Saturday, March 19, 2011

பதின்மத்தில்

    
                                       Dr.puspha -president of EWRF SUNGAI PETANI   கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது..
காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்காலை வேலை உற்சாகமான பொழுதை எனக்கு அளிக்கப்போகிறது என்பதை யூகித்திருக்கவில்லை நான். அவரோடு ஐந்தாறு கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள்  மாணவர்களைப் பதிவதிலும் காலையில் நடைபெறவிருக்கும் மாணவர்க்கான தன்முனைப்புப் பயிற்சிப் பணிகளுக்குமான செயலிலும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.
டாக்டர் புஷ்பா துங்கு அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் 12 ஆண்டுகளாக விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். எளிதில் எல்லாரையும் கவரக்கூடியவர். அவருடைய வாய் மொழியும் உடல் மொழியுமே போதும் அவர்பால் பிறர் அன்பு செலுத்துவதற்கு. பிறருக்கு உதவுவதில் தயங்காதவர். அவர் EWRF என்று சொல்லக்கூடிய கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் சுங்கைப்பட்டாணி கிளையின் தலைவராகப் பொறுப்பேற்று நற்பணி செய்து வருகிறார். சுங்கைப்பட்டாணி சுற்றுவட்டாரத்தில் பயிலும் வசதி குறைந்த மாண்வர்களைத் தத்தெடுத்து ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் படிவம் வரை பயிலும் 60 மாணவரைத் தேர்வு செய்து அவர்களை கல்வியில் மேம்படுத்தும் சீரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அன்றைக்கான ஒருநாள் பயிற்சியைத் துவக்கும் வண்ணம் என்னை ஒரு மணிநேரத்துக்கு பதின்ம வயது பிரச்சினைகளை எதிர்நோக்குவது குறித்து பேசச்சொல்லி அழைத்திருந்தார். நான் ஆரம்பத்தில் இடைநிலைப்பள்ளியிலும் பின்னர் ஆரம்பப்பள்ளியிலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன். அதனால் பதின்ம வயதினரின் உளவியல் குறித்து அனுபவம் சார்ந்த அறிவை வாய்க்கப்பெற்றிருந்தேன். கூடுதலான தகவல்களை இணையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்ற என் எண்ணத்தில் மண்விழுந்திருந்தது. 2 நாட்களுக்கு முன்னால்தான் பேச அழைப்பு வந்ததும் மறுநாள் காலையிலேயே இணையத்தின் உதவியை நாடினேன். இணையத்த்தொடர்பு தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கத்திலும் சுனாமியினாலும் நேர்ந்த இழப்பு இது என்று பின்னர் தெரிய வந்தது. என்னிடம் உள்ள சில புத்தகங்களின் துணையோடு நான் பேசவேண்டியதைத் தயார் செய்துகொண்டேன். பள்ளிகளில் பெற்றோருக்கான விழிப்புணர்வு பற்றி நிறை பேசியிருக்கிறேன். ஆனால் பதினம வயதினர்க்காகப் பேசியது குறைவே.
    காலை ஏழு மணிக்கெல்லம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டு டாக்டர் புஷ்பா துவக்க உரையாற்றிய பின் நான் பேசத்துவங்கினேன்.
    உணர்ச்சி வயப்படலுக்கும் அறிவு வயப்படலுக்கும் உள்ள பாதிப்புகளைப் பற்றியும் அதனால் அடையப்போகும் இலக்குகளைப்பற்றியும் ஒரு மணிநேரம் பேசினேன். காலை நேரமாதலால் மாணவர்கள் கவனததைச் சிதறடிக்காமல் என் பேச்சில் ஆழ்ந்திருந்தனர். படி படி என்ற சொற்கள் என் பேச்சில் வராம்ல் பார்த்துக்கொண்டேன். அம்மா, அப்பா, மாமா, அத்தை, அண்ணன், அக்காள், ஆசிர்யர் ,அதிகாரி போதாக்குறைக்கு வழிப்போக்கன்கூட மாணவர்களைப்பார்ர்த்தால் படி என்று மீண்டும் மீண்டும் சொல்லியே படி என்ற வார்த்தையை மாணவர்களின் பரம எதிரியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். படிப்பதற்கான் சூழலும் , பகுத்தறிவும் கொடுத்தாலே போதும். தானாக படித்து வந்துவிடுவார்கள்.
    பேச்சு முடிந்ததும் டாக்டர் புஷ்பா பேச்சு தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரின் அங்கீகாரம் என்னை நெகிழவைத்தது. அன்று மாலையில் நடக்கும் நிறைவு விழாவிலும் எனக்கு அழைப்பு விடுத்தது என்னை கௌரவிப்பதாக இருந்தது. என்னையும் கல்வி சமூகநல ஆய்வு அறவாரியத்தின் பொறுப்பாளராக ஆகும்படி கேட்டுக்கொண்டார். எனக்கும் அதில் ஆர்வம் உண்டு.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.