அமைச்சு அழைக்கிற கூட்டத்துக்கும், பயிற்சிக்கும் போறோம். அங்க நமக்குனு தனியா சாப்பாடு வழங்குறது கிடையாது. பொதுவா மலாய்ப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்குறதையே நமக்கு வழங்குறாங்க. நாம மாடிறைச்சி சாப்பிடமாட்டோம். ஆனால் மாட்டிறைச்சி கறி உபயோகிக்கிற கரண்டியயே கோழிக்கறியிலையும் போட்டு கலந்துடறாங்க.....வரிசையில் அடுத்த நிக்கற நாம சாப்பாட எடுக்க முடியல. பல சமயம் சாப்பிடாமலேயே பட்டினியா தொடர்ந்து கூட்டத்துல கலந்துக்க வேண்டியிருக்கு..”

அவர் பேச்சில் கவரப்பட்ட ஆறுமுகம், “ஆமா நாங்கூட ஒருநாள் என் பக்கத்துல ஒக்காந்து சாப்பிட்ட ஒரு மலாய்ப்பள்ளி தலைமை ஆசிரியருக்கிட்ட கேட்டேன், நீங்க கோழிக்கறியில கரண்டிய கலந்துட்டதனால எங்களால அதயும் சாப்பிட முடியலன்னு சொன்னேன், அவர் என்ன தெரியுமா சொன்னாரு, மட்டிறைச்சி சாப்பிடவேணாம் கொழம்பு சாப்பிடலாமுல்லன்னாரூ.....”

அதற்கு ராமசாமி சொன்னார்,” அவங்க கலாச்சாரத்த நாம் தெரிஞ்சிகிட்ட அளவுக்கு, நம்ம கலாச்சாரத்த கொஞ்சங்கூட அவங்க தெரிஞ்சிக்கல...நம்மல்ல பலர் அசைவம் சாப்பிடரோம் எப்படியோ சமாளிச்சிக்கலாம்- சைவம் சாப்பிடரவங்க நெலதான் பாவம். கேட்டு வாங்கும்போது எதாவது அவிச்சு கொண்டாந்து வச்சிடுராங்க........ “

“தலைவர் அவர்களே இருவது முப்பது வருஷத்துக்கு முன்னால இப்படியெல்லாம் இல்ல. நாம அவங்க வீட்டுக்கு ராயாவுக்கு சாப்பிட போவோம் அவங்க கூச்சப்படாம நம்ம வீட்டு தீபாவளிக்குச் சாப்பிட வருவாங்க விரும்பி, ..... ஏன் இன்னும் தெளிவா சொன்னா, இது வேணும் அது வேணூம்னு கேட்டு சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு பரஸ்பரம் இருந்துச்சி. இன்றைக்கு நெலம தல கீழா மாறிடுச்சு. நம்மல தீண்டத்தகாவங்களா பாக்குறாங்க..... எல்லாம், சமயத்த முன்வச்சு நடத்துற அரசியல்தான் இந்தப் பிரிவினை மனோபாவத்துக்குக் காரணம். சமயத்தால் யார் புனிதமானவர்னு அவங்களுக்குள்ள நடக்குற அரசியல்ல நாம பாதிக்கப்பட்டுட்டோம் அவ்வளவுதான்.” என்றார் தெய்வசகாயம்.

“அதெல்லாம் இங்க பேசவேணாம் சார் , சுதந்திரத்துக்காக மூனு இனமும் போராடுன உணர்வு அன்னைக்கு மேலோங்கி இருந்துச்சி.. இன்னைக்குள்ள புதிய தலைமுறைக்கு அது மறந்துபோச்சு. மெஜோரிட்டி சமூக அரசியல் பல இன மக்கள் வாழும் எல்லா நாட்லேயும் உண்டு. வாக்கு வங்கிய நோக்கித்தான அரசியல் நடத்த முடியும்! நம்மல அவங்க புரிஞ்சிக்கணும்,” என்றார் கணேசன்.

“ அதுக்கான வாய்ப்பு அவங்களுக்க வழங்கப்படல; நீங்க டி.வி ரேடியோவுல எல்லாம் கேளுங்க அவங்க தெரிஞ்சிக்கிறமாதிரி நம் கலாச்சாரம் பண்பாடு சரியா ஒலிபரப்பப்படல,“ என்றார் சரஸ்வதி.

