மலேசிய வாசுதேவனின் மரணச் செய்தி செவிப்பறைக்குள் தீப்பிழம்பாய் பாய்ந்ததிருந்தது. அதனை எழுதும்போது மனசும் வலிக்கிறது. நாம் நீண்ட நாள் பாதுகாத்து வைத்திருந்த , விலை மதிக்கமுடியாத பொருளொன்று கைத்தவறிப்போய் இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்றாகிவிட்டது. அந்த நிதர்சனத்தை நினைக்கும்போது , ஒரு வெறுமை தன்னை நிலைகொள்ளச் செய்து கொள்கிறது.
மலேசியா என்ற சொல்லை முதன் மொழியாக்கி தன் பெயரை வரும் மொழியாக்கி தன்னை ஒரு தேச பக்தனாக அடையாளத்தை நிறுவிய வாசு இன்றில்லை. ஒவ்வொரு முறையும் அவர் பாடல் ஒலிக்கும்போது வாசுதேவன் என்று வாய்த்தவறி கூட சொல்லியிருக்க மாட்டார்கள் ஒலிபரப்பாளர்கள். மாறாக மலேசிய வாசுதேவன் என்றே சொல்ல வைத்து தன் தேசத்தை முன்னிறுத்தியவர் வாசு. எண்ணிக்கையிலடங்காத அளவுக்கு மலேசியா என்ற சொல்லை திரும்பத் திரும்ப சொல்லவைத்தவர் வாசு. இனியும் ஊடகங்களைச் சொல்ல வைப்பார். மலேசியா என்ற சொல்லை உலக அளவுக்குப் பரப்பிய இன்னொரு நபரை நினைவுகூர முடியவில்லை. ஷாருக்கானுக்கு டத்தோ பட்டத்தை முன்மொழிந்த மலாக்கா முதல்வர் நம் தலைவர்களைவிட எவ்வளவோ மேல். மலேசிய என்ற சொல்லை விடவா டத்தோ உயரியது என்று எண்ணியிருப்பார்கள் போலும் நம் தலைவர்கள். நாடென்ன செய்தது நமக்கு? நாமென்ன செய்தோம் அதற்கு?
பூங்காற்று திரும்புமா என்று வாசுதேவன் பாடும்போதெல்லாம் அதனை அப்போதுதான் புதியதாகப் பாடுவது போல இருக்கிறது. குரலில் நெகிழும் உணர்வு மனதை உருக வைக்கிறது. கனத்த மனம் பஞ்சுபோல இலகுவாகிக் காற்றில் மிதப்பது போன்ற பிரம்மை உண்டாகிறது.
ஒரு முறை எம் எஸ் கோபாலன் , கரு வேலுச்சாமி நூல் வெளியீட்டுக்கு கூலிம் வந்திருந்தார். அவர்தான் தமிழ் வாழ்த்து பாடப்போவதாக இருந்தது. அவர் மலேசிய வாசுதேவனின் சகோதரர் என்று தெரிந்ததும் நான் கவனமானேன். ஆள் கொஞ்சம் வாட்டமாக இருந்தார். மேடைக்கே உரித்தான சாட்டின் மினு மினுப்பில் சட்டை போட்டிருந்தார். அவரைப் பாட அழைத்ததும் மின் துண்டிப்பு நிகழ்ந்து விட்டிருந்தது. எல்லாருக்கும் பெருத்த ஏமாற்றம். மின் இணைப்பு இல்லாமல் எப்படிப் பாடப் போகிறார் கோபாலன், என்று எல்லோருமே நினைத்திருந்த தருணத்தில் கோபாலன் பாட ஆரம்பித்தார். மண்டபத்தை அதிரச்செயதது அவரின் குரல். கணீரென்று சுவரில் மோதி எதிரொலித்தது. ஒரு நானூறு பேர் அமரக்கூடிய மண்டபத்தில் நூறு பேர்தான் அன்றைக்கு வருகை புரிந்திரூந்தனர். ஆனால் மண்டபத்தை நிறைத்தது அவரின் பாடல். உச்சஸ்தாயியில் ஒலித்த அதற்கு ஈடான இன்னொரு குரலை இதுநாள் வரை நான் கேட்டதில்லை!
மலேசிய மேடைகளில் பாடும் கோபாலனுக்கே அந்தக் குரல் வளம் என்றால் , சினிமாவின் தடித்த சுவரைக் தக்ர்த்துகொண்டு, உள்ளே நுழைந்து பல நூறு பாடல்களைப் பாடி , அப்போது அரியணையில் இருந்த டி.எம் எஸ்ஸ¤க்கும், எஸ்.பி,.பிக்கும் ஈடாக தன் குரலை காற்றில் மிதக்கவைத்து உலகத்தை அணைத்துக்கொண்டவர் மலேசிய வாசு!
‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்று தன் குரலை ரஜினியின் புகழுக்கு மூலதன மாக்கியவர் வாசு. ‘எங்கிட்ட மோதத , நா வீராதி வீரனடா’ என்ற பாடலும் புதிய ரத்தம் செலுத்தப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்ட ஜீவனாக ஒலிக்கும். சிவாஜியின் சிம்மக்குரலுக்கு வாசுவின் குரல் , டி எம் எஸ¤க்குப் பிறகு ஒலிக்கத்தொடங்கியது மேலுமொரு பெருமை.
‘ஒரு தென்றல் புயலாகி வருமே’ என்ற பாடல் ஒலிக்கும்போதெல்லாம் எழுந்து நின்று கேட்க வேண்டும் போன்ற உணர்வைத் தவிர்க்கமுடியவில்லை. உற்சாகத்தீயை முட்டும் ஒப்பற்ற பாடல் அது. பெண்ணிய விவேகத்துக்கு வேகம் தந்த பாடல்!
'ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' என்ற பாடலில் ஒலிக்கும் நெளிவு சுளிவுகள் சுகமான அனுபவத்தைத் தரக்கூடியவை.
வாசு பாடும்போதெல்லாம் உலர்ந்து போன மனதுக்குள் மழை பெய்துவிட்டதுபோல ஈரப்பதமாக்கிவிட்டுத்தான் செல்லும். அவர் குரலின் நெகிழ்ச்சி தனித்துவமானது. கிரங்கடிக்கும் லாவகம் நிறைந்தது.
‘வான் மேகங்களே பாடுங்கள் .....நான் இன்று கண்டு கொண்டேன்
தேவதை’ என்ற பாடலின் இனிமை காதுக்குள் புகுந்து உடலை நனைக்கக்கூடிய ஒன்று. ஒவ்வொரு முறையும் அந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம் கண்களை மூடச்செய்து தியான நிலைக்கு ஆளாக்கிவிடும் என்னை. என்ன நிகரற்ற குரலினிமை.
அவர் பாடிய பல பாடல்களால் நான் இலகுவாகி அந்தரத்தில் பறப்பது போன்றே உணர்ந்திருக்கிறேன்.
அவரின் இறப்பு பேரிழப்பு என்கிறார்கள். எப்படி இழப்பாகும்? அவரின் குரலைத்தானே கொண்டாடினோம். அவர் விட்டுச்சென்ற குரல் நம்மோடு எப்போதும் இருக்கத்தானே போகிறது. அப்படி என்றால் அதெப்படி பேரிழப்பாகும்? அது இழப்பல்ல! இருப்பு! பேரிருப்பு!
எம் எஸ் சுப்புலெட்சுமியின் மரணச் செய்தியை தகவல் ஊடகங்கள் ஒலிபரப்பியபோது “இறப்பு சகஜம் தானே ஏன் இவ்ளோ அலட்டிக்கணும் ?”என்று சிலர் கருத்துரைத்தனர்.
ஒரு உயர்ந்த பாடகரைக் கேவலப்படுத்தும் சொல் அது. ஒரு சங்கீத மேதையை பெருமையைக் கீழ்மையாக்கும் செயல் அது. நான் அப்படிப்பேசிய சிலரைக் கேட்டேன் - அவருடைய பாடலைக் கேட்டு நீங்கள் உங்களை மறந்ததுண்டா? உங்களை அக்குரல் மயக்கியதுண்டா என்று. அவர் ஆமாம் என்று ஆமோதித்தனர். அந்தத்தருணங்கள் பரவசத் தருணங்கள். நீங்கள் அப்போது உள்ளபடியே வாழ்ந்திருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் உங்களைப் பரவசப் படுத்தியவரின் மரணத்தை சாதாரண நிகழ்வாகக் கருதலாமா என்று கேட்டேன்? அப்போது அவர் தன்னை உணர்ந்திருந்தார்.
சாமான்ய மக்கள்கூட -இசை ஒரு இன்ப ஊற்றுக்கண் என்பதை அறியாதவர்களுக்குக்கூட - அவர் பாடலின் வழி இழையோடும் நுண்மையை உணர்ந்து இன்புற்றார்கள். ஆம் அது ஒரு மந்திரக்குரல்.
Comments
சுவையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எம்.எஸ்.கோபாலன்
காஜாங் நகரில் வாழ்ந்து மறைந்தவர். மலேசிய வாசுதேவனின் பாடல்கள்
கால நதியில் கலந்து மறையச் சாத்தியமில்லை. அத்துணைச் சுகமான வரிகள்
அவை. நீங்கள் குறிப்பிடும் சில பாடல்கள் என் உணர்வுகளிலும் தாக்கங்களை
ஏற்படுத்தியவை!
www.patchaibalan.blogspot.com
சுவையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எம்.எஸ்.கோபாலன்
காஜாங் நகரில் வாழ்ந்து மறைந்தவர். மலேசிய வாசுதேவனின் பாடல்கள்
கால நதியில் கலந்து மறையச் சாத்தியமில்லை. அத்துணைச் சுகமான வரிகள்
அவை. நீங்கள் குறிப்பிடும் சில பாடல்கள் என் உணர்வுகளிலும் தாக்கங்களை
ஏற்படுத்தியவை!
அவருடைய பாடல்களில் அசாத்தியமான இனிமை உண்டு. திகட்டாமல் பலமுறை கேட்டு இன்புறலாம்.