Skip to main content

உடைந்து உருப்பெறும் சொற்களும் , அது தரும் சுகானுபவமும்.

                 இவன்தான் ஆக இளையவன் -சூர்யா

          என் வீடு குழந்தைகள் நிறைந்த வீடு. என் மகள் என் மகன் வழிப்பிள்ளைகள் மொத்தம் ஐவர். 'நாம் அறுவரானோம்'  எனும் பிரகடனத்தோடு என் இளைய மகன் குழந்தை இந்த டிசம்பரில் இவ்வுலகம் காண வருகிறது. வருக வருகவென வரவேற்கக் காத்திருக்கிறோம் எல்லாரும்.
குழந்தைகள் இருக்கும் உலகம் குடும்பங்களுக்குப் புதிதல்ல என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் ப்ற்றிச் சொல்வதற்கு எண்ணிக்கையற்ற கதைகள் வற்றாத நதிபோல சம்பவங்களால் நிறைந்து  கொண்டேதான் இருக்கின்றது. அவை சுவையானவை- சுகமானவை . திகட்டத் திகட்ட  உண்ணச்சொல்லும் சொல் உணவு நிறைந்தவை.

ஆகக் கடைசி பேரனுக்கு இப்போதுதான் இரண்டு வயதைத் தாண்டுகிறது. அவன் இரண்டு வயதுக்குள் சில சொற்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான்.குழந்தைகளற்ற வீட்டை விட , அவை இருக்கும் வீட்டில் பேச்சு சீக்கிரம் பிடிபட்டு விடும்  மழலைகளுக்கு. காதுகள்தான் சொற்களை உள்வாங்கி சேகரம் செய்து மூளை முதிர்ச்சி பெறும் தருவாயில் வாயில் உருப்புகளின் ஒருங்கிணைவில் சொற்கள் பிறந்துவிடுகினறன். அதனால் குழந்தைகளிடம் நாம் நேரம் இருக்கும்போதெல்லாம் பேச வேண்டும். ஏன் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கே தாயின் குரல் நன்றாக கேட்குமாம். நாம் இதையெல்லாம் நம்புவதில்லை என்பது சாபக்கேடு.
 ஐந்து குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் வீட்டில் சொற்கள் வீடு முழுக்க மிதந்துகொண்டிருக்கும். என் இரண்டு வயதுப் பேரன் மற்றெல்லாப் பேரன் பேத்திகளைவிட விரைவில் சொற்களைப் பிடித்துக்கொண்டான். சொற்களோடு ஓடி ஆடும் குழந்தைக்கு இது அமானுஷ்யமல்ல.