“காலங்காலமா நம்மலோடதான வாழுராங்க....நம்மல தெரிஞ்சிக்க சிரத்த எடுக்கலாமுல்ல” என்றார் செபஸ்தியன்.



“சரி இதெல்லாம் நாம ஒவ்வொரு முறையும் அனுபவிக்கிற விஷயம்தான். இதுக்கு என்னா செய்யலாமுன்னு சொல்லுங்க....,”என்று தலைவர் குறுக்கிட்டார்.

“தலைவர் அவர்களே, இந்த விஷயத்துல என்னோட அனுபவத்த சொல்லிர்றேன்,” என்று நான் அனுமதி கேட்டேன். “ஒரு கூட்டத்துல நான் மட்டுந்தான் தமிழன் .சாப்பாட்டு நேரத்துல நான் பரிமாறனவங்கிட்ட சொன்னேன், நான் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன் எனக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ணுங்கன்னேன். சரின்னு ஒத்துக்கிட்டவரு கொஞ்ச நேரத்துல தனியா எனக்கு சாப்பாடு கொண்டுவந்து வச்சாரு. நான் சாப்பிட்டுகிட்டு இருந்தப்ப, ஒரு துண்டு இறைச்சி வாயில தட்டுப்பட்டுச்சி. சந்தேகப்பட்டு அவருக்கிட்ட கேட்டேன். அவரு என்னா தெரிமா சொன்னாரு.....நான் ரொம்ப ஜாக்கிரதையா, கறிய வடிகட்டிதான் எடுத்தேன் எப்படியோ எனக்குத்தெரியாம ஒரு துண்டு இறைச்சி சாப்பாட்டுல விழுந்துடிச்சி, என்ன மன்னிச்சிக்குங்கன்னார்”.

கூட்டம் ஒருமுறை குபீரென குலுங்கிச்சிரித்து நின்றது.

தலைவர் பேசினார், “சரஸ்வதி டீச்சர் சொன்ன மாதிரி நம்ம கலாச்சாரத்த தெரிஞ்சிக்க அவங்களுக்கு வாய்ப்பு ரொம்ப குறைவு.....இதுல நாமலும் கொஞ்சம் சிரத்த எடுக்கணும். மேக்கொண்டு நாம என்னா செய்லாம்னு சொல்லுங்க”.

“ இதுபற்றி கல்வி இயக்குனருக்கு நாம் விளக்கமா ஒரு கடிதம் எழுதுவோம்,”என்று முன்மொழிந்தேன் நான். மற்றவர்கள் கைதூக்கி வழி மொழிந்தனர்.

“ நல்ல யோசனதான். இத மினிட் பண்ணிக்குங்க நாளைக்கே அனுப்பிடுவோம் “.

கடிதத்துக்கான உள்விபரம் அப்போதே பேசிமுடிவெடுக்கப்பட்டது. குறிப்பெடுத்துக்கொண்டார் செயலாளர்.

மறு நாள் கடிதம் அனுப்பப்பட்டது.

மறு கூட்டத்துக்குள் பதில் கடிதமும் வந்தது. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது. தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தனியாக சாப்பாடு ஏற்பாடு செய்யப்படும் என்ற ஆறுதல் மொழி இயக்குனர் கையொப்பத்தோடு வந்தது.

அதற்குப்பிறகு மாநிலக்கூட்டங்களில் இரண்டொருமுறைதான் சரியாக நடந்தது. பின்னர் பழையக்குருடி கதவைத்தறடி கதைதான்.

......................................................



3.

அந்த வீட்டுக்குக்குடிவந்த புதிதில் அண்டை வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் இடையே கம்பி வேலிதான் போடப்பட்டிருந்தது. அண்டை வீட்டில் ஒரு மலாய்க்கார குடும்பம் இருப்பது தெரிந்தது. குடிவந்த கொஞ்ச நாளிலேயே ஆறு ஏழடி உயரத்துக்கு ஒரு சுவர் எழுப்பப்பட்டு விட்டிருந்தது. இடது பக்கம் எங்கள் பார்க்கும் உரிமையை பறிக்கும் வண்ணம் தலைக்கு மேல் உயர்ந்து அஜானுபாகுவாய் நின்று மிரட்டிக்கொண்டிருந்தது அதன் உயரம். சுவர் எழுப்பப்படுவதற்கு முன்னர் விரிந்து தெரிந்த வான விதானமும், பச்சை வெளியும், மரக்கிளைகளிலிருந்து பறந்த பறவைகளின் வனப்பையும், இடது பக்கமிருந்து வீசும் காற்றின் ஈரத்தியும், அதன் சௌந்தர்யத்தையும் சர்வாதிகாரத்தனமாய் தடைவிதித்திருந்தது. அந்தச்சுவர் எங்கள் வீட்டு ஐந்தடியை கிட்டதட்ட ஒரு சிறைக்கு ஈடான ஒன்றாக ஆக்கிவிட்டிருந்தது. சுவரிலிருந்து சிமிந்துதரை வாசலில் படியும் நிழல் ஒரு அசுரனின் பிம்பமென கவிந்து வெளிச்சத்தை களவாடியிருந்தது. சுவரின் அடுத்த பக்கம் மனித நடமாட்டத்தை, கிரஹனம் பிடித்தது போன்று அருதியாய் மறைத்துவிட்டிருந்தது. கண்டிப்பாய் எங்கள் முகம் தெரியக்கூடாது என்பதற்கான ஏற்பாடாகக்கூட இருக்கலாம்.

இத்தனைக்கும் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தப்பகையும் இல்லை. பேச்சு வார்த்தையே தொடங்காதபோது பகை எப்படி வரும்? வீசப்படும் புன்சிரிப்புக்குகூட முகத்தை ஏறிட்டுக்கூட பார்க்காத அந்நிய மனப்பான்மை. குடி வந்த நாள்தொட்டு இன்று அவர்கள் யாரோ நாங்கள் யாரோ என்ற நிலைதான்.

பிறகு எதற்கு இந்தச்சுவர்?

நம்முடைய பண்பாடு, நாம் கும்பிடும் கடவுள், நம் தெய்வங்களின் வெளித்தோற்றம், நாம் உண்ணும் உணவு, நம் இனத்தவரிடையே இருக்கும் மதுப்புழக்கம், இப்படி ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி இருக்கக்கூடும். நமக்கும் அப்படித்தானே!

வீட்டு முன்புறத்துக்கு வரும்போதெல்லாம் அந்தச்சுவரிலிருந்து கசியும் இருள் மன மகிழ்ச்சியை அபகரித்துவிடுகிறது. எங்கள் வீட்டுப்பக்கம் எழும்பியிருக்கும் சுவரில் மேல் பூச்சு சிமந்து பூசப்படாமல் இருப்பதால் அதனிலிருந்து துருத்திகொண்டிருக்கும் சிமிந்துக்கற்கள் ஒரு விநோதமான பூதத்தின் எண்ணற்ற பற்களின் தோற்றத்தோடு இருந்தது. அந்தப்பற்கள் நாளடைவில் காவி ஏறி கறைபடிந்துவிட்டது மாதிரி பாசி படியத்துவங்கியிருந்தது. ஒவ்வொரு கல்லின் இடுக்குகளிலிருந்து வளர்ந்து படரும் பாசி நாளடைவில் சுவர் முழுவதும் ஊர்ந்து படர்ந்துவிடக்கூடும். அந்தச்சுவரிலிருந்து தரையில் விழும் கரிய நிழல் இப்போதே சகித்துக்கொள்ளமுடியவில்லை! சுவரின் கறகள் முழுதும் பாசி படர்ந்து விட்டால் இந்த நிழலிலிருந்து கவியும் இருள் வீட்டு முன்புறத்தை மழைமேகமென சூழ்ந்து மேலும் கருமையாக்கிவிடும்!

என் மனைவி “நீங்கதான் யாருட்டியாவது சொல்லி பிலாஸ்டர் பண்ணுங்களேன்,” என்று நச்சரித்துகொண்டிருந்தாள். வாடகை வீடுதானே என்று சாக்குப்போக்கு சொல்லி நழுவிக்கொண்டிருந்தேன்.

“இல்லன்னா வேற வீடு பாருங்களேன்,” என்பதாக அவளின் நச்சரிப்பு வேறு பரிமாணத்தை எட்டியிருந்தது. எத்தனை வாடகை வீடுதான் பார்ப்பது? எங்களின் பேத்தியின் தரிசனம் கிடைக்கவேண்டி என் மகன் வீட்டுக்குச் சற்று அருகிலேயே இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்திருந்தோம். வார விடுமுறை தினங்களிலும் அவளின் நினைவு வரும் நாட்களிலும் அவளை எங்களோடு வைத்துக்கொள்வதில் ஈடு இணையற்ற இன்பத்தை அனுபவித்தோம்.

