சொல்றத சொல்லிப்புடுறேன்

ஐநூறு கொடுத்தான்னு
 அவனுக்கே ஓட்டுன்னா?
ஆயுள் முழுக்க ஒதுக்கனானே
 அதுக்கென்ன அர்த்தம்ன்னேன்?

நம்மல ஓரங்கட்டி
 ஒசத்திப்புட்டான் தஞ்சனத்த
 சும்மா தூசுதட்டி போட்டாப்புல
 மறந்துப்புட்டான் என் எனத்த

 கோயிலுக்கு கொடுத்தான்னு
 கையெடுத்து கும்பிடுறியே
 சாமியெல்லாம் ஒடச்சப்ப்போ
 கைபெசஞ்சி நின்னேல்லா

 பள்ளிக்கு தந்தான்னு
 பல்லிளிச்சு நிக்கிறியே
 இப்பமட்டும் செய்றியேன்னு
 எப்பியாவது கேட்டியா?

கைக்கட்டி கைகட்டி
 காலத்த ஓட்டாத
 டைகட்டி மெடுக்கா
 இருக்கத்தான் வேணுங்கிறேன்

 கொடுத்த தெல்லாம் வாங்கிக்கோ
 வேணான்னு தடுக்கல
 கோடு போட்ட வாழ்க்கத்தான்
 வாழனுந்தான் கேட்டுக்கோ

 நம்ம புள்ள நாளைக்கு
 நல்லாத்தான் இருக்கனும்னா
 நாயக் கட்டி இழுத்தாந்து
 நடு வூட்ல வைக்காத

 கூழாங்கல்ல தங்கம்ன்னு
 கும்பிட்டு ஏற்காத
 வைரத்த சோரம்ன்னும்
 வந்த வழி அனுப்பாத

 எப்பியோ நடந்திடுச்சு
 இப்போ அதுக்கென்னாங்கிற
 அப்போ செஞ்சதெல்லாம்
 இப்பியுமில்ல பாதிக்குது!

அரிதாரம் பூசித்தான்
 அடுக்கு மொழி பேசுவான்
 ஆட்சிய புடிச்சான்னா
 அம்புடுத்தான் புரிஞ்சிக்கோ!

வக்கனையா எழுதிப்புட்டேன்
 வகை வகையா சொல்லிப்புட்டேன்
 தொகையெல்லாம் கெடைக்குதேன்னு
 தொலச்சிப்புட்டு ஏங்காத....!

Comments