சிம்லா மலை உச்சி குப்ரி மஹாசு மலை உச்சி இது . மேலே பஞ்சாப் போகும் பாதை நெடிகிலும் உள்ள் விக்ஸ் மரங்கள். ஆக மேலே குப்ரியின் சிவன் கோயில்.குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்.
சிம்லா மலை உச்சி குப்ரியில், பின்னால் தெரிவது இமய மலைத்தொடர்
4. ஓரிடத்தில் இறங்கி கொறிப்பதற்கு கடலைப் வாஙகப்போனேன். கடலையோடு பொறி, தக்காலித்துண்டு, பெப்பர் மிளகாய்த்துண்டு, பருப்பு கலந்து மிளகுத்தூளையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொடுத்தார்கள். சாப்பிட்டுப்பார்த்தேன். அப்படியொன்றும் அலாதி சுவையில்லை. சுங்கைபட்டாணி துளசி ராமன் மிக்சருக்கு ஈடாகாது. குளிருக்குப் பொருத்தமான உணவாகிறது அங்குள்ள மக்களுக்கு. நிறைய பேர் நின்றுகொண்டு அங்கேயே சுவைத்துக்கொண்டிருந்தனர். உறை பனி காலம் தொடங்கப் போவதை ஒரிரு தடயங்களைக் காண முடிந்தது. ஓரிடத்தில் கொட்டியிருந்த ஒரு பிடி ஐஸ் துகல்களைக் மருமகன் கொண்டு வந்தார். இன்னும் ஓரிரு தினங்களில் உறை பனியைக் காணமுடியும் போலும். உறை பனியைக்கான நாம் மன்னாடி போகலாமென்றார் தோமஸ். “ உறை பனியைத் தவிர வேறென்ன அங்க இருக்கு? என்று கேட்டால் மனைவி. “ அதுதான் அழகு, பனிச்சருக்கு விளயாடலாமென்றார்.” என்றார் தோமஸ். “வேண்டாம் அத நா சினிமாவுலியே பாத்துக்கிறேன்,” என்றாள் மனைவி. “ போய்ச்சேர எவ்ளோ நேரம் பிடிக்கும்? என்றேன்’ “ எட்டு மணி நேரமென்றார்” “ ஐயோ தாங்காது டில்லிக்கு விடுங்க “ என்றேன். மனைவி சொல்லே மந்திரம். மன்னாடி கேன்சல். “நம் திட்டப்படி பஞ்சாப் போகிறோம் டில்லி இல்லை,” என்றார் மருமகன். “ பஞ்சாப்புக்கு எவ்ளோ நேரமாகும்?” “ ஐந்து மணி நேரப்பயணம்” என்றார். பயணத்திட்டத்தின் படி பஞ்சாப் பறந்தோம். சிம்லாவில் ஹிமாச்சல் மாநிலத்தின் அரசு செயலகம் இருக்கிறது. குளிர் காலத்தில் சிம்லாவிலும். கோடை காலத்தில் டில்லிலும் கூட்டம் நடத்துவார்களாம். கொடுத்து வைத்த அரசியல் வாதிகள். கார் சிம்லாவை விட்டு இறங்க இறங்க குளிரின் தாக்கம் குறைந்துகொண்டிருந்தது. முதல் நாள் இரவில் இயற்கை அழகை ரசிக்க முடிய வில்லை. ஆனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. சிம்லாவை விட்டிறங்கி எங்கள் பயணம் பஞ்சாப் மாநிலத்துக்குத் தொடர்ந்தது. பஞ்சாப் இயற்கை வலம் மிகுந்த நாடு. சாலையின் இரு புறமும் பச்சை வெளி. கெடா மாநில நெற்களஞ்சியத்தைப் போல இரு மருங்கிலும் கோதுமை வயல்கள். கங்கை நதி தண்ணீரை வாறி இறைக்கிறது. வடநாடு முழுதும் கோதுமை முக்கிய உணவு என்பதைச்சொல்ல வேண்டியதில்லலை. நான் நினைக்கிறேன் வடநாட்டுக்குப் போது மான கோதுமையை பஞ்சாப்தான் வாரித்தருகிறது என்று. எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்துக்கு கோதுமை வயல்கள் பரந்து கிடக்கிறது. பார்க்குமிடமெல்லாம் கோதுமை வெளி. இடை இடையே கடுகு பயிரிட்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. ஒரு முறை இறங்கி பறித்துக்கொண்டு வந்து பிறரிடம் காட்டினேன். அறுவடை காலம் துவங்கி இருக்கவில்லை. சரம் சரமாய் மஞ்சள் பூக்கள் பூத்து, இளம்பச்சை செடிக்களுக்குப் பூச்சூடியது போன்ற காட்சி ரம்மியமாக இருந்தது. சாலைக்கு மிக அருகில் நீண்டு உயர்ந்த மரங்கள் அழகு சேர்த்தன. இவை என்ன மரங்கள். ஒரே மாதிரியான மரம் நெடுக்க பார்க்க முடிகிறதே என்று தோமஸைக் கேட்டேன். “ விக்ஸ் மரங்கள்” என்றார். “ விக்ஸ் மரங்களா நில்லுங்க பாக்கலாம்,” என்றேன். “ என்ன நமபல நீங்க,” என்று சலித்துக்கொண்டார்.. “ இல்ல , விக்ஸ் மரத்த பாக்கணும், நம்பாம இல்ல, நீங்க எப்படி தப்பா சொல்லுவீங்க? எத்தனை மொற இந்தப்பக்கம் வநிதிருப்பீங்க?” என்றேன். “ இதுல நம்பாம இருக்கிறதுக்கு என்ன இருக்கு? ஒரு எக்ஸைட்மெண்ட். நில்லுங்க பாக்கலாம்” என்றார், மருமகனும். நன்கு தடித்துச் செழித்து நிற்கும் மரங்கள். கையெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கொத்து இலையை பறித்துக்கொண்டு வந்தேன். மோந்து பார்த்தபோது விக்ஸ் வாசம் அப்படியே இருந்தது. எல்லாரிடமும் காட்டியபோது, “ஆமா விக்ஸ்தான் என்றனர். “இத கொதிக்க வச்சி விக்ஸ் செய்வாங்க,” என்றார். கொதிக்கக் கொதிக்க விக்ஸ் மிதக்க ஆரம்பிக்கும் என்றார். அவர் சொல்வது உண்மைதான். எனக்கு சலி பிடிக்கும் போதெல்லாம் விக்ஸை கொதி நீரில் வீட்டு உள்ளிழுத்துக்கொள்வேன். கொஞ்ச நேரம் சென்று பார்த்தால் மீந்திருக்கு விக்ஸ் பஞ்சு பஞ்சாய் நீரில் மிதக்கும். “வெள்ளக்கார காலத்துல இத கண்டு பிட்டிச்சு மருந்து செய்தான்,” என்றார். “ வெள்ளக்காரன் கண்டு பிடிச்சான்னு சொல்லாதிங்க, இத வேணும்னா அவன் வணிகமாக்கி சம்பாரிச்சுக்கிட்டானு சொல்லுங்க. இந்தியா இயற்கை மருத்துவத்துக்குப் பேர் போனது. சித்தர்களும் ஞானிகளும் கண்டு உபயோகபடுத்தனத வெள்ளக்காரன் தந்திரமா காசு பண்ணிக்கிட்டான், “ என்றேன். அவர் பேசாமலிருந்தார்.
Comments