எங்களோடு இருக்கும்போதெல்லாம் வெளியில் விளையாடும் அண்டை வீட்டுப்பிள்ளையோடு அவளுக்கு நட்பு உண்டாகிப்போனது. பெற்றோரின் வீட்டில் இருக்கும் தருவாயில் டியூசனுக்காகவும், பியானோ வகுப்புக்காகவும், பரதத்துக்கெனவும், தைக்குவாண்டோ பயிற்சிக்கும், அவளின் இயல்பான விளையாட்டு நேரம் பறிக்கப்படுவதால், இப்படிப் பிள்ளைகளோடு தன்னை மறந்து விளையாடி மகிழ்ந்து இழந்த தன் உரிமையை மீட்டெடுக்கும் முயற்சியாக்கிக்கொண்டால்போலும்! இருப்பினும் பக்கத்து வீட்டில் ஷெரினின்- என் பேத்தி சொல்லித்தான் அவள் பெயரே என்களுக்குத்தெரியும், தன் அப்பா இருக்கும் தருணங்களில் அவள் வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் அப்பா அவள் பெயரைச்சொல்லி அழைத்து உள்ளே வரச்சொல்லி விடுவார். பல சமயங்களில் என் பேத்தி இல்லாத நாட்களில் ஷெரின் எங்கள் வீட்டு முன் வாசலில் நின்று ஏங்கிக்கிடப்பது பரிதாபமாக இருக்கும். என் பேத்தி தன் வருகையை பிரகடனப்படுத்த அவள் வீட்டு வாசலருகே நிற்பதும் அவள் பெயரை மெல்ல விளித்து அழைப்பதும் அவர்களுடனான நட்புக்கு கட்டியமாக அமைந்தது. என் பேத்தியைக்கண்ட மாத்திரத்தில் ஷெரினிடம் உண்டாகும் ஆனந்தம் அளப்பரியது. ஆனால் இது நாள் வரை அவள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தது கிடையாது. நாங்கள் அவளை வலிந்து அழைத்தும், ஏனோ அதற்கான தைரியம் அவளுக்கு வந்ததாகத்தெரியவில்லை.

அந்தப்பிஞ்சுகளின் நட்பெல்லாம் வேலிக்கு வெளியேதான். அதுவும் அவளுடைய தந்தை இல்லாத தருணங்களில்தான் அதற்கான விடுதலை சாசனம் பெற்ற உரிமையோடு கொண்டாட்டம் நிகழும்.



...................................



டெஸ்கோ பேரங்காடியில் தேசியதின சிறப்பு மலிவு விற்பனைக்கு எப்போதுமில்லாத கூட்டம் நிரம்பியிருந்தது. பொழுது ஒடுங்க ஒடுங்க ஒவ்வொரு விற்பனை மையத்திலும், கவுண்டரிலும் நெரிசல் குறைந்தபாடில்லை. எங்கள் பேத்தி பிடியிலிருந்து பிடிவாதமாய்த்தப்பி விளையாட்டுப்பொருள் விற்கும் மையத்தைச்சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்- எதை வாங்குவதென்ற குழப்பத்தில். கண்ணில் படும் தூரத்தில்தான் உலவுகிறாளா என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். ஒவ்வொரு முறையும் பார்வையிலிருந்து மறையும்போது பதற்றம் மேலிட்டவர்களானோம்.

எதிர்ப்பாராத வண்ணம் ஒரு அறிவிப்பு எல்லார் மனதையும் பீதியுற வைக்கிறது. ஷெரின் என்ற ஒரு நான்கு வயது மலாய்ச்சிறுமியை அவர்கள் பெற்றோர் தேடுகின்றனர். ஏறக்குறைய இரண்டே முக்கால் அடி உயரம் இருப்பாள்.பால் வெள்ளை நிறத்தில் குதிக்கால் வரை கௌன் அணிந்திருப்பாள். கரு நீல வண்ணத்தில் காலணி அணிந்திருப்பாள். ஒல்லியாக உருவத்தில் சிவந்த உடல் நிறம் கொண்டவள். அவளைக்காண்பவர்கள் இந்த ஒலிபரப்பு மையத்தில் தயவு செய்து கொண்டு வந்து சேர்க்கவும். அவளின் பெற்றோர் ராம்லியும் ஷரிப்பாவும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்ற அறிவிப்பு ஒலித்தபோது அவள் நம் அண்டை வீட்டு பெண்ணாக இருப்பாளோ என்ற சந்தேகம் பிறந்தது. அப்போது எஙகள் பேத்தி ஏதோ ஒரு விளையாட்டுப்பொருளை கையில் ஏந்தி தன்னைத் தொலைத்திருந்தாள். ஷெரின் எங்கள் கண்களில் தட்டுப்படுகிறாளா என்றும் கவனித்துக்கொண்டிருந்தோம். இப்பொழுதெல்லாம் அடிக்கடி குழந்தைகள் காணாமற்போவதும், சில பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் செய்தியும் மனதில் ஒரு கணம் ஓடி அச்சுறுத்தியது. நம்மை விடப்பெற்றவர்கள் எப்படிப் பதறிப்போயிருப்பார்கள் என்ன மனப்பிறழ்வுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதாக மனம் கவலையுறத்துவங்கியது.

சற்று நேரத்தில் ஷெரினின் தாய் தன் அவலக்குரலால் ஷெரினை உரக்க அழைப்பது தெரிந்தது. காணாமற்போனது பேத்தியின் தோழிதான் என்று தெரிந்துகொண்டபோது அவர்களின்மேல் ஆழ்ந்த அதிர்ச்சியும் பரிதாபமும் ஊர்ந்தது. அவள் தன் மகளை கூச்சலிட்டு அழைக்குபோதெல்லாம் குரலில் நடுக்கமும் நம்பிக்கையின்மையும் ஒலித்தது. அழுகையின் ஊடே அவளின் குரல் உடைந்து சிதறியது.. மகள் காணாமற்போன கண நேரத்தில் அவள் முகம் வெளறி சோர்வுற்றிருந்தது. கண்களில் சிவப்பேறியிருந்தது. ‘ஷெரின்’ ‘ஷெரின்’ என்று அவளைக்காணாமல் கதறும் ஒவ்வொரு முறையும் அவளின் உருக்கம் கசிந்து எல்லார் மனதிலும் ஊடுருவத்தொடங்கியது. ஷெரின் என்ற சொல் சோகத்தில் தோய்ந்து காற்றில் மிதந்தது.

தன் பேதலிப்பை கூர்ந்து அவதானிக்கும் சுற்றியுள்ள மனிதர்கள் பற்றிய பிரக்ஞை அவளுக்கு கிஞ்சித்தும் எழவில்லை. அவள் தனனை முழுமையாய் இழந்துவிட்டவளாய் தவித்தாள்.

இந்தக் கூட்ட நெரிசலில், அதன் கூச்சலில், அம்மாவின் கதறல் ஷெரினை எட்டியிருக்குமா? காற்றில் சுழன்று கடைசியில் காணாமற் போயிருக்குமா? அவளின் அழைப்பு ஷெரினின் காதில் விழாத தூரத்துக்கு கடத்தப்பட்டிருப்பாளா! குழந்தைகள் காணாமற்போவது பெற்றோரின் கவனமின்மை காரணத்தினால்தானே? அதிலும் கவர்ச்சியான பேரங்காடி பொருட்களின்மேல் ஈர்ப்பு திரும்பிவிட்ட நேரத்தில் பிள்ளைகள் மேல் இருந்த கவனம் சிதறிப்போகிறதல்லவா? அந்த நேரத்தில்.....!

அறிவிப்பு வந்து இருபது நிமிடங்களுக்குமேல் ஆகிவிட்டிருந்தது. அவள் இல்லாமல் இருப்பதை பெற்றோர் உணர்ந்தபோது எவ்வளவு நேரம் கழிந்திருக்குமோ தெரியாது. இடைப்பட்ட நேரத்தில் என்னென்னவோ நடந்திருக்கலாம். மனம் எதை எதையோ கற்பனை செய்து மிரள்கிறது.

ஷெரினின் தாயின் கையறு நிலையைக்கண்டு சற்று நேரம் நாங்கள் எங்கள் பேத்தியை சற்றே மறந்து விட்டிருந்தோம். அவள் விளையாட்டு மையத்தில்தான் இருப்பாள் என்று நம்பிக்கையோடு தேடியபோது அவள் அங்கே இல்லாமல் இருப்பது எங்களுக்கும் அச்சத்தை ஊட்டியது. பீதியோடு ஆளக்கொரு பக்கமாய் ஓடி தேட ஆரம்பித்தோம். என் மனைவி பயந்து போயிருந்தாள். அவள் முகத்தில் சோக வடுக்கள் பரவத்துவங்கி கருக ஆரம்பித்தது. எனக்குள்ளும் அந்தப்பீதி தொற்று நோயென பற்றிப் படரத்துவங்கியது.

எல்லா விற்பனை மையங்களிலும் துருவித் துருவி அலசிக்கொண்டிருந்தோம்.

ஷெரினின் தந்தை தன் மகளைக் கண்டடையும் தீவிரத்தில் அலைபாய்ந்துகொண்டிருந்தார். ‘ஷெரின்’ ‘ஷெரின்’ என அழைத்தபடியே எல்லாத்திசைகளிலும் பார்வையை ஓடவிட்டுக்கொண்டிருந்தார். அவள் கிடைக்கமாட்டாளா என்ற ஆற்றாமையும் ஏக்கமும் இணைந்து ஒலிப்பது போல இருந்தது. அவர் குரலில் கனத்த துயரம் படிந்திருந்தது. எந்தக்கரமாவது நீண்டு கண்டுபிடித்துக்கொடுக்காதா என்ற பெருமூச்சு உடல்மொழியாகிப்போனது. அவள் தன் பிடியிலிருந்து எக்கணத்தில், எப்படி நழுவி இருக்கக்கூடும் .. எனக்குழம்பியவண்ணம் தன் தேடலை தீவிரப்படுத்தியிருந்தார்.

ஷெரினின் தாயின் அலரல் ஓயவில்லை! காற்று வெளி முழுதும் அப்பேதையின் ஓலம் மிதந்தவண்ணமிருந்தது. எந்த அளவுக்கு அவளின் ஏக்க ஒலி வியாபித்து உலவுகிறதோ அந்த அளவுக்கு மனதுக்குள் சூன்யமும் புகுந்து குழப்புகிறது. வீட்டில் இருக்கும் தருணங்களில் சதா அணைத்தபடி இருந்தவளின் உடற் சூட்டுக்காக தவித்தாள். அநத அணைப்பு கிட்டாத தருணம் தன் வாழ்வின் புதிர் மிகுந்த தருணமாக மாறிக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.. காணாமற் போகின்றவர்களின் பட்டியலில் ஷெரினின் பெயரும் இடம் பெற்றுவிடுமோ, என அவ்வப்போது உள்மனதை வினாக்கணைகள் துளையிட்டுக்கொண்டிருந்தது போலும். அவள் நிரந்தரமாய்க் காணாமற்போய்விட்டாள் என்ற யோசனை குறுக்கிடும்போதெல்லாம் அதனை நிராகரிக்கும் மனத்திடம் அப்போது அவளிடமிருந்து விடைபெறத் துவங்கியிருக்கக்கூடும்.

என் பேத்தியின் நினைவினூடே ஷெரினினுடையதும் வந்து வந்து மறைந்தவண்ணம் இருந்தது.

துணிகள் விற்கும் அங்காடியின் அருகில் சென்று ஒரு முறை குரல் கொடுத்தேன். பண்டல் பண்டலாக துணி கட்டுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிறுவர்கள் நுழைந்தால் மறைந்துவிடுவார்கள். பேத்தியிடமிருந்து பதில் குரல் இல்லை. இப்படியாக ஒவ்வொரு விற்பனை மையத்திலும் தேடலின் தோல்வி பதற்றத்தை இரட்டிப்பாக்கிய வண்ணம் நகர்ந்தது. இங்கேதான் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை தூர்ந்ததும் ஏமாற்றம் பீதியை மேலோங்கச்செய்தது. நெஞ்சத்தில் சுழன்ற பிற நினைவுகளெல்லாம் சுயமாக கழன்றுவிழ பேத்தியைத்தேடுவது ஒரு தவமாக மாறிப்போயிருந்தது.

அறிவிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள் தங்கள் விரும்பிய பொருட்களின் மேல் ஈர்க்கப்பட்டிருந்தனர். தனியாக அலையும் குழந்தையைக்கண்டால் அவளின் பெற்றோர் அருகில்தான் இருக்கலாம் என்று நினைத்திருக்கக்கூடும்.

