Saturday, October 12, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

(ஏர் ஆசியா பற்றி ஒரு கொசுறு செய்தி. சிக்கனச் சேவை என்ற பெயரில் பயணிகள் பணத்தின் மேல் குறி வைக்கும் உத்தி பற்றிய செய்தி இது. நான் அனுபவித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது)

4.ஏற்காடு மலைக்குளிரும் இலக்கியச் சாரலும்.
                                                        ஏற்காடு விடுதி


இந்தப்பயணம் மிகக் கடுமையான பயணமாக இருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன்.
கடந்த ஆண்டு கலந்துகொண்ட ஊட்டி இலக்கியச் சந்திப்பின் இனிமையான நினைவுகள் ஆறுவதற்கு முன் இந்த ஆண்டு இன்னுமொரு இலக்கிய முகாமுக்கு ஏற்காடு பயணப்பபட்டோம். இலக்கியம் எங்களுடைய ஆன்மாவில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. அதிலும் ஜெயமோகன் குழுமத்தின் ஏற்பாடு. சொட்டச் சொட்ட இலக்கியம் மட்டுமே பேசி, விவாதித்து, சண்டையிடும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்பதால் அதன் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாது. அங்கே பிரமுகர், மாலை மரியாதை, போலிப் பாராட்டு, பரஸ்பர முதுகு சொரிதல் மேடை, நாற்காலி ஒன்று கிடையாது. தரையில் விரித்த பாயில் உட்கார்ந்துதான் இலக்கிய விமர்சனக்கள் விவாதங்கள் நடக்கும்.                            ஜெயமோகன் இடது பக்க்ம் கையூன்றி அமர்ந்துள்ளார்
 
                                                           நாஞ்சில் நாடன்


தரையில் உட்கார முடியாதவர்கள் மட்டுமே நாற்காலியில் உட்காருவர். இவ்வெளிய நிகழ்ச்சியே இதன் முக்கியத்துவத்துக்கு ஆதாரம். எனவே  இப்பயணத்தைப் கடந்த ஆண்டு ஊட்டியிலிருந்து திரும்பிய கையோடு திட்டமிட்டுக் கொண்டோம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியை கூலிம் ஆஸ்ரமத்தில் சந்தித்து, பினாங்கு விமான நிலையத்துக்குப் போவாதாக முடிவெடுக்கப் பட்டது. அதன் படியே என் மகன் என்னைக் கூலிம் ஆஸ்ரமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினான். கூலிமிலிருந்து சுவாமியின் நண்பர்கள் எங்களை பினாங்கு விமான நிலையத்தில் கொண்டுபோய் சேர்த்தனர்.  எல் சி சி டி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு டிக்கெட் போட்டிருந்தோம். 27 ஜூன் காலை 6.30 மணிக்கு எங்கள் பயண நேரம். விமான நிலையத்துக்கு அருகில் உள்ள டியூன் விடுதியில் இரவு தங்கி மறுநாள் காலையில் பயணப் படவேண்டும்.
அங்குதான் துவங்கியது எங்களின் கெட்ட காலம்.
முன்னாலேயே விடுதியை புக் செய்துவிட்டதால் கனிணியில் பிரிண்ட் செய்த தாளைக் காட்டி சாவியை வாங்கிக் கொண்டோம். இருவருக்கான படுக்கை அறை. லாபியிலேயே ஒரு துண்டும் , ஒரு சவர்க்காரமும் ஒரு சேம்பு குப்பியும் கொடுத்தார்கள். இருவர் தங்கும் அறைக்கு ஒரு துண்டு மட்டுமே கொடுக்கப் பட்டது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்துண்டையும் மீண்டும் லாபியிலேயே கொண்டு வந்து ஒப்படைத்துவிடவேண்டும் என்றே ஹோட்டல் பணியாளர்கள் சொன்னார்கள். நல்ல வேளையாக துவைத்து அயர்ன் செய்து தரவேண்டுமென்று சொல்லிவிடவில்லை. வேறொன்றுமில்லை நமக்கு பொறுப்புணர்ச்சியைக் கற்றுத் தருகிறார்கள். வீட்டில் அப்படியே கடாசிவிட்டு வந்தால் கொஞ்ச நேரம் பானை உருளும் ‘இல்லாள் அர்ச்சனை முறை’ நிகழும் . அது அதோடு முடிந்துவிடும். இங்கே கடாசிவிட்டு வந்த துண்டுக்கும் துட்டு கேட்பார்கள் போலும்.
டியூன் விடுதி அறையப் பற்றிச் சொல்லவேண்டும். அறையைத் திறந்து உள்ளே பார்த்ததும் வெட வெடத்துப் போனது. ஆளாளுக்கு ஒரு கைப்பை, ஒரு பெரிய பயணப் பை. அதனை வைத்ததும் கட்டிலில் ஏற முடியாது . ஏறினால் இறங்க முடியாது! பைகளே அறையை ஆக்ரமித்துக் கொண்டது. கட்டிலின் கால்மாட்டுப் பக்கம் போய்தான் ஏறவேண்டும் இறங்கவேண்டும். நடமாட முடியாது. நான் இருவருக்கு மட்டுமே புக் செய்த அறை இது. ஆனால் இன்னொரு இலக்கிய நண்பரை சேர்த்துக்கொண்டு பயணப்படலாம் என்று ஸ்வாமி சொல்லிவிட்டார்.- மூவரும் ஒரே அறையில் தங்க நேரிட்டது. மூன்று பெரிய பைகள், இரண்டு சிறிய பைக¨ள் ஏந்திக்கொண்டு கட்டிலின் பக்கவாட்டு இடம் பிதுங்கி நின்றது. கால் மாட்டுப் பக்கம்தான் ஏறி இறங்க வேண்டும். கட்டிலை சுவரோடு தள்ளிப்போட்டு இடத்தை பெரிதாக்க எண்ணினோம். தள்ளிப்போட்டுப் பார்த்தால் குளியலறைக் கதவைத் திறக்க முடியவில்லை. சரி நாளைக்குக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளிக்க முயற்சி செய்தோம். அன்றைக்கு சிவ ராத்திரிதான். எனக்கு பதினாறு முறை புரண்டால்தான் தூக்கமே வரும். புரள , நகர, நெளிய முடியாது. ஒருவரை இன்னொருவர் உரசிக்கொண்டல்லாவா  கிடக்கிறோம்.(ஒரு நாள் வாடகை 192 ரிங்கிட் மலேசியா)தூக்கமாவது மண்ணாவது! விடிய விடிய பேசினோம். பேச்சு இடைவெளி விடும் போது கோழித்தூக்கம். 4.30க்கு அலாரம் அதிர்ந்தது. ஊர்ந்து கீழே இறங்கி கட்டிலை நகர்த்தி முதலில் குளிக்கச் சென்றேன். கீழே போய் பேருந்தை சற்று நேரம் நிறுத்தி வைக்கலாம் என்ற முன்யோசனைதான். கீழே ஒரு பேருந்து ஆட்களை நிரப்பிக்கொண்டிருந்தது. பிதுங்கப் பிதுங்கப் பயணிகள் பேருந்தில் நிண்ரும், அமர்ந்து இருந்தார்கள். மணியைப் பார்த்தேன் காலை 5,25. டியூன் விடுதி ஏர் ஆசியா விமானத்தளத்துக்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் என்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போனால் பயணிப்பையை செக் இன் செய்து விடலாமென்றே தப்புக் கணக்குப் போட்டிருக்கிறோம்.
அன்று காலையில் 4.30 மணிக்கு எழுந்ததுதான் நாங்கள் செய்த முதல் தவறு. மூன்று பேரும் குளித்து லாபிக்கு இறங்குவதற்குள் மணி காலை 5.20 ஆயிற்று. விமானத்தளத்துக்கு எங்களை ஏற்றிச்செல்ல வேண்டிய பேருந்து கீழே காத்திருந்தாலும் அதில் ஏற்கனவே பயணிகள் நிறைந்துவிட்டதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். “பிலைட் மிஸ்ஸாயிடும் , எங்களையும் ஏத்திக்கிங்க என்றேன்,” பேருந்து ஓட்டுனரிடம். “நெறஞ்சிடுச்சு முடியாது, தோ போய்ட்டு வந்திடுறேன், மூனு நிமிசம்,” என்றார். இனி அடுத்த பேருந்துதான் என முடிவாகிவிட்டது. மூனு நிமிசத்தில வந்திடுவேன் என்றவர் வந்து சேர 10 நிமிடம் ஆயிற்று. என் வாழ்வில் இரண்டாவது முறையாக பிலைட்டை தவறவிடப் போகும் வாடை புயலாகவே வீசியது. நான் படப் படப்பானேன். பேருந்து வந்து சேர்ந்ததும் பயணப்பைகளை மள மள வென ஏற்றினோம். நாங்கள் அவசரப்பட்டு என்ன செய்ய பேருந்துக்குள் ஒவ்வொருவராய் ஏறி அமர்வதற்குள் நேரம் கடந்துவிட்டிருந்தது. இன்னும் 35 நிமிடம் மட்டுமே பாக்கி. எல்லாரும் ஏறிய பிறகு ஓட்டுனர் ஒவ்வொரு பயணியிடமும் இரண்டிரண்டு வெள்ளி பயணக்கட்டனமாக வசூலிக்க ஆரம்பித்தார். பேருந்துக்குள் முப்பதுக்கு மேற்பட்டோர். நான் பதற்றத்துக்குள்ளானேன். இன்று பயணப்பட்ட மாதிரிதான். நான் மீண்டும் சொன்னேன்  “பிலைட் மிஸ்ஸாயிடுங்க,” அவர் என்னைப்பார்க்காமலேயே ஏதோ சொன்னார். “நீங்க முன்னாலேயே வந்திருக்கணும்” என்பது போலக் கேட்டது. அவர் அக்கறையெல்லாம் 2 ரிங்கிட் வசூல் செய்வதிலேயே இருந்தது. எனக்கு என்னையே கன்னத்தில அறைந்துகொள்ளவேண்டும் போலிருந்தது.
டோனி பெர்னாண்டஸ் - ஏர் ஆசியா நிறுவனத்தின் உரிமையாளர். மலேசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவர்- பேருந்து கூட நிரம்பி வழிந்தால்தான் துட்டு நிறையும் என்பதிலேயே கவனமாக இருப்பவர் போலும். “ “மவனே பஸ் நெறையிறவரைக்கு கெளம்பாதே , கொன்னுடுவேன் வடுவா,” என்று அவரை மிரட்டியிருக்கக் கூடும்.
பேருந்து விமானத் தளத்தையடைந்ததும் பையை உருவி எடுத்துக் கொண்டு ஓடினோம். டிக்கெட்டைக்காட்டினோம்.
“சோரி சர்,” என்று கை விரித்து விட்டான் படுபாவி.
எங்கள் மூவரின் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டோம். ஈ ஆடவில்லை என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். ஈ இருந்தால் தானே ஆட. இன்னும் டுயூட்டிக்கு வரவில்லை போலும்! காலைக் குளிர்.தூக்கமின்மை உடற் சூட்டைக் கூட்டியிருந்தது. யாரைக் கோபித்துக் கொள்வது என்பதில் வேறு குழப்பம். ஏர் ஆசியா மீது எக்கச் சக்க கோபம். அந்த நிறுவனம் எல்லாவற்றிலும் துட்டைப் பார்க்கவேண்டும் என்ற கொள்கையை உடையது. . பதினாறு வயது சப்பாணி கமல் மாதிரி 'சந்தக்குப் போணும் காசை குடு.... காசை குடு' எடுத்தற்கெல்லாம் பிடுங்கல்  பண்ணும் நிறுவனம்.
ஸ்வாமி நான் மீண்டும் கூலிமுக்கு போகிறேன் என்றார்.
நானும் உங்களோடு கிளம்பி விடுகிறேன் என்றேன்.
“யுவா எப்படியாவது போயிர்லாம் சார்,” என்றார்.
நான் ஸ்வாமியையும் கூட கூப்பிட்டேன். “எனக்கு இப்பயே குதிக்கால் வலிக்குது.(அவருக்கு ஆணி வளர்ந்து சின்ன ‘சர்ஜரி’ செய்திருந்தார்).முடியாது” என்றார். அவர் போய் டிக்கட் பார்த்துவிட்டு வந்தார். 160 ரிங்கிட் பினாங்குக்கு.
“அதுக்கு சென்னைக்கே போயிடலாமே” என்றேன். “அப்போ நீங்க யுவாவோட சென்னை போங்க, நான் வரலே” என்று ஒற்றைக்காலில் நின்றார்.(பாத வலி இல்லையா!) ஒற்றைக்காலில்தானே நிற்க முடியும்.
யுவா போய் டிக்கட் பார்த்து வந்தார். 640 ரிங்கிட். அம்மாடியோவ்.
என்ன செய்யலாம் என்று யோசித்தேன். “நான் வரல யுவா” என்றேன்.
“வாங்க சார்..” என்றார் பதிலுக்கு. ஸ்வாமி “ரிட்டர்ன் டிக்கட் வீணாயிடும்” என்றார்.
நான் தலை சொரிந்து நின்றேன், யுவா மீண்டும் வற்புறுத்தினார். சரி போவோம் என்று முடிவெடுத்தேன். இணையம் மூலம் டிக்கட் புக் செய்தோம்.அன்றைக்கு விமானம் 4 மணிக்கு என்று உறுதியாயிற்று. ஸ்வாமி பினாங்குக்கு பறந்துவிட்டார். நானும் யுவாவும் பூச்சோங்கிலுள்ள அவர் இல்லத்துக்கு டேக்ஸி பிடித்தோம். தூக்கம் வரவே இல்லை.

தூக்கமின்மை எனக்கு அதீத சோர்வை கொடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கால் நீட்டிப் படுத்தால் தேவலாம். வாடகை கார் பூச்சோங் போய்ச் சேரவேண்டும்.


                                                        சேலம் பட்டணம்
                                   நகைச்சுவைப் பேச்சாளர் ஞானசம்பந்தன்(இங்கே நிறுத்திவிட்டு பஞ்சாப் பயணத்தைத் தொடர்கிறேன்)

No comments: