Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

9. அணிவகுப்புக்கு என்ன நோக்கம்?
 



காளிக்கோயிலைப் பார்த்தபின்னர் இந்திய பாக்கிஸ்தான் ராணுவ அணிவகுப்பைக் காணக் கிளம்ப வேண்டும். அதற்கு இன்னும் நேரமிருந்தது.

சரி நேரத்தை வீணாக்காமல் கடைத்தெரு பக்கம் கொண்டு போய்விட்டார்கள்.ஒரு மணி நேரம்தான் அனுமதி. அதற்குள் முடித்துக் கொண்டு ஒரு இடத்தைக்காட்டி இங்கே கூடி விடுங்கள் என்றார் சரத். அவர் விட்டது ஒரு பேரங்காடி. பேரங்காடி வாசலிலேயே அவர் காத்திருக்க நம்ம சனங்கள் ஒரே மகிழ்ச்சிக் களிப்பில் கோதாவில் இறங்கிவிட்டனர். மலேசிய ஒரு ரிங்கிட்டுக்கு பத்தொன்பது ரூபாய்கள் கிடைத்ததும் கையில் கற்றையான நோட்டுகளைப் பார்த்தவுடன் உற்சாகம் எகிறிக்கொண்டிருந்தது. என் நினைவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிங்கினொட்டுக்கு  பத்திலிருந்து பதிரு ரூபாய் வரைதான் கிடைத்தது.  ஆனால் இப்போது இரட்டிப்புத் தொகை. இந்திய ரூபாய் அடிமாட்டு விலைக்குச் சரிந்திருப்பது  வரலாற்றிலேயே நடக்காதது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இன்றைக்கு மிகக் கடுமையான சோதனைக் காலம்.அதனைக் கடந்து மீண்டு விடுவார்கள் என்று நம்புவோம்.

ஒரு மணி நேரத்தில் என்னதான் வாங்க முடியும்? ஆனால் வாங்கினார்களே. மூட்டையாக கட்டிக் கொண்டல்ல பேருந்துக்கு வந்து சேர்ந்தார்கள். கற்றையாக கிடைத்த ரூபாய்கள் கொடுத்த நம்பிக்கை. ரூபாய்களை இந்தியாவில் செலவிடாமல் மலேசியாவிலா செலவிடமுடியும் என்றல்லவா கேட்கிறார்கள்.

அம்ரிஸ்டாரில் முந்திரியும் பாதாம் பருப்பும் மிக மலிவுதான். ஒரு கிலோ முந்திரி முப்பத்து மூன்று ரிங்கிட்தான். மலிவோ?

அங்கிருந்து நேராக இந்திய எல்லைக்குச் சென்றோம். பஞ்சாபில் அம்ரிஸ்டாரும், பாக்கிஸ்தானின் லாஹூரும் எல்லையில் இருந்தே எட்டிப் பார்த்துக்கொள்ளும் நகரங்கள். அல்லதுதொட்டுப் பார்த்துக்கொள்ளும் பெரு ஊர்கள். ஆனால் ராணுவ அணிவகுப்பு அதற்கு எதிர் மாறாக உள்ளது.

பேருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று விட்டது. அங்கிருந்து பலர் நடந்தே சென்றனர். நடைதூரம்தான் என்றார் சரத். ஒரு கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகம். நம் ஊர்க்காரர்கள் எல்லாருமே ரிக்‌ஷாவில் ஏறிக்கொண்டனர். பேருந்து நின்றதும் ரிக்‌ஷா ஓட்டிகள் வந்து முட்டுகிறார்கள்.

'தூரம்யா ரிக்‌ஷாவுலியே போய்ர்லாம்,' என்றார்கள்.

ரிக்‌ஷாகூட ராணுவ முகாமுக்கு அருகில் செல்ல அனுமதி இல்லை. 200 மீட்டருக்கு அப்பாலேயே முடித்துக் கொள்ளவேன்டும். இறங்கிய இடத்தில் பாஸ்போர்ட் உடல் பரிசோதனை நடக்கிறது.  அருகில் போனதும் இன்னொரு பரிசோதனை. வரிசையாக நின்றுதான் காத்திருக்க வேண்டும். அணிவகுப்பை பார்க்க வந்தவர்கள் முக்கால்வாசிப் பேர் அந்நியர்கள்.

