Skip to main content

பனிப்பொழிவில் 10 நாட்கள்




சிம்லா விடுதியில், சிமலா மலை உச்சியில்




3.    எங்களுக்கு மணி 11க்குதான் விடிந்தது.
     லோபியில் கிடந்த ஆங்கிலப் பத்திரிகையில் சிம்லாவில் குளிர் ஐந்து செல்சியஸ் என்று போட்டிருந்தது. இத்தவனையில் இது குறைந்தபட்ச குளிர் என்று எழ்தியிருந்தது. இன்னும் சில தினங்களில் குளிர் மைனஸ் செல்சியஸைத்தொடும் என்றும் கணித்திருந்தது. தடித்த குளிராடை அணிந்தால் மட்டுமே குளிரைச் சாமளிக்க முடியும். எங்களை சிம்லா குளிர் ஒன்றும் செய்து விட முடியாது. நாங்கள் இன்று சாயங்காலம் சிம்லாவை விட்டு இறங்கி விடுவோமே!
     அன்று காலை பசியாறிக்கொண்டிருக்கும்போது இருவர் உள்ளே நுழைந்தனர். பார்ப்பதற்குத் தமிழர் போலவே இருந்தனர். வடநாட்டுக்காரர்களாக இருக்குமோ என்று பேசத் தயங்கினேன். பின்னர் அவர்கள் உரையாடியதைக் கேட்டதும்தான் தெரிந்தது அது மலேசியத் தமிழ் என்று. மலேசியத் தமிழ் என்று எப்படிக்கண்டுபிடிப்பது? பேச்சின் ஊடே மலாய் வார்த்தை புகுந்துவிடும். உச்சரிப்பு அழுத்தமாய் இருக்காது.

