1. கோலாலம்பூரின் மஸ்ஜிட் இந்தியா பேரங்காடி ஒன்றில் இரண்டுமணி நேரத்துக்கு மேல் அலைந்து கொண்டிருந்தபோது களைப்பாய் இருந்தால் சொல்லுங்கள் ஓய்வெடுக்காலாம் என்றார். "நானும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான். இன்றைக்கும் மலை ஏறும் பயிற்சி செய்கிறேன்," என்றேன். பின்னர் தொடர்கிறது எங்கள் பேரங்காடித் தேடல். பல பொருட்களின் விலை இந்தியாவை விட இங்கே அதிகம் என்றார். சில பொருட்களின் விலை வேறுபாட்டை அவரால் சொல்ல முடிகிறது.
ஒரு காணொலி நாடா விற்கும் கடையில் நின்று காணொலி நாடாக்களை அலசினார். பின்னர் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது யாஸ்மின் அஹமட்டின் செப்பிட் திரைப் படம். (யாஸ்மின் தன்னுடைய ஐம்பத்தோராவது வயதில் ஒருதிரைப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணமுற்றார்). மாலேசியப் படங்களில் யாஸ்மினின் படங்கள் வித்தியாசமானவை என்றார். உலகத்திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆரவம் உள்ளவர் எஸ்ரா. நான் கடைசியாகப் படித்து முடித்த 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்" நூலில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக விரிவாக பதிவு செய்துள்ளார். படிக்க வேண்டிய நூல். ஒரு நண்பர் யாசின் பற்றி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் அவருக்குச் சொன்னது எஸ்ராவாக இருக்கலாம். யாசின் மலேசிய எழுத்தாளர்களுக்கு அவ்வளவு தெரிந்தவர் அல்லர்.
காணொலியை பத்தொன்பது ரிங்கிட் கொடுத்து வாங்கிவிட்டு சொன்னார், " நான் இப்படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். என் சேகரிப்புக்காக வாங்குகிறேன் என்றார்.
2. சிறுகதைப் பட்டறையின் இரண்டாம் நாள் எஸ்ராவில் முதல் பயிலரங்கு கட்டுரை சமர்பிப்ப்தாக இருந்தது. காலை ஏழரைக்கெல்லாம் எல்லாரும் வந்துவிட்டார்கள் எஸ்ராவைக் காணவில்லை. அவரை அடுத்துதான் முனைவர் சபாபதி பேசுவதாக இருந்தது. முதல் நாள் கலைப்பில் அவர் அசதியில் தூங்குகிறாரோ என்று எண்ணி அவர் அறைக்குப் போனேன். அப்போது அவர் குளிக்க தயாராகிக்கொண்டிருந்தார். "உங்களுடைய பயிலரங்கு நேரம் என்றேன்"
" நான் வந்துவிடுகிறேன்" என்றார். இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் சுமார் இரண்டரை மணி நேர வித்தியாசம் உண்டு. இரண்டொரு நாட்களுக்குப் பிறகுதான் மலேசிய நேரத்துக்கு இயல்பாக்கிக்கொள்ள முடியும். என்வேதான் எஸ்ரா சுதாரித்துக்கொள்ள சிரமப் பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இன்னும் எப்படியும் 15 நிமிடமாவது ஆகும் அவர் தயாராக என்று உத்தேசித்து "நீங்கள் சவகாசமாய் வாருங்கள், நான் சபாபதியை பேசச் சொல்கிறேன்," என்றேன்.
சரி என்றவுடம் கருத்தரங்கு மண்டபத்துக்கு வந்து சபாபதியை ஆரம்பிக்கச் சொல்லி விட்டேன். சபாபதி ஆரம்பிப்பதற்குள் அவர் மண்டபத்துக்குள் வந்துவிட்டார். சபாபதி பேசுவதற்கான பவர் பொய்ண்ட் தாயாராக இருந்ததால் எஸ்ரா காத்திருக்க வேண்டியதாயிற்று. இருந்தாலும் எஸ்ரா குறித்த நேரத்தில் மண்டபத்தில் இருந்தது போற்றத்தக்கதாக இருந்தது.
3. என்னுடைய பயிலரங்கு கட்டுரையின் தலைப்பு ' ஒரு நல்ல சிறுகதையின் தொடக்கம் எப்படி இருக்கவேண்டும்? என்பதாகும். அவர் மூன்றாம் நாள் பேச்சில் கதையின் தொடக்கம் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். நான் கொஞ்சம்தான் தொடுவார் பின்னர் மற்றதைப் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதலுக்கு மோசம் வந்துவிடும் நிலை அவரின் பேச்சில் தொடர்ந்தது. கொஞ்சமும் தாமதிக்காமல் அது குறித்து ஒரு துண்டுக் கடிதம் எழிதி அனுப்பிவிட்டேன். சிறுகதையின் தொடக்கம் பற்றிப் பேசுவதை உடனே நிறுத்திக்கொண்டு வேறு விசயத்துக்கு தாவி விட்டார்.
அவரின் பேச்சு முடிந்து "நான் உங்கள் தலைப்பை கவனிக்கவே இல்லை. நல்ல காலம் வந்து குறுக்கிட்டீர்கள்." என்றார். அவர் தொடர்ந்து பேசக்கூடிய தாளைக் காட்டினார். நான் பேசவிருந்த அனைத்தும் அதில் இருந்தது. அவர் பேச்சின் அலையில் என் சரக்கு கொஞ்சம் அடித்துக்கொண்டு போய்விட்டதுதான். இருந்தாலும் மற்றவருக்கு இடம் கொடுக்கும் பண்பு என் நெஞ்சில் நீண்ட நாட்களுக்கு மறையாது
Comments