பேரங்காடி விற்பனை நேரம் முடிந்து விட்டது என் அறிவிப்பு ஒலிபரப்பானது.

பாதுகாவலர்கள் சிலர் தேடலில் மும்முறமாக ஈடுபட்டிருந்தனர்.

எப்படியும் பேரங்காடியின் வாசலைக்கடந்தாக வேண்டும். என் பேத்தி கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை திடமாய் இருந்தது. பேரங்காடி வாசலுக்கு ஓடினேன்.

அங்கேதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

ஷெரின் கையைப்பிடித்துவாறு என் பேத்தி நின்றிருந்தாள்- அவளை விட்டு விடக்கூடாது என்ற இறுக்கத்தோடு! எங்களுக்குப்போன உயிர் மீண்டு வந்திருந்தது. என் மனைவி நெஞ்சில் கை வைத்தபடி சற்று நேரம் அசைவற்று நின்றிருந்தாள்.காணாமல்போனபோது வியாபித்திருந்த பீதி கண்டடைந்ததும் அதிர்ச்சியாய் மாறிப்போயிருக்கக்கூடும். அந்த நேரத்தில் ஷெரினின் தந்தையும் அங்கே விரைந்து வந்து என் பேத்தி அவள் கையைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு நிற்பதைப்பார்த்தவர், ஒரு கணம் அவளைத்தூக்கி உச்சி முகர்ந்து, இறுக அணைத்து, மகிழ்ச்சியில் திளைத்தார். “ஷெரின் இங்கத்தான் இருக்கா,” என்று அவர் குரல் கொடுத்ததும் அவளின் தாயும் ஓடிவந்து அவளைக்கட்டி அணைத்துக்கொண்டார். அந்த அணைப்பின் வெப்பத்தில் அவள் குளிர்ந்துபோனாள்.அந்தத்தொடு உணர்வில் கிளர்ந்த பரவசத்தில் அவர்களின் விழி நீர் ஆணந்தக்கண்ணீராக பரிமாணம் கண்டிருந்தது.

எங்கள் வருகைக்காக நுழைவாயிலில் காத்திருந்தபோதுதான் ஷெரின் அம்மா ‘அம்மா’ என்று அழைத்தபடி பேரங்காடிக்குள் நுழைந்ததைப் பார்த்திருக்கிறாள்.பெற்றோரைக் காணாமல் அவர்கள் வாகனம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருக்கக்கூடுமென அங்கே போய் காத்திருந்து அழுதபடி திரும்பிய நேரத்தில் அவளின் பரிதவிப்பைக் கண்டவள், அவளின் கையை இறுக்கமாகப் பிடித்து, அவளை ஆசுவாசப்படுத்தி எங்களை எதிர்பார்த்திருந்ததாகக் கூறினாள்.

ஷெரினின் தந்தை என் கையைப்பிடித்து நன்றி கூறும்போது இரண்டொரு சொட்டுக்கண்ணீர் என் புறங்கையில் பட்டுத்தெறித்தது. அவரின் இருள் படிந்திருந்த கண்கள் கணநேரத்தில் பழைய உற்சாகத்தில் திளைத்தது. ஷெரினின் தாயின் முகத்தில் மகிழ்ச்சி மீண்டிருந்தது. துயரத்தில் எஞ்சியிருந்த கண்ணீரை அவள் கண்கள் சுரந்தபடி இருந்தது. என் பேத்தியின் கையைப்பிடித்தவள் வெகு நேரம் விடவே இல்லை. அவள் கைகள் நடுங்கியபடியே இருந்தது. அவ்வப்போது அவளைக்கட்டி அணைத்த வண்ணம் இருந்தாள். அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கண்ணீரில் கறைந்து போயிருந்ததுபோலும். வெகு நேரம் இருண்ட குகைக்குள் அல்லாடியவர்களுக்கு, திடீரென வெளிச்சம் பிரவாகித்ததுபோல அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி துலங்கிக்கொண்டிருந்தது.

.........................................

மறுநாள் என் பேத்தியை என் மகன் வீட்டில் விட்டு விட்டுத் திரும்பியபோது அந்தத்தடுப்புச்சுவர் நீக்கப்பட்டு, புதிய வெளிச்சம் என் வீட்டு வாசலில் கவிந்து பூத்துக்கிடந்தது.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...