உள்ளே நுழைந்ததும் காற்பந்து ஸ்டேடியம் மாதிரி பார்வையாளர்களுக்குக் கட்டி வைத்திருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் எல்லை ஒரு இரும்பு கேட் ஒன்று எல்லையைப் பிரித்துக் காட்டுகிறது.  பாக்கிஸ்தான் (லாஹுர்) பார்வையாளர்களுக்கு தனியே இன்னொரு ஸ்டேடியம். 50 மீட்டர் இடைவெளியில் கட்டியிருக்கிறார்கள்.

நாங்கள் நுழைந்தபோது ஏ.ஆர் ரஹ்மானின் நாட்டுப் பற்று பாட்டு ஒலியேறிக்கொண்டிருக்க அணிவகுப்பு நடக்கப் போகும் தடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்
நடனமாடிக்கொண்டிருந்தனர். உற்சாக நடனம். ஒரு ராணுவ வீரர் ஒவ்வொரு
பாடல் முடிவிலும் ஜேய் ஹிந்தென்று கூச்சலிட சைகை காட்ட ஐயாயிரம் பேருக்கு மேற்படோர் உடன் குரலெழுப்புகிறார்கள். இப்படிப் பலமுறை பாட்டும் நடனமும் , உற்சாகக் குரலையும் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

இங்கே ஒலிக்கும் குரலுக்கு எதிர்க்குரல் பாகிஸ்தானிலிருந்து ஒலிக்கிறது. அதை விட இன்னும் உரக்க ஒலிக்கச் செய்ய சைகை காட்டுகிறார் நடத்துனர். ஒரே ஒலியெழுப்பல் போர்! இரண்டு நாட்டுக்கும் இடையே கிரிக்கெட் நடப்பது போன்ற உற்சாகக் குரல் ஸ்டேடியத்தை கதி கலங்க வைக்கிறது. அதன் பின்னர் இருவராய் மூவராய் ராணுவ வீரர்கள் அணிவகுத்து எல்லைக்குப் போய் கொடி ஏற்றும் சடங்கு நடை பெறுகிறது. ஒரே நேரத்தில் இரு நாடுகளும்
அணிவகுக்க , ஒரே நேரத்தில் கொடியேற்றம் பின்னர் கொடி இறக்கம் நடந்தேறுகிறது. ஒவ்வொரு முறையும் கூச்சலும் கைத்தட்டலும் விண்ணைப்
பிளந்து விடுகிறது. பல பெண்கள் இந்தியக் கொடிய ஏந்திக்கொண்டு தளத்தில் ஓடுகிறார்கள். அதே போல அங்கேயும் நடக்கிறது.

இரு நாட்டினரும்  எல்லை வாயில் அருகே கால்களை தலைக்கு மேல் தூக்கி வீர அணிவகுப்பு செய்யும் போது உரசிக்கொள்ளாத குறைதான். விரைத்து உடலுடன் சல்யூட் செய்யும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அணிவகுத்துச் செல்லும்போது பூட்ஸ் காலின் சப்தம் காதுகளில் ஒலிக்கிறது. இதில் பெண்களும் அணிவகுத்தார்கள். கால்களை தலைக்கு மேல் தூக்கி இறக்கும் போது ஆண்களுக்கு நிகராகவே செய்தார்கள்.

ஆனால் இதெல்லாம் எதற்கு? என்ற வினா தொக்கி நிற்கிறது. நாட்டுப் பற்றைக் காட்டவா? அந்நியர்கள் அநேகர் அல்லவா பார்வையாளர்கள்! அவர்களுக்கு எப்படி இந்திய நாட்டுப்பற்று உதவப் போகிறது? இந்தியர்கள் யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
 

Comments

நம்ம அனுபவம் இங்கே.

நேரம் இருந்தால் பாருங்கள்.

http://thulasidhalam.blogspot.co.nz/2010/09/3.html

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...