சொறகள் வசமான புதிதில் அவை நமக்குப் புரிவதில்லை. அவர்களின் உடல் மொழியும் உடைந்து சிதறிய உச்சரிப்பும் , அவர்கள் மேல் நாம் செலுத்தும் பிரத்தியேக கவனமும், மெல்ல நம்மை அந்தச் சொற்களின் புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. புரிந்து கொள்ளும் அந்தத் தருணம் சொல்லொணாப் பரவசமானது.
தொடக்கத்தில் அம்மா என்ற சொல்லும் அதனைத்தொடர்ந்து பசியும் தன் பசியைத்தீர்க்கும் உணவும் அவனைப் பேசவைக்கிறது.
என் பேரன் சோறு சாப்பிடத் தொடங்கியதும் அவன் பேசிய முதல் வார்த்தை சிக்கன்மைஸ் என்ற சொல்லே.
உணவு மேசையில் அமர்ந்துகொண்டு சிக்கன்மைஸ் என்பான். சோறை ஏன் அந்த அனாமதேயப் பெயரில் அழக்கவேண்டும்? அச்சொல்லின் பொருளும் அதன் பின்புலம் இயங்கிய அனுபவமும் அவனின் அரைகுறை  வார்த்தையைப் புரிந்துகொள்ளச் செய்தது..
வீட்டில் அவன் பாட்டி வாரத்துக்கு ஒருமுறையாவது சிக்கன் ரைஸ் (சீனர்களின் கோழிச் சோறு உணவு வகை) செய்வதுண்டு. இந்த உணவு எல்லாப் பேரப்பிளைகளுக்கும் உவப்பான உணவாகும். அதற்காக செய்யப் படும் ரசம் காரமற்று இருப்பதால் குழந்தைகள் அதனை விரும்பி உண்ண ஆரப்பித்தார்கள். பேரனுக்கு அந்த உணவு  வகையின்மேல் அலாதி விருப்பம் உண்டானது. எல்லா உணவு வகையுமே அவனுக்கு சிக்கன் ரைஸ்தான். பொதுவாக வெள்ளைச் சோற்றுக்கு அவன் வைத்த செல்லப் பெயர் சிக்கன் மைஸ். 'ச்சூப் ச்சூப்' என்று ரச வகையையும் கேட்டு உண்ணும்போது நமக்கு பசி ஆறிவிடுகிறது.
வீட்டில் தாத்தா பாட்டி தமிழில் பேசவே செய்கிறோம். அவன் தாய் தந்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடலை வைத்துக் கொண்டார்கள். (என் எல்லாப் பேரப் பிள்ளைகளும் தமிழ்ப் பள்ளியில்தான் படிக்கிறார்கள், படிப்பார்கள்). அவன் அவனைத் தூக்கி வைத்துக்கொள்ளச் செய்வதற்கு 'கேரி யு' என்றே சொல்கிறான். அவன் பெற்றோர் அவனைத் தூக்கி வைத்துக்கொள்வதற்கு ஐ கேரி யு என்ற சொற்களை அப்படியே உள்வாங்கி அப்பழுக்கில்லாமல பிரதிபலிக்கிறான் போலும். அவன் நம்மைத் தூக்க முடியாவிட்டாலும் அவன் நம்மைத்தூக்கி உச்சி முகர்ந்த சொல் அல்லவா இது!
                       ஆக மூத்தவள்- நவீனா
என் பிறந்த நாளில் என் மருமகளும் மகனும் பரிசாகக் கொடுத்த மடிக்கணினியை நான் உபயோகிப்பதைவிட என் பேரனே அதில் ஆதிக்கம் செலுத்துகிறான். தூங்கி எழுந்து வந்ததும் அவன் பாடும் முதல் பாடல் 'யந்திரா' என்பதாகும். நாம் அதனை காதுகொடுத்து கேடக்வில்லை எனப் புரிந்துகொண்ட பிறகு அச்சொல்லை இன்னும் உரக்க இன்னும் இழுத்து இன்னும் உணர்ச்சிவயப்பட்டு 'யந்ந்ந்திராஆஆஆ' என்பான். ரஜினியின் படமான யந்திரன் படத்தின் பாடலைத்தான் இப்படிச்சொல்கிறான். அவனின் சொல் மந்திரத்தில் மயங்கி, என் வாசிப்பறைக்குக் கொண்டு சென்றவுடன், மடிக் கணினியை அவன் விரித்த கால்களுக்கு மத்தியில் கொண்டு சென்று 'ஓன்' செய்து யுடியூப் சென்றவுடன் யந்திரா பாடலைத் திறக்கவேண்டும். மணிக்கணக்கில் தன்னை மறந்து அதனைக் கேட்டபடி இருப்பான். ஆரம்பத்தில் ஒவ்வொரு பாடலாக அவனுக்கு மாற்றித்தரவேண்டும். அதற்காக மூன்று நிமிடத்துக்கு ஒரு முறை தாத்தா என்ற அழைப்பு வரும். நாம்தான் பேரப்பிளைகளின் ஏதேச்சதிகாரத்துக்கு அடிபணிபவர்களாயிற்றே. ஒவ்வொரு அழைப்புக்கும் ஓடிப்போய் செவகனாய் சேவை செய்வதுண்டும். இப்போதெல்லாம் அவனே இயக்க முனைந்துவிட்டான். ஒவ்வொரு பாடலையும் அவனே  தட்டித் திறந்து கொள்வான். இப்போது பாடலைவிட முழுப் படத்தையும் விரும்பிப் பார்க்கிறான். ரஜினி படத்தையும் விஜய் படத்தையும் ஏன் குழந்தைகள் அலாதியாய் விரும்புகிறார்கள். ஆமாம் அவை அவர்களுக்கான் கார்ட்டுன் படங்களல்லவா? மடிக்கணினியை இப்போதெல்லாம் அவனே ஆக்ரமித்துக் கொள்கிறான். நான் மேசை கணினிக்கு வந்துவிட்டேன். அது அவனுடைய விளையாட்டுப் பொருள் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு இரண்டு மாதங்கள் ஆயிற்று. அதில் உள்ள எல்லா பாடல்களும் அவனுக்கு அத்துப்படி. இதனால் எத்தனையோ முறை கணினியை சர்வீசுக்குக் கொண்டுபோக வேண்டியதாயிற்று. அவனுக்கு சோறூட்ட , அழுகையை நிறுத்த , பாலருந்த , பெற்றோரை மறக்க, என கணினிக்குத் தெரியாத தொழில் நுட்பத்துக்கெல்லாம் பயன் படுகிறதல்லாவா! அப்புறம் கணினியும் 'அடம் பிடித்துஅழாதா' என்ன?
காரில் போகும்போது அதில் ஒலிக்கும் எல்லாப் பாடலின் வரிகளையும் அவன் தொடர்ந்து பாடுவான். நமக்கு அறிமுகமில்லாத பாடல்களை அவன் பாடும்போது நமக்கும் வியப்பு மேலிடும். எல்லாவற்றுக்கும் மேலாக அவனின் உச்சரிப்பு அப்படி இப்படி இருந்தாலும் மெட்டு மாறதப்பா! இசையோடும் பாடுவான்.
ஒருமுறை என் ஒரு வயதுப்பேத்தி ஒரு பாடல் போட்டியில் பங்கெடுக்க வேண்டியதாயிற்று. அவளுக்கு ஆசிரியைத் தேர்ந்தெடுத்த பாடல் -சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். அவளுக்கு மேலும் பயிற்சி தரும் பொருட்டு வீட்டிலும் பாடிக்காட்டச் சொல்லுவோம். அதனைப் போகிற போக்கில் கேட்டு வைத்தவன் தான். ஒருநாள் இரவுப் படுக்கையின் போது அதை அவன் பாட ஆரம்பித்துவிட்டான். அச்சு பிசகாமல் அப்படியே ஒவ்வொரு வரியையும் பாடினான். பாடல் முழுதும் அவனுக்கு மனப் பாடம். இது எப்படி நிகழ்ந்தது என்ற வியப்பிலிருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை. அவன் பாட்டி பாடும் எல்லாத் தாலாட்டும் பாடலையும் பாடி நன்றிக்கடனாக இப்போது எங்களைத் தூங்க வைக்கிறான். மழலை மொழிக்கென்று நிகண்டு இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். தமிழ் மொழியில் உள்ள சொற்களைவிட மழலை நிகண்டில் அதிகம் சொற்கள் இருக்கும்!

அவனுக்கு அதிகத் தேவையான வேளையில் எங்களை ஒருமையில் 'வ்வா' என்று கூப்பிடுவான். குழந்தைகளுடன் பழகுவதால் அப்படியான பிரயோகம். குறிப்பாக கணினியை இயக்க 'வா' என்பான். கையைப்பிடித்து இழுப்பான். வா என்ற ஒருமையை 'வாங்க' என்று அழைக்க சொல்லிக்கொடுத்தோம். அவன்  மெல்ல 'வாங' என்றான். 'ங்'கோடு க இணையவே இல்லை. கொஞ்ச நாள் பயிற்சியில் இப்போது வாங்க என்ற கூப்பிட ஆரம்பித்துவிட்டான். அவன் அச்சொல்லை உச்சரிக்கும் போது என் கண்களை கூர்ந்து நோக்கி ஒரு புன்னகையை வீசுவான். அந்தச் சொல்லும் புன்னகையும் என்னை அவன் வயப் படுத்திவிடும். ஆனாலும் வாங என்ற சொல்லின் சுகம் மெல்ல கரைந்துபோய்விட்டது. எல்லா மழலைச் சொற்களும் இல்லாமல் போகும் போது வீடு சூன்யமாகி, அது தந்த சுகமும் காணாமற்போய்விடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் மழலை உலகைக் கடந்து செல்லச் செல்ல புதிய மழலைகள் நம்மைச் சூழ்ந்துகொள்ளவேண்டும்.



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...