நன்றி (படங்கள் வ. முனியன்)
(சிங்கப்பூரில் கடந்த 28,29.30 அக்டோபரில்(2011) நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன்வைத்து)
இலக்கிய வளர்ச்சியின் அடுத்த கட்ட பரிமாணத்தை அடையவும்,
தமிழர் புலம் பெயர்ந்த இடங்களில் இலக்கியம் சார்ந்து நடக்கும்
வளர்ச்சியை அல்லது மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்
சமீபத்தில் சிங்பப்பூர்த்தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தாயகம் கடந்த தமிழ்
கூட்டியது. கனடா, சிரிலங்கா, ஆஸ்திரேலியா,ஜெர்மனி,பிரான்ஸ், அமெரிக்கா பிரிட்டன் இந்தியா, சிஙக்ப்பூர், மலேசிய போன்ற
நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். கட்டுரையாளர்கள்
மேற்குறிப்பிட்ட நாடுகளின் இலக்கிய , வளர்ச்சியும் அதன் போரட்டங்கள் குறித்தும் கட்டுரைகள் படைத்தனர்.
தமிழர்களின் தாயகம் என்பதற்கான பொருள் இந்தியாவாகவே இருக்கிறது என்பதாகவே கருப்பொருள் சொல்கிறது. ஆனால் எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டிய புதிய சமூகம் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தலையெடுத்துவிட்டது. இனியும் இந்தியாதான் தாய்நாடு என்று சொல்வதில் உள்ளார்ந்த பொருள் இருக்கமுடியாது. துக்கணூண்டு உணர்வு சார்ந்த பற்று வேண்டுமானால் இருக்கலாம். இந்தப் பற்றைத் தாயகம் என்று எப்படி மொழிபெயர்த்துக் கொள்வது? அதில் குழப்பம்தான் மிஞ்சும். பேராளர்களில் பெரும்பாலும் இலங்கையிருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றவரளாகவே ஆகிவிட்ட நிலையில் இலங்கை அவர்களுக்குத் தாயகமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அடுத்த தலைமு¨றையினர் இனி தாங்கள் வசிக்கும் நாடுதான் தாய்நாடு என்ற நிலை வந்துவிட்டது. அவர்கள் திரும்ப இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ திரும்பும் சூழ்நிலையை மறந்துவிட்டார்கள் அல்லது மறுத்துவிட்டார்கள் அவர்களின் தொப்புள் கொடி உறவு முற்றாகவே அறுந்துவிட்ட நிலையில் இனியும் தாங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நாட்டை தாயகம் என்று சொல்வதில் தற்சமயம் வாழும் நாட்டின் பற்றை சந்தேகிக்கும் ஒரு இக்கட்டான போக்கு நிலவ வாய்ப்புண்டு. மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாடுதான் தாய்நாடு. இந்நிலையில் தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் என்று எதைச்சொல்வது? கருப்பொருளில்தான் குழப்பம் இருந்ததே தவிர கட்டுரைகள் கட்டுரையாளர்கள் வாழும் நாடுகளின் இலக்கிய உலகை முன்னெடுத்தன.
இலங்கையிருந்து புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் இலக்கியம் மெல்ல நசியத்தொடங்கி இருக்கிறது. புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரை தமிழ் இலக்கியத்தைத் தற்காக்க நினைத்தாலும் அங்கே வாழும் சூழல் , கல்விக்கொள்கை, பொருளியல் சிந்தனை, இலக்கிய வளர்ச்சிக்கு தாராளமான இடம் தந்துவிட முடியாது. மொரிசியஸ் பிஜி தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழரகள் தங்கள் தாய்மொழியைப் பறிகொடுத்த நிலைதான், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் நேரப் போகிறது என்பதை எந்த சந்தேகமுமின்றி நிறுவிவிடமுடியும். சிங்கப்பூரின் அரசு தமிழை முக்கியப் பாடமாக அங்கீகரித்தாலும், அந்நாட்டின் தொழிதுறை முன்னேற்றம் தமிழை வலிக்காமல் புறக்கணித்தவாறே நகர்ந்து கொண்டிருக்கிறது. அசல் சிங்கப்பூர் இலக்கியம் படைப்போர் அருகிவிட்டனர். இப்போதுள்ள படைப்பாளிகள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூரின் தொழில்துறை வளர்ச்சிக்காக கடந்த முப்பது ஆண்டுகளில் புலம்பெயர்ந்தவர்கள். எனவே ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு குடியேறி, பின்னர் நிரந்தர குடியுரிமைபெற்றவர்களில் இலக்கியம் படைக்கும் தலைமுறை இல்லை. அற்றுப்போய்விட்டது.
மலேசியாவிலும் கிட்டதட்ட சிங்கப்பூரின் சூழலே நிலவுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 800 தமிழ்ப்பள்ளிகள் இருந்த மலேசியாவில் தற்சமயம் 523 பள்ளிகளே எஞ்சி இருக்கின்றன. தொழில்துறை முன்னேற்றத்தில் பட்டணத்துக்குக் குடிபெயர்ந்ததிலும் , தோட்டப்புறங்கள் பட்டணமயமாதலில் ஈடுகொடுத்தமையிலும் இந்த எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. ஒரே மொழி ஒரே நாடு என்ற கொள்கையும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை இன்னும் சரியச் செய்யும். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டு கால இனவாத அரசியல் காரணமாகவும் தமிழ்க்கல்வியின் நிலை தாழ்ந்து கிடக்கிறது. ஏறத்தாழ எட்டு விகிதம் இந்தியர்களில் ஆறு விகிதம் தமிழர்கள் குரல் அமுங்கியே கிடக்கிறது. ஆறு விகிதத்திலும் சரிபாதி தமிழ் மொழியின் மேல் அக்கறையின்மையை புலப்படுத்திவிட்டனர். அப்படியானால் வெறும் மூன்று விகிதத்தினர் மட்டுமே தமிழை தற்காக்க முடியும் என்பது கனவாகவே முடியும். இந்த மூன்று விகித தமிழர்கள் கூட அடித்தட்டு மக்கள். தங்கள் வாழ்வாதாரதுக்கே போராடிக்கொண்டிருப்பவர். தமிழ்க்கல்வியை இவர்களால் எப்படி தற்காக்க முடியும். இப்போது தமிழ் ‘இருக்கிறது’ என்பதே ஆறுதலான விஷயம். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் எதுவும் நடக்கலாம். அடிப்படைக் கல்வி ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களே மலேசியாவில் இலக்கியம் படைக்கின்றனர். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தரம் இப்போது இல்லை.
எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழன் உள்ளவரை தமிழ் இருக்கும் என்று சொல்வது சரியாக இருக்காது. சரிந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
தொடரும்.............
Comments