Skip to main content

கால எறும்பு அரிக்கமுடியாத சீனி

மாபெரும் ஆளுமைக்கு என் அஞ்சலி
அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது


மலேசிய அறிவுலகம் எளிதில் மறக்கமுடியாத ஆளுமை கவிஞர் சீனி நைனா அவர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்  வாழ்க்கையை  இலக்கியத்துகே அர்ப்பணித்தவர். தன் இலக்கிய ஆற்றலை தொடர் வாசிப்பின்மூலம் வளர்த்துக்கொண்டே இருந்தார். அவருக்கு இங்கே வேறொருவர்  ஈடில்லாத மேதைமையை அவரின் எழுத்தும் பேச்சும் பறைசாற்றிய வண்ணம் இருந்தது. அவரின் அறிவார்ந்த இயக்கத்தை அந்நாந்து பார்த்து வியந்தோதிய பேராசிரியர்களையும், கல்விமான்களையும், படைப்பாளிகளையும் என் இலக்கிய வாழ்வில் அவதானித்தே வந்திருக்கிறேன். கவிஞர் பல தருணங்களில் அவர்களின் மரபிலக்கிய சந்தேகங்களையும் வினாக்களுக்கம் ஐயமின்றி தீர்த்து வைத்திலிருந்தே  அவரின் ஆளுமை எவ்வளவு பெரியது என்ற எண்ணவைத்தது. நாம் சிந்தித்து வைத்திருப்பதற்கும் மிக மேலாகவே அவரின் ஆளுமை பரிமளித்திருக்கிறது.

அவருக்கும் எனக்குமான ஒரு பிணக்கிலிருந்தே எங்களின் தொடர்பும் நட்பும் துவங்கியதுதான் ஒரு முரண்நகை.

என் முதல் சிறுகதைத் தொகுதி வெளியான தருணம். சுங்கைப்பட்டாணியில் நூலை வெளியிட்ட பிறகு, பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் நூலை அங்கே அறிமுகம் செய்ய அழைப்பு விடுத்தது.

பிற வெளியீடுகள் போல வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களை அங்கே நான் பார்க்கவில்லை. வாசிப்பவர்கள் என்றால் வந்தவர் எண்ணிக்கையை நீங்கள் விரல் விட்டு எண்ணவேன்டிய அவசியமில்லை. சபையில் முனைவர் கார்த்திகேசு, சீனி , கரு திருவரசு, இன்னொரு மலேசிய அறிவியல் கழகப் பேராசிரியர்(தமிழகம்) அமர்ந்திருந்தனர்.

மூவர் கதைகளைப்பற்றிப் பேசினர். அவர்களில் சீனி பேசும்போது ஒற்றுப்பிழைகள் மலிந்திருப்பது பற்றியும், நிஜம் என்ற சொல் துய தமிழ்ச் சொல் இல்லையென்பதைத் தொட்டும், நிறைய  சம்ஸ்கிருதச் சொற்கள் நிரவிக்கிடப்பது பற்றியும் அவர் ஆற்றாமையை கடுமையாகவே முன்வைத்தார். கரு திருவரசுக்கு அதில் ஒத்த கருத்திருந்தது. சீனியின் கருத்தை பிற எழுத்தாள நண்பர்களும்பாதனைப் பிடித்துக்கொண்டு பிலு பிலுவென என்ன உலுக்க ஆரம்பித்தனர். என்னால் சுதாரித்து எழு முடியவில்லை.  எனக்குள் வெப்பம் மெல்ல தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. இளமைக் காலம். சினம் சீற்றமெடுக்கும் பருவம். சீனியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். தனித்தமிழ் இயக்கத்தை எப்போதுமே முன்னெடுக்கும்  ஒரு மேதை. தன்னுடைய உங்கள் குரலில் அவருடைய தேனொழுகும் தனித்தமிழ் நடையைப் படித்து தேனருந்தியவர்களில் நானும் ஒருவன். எத்தருணத்திலும் வேற்று மொழிச்சொல்லைக் காணமுடியாத அபூர்வத்தை அவர் தன் எழுத்தினூடே அறிவுறுத்திக்கொண்டே வந்தவர்.  அது சார்ந்து சமரசம் செய்துகொள்ளாமல் இறுகப் பிடித்திருப்பார்.
நல்ல ஆங்கிலப் புலமை உடையவராக இருந்தாலும் முடிந்தவரை ஆங்கிலம் கலவாமல் மேடையில் பேசக்கூடியவர். இது பல மேடைப்பேச்சாளர்களுக்கு சாத்தியமானதே இல்லை.அதனால்தான் இதனை சாத்தியம்; சாதனை என்கிறேன்.

