Skip to main content

மைனா-மிகை உணர்ச்சிச் சித்திரம்
கோ.புண்ணியவான்.

நான் சினிமாப் படம் பார்ப்பது மிகக்குறைவு. சினிமா விமர்சனங்களைப் படித்தும் , பார்த்தவர்கள் கருத்து சொல்லும்போது கேட்டும் படங்களைத் தேர்ந்தெடுப்பேன். அப்படிக் கவனமாகத் தேர்வு செய்தும் , தியேட்டரில் அமர்ந்து பொறுமிக்கொண்டு பொழுதைக் கொன்ற தருணங்கள் இம்சையானவை (குடும்பத்தோடு போனதால் வெளியே தப்பித்து ஓட முடியவில்லை).

தமிழ் சினிமாவை நான் வெறுக்க ஆரம்பித்தது எம் ஜி ஆரின் மிகை ஒப்பனையைப் பார்த்த பிறகு. தன் போலி பிம்பத்தை முன் வைத்து அரசியல் லாபத்துக்கு அவர் தன்னை முன்னெடுத்த போது என் எதிர்ப்புணர்வு துவங்கியது. அவர் ஒப்பனை முகத்தைச் சுரண்டிப் பார்த்தால் கால் அங்குல ஆழத்துக்காவது முகப்பூச்சை சுரண்டி எடுக்கலாம். அதிலும் தன்னுடைய தள்ளாத வயதில் பதின்ம வயது நடிகைகளுடன் ஜோடி போட்டது என்னைபோன்ற ரசிகர்கள் செய்த பெரும்பாவம். இன்றைக்கு மலேசியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாய்ச் செயல்பட்டு ‘சத்து மலேசிய’ சுலோகத்தைத் ‘தூக்கிப் பிடித்து’ நம் மக்களை ஏமாற்றும் அரசு சார்ந்த ஊடகத்தைப் போலவே தமிழ் நாட்டிலும் , நடிகர்களை வளர்த்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதன் கோளாறுதான் இன்றைக்குத் தமிழக மக்கள் அனுபவித்துவரும் பின்னடைவு. பண அரசியலும் , குண்டர் ஆதிக்கமும் , லஞ்ச லாவண்யமும் , அதிகாரத்துவத்தின் ஆட்சியும் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கி வருகிறது. எம்.ஜி.ஆரும் அந்தப் போலியான வழியே சென்றுதான் அரசியலில் கோலோச்சினார். ஊடகங்கள் ஊதி பெருக்கிய பொய்யான பிம்பம் அவரை நட்சத்திர அந்தஸ்திலிருந்து சூரியனாக்கியது. ரஜினி , தானும் சளைத்தவரல்ல என்பதைக் காட்ட இளவயது நடிகைகளுடன் கூட்டு சேர்ந்ததும் , அவர் பேசும் பெங்குலூர்த் தமிழும் என்னை இன்னும் தூர விரட்ட ஆரம்பித்தது. (எப்போதுமே நாம் வெளியூர்க்காரர்களைக் கொண்டாடுவதில் கூச்ச நாச்சம் இல்லாதவர்கள் . நன்றிக்கடனாக அவர்கள் நமக்குக் குடிக்கத் தண்ணீர் கூடத் தராதிருப்பதிலும் நாம் காட்டும் எதிர்வினை அளப்பரியது.) பின்னர் , சிவாஜி, சத்தியராஜ் போன்றவர்களின் மிகை நடிப்பால் என் வெறுப்புணர்வு தூபமிடப் பட்டது. என்னை மேலும் இம்சைக்குள்ளாக்கியது - தயாரிப்பாளர் தவப் புதல்வர்கள் சினிமாவுக்குள் நுழைக்கப் பட்டது. அவர்களுள் ஜித்தன் ரமேஷ் , ரவி கிருஷ்ணா குறிப்பிடத்தக்கவர்கள். டைரக்டர் பிள்ளைகளை சினிமாவுக்குள் நுழைத்து என்னை கொலை வெறியனாக்கிய சினிமாப் படங்கள் இன்னும் அதிகம். இதில் பாரதி ராஜாவையும், கஸ்தூரி ராஜாவையும் என் ஆயுளில் நான் மன்னிக்கவே மாட்டேன். நடிகர்கள் செய்த ரோதனை போதாதென்று தன் மகனையும் சினிமாவுக்குள் அனுப்பி என்னை நெஞ்சடைக்கச்செய்தனர். சத்திய ராஜின் சோதனைக்குழாய் ஆராய்ச்சி ஏன் ரசிகர்களை இப்படிச் சோதிக்க வேண்டுமென்று தெரியவில்லை. சினிமாவிலும் குடும்ப அரசியல் நுழைக்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகுபவர்கள் என்னைப் போன்ற ரசிகப் பெருமக்கள்தானே!.