தமிழ் நாட்டில் காணப்படும் வட்டார வழக்கு இருக்காது. ஒரே மாதிரித் தமிழ் பேசுகிறோம். thr ராகாவினர் பேசும் தமிழ்போல.
      “மலேசியாவா?” என்றுதான் கேட்டேன்.
      “தோ பாரு நம்ம தமலவுங்க” என்றார் ஒருவர் அன்னியோன்னியத்தோடு. இந்த ஊர்ல வந்து மாட்டிக்கிட்டு நாங்க படுர இம்ச தாங்க முடியல. எவம் பாரு இந்தியில தான் பேசுறான். இங்கிலிசும் தெரியல. உங்கள் பாத்ததுதான் எனக்கு சந்தோஷமே வந்துச்சு. நம்ம ஊர்ல இருக்கிற மாரியே இருக்கு.” என்றார்.
       “ எப்ப இங்க வந்திங்க”
       “ நேத்தைக்கு தான்”
       “ அதுக்குள்ளவா தமிழ கேக்கணும்ன்ங்கிறீஙக?”
       “தமிழ பறிகொடுத்தவனுக்குத்தான் தெரியும் அதோட அருமை,        “ என்ன வுட்டா இன்னிக்கே கெளம்பிடுவேன் மலேசியாவுக்கு” என்றார்.
பிறகு சிறிது நேரம் அவரோடு உரையாடிவிட்டு நாங்கள் சுற்றிப்பார்க்கக் கிளம்பிவிட்டோம். அவர்களுடனான நட்பு பட்டத்தின் நூல் போல மலேசியாவுக்கும் தொடர்ந்து நீண்டது.
       சிம்லாவில் குடியிருப்புபகுதிகள் மலைச்சரிவில்தான் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் காடுகள் போன்று அடர்ந்து கிடந்தது. முறையான சாலை வசதி இருப்பதாகத் தெரியவில்லை. இடுக்கான பாதைகளில் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன.
       கடைப்பகுதிக்குப் போவதற்கு அதற்கென்று பிரத்தியேகமாக லிப்ட் இருந்தது. டிக்கட் வாங்கித்தான் லிப்டில் ஏறவேண்டும். ஒரு லிப்ட் அல்ல இரண்டு. ஒன்றில் ஏறி இறங்கி பின்னர் இன்னொன்றில் ஏறித்தான் கடைத்தெருவை அடைய முடியும். அங்கே வாகனங்களைப் பார்க்க முடியவில்லை. நடைதான். கடைக்குள் நுழைந்தால் உங்களை வாங்க வைக்காமல் விடமாட்டார்கள். விலை மலிவல்ல. எல்லாம்  இறக்குமதி சரக்குதான். உள்ளூர் உற்பத்திப் பொருள் இல்லை. எனவே டில்லி அக்ரா போய் ஷோப்பிங் செய்து கொள்ளலாமென்று ஜன்னல் ஷாப்பிங் மட்டும் செய்தோம். window shopping.
      சிம்லாவில் என்னதான் இருக்கு பார்க்க என்று தோமஸிடம் கேட்டேன். “இன்னும் மேல போலாம் வாங்க,” என்றார்.
      “அங்க என்ன இருக்கு?”
      “ இமய மலைத்தொடரை பார்க்கலாம். மலை உச்சிக்கு குதிரை சவாரி செய்யலாம். சுற்றுப்பயணிகள் சிம்லாவுக்கு வந்தால் அங்கே போகாமல் இருக்க மாட்டார்கள்,” என்றார்.
      “எனக்கு சிம்லாவின் முதல் பார்வையே பிடிக்கவில்லை வாங்க டில்லிக்கு கெளம்புவம்” என்றாள் மனைவி.
      “ என்னாங்க இவ்ளோ காசு செலவு பண்ணி வந்திட்டு பாதியிலியே போனும்கிறீங்க, நீங்க இத மிஸ் பண்ணாதிங்க, அப்புறும் வீட்டுக்குப் போயிட்டு ஐயோ பாக்காம வந்துட்டனேன்னு வருத்தப் படுவீங்க!” என்றார் தோமஸ்.
      “சரி கெளம்புங்க” என்றார் மருமகன்.
      மலை உச்சியை அடைய ஒரு மணி நேரம் பிடித்தது. சாலையைச் செப்பனிட்டுக் கொண்டிருந்ததால் தூசும் துப்பட்டியுமாய் இருந்தது. சாலை மட்டுமல்ல அங்குள்ள மக்களும் துப்பட்டியும் கையுமாகத்தான் இருந்தார்கள்.
      மலை உச்சியை அடைந்ததும்தான் தெரிந்தது அது மிகப்பிரபலமான சுற்றுலாத்தளமென்று. அந்த இடத்தின் பெயர் குல்பிரி . நிறைய குதிரைகளும் குதிரையை வழி நடத்துபவர்களும் இருந்தார்கள். டிக்கட்டை கொஞ்சம் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு குதிரையின் மேல் ஏறினோம். குதிரை போலிருக்கும் கழுதைக் குதிரை. வருடக்கணக்கில் குளிப்பாட்டியதாகத் தெரியவில்லை. குதிரையின்மேல் ஏறியவுடன்தான் வீச்சம் மூக்கை முட்டியது. குமட்டியது. மனைவி முன்னால் உள்ள குதிரையில் ஏற்றப்பட்டாள். நான் அதனைத்தொடரும் குதிரையில் ஏறிக்கொண்டேன். வழி