Wednesday, October 9, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா? (பயணக் கட்டுரை)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
காசிக்குப் போவது பாவம் தீர்க்க?
 
 
 
 
 
 

                                                                 கங்கை நதி


'மீண்டும் வட இந்தியப் பயணம் போரடிக்கும்' என்றேன் என் மனைவியிடம்.

'வாரனாசி(காசி), ரிசிகேஸ், ஹரிதுவார் போன்ற புனித ஸ்தலங்களைப் இன்னும் பார்க்கவில்லையே,' என்றாள் இல்லாள்.

'அங்கேயும் ஹிந்தி பேசியே கொல்வார்கள், வார் மாதிரி இழுத்துத் தின்னும் நான் போடுவார்கள் , நீராவி கொண்டு அவித்த சோறு,  சோனா பப்டி, குலாப் ஜமூன் போன்ற அதி இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டு இனிப்பு நீரை கொதிநிலைக்குக் கொண்டு வரவேண்டுமா?' என்று எதிர்வாதம் செய்தேன்.

'வீட்ல மட்டுமென்ன கட்டுப்பாடாவா இருக்கோம். வர்ரது வரத்தான் செய்யும். போய்ட்டு வரலாமே, வாங்க' என்றாள்.

செலவை கணக்குப் போட்டுப் பார்த்தேன், இரண்டு வாரங்களுக்கு மலேசிய ரிங்கிட் பன்னிரண்டாயிரம் வநதது.

சேத்து வச்சி என்னத்தப் பண்ணப்போறீங்க? என்றாள்.

இதேத்தான் வேலையா போச்சு .இப்பத்தான் ஒரு வாரத்துக்கு முன்னால பாலி போய்ட்டு வந்தோமே.

'காசி கங்கை நதி ஓடும் ஊரு. கங்கா மாதாவ தரிசிச்சிட்டு வரலாம். வயசாயிக்கிட்டெ போவுது. கடைசி காலத்திலியாவது கங்கையைப் பாத்திட்டு வரலாமே,' என்று ஒற்றைக் காலில் நின்றாள்.

'என்ன பாவம் தீர்க்கப் போறியா?' என்றேன்.

"ஆமாம்....... உங்கள கட்டிக்கிட்ட பாவத்த," என்றாள். எனக்கு மட்டும் கடுப்பு வராத என்ன.

"அப்போ என் பாவம் எப்படிப் போவும் ?" என்றேன். "அதையும் சேத்து கங்கையில் கழிச்சிடலாமா?"

"பேசுறதுல மட்டும் கொறச்ச இல்ல." எங்கள் சொற்போர் ஏற்றுமதியாகி கங்கை கரை வரை தொடரப்போகிறது போலும். பாவம் தீர்ந்தாலும் போர் தீராது போல. இருக்கட்டும் பாக்கிறவங்களுக்கு பொழுது போவணுமில்லையா?
 
"நீதான ஆரம்பிச்ச....?  ஆமாம் கங்கை எவ்வளவு பேரு பாவத்ததான் தீர்க்கும்? வண்டை வண்டையா ஒலகம் முழுக்கு இருந்து பாவத்த கழிக்க வராங்களே.. என்று பேச்சை திசை மாற்றினேன். நல்ல வேளையாக உரையாடல் திசை மாறித்தான் போனது. இல்லையென்றால் அன்றைய தினம் முழுதும் வம்பு நிறைந்த தினமாகக் கழிந்திருக்கும். படுக்கும் வரை என் பாடு 'பாட்டைக் கேட்கும் பாடாகியிருக்கும்.

..........

பயணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னால் மீண்டும் பயண நிரலைப்பார்த்தேன். எம்.எச் என்ற எழுத்துகளில் கவனம் மீண்டும் குவிந்தது. எம் எச் என்றால்  கே.எல்.ஐ ஏ இல்லையா போகவேண்டும். நான் ஏர் ஆசியா என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். எங்கள் பயண ஏற்பாட்டளாரிடம் கேட்டேன்.  "ஆமாங்க மாஸ் மூலந்தான் போறம் ,"என்றார்.

பினாங்கிலிருந்து  கோலாலம்பூருக்குப் போக என் மகனை ஏர் ஆசியா டிக்கெட் எடுக்கச் சொல்லியிருந்தேன். மீண்டும் அழைத்து திருத்த வேண்டியதாயிற்று.

என்னப்பா நீங்க ஐட்டனரிய சரியா படிக்க மாட்டீங்களா? ந்நேரம் ஏர் ஆசியாவுல டிக்க்ட் போட்டிருப்ப்பென்," என்றான்.

"நான் எந்த நரிய பாத்தேன். ஐட்டநரியப் பாக்க. கதை கவிதைன்னு படிச்சுப் படிச்சு சுவை கண்டவனுக்கு ஐட்டநரிய படிச்சி சுவைக்க முடியுமா?"

"என்னாத்த படிச்சி என்னாத்த எலுதி..." என்றான். தப்பு செஞ்சா அப்பாவா இருந்தாலும் தண்டன ஒன்னுதான் போங்க. என்னா செய்றது டிக்கெட் அவன் செலவுல இல்ல எடுக்கிறான்.

......

கே.எல்.ஐ.ஏ போய்ப் பார்த்த உடன்தான் தெரிந்தது  , இருபது பயணிகளில் இருவர் மட்டுமே ஆண்கள். பெண்களில் ஒருவரைத் தவிர அனைவரும் டை அடித்தவர்கள். இனிப்பை எப்போதும் உடன் 'ஏந்தி வருபவர்கள். அதில்மூவர் இன்சூலின் கேஸ். அப்படி யென்றால் நமக்கு பணிவிடை செய்ய அரிய வாய்ப்பு கிட்டப் போகிறது என்று தெரிந்து கொண்டேன். பதிநாளு நாளைக்கு படப் போறடா மவனே!
 

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

காசி பயண ஏற்பாடுகள் அருமை.!

ko.punniavan said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

Mageswari Periasamy said...

வணக்கம் சார். மிகவும் சுவார்ஸ்யமாக செல்கின்றது பயணக்கட்டுரை. நாங்களும் மகிழ்வோடு பயணிக்கின்றோம் தங்களின் நினைவலைகளோடு. வாழ்த்துகள். அன்புடன் பெ.மகேஸ்வரி.

ko.punniavan said...

நன்றி மகேஸ்வரி. தொடர்ந்து பயணியுங்கள். காசி பற்றிய அதிர்ச்சியான் செய்திகள் நிறைய எழுதவிருக்கிறேன்.