இன்னொரு முக்கிய காரணம் தமிழ்ச் சினிமா அசலான வாழ்க்கையை முன்வைக்காமையே. சதை மூலதனத்தை அடிப்படையாக வைத்து வணிக ரீதியாக படம் எடுத்துப் பையை நிரப்பிக்கொள்பவர்களுக்கு, யதார்த்த கதையாடலுடனான இயல்பு வாழ்க்கைச் சித்திரம் பிடிக்காதது அதிசயமல்லவே ? சரி, சமீப காலமாக சில நல்ல படங்கள் வரத்துவங்கி இருக்கின்றன. ரணிகுண்டா, அங்காடித்தெரு , பூ, மாத்தி யோசி , நந்த லாலா போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. சமூகப் பிரச்சினையைப் பொது புத்திக்கு கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும் என்று பிரக்ஞை கொண்ட இயக்குனர்கள் இப்படங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.

மிகச்சமீபத்தில் நான் பார்த்த படம் மைனா. விளிம்பு நிலை மக்களின் யதார்த்த வாழ்க்கையில் ஊடும் பாவுமாக நடக்கும் காதலை வைத்து கதை நகர்த்தபடுகிறது.

கேரள மாநிலத்தின் எல்லையில் இருக்கும் தேனீ மாவட்டத்தின் உட்புறப்பகுதியில் அமைந்திருக்கும் கிராமத்தில் தொடங்கும் ஒரு காதல் கதை இது. காதலாகிக் கசிந்துருகி நிற்கும் பதினம பருவ உறவின் இயல்புகளை மிக நுட்பமான கதையாடல் வழி நம்மை மெய் மறக்கச்செய்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். காதல் கதைகள் சொல்லிச் சொல்லி காதலைக் கசக்கவைத்துவிட்ட படங்களுக்கு மத்தியில் ஒரு யதார்த்த கிராமத்துக் காதலை நமக்கு காட்டி கலைப்படத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறார்.கதையின் முக்கிய பாத்திரம் சுருளி மிக மோசமான பெற்றோரின் மோசமான வழி காட்டலில் வளர்கிறான். பள்ளியைப் புறக்கணிக்கும் மகனின் போக்கைக் கண்டுகொள்ளாமல் சதா சீட்டாடும் அப்பனைக் காட்டும்போதே, மகனைப்பற்றிய பிம்பம் புரிய ஆரம்பிக்கிறது. ஆசிரியரின் முறையீடலுக்கு “ என் மவன் பள்ளிக்கோடமே வராம இருக்கிறத சொல்றதுக்கு ஒனக்கு மூனு மாசம் பிடிச்சுதா?” என்று கேட்டு ஆசிரியரின் காதைத் திருகுவது அப்பனின் சண்டித்தனத்தைக் காட்டிச் சுருளியின் குணக்கேட்டை நிறுவி விடுகிறார் காதாசிரியர். சுருளி முரட்டுத்தனமான பாத்திரத்தில் கதை நெடுகிலும் வரபோகிறான் என்பதற்கு அச்சாரமாக இந்தக்காட்சி.

மைனா மீதான சுருளியின் காதல் உக்கிரத்தை நிறுவ பல காட்சிகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

“மைனாவின் பூப்பெய்தும் சடங்குக்கு வந்த பெண்ணொருத்தி ( மற்ற படங்களைப்போல் நல்ல வேளையாக 30 வயது நடிகை பூப்பெய்தியதாகக் காட்டவில்லை)“ ஒன்ன எந்த மவராசன் கூட்டிக்கிட்டுப் போவபோறானோ” என்று சொல்லும் தருணத்தில் அவளை வழி மறித்து , “சுருளி மவராசந்தான் கூட்டிட்டிப் போவான்னு சொல்லு,” என்று அவளைக் குட்டு குட்டென்று குட்டும் காட்சி முக்கியமானது.

பூப்பெய்தும் சடனங்கின்போது மைனாவின் பார்வைப் பட்டு சுருளி முயங்கும் காட்சி நம்மையும் கிரங்கடிக்கிறது. மைனாவின் கண்களின் ஜதிக்கு ஒளிப்பதிவாளரின் கேமரா நேர்த்தியாக அபிநயித்திருக்கிறது.தன் பால்ய வயதில் தனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும் சுருளியின்பால் நட்பு கொண்ட மைனா தன் பதிம வயதில் மெல்ல மெல்ல காதல் வயப் படுகிறாள். தான் பூப்பெய்திய தருணத்துக்கப்புறமும் அவர்கள் அன்னிய்யோன்னியம் மேலும் இரட்டிப்பாகிறது. ஆண் துணையற்ற மைனாவின் குடும்பத்துக்குச் சுருளியைத் தன் வீட்டுப்பணிகளைச்செய்ய சுணங்காமல் பயன்படுத்திக்கொள்கிறாள் மைனாவின் தாய். மைனாவிடம் மயங்கிப்போன சுருளி அவற்றை விரும்பியே செய்து வருகிறான். சுருளியை மருமகனே என்று மைனாவின் தாய் வெள்ளந்தியாக அழைப்பதுகூட, உளவியல் ரீதியில் அவர்களின் காதல் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக சுருளியும் மைனாவும் மனதில் ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். பின்னர் தன் காதலுக்கு எதிரியாகிப் போய்விட்ட மைனாவின் அம்மாவைத் தாக்கியதிலிருந்து சுருளியின் வாழ்வும் கதையின் போக்கும் ஒரு திருப்பத்தை அடைகிறது.

அவன் 15 நாட்களுக்குச் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் மைனாவுக்கும் தனக்குமான உறவின் வலிமை எப்படிப்பட்டது என்பதை தன் சக கைதிகளிடம் , சிறை அதிகாரியிடமும் வலிய சொல்லிக்காட்டுவது மிகை உணர்ச்சியின் உச்சம். கொஞ்சம் அபத்தமாகப் பட்டாலும் மைனாவைச் சுற்றியே இருக்கும் சுருளியின் நினைவும், அவளைப் பல தினங்கள் காணாமல் இருக்கும் ஏக்கத்தாலும் அவனின் இளவயதும் , அக்காட்சியமைப்பை ஏற்றுக்கொள்ளவைக்கிறது.

சிறையிலிருந்து தப்பித்து தன் கிராமத்துக்குச் செல்கிறான் சுருளி. அப்போது நடக்கும் போராட்டத்தில் மைனா தன் தாயைப்புறக்கணித்து ‘விட்டிரு அவ சாகட்டும்” என்று சொல்லும் தருணம் சுருளி மீது மைனா கொண்ட பரஸ்பர ஈர்ப்பு கவனிக்கத்தக்கது.

மறுநாள் தீபாவளிப் பண்டிகை. சிறை அதிகாரிக்குத் தலைத்தீபாவளி. மனைவியும் அவள் குடும்பத்தாரும் சிறை அதிகாரியின் நிலையைப்புரிந்து கொள்ளாமல் இருப்பது புரிந்துணர்வின்மையினால் நடக்கப்போகும் திருப்பத்துக்கான அச்சாரம் என்பதை கதாசிரியர் கதையின் முடிச்சோடு நகர்த்துகிறார் . தீபாவளியைக் கறி தின்று கொண்டாடக் காத்திருக்கும் தருணத்தில் சுருளியின் செயல் சிறைக் காவலர்களில் வயிற்றில் புளியைக் கறைத்துவிடுகிறது. மேலிடத்துக்குத் தெரியாமல் அவனை மீண்டும் சிறையில் சேர்த்துவிடவேண்டும் என்ற சோதனையான காலக்கட்டம் சிறைக் காவலர்களுக்கு. அவனைத் தேடி கோபத்தோடு கிராமத்துக்குப் புறப்படுகின்றனர். ஒற்றியடிப்பாதை. சில இடங்களில் வண்டிகள் வசதியாகப் போகமுடியாத வசிதியற்ற காட்டுவழி. அந்தப்பாதையைச் சிறை அதிகாரிகள் கடந்து நிலைமை பரிதாபதிற்குரியது.

அவனைத் திரும்ப சிறைக்கே கொண்டுவரும் காட்சிகளில் உண்டாகும் அடுக்கடுக்கான திருப்பங்கள் கதையை வேறொரு தளத்தில் இயங்க வைக்கிறது.

தலைத்தீபாவளிக்கு முதல் நாள் , துணியெடுக்க வரச்சொல்லி தன்னைத் தொல்லைக்குள்ளாக்கும் பெண்வீட்டார் மேலும் ,மனைவியின் மேலும் உள்ள கோபத்தைச் சுருளியின் மேல் காட்டுகிறார் சிறை அதிகாரி.

“என்ன தல தீபாவளிய கொண்டாட முடியாம செஞ்ச ஒன்ன, ஆறு மாசத்துக்கு கஞ்சா கேசில் உள்ள தள்ளி, முட்டிய பேக்க வைக்கிறன் பார்ரா,” என்று சீறுகிறார். சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் ஒரு முறை மைனாவோடு தப்பிக்கிறான்.

அவர்கள் பிடிபட்ட பிறகு சுருளியை ஆற்றுப்படுத்தி மீண்டும் பயணிக்கிறார்கள். சுருளி தப்பித்தத்தும் மேலிடத்துக்குத் தெரியா வண்ணம் அவனை மீட்டுச் சிறைக்குக்கொண்டுவர சிறை அதிகாரிகள் சுருளியிடம் தன்மையோடு நடந்து கோபத்தை அடக்க வேண்டிய கட்டாயத்துக்கும் , நாள் முழுதும் பாதை தவறி காட்டில் அலைந்து களைப்புக்கும் பசிக்கும் ஆளாகும் காட்சிகள் கரிசனத்துக்குரியவை.காதலில் விழுந்தவர்கள் அவள் நமக்குக் கிடைக்கமாட்டாளோ என் எண்ணும்போது அதன் தீவிரம் உக்கிரமாகும். விஷம் குடித்து உயிர் பிரிந்த கதைகள் ஏராளம். அதிலும் பதின்ம வயது காதலுக்கு கண் மட்டுமல்ல புலன்கள் எதுவும் கட்டுப்படுவதில்லை. மைனாவில் காதலிக்கும் தருணத்தில் நடக்கும் போராட்டதில் இருவரும் உயிர் துறக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எவ்வளவோ இடையூறுக்குப்பிறகும் மணந்துகொண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே நினைக்கிறார்கள்.

சுருளியைச் சிறைக்குக் கொண்டு செல்லும் மூணாறு வழியில் அவர்களின் பேருந்து விபதுக்குள்ளாகிறது. மைனாவும் சுருளியும் மயிரிழையில் உயிர் தப்பிக்க, சிறை அதிகாரிகள் மலை உச்சியிருந்து எக்கணத்திலும் சரிந்து விழப்போகும் பேருந்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

சுருளி ‘அவர்கள் சாகட்டும்’ என்று விலக , மைனா அவர்களைக் காப்பாற்றச்சொல்கிறாள். அவள் மேல் உள்ள மையலால் மறு பேச்சின்றி காப்பாற்றுகிறான். அவர்கள் இறந்து போயிருந்தால் காதலர்கள் தங்கள் புதிய வாழ்க்கையை அமத்துக்கொள்ள தடை இருந்திருக்காது. ஆனால் அவள் சொல்லுக்கு கொடுத்த மரியாதை அவள் மேல் கொண்ட காதலின் அடர்த்தியைக் காட்டுகிறது.

சுருளியின் தயவால் உயிர் பிழைத்தவர் அவனை ஜாமினில் எடுத்து அவர்களை வாழ்விக்கப்போவதாக உறுதி கொடுக்கிறார் சிறை அதிகாரி. கதை இங்கே இன்னொரு திருப்பத்தை அடைகிறது.

கணவனின் வருகைக்காக இரவு முழுதும் காத்திருந்த சிறை அதிகாரியின் மனைவி தன் கணவனை மைனாவோடு கண்டவள் சந்தேகப்பட்டு , மூர்க்கமாகி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பிடிவாத குணத்தின் மொத்த உருவாக சிறை அதிகாரியின் மனைவி காட்டப்படுகிறாள். மைனாவைச் சிறை அதிகாரி மனைவியின் அண்ணன்மார்கள் கொல்ல , செய்தி அறிந்து சிறை அதிகாரி அவன் மனைவியையும் அவள் குடும்பத்தையும் கொன்று பழி தீர்க்கிறான்.

காவலரே கொலைக்களம் புகும் கதையாடல் கதையின் முரண். கதைப்போக்குக்கு ஏற்ற மிகப்பெரிய திருப்பமும் கூட. மைனாவின் மரணத்தை எதிர்ப்பார்க்காத சுருளியும் ரயிலை எதிர்கொண்டு சாகிறான்.

நம் சினிமாவில் காதல் படங்களின் வரத்து அதிகம். அவை மொன்னையான கதைகளைக் கொண்ட பழைய சோறு பரிமாறல். மைனா காதலை மையமாகக் கொண்டு நகர்ந்தாலும் அது முற்றிலும் வேறான பாதையைத் தேர்வு செய்துகொள்கிறது. படிப்பறிவற்ற முரட்டு வாலிபனின் நோக்கிலிருந்து கதை சொல்லப்படுகிறது. சுருளியும் மைனாவும் கொண்ட பதின்ம வயதுக் காதலின் போராட்டத்தில் உணர்ச்சிவயப்படும் காட்சிகள் தமிழ்ச்சினிமாவுக்குப் புதிது. கதைக்களனுக்கேற்ப முற்றிலும் புதிய முகங்களின் தரிசனம் ‘மைனா’வி பாத்திர வார்ப்புக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

படம் முழுக்க தமிழகத்தின் தேனீ காடுகளிலும் , கேரளத்தின் முணாரிலும் ஒளிப்பதிவு செய்து , கண்களுக்கு பெரு விருந்து படைத்திருக்கிறார். மூனாருக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். தமிழகத்தின் வரண்ட பகுதியைப் பார்த்துச் சலித்த எனக்கு மூனாரின் பசுமை வெளி சௌந்தர்யத்தை அளித்தது. பச்சை விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டத்தின் இடை இடையே சீறிப்பாயும் நீர்வீழ்ச்சிகள் மனதை ஆற்றுப்படுத்தின. மண்ணை நோக்கிச் சரிந்து போகும் மலைகளின் காட்சி பிரமிப்பானவை. பனி படர்ந்து மெல்ல நகரும் காட்சி நினைவின் அமுதம். அப்போது பச்சை வெளியில் மோதி காற்று நம்மை உரசிச்செல்லும் . அக்காட்சிகளைப் பசுமை மாறாமல் காட்டிய ஒலிப்பதிவாளரை உள்ளபடியே பாராட்டலாம்.

விளிம்பு நிலை மக்களின் முரண் உணர்வுகளையும் , முரணான குணாதிசயங்களையும் கொண்ட பாத்திர வார்ப்பின் செய்நேர்த்தி மைனாவில் மிளிர்கிறது.http://kopunniavan.blogspot.com

Comments

நல்லா உனர்ந்து எழுதினீர்கள் நண்பர் புண்னியவான்
ko.punniavan said…
வருகைக்கு நன்றி நண்பரே,
சினிமாவைப்பற்றி என் முதல் முயற்சி இது. உங்கள் கருத்துக்கும் நன்றி.
சிறுகதை எழுத்தாளராகவும், கவிஞராகவும், சிறுகதை-கவிதை ஆய்வாளராகவும் பார்த்து வந்த உங்களை
ஒரு நல்ல சினிமா பார்வையாளராகவும் அடையாளம் காட்டியது உங்களின் மைனா பார்வை.
ko.punniavan said…
நன்றி பூச்சோங் சேகர் , நான் மிகவும் ரசித்துப் பார்த்த சித்திரம் இது. என்னை அதனுள் ஈர்த்துக்கொண்டு எழுத வைத்தது.
விமர்சனம் மிக அருமை
ko.punniavan said…
நன்றிங்க மைடின்,
நல்ல படங்களை மக்கள் பார்க்கவேண்டும் மசாலா படங்களை நிராகரிக்கவேண்டும் என்ற முயற்சியே நம் போன்றவர்கள் செய்து வரும் பணி. உண்மை என்னவெனில் நல்ல படங்களை ஊடகங்கள் முன்னெடுப்பதில்லை.
Anonymous said…
தமிழ் சினிமா தரம் குறித்து தாங்கள் பட்டியலிட்டிருக்கும் கருத்துகள் மிகவும் அபத்தமானவை புண்ணியவான். எம்ஜிஆர் தொடங்கி ஜித்தன் வரை தாங்கள் அள்ளித் தெளித்திருக்கும் அர்ச்சனைகள் உங்களின் அதிமேதாவித் தனத்தை பச்சையாய் காட்டுகின்றன. எம்ஜிஆரின் ஒப்பனை டூமச் என்று சொல்கிறீர்களே..உங்களின் இந்த அதிமேதாவித்தனம் இருக்கே அது டூ டூ மச்..! -கார்த்திக் குமார், ரவாங்
ko.punniavan said…
நண்பர் கார்த்திக் குமார்,
எம் ஜி ஆரைப்பற்றிய என்னுடைய பார்வை என் ரசிப்புத்தன்மையிலிருந்து எழுந்தது. திரையில் எம் ஜி ஆரை உள்வாங்கியவர்கள் அவரின் வசனத்தத்தாலும் நடிப்பாலும். பாடல்களாலும் ஈர்க்கப்பட்டு மெய்மறந்தவர்கள். நல்ல கருத்துகள் அவர் வழியாக சமூகத்துக்கு வந்தன. ஆனால் அறுபது வயதில் எம் ஜி ஆரின் முகப்பூச்சி இல்லாத முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே வேளையில் மைனா போன்ற அசல் மனிதர்களளின் அசல் வாழ்க்கை எப்படிக் காட்டப் பட்டது என்பதையும் கவனியுங்கள். நாம் எப்போதுமே நிழலைக்கண்டு நிலை தடுமாறுகிறோம். அப்படித்தானே ஐம்பது ஆண்டுகளாய் குரங்குகளுக்கு ஓட்டுப்போட்டு அப்ப்த்தைப் பறிகொடுத்தோம்!
Novah said…
ஏற்கனவே மைனாவை பார்த்துவிட்டதால்..உங்களின் கதையோட்டம் மீண்டும் மனதுக்குள் மைனாவை பறக்க வைக்கிறது...உருகி உருகி பார்த்த படங்களில் மைனா தனி ரகம்..அதிலும் மைனா பாத்திரத்தில் என்னை வைத்து கனவும் கண்டதுண்டு (சுருளி ஹீரோ அல்ல..ஹீ ஹீ) படம் முழுக்க முழுக்க பசுமையையும் பதின்ம காதலையும் படர வைத்திருப்பதில் காட்சியமைப்பின் கலையாடல் மிகவும் பங்காற்றியிருக்கிறது..உங்களின் சொல்லாடல் மறு ஒளிபரப்பை தருகிறது...நன்றி...
Novah said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
அன்புள்ள நோவா,
அதாவது நோவா நீங்கள் சரவாக்கில் இருக்கிறீர்களா, மைனாவோ ஒரு கிராமப் பகுதியில் எடுத்ததா அதனால் இடப் பிரக்ஞை ஒரு ஓர்மையை உண்டாகியிருக்கிறது.சரவாக்கில் சுருளிகள் நிறையவே கிடைப்பார்களே. மைனா 2 கொடுக்கமாட்டீர்களா என்ன?
Novah said…
அதெல்லாம் இல்லை சார்...சரவாக் முழுவதுமே பசுமை என ஒரு பக்கம் இருந்தாலும்...நான் இருப்பது பக்கா பட்ட்ணம்...அதனால் என் 'சுருளியை' தீபகற்பத்திலேயே வைத்திருக்கிறேன். ஹீ ஹீ ஹீ...என்ன தான் இருந்தாலும் பசுமை பசுமை தான்..மைனா மைனா தான்...சுருளி சுருளி தான்...காடு காடு தான்..ஹீ ஹீ ஹீ...எல்லாமே இரண்டாக இருந்தாலும் அர்த்தம் ஒருமையையே குறிக்குது சார்..அது தான் சிறப்பே...

Popular posts from this blog

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

எம்ஜியார் -சிறுகதை

எம்ஜியார்
திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்செவிமடல்களைச் சிலிர்க்கச்செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத்துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள். இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம். சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று.நள்ளிரவு 12.00க்குத் திரும்ப பேருந்து டிக்கட் வாங்கியாயிற்று . பத்து நிமிடங்ளுக்கு முன்னாலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் .அது டிக்கெட்டின் கட்டளை. காலை ஆறு மணிக்குத்தான் திரும்பப் போய்ச் சிரம்பான் சேரும். தன் பையிலிருந்த நெளிந்து நெகிழ்ந்து நெளிந்த்து, மடிப்புக்கு அடங்கமாட்டேன் என்று வில்லத்தனம் செய்யும்சிகப்புச் சட்டை. சமீப காலமாய் இனிப்பு நீர் தொல்லையால் இளைத்துப் போன மார்பகத்துக்கும், கை முஷ்டிக்கும் இறுக்கம் தருவதில்லைதான். ஆனால் சட்டைக் …