நெடுக்க குதிரையின் மலம். பாதையிலிருந்து முட்டி நிற்கும் கற்பாறைகள். குண்டும் குழியுமான வழித்தடம். குதிரையின் மூக்குக்கயிறைப் பிடித்தவாறே முன்னால் நடந்தான் குதிரைக்காரன். ஆனால் எதிரிலிருந்து கீழிறங்கும் குதிரைகள் தட தடவென ஓடி வந்தன. சில சமயம் நம் கால்களை இடித்தும் உரசியும் சென்றன. காலை உள்ளே தள்ளு. குனி நிமிர் என்று இந்தியில் கட்டளயிட்டவாறே நம்மை எசரித்துக்கொண்டே இருந்தான். மொழி புரியாததால் எதிரே ஒடிவரும் குதிரையின் இடிக்கு ஆளாகவேண்டியிருந்தது.
      என் மனைவிக்கு சவாரி சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. குதிரைக் காரனுக்கு தமிழில் அர்ச்சனை விழுந்தது. குதிரைக்கும் சேர்த்து. “எடம் எப்ப வரும்? சனியன் இது மேல தெரியாம் ஏறிட்டு இம்சையா இருக்கு’” என்று திட்டிக்கொண்டே வந்தாள். என் நீண்ட நாள் ஆசை நிறைவேறிக்கொண்டிருந்தது. இப்பேற்பட்ட சந்தர்ப்பம் கிடைக்குமா? முடிந்தால் இன்னொரு முறை ஏற்றிவிடவேண்டும்! குதிரைக் காரனிடம் குதிரை சவுக்கால் வாங்கும் அடியைத்தான் பார்க்க முடியவில்லை. அவன் சைகை செய்தாலே குதிரை மிரண்டு சாகிறது. கட்டளைக்கெல்லாம் இணங்குகிறது. சொடுக்கினால்கூட மிரள்கிறது. காட்டிலேயே விட்டிருந்தால் சுகமாய்ச் சுற்றியிருக்கும்.
      “குதிரையை அடிக்காதே’ என்று மருமகன் திட்டினார். அவனுக்கும் குதிரைக்கும் ஆங்கிலம் புரிந்திருக்காது. தொடர்ந்து குதிரையை விலாசிக் கொண்டுதானிருந்தான்.
      உச்சியில் இமய மலைத்தொடர் நன்றாகத் தெரிந்தது. சிவன் கோயில் ஒன்று இருந்தது. பர்வதி வினாயகர் முருகர் சகிதமாய் காட்சி தந்தார் - வெள்ளிப்பனி மலை. இந்து சமயம் சிம்லாவில் வேரோடிக்கிடக்கிறது.
 பனிப்பொழிவு இன்னும் இரண்டொரு நாளில் நிகழும் என்று சொன்னார்கள். அப்போது குதிரைக்கெல்லாம் குளிர்கால விடுமுறை கொடுக்கப்படுமாம். குதிரைக்காரர்களெல்லாம் மீசை முளைக்காத இளைஞர்கள். பள்ளியின் வாசலைத் தொடாதவர்கள். அவர்கள் குதிரையை வளர்க்கவும், சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று காட்டவுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அதுவும் பனிப்பொழிவு காலத்தில் வருமானம் இல்லை. அற்றைக்கூலிகள் வேறு.
      குதிரையை விட்டு இறங்கியவுடனே “இனிமே இந்த மாறி எடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வராதிங்க,” என்று தோமஸை எச்சரித்தாள் மனைவி.
      “என்னாங்க எத்தன பேரு வராங்க பாத்திங்களா? வந்தவங்கெல்லாம் நல்லா எஞ்சோய் பண்ணாங்க”
      “ எனக்குப் பிடிக்கல” என்றாள்
      நான் புதிய வானத்தையும் புதிய பூமியையையும் மனதில் நிறுத்திக்கொண்டு சிம்லாவை ரசிக்கத்தொடங்கினேன். பச்சை நிறத்தைப் பார்க்க முடியவில்லை. கற்பாறைகள் தான் காட்சி தந்தன. கேரளாவின் மூனார் போலவோ, தமிழகத்தின் ஊட்டி போலவோ தேயிலைத்தோட்டங்களையோ உயர்ந்து நீண்டு வளர்ந்த மரங்களையோ, எண்ணற்ற நீர் வீழ்ச்சிகளையோ சிம்லாவில் காண முடியவில்லை. பச்சை நிறத்தைப் பயணித்துக்கொண்டே  பார்ப்பது பரவசமான தருணம். இயல்பாகவே பச்சை நிறம் மனதுக்கு சுகானுபவம் தரும். நிம்மதி உண்டாகும். சலனமற்ற திவ்விய அனுபவத்தைக் கொடுக்கும். அதனைக் கடந்தபடி போவது ஒரு தியானப் பொழுதுக்குச் சமானம்.


Comments

geethappriyan said…
மிக நல்ல படங்கள்,பயண அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே,நானும் விரைவில் சிம்லா செல்வேன்.
ko.punniavan said…
நன்றி, தொடர்ந்து என் விருந்தினராய் வருகை தாருங்கள்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...