Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2

முத்தம் 2

ஜூலை 22 இரவு 6.30க்கு கே ஏல் ஐ ஏ  '2 விமானத் தளத்தில் இருக்கவேண்டும். எத்திஹாட் விமானம் மூலம் 8.30 க்கு பயணம் தொடங்கும்.
கிள்ளானில் தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள என் மைத்துனர்  எங்களை விமானத் தளத்தில் விடவேண்டும். நாங்கள் வீட்டிலிருந்து  கிளம்பும்போது மணி 11.30. இடையில் எங்கும் நிற்கக்கூடாது என்பதற்காக உணவைச்சமைத்து பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு காரிலிலேயே சாப்பிட்டாக வேண்டும்.

நெடுஞ்சாலை பயணம் என்றாலும் எங்கேயும் பயண இடையூறு நேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேர முடியாது. குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே விமானத் தளத்தில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். 110 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் வேண்டும். ஏற்கனவே ஆளாலுக்கு நான்கைந்து வேகம் மீறல் தண்டங்களை அரசாங்கத்துக்கு பாக்கி வைத்திருந்தோம். என் மருமகன் அரசாங்கம் செழிப்பாக இருக்கவேன்டும் என்பதில் அளவுக்கு மீறிய அக்கறையுள்ளவர். அவர் ஒரு கட்டு சமன்கள் வைத்திருப்பார்.

அபுடாபி விமான நிலையம்
குடிமக்களிடமிருந்து  வரியை எப்படிப் பறிப்பது என்று மலேசியாவிலிருந்து பிற நாடுகள் கற்றுக்கொள்ளவேண்டும். டோல் கட்டண சாவடியிலேயே, சாவடி என்று அதற்குப்பெயரிட்டதுபோல-  ஓட்டுனர்களுக்கு 'சாவடி' கிடைக்கும் . அப்புறம் ஆங்காங்கே கேமராவை பதித்து வேகக் கட்டுப்பாட்டை மீறும்போதும் படம் பிடித்து அதற்கும் 'சாவடி' உண்டு. இப்படி நிறைய 'சாவடிகள்' இங்கே தாராளமாய்க் கிடைக்கும். இதிலிருந்து தப்பிக்க எங்கெங்கே கேமரா உண்டு என்ற முன்கவனம்  இருந்தால் அங்கே மட்டும் வேகத்தை குறைப்பதாக நாடகமாடி போய்ச் சேர்ந்துவிடலாம். கேமரா பதிக்கப்பட்ட இடங்கள் இன்னின்ன  என்று முன்னமேயே வரலாற்று ஆய்வை மேற்கொண்டால் நல்லதுதான். ஆய்வை மேற்கொண்டபின்னர் கேமரா இடம் மாறினால் நான் பொறுப்பல்ல.

ஆனால் பெரும் பணக்காரர்கள் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 200-230 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பறந்து போகும் கார்களைப் பார்க்கலாம்.

என் மைத்துனர் வீட்டில் தயாராகக் காத்திருந்தார்.

உடம்பு  வியர்வைக் கச கசப்பைக் குறைக்க   குளித்துக் கொண்டேன். அவர்களை அவசரப்படுத்திய நானே குளித்து நேரத்தை எடுத்துக்கொண்டதால் கண்டனத்துக்கு உள்ளானேன். மைத்துனர் திரும்பக் காரை எடுத்துவர உடன் வந்தார்.  விமானம் ஏற இரண்டரை மணி நேரத்துக்கு மேலேயே இருந்தது. ஆனால் நீண்ட தூரம் பயணிக்கப் போகும் களைப்பு என்னவோ மனதில் பாரமாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

சரியாக மணி 8.30க்கு விமானம் கிளம்பியது. எத்திஹாட் போயிங் விமானம். கால் நீட்டி நன்றாகத் தூங்கலாம். ஏழு மணி நேரம் ஆயிற்றே. உணவு பரிமாரல் பற்றி விபரம் இல்லை. உணவு இருந்தால் சரி என்றாயிற்று.  மலேசியாவிலிருந்து பயணம் என்பதால் பிரியாணி வழங்கினார்கள். தேநீர் காப்பியும் உண்டு. எப்போதுமே நீண்ட தூர விமானப் பயணத்தில் இருந்தால் இரண்டு பெக் அடித்துவிட்டு தூங்கி விடுவேன். மற்றபடி நான் நல்லவன். தூங்கிவிட மட்டுமே சோம பானம். என் மனைவி பக்கத்து இருக்கையில் இருக்கக் கூடாதென எவ்வளவு வேண்டியும், என் வேண்டுதல் பலிப்பதே இல்லை. என் துரதிர்ஸ்டம் அப்படி? என்ன அருந்துகிறீர்கள் என்று கேட்டுத் தொல்லை செய்வாள். மது என்று தெரிந்தால் அப்போதே புத்திமதி சொல்லத் தொடங்கி விடுவாள். புத்திமதியிலேயே போதை ஏறாமல் தேங்கிவிடும். ரெண்டு பெக் அடிக்கக்கூட சுதந்திரம் இல்லையேடா சாமி. பல சமயம் இது வைன் என்று சமாளித்திருக்கிறேன். அவள் என்னை வளர்த்த விதம் அப்படி. விஸ்கி அடித்த சின்ன அறிகுறி கூட இல்லாமல் சமாளிப்பது இருக்கிறதே? அதற்கு அசாத்திய திறமை வேண்டும்.  முகத்தை அவள் பக்கம் திருப்பாமல், சகஜ நிலையில் இருப்பதுபோலவே நாடகமாடுவதன் சிரமம் பட்டவனுக்குத்தான் தெரியும். தண்ணி போட்டு என்ன புண்ணியம்?

அபுடாபி விமானத் தளத்தில்
இரண்டு முறை கேட்டு வாங்கி ஊற்றிக்கொண்டு மூன்றாவது முறை கண்ணயர இன்னொரு பெக் கேட்டேன், அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. நான்தான் தவறு செய்துவிட்டேன். நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை பணிப்பெண்ணிடம் சொல்லியிருக்கவேண்டும். அப்படி சொல்வதிலும்  சிக்கல் உருவாகிவிடும்..மனைவி பக்கத்திலேயே இருக்கிறாள். ஒரு கணவனுக்கு மனைவியைத் தவிர வேறு அழகிகள் இருக்கக் கூடாதல்லவா?  அது தானைய்ய்யா நம்ம தர்மம்.
                                    ஒலிம்பிக்ஸ் நடந்த பார்சிலோனா ஸ்டேடியம்

ஐந்து மணி நேரம் காரில் வந்த களைப்பில் மூன்று முறை விட்டுவிட்டு தூங்கி எழுந்தேன். ஆனாலும் வீட்டில் சொந்த படுக்கையில், சொந்த தலையணையில், அதே திசையில் படுத்துறங்குவதுபோல ஆகுமா?

அபு டாபி விமான நிலையம் அடைந்துவிட்டோம் என்ற  அறிவிப்பு என்னை நிமிர வைத்தது. கோடீஸ்வரர்கள் நாடு. எப்படி ஜொலிக்கும் என்பதை அடுத்த தொடரில் சொல்கிறேன்.

தொடரும்......

Comments

MUNIANDY RAJ said…
அருமை..அடுத்தடுத்த முத்தங்களுக்காக காத்திருக்கிறோம்
MUNIANDY RAJ said…
அருமை..அடுத்த அத்தியாயங்களுக்குக் காத்திருக்கிறோம்

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...