அவர்கள் என்னைச் சாடிய முறை முடிந்தபிறகு, நான் பேசினேன். என்னைப் பொறுத்தவரை நவீனப் படைப்பிலக்கியத்துக்குத் தனித்தமிழ் சுவை தராது. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழில் விரவிக்கிடக்கின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்கள் பலர் கலந்தே எழுதுகிரார்கள். எனக்கு முன்னோடிகளின் மொழிப் பயன்பாடே என்னை கலந்து எழுத வைத்திருக்கிறது. அதனைப் படித்து வளர்ந்தவன் இப்படித்தான் எழுத முடியும். கதை எழுதும்போது எனக்குள் கிளர்ந்தெழும் மொழி அதுவாகவே இருக்கிறது. என் வாக்கியங்களுக்கு ஜீவனைத் தரும் மொழி என அதனை சுவீகரிக்கிறேன். என்னுடைய கதை மொழி அதனால்தான் வலிமை பெற்றிருப்பதாக  நம்புகிறேன். தனித்தமிழில் எழுத முனைந்தேனானால் நான் கொண்டுவர நினைக்கும் கதைச் சுவையை உணர்வு மங்கிப்போகும் என்று சொன்னேன். என் படைப்பு மொழி இதுதான். இதிலிருந்து என்னால் வெளிவரமுடியாது. அது முயற்சியினாலும் இயலாது என்று கறாராகவே பேசினேன்.

சீனியின் சினம் உக்கிரமானது. பாரதிதாசன் கவிதை ஒன்றைச்சொல்லி என்னை காத்திரமாகத் தாக்கினார். நான் சுருங்கிப்போனேன். உடற் சூடு தகித்தது.  டாக்டர் கார்த்திகேசு தனக்கு முக்கிய அலுவல் இருப்பதாகச் சொல்லி போய்விட்டார். நான் என் கருத்தை வைக்கும்போதே இடைச்செருகாக  மெல்ல 'புண்ணியவான்' என்று சீண்டி எச்சரித்தார். நான் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தேன். டாக்டர் என்னை எச்சரித்ததன் வழி அவர் சீனியின் கருத்துக்கு எதிர்க் கருத்து இருக்கலாகாது என்ற முடிபைக் கொண்டிருந்தார் என்பது பின்னர் எனக்குப் புலப்படத்துவங்கியது. டாக்டர் அவர் மேல் வைத்திருந்த அளப்பரிய மரியாதை அது.
டாக்டர் கார்த்திகேசு

வாசகரில் பலர் சீனியின் கருத்தைப் பிடித்துக்கொண்டு என்னை வதைக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியவர் கரு திருவரசுவின் மகன் திருமாமணி  எனக்கும் அவருக்கு முன்பகை இருப்பது போன்ற சொற்களை அவர் பிரயோகித்தார். அப்படியொன்றும் முன் மோதல் இருந்ததில்லை. அவரை அன்றைக்குத்தான் முதன் முறையாகச் சந்திக்கிறேன். ஆனாலும் இன்றைக்கும் நாங்கள் எதிர்கொண்டால் பேசிக்கொள்வதில்லை.

நான் அவமானப் பட்டேன். ஆனால் அது முழுக்க முழுக்க இலக்கியச் சர்ச்சை. அப்போதைக்கு மட்டுமே அது தன்மானச் சரிவு. பின்னாளில் அது மெழுகாய்க் கறைந்து ஒழுகி மறைந்து போனது.

என் தோட்டத்து பால்யத் தோழன் மைக்கல்
 என் தோட்டத்து நண்பர் மைக்கேல் சொல்வதுபோல இலக்கியவாதிகள் எப்போதுமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கவே மாட்டார்கள். அவர்கள் அறிவு சார்ந்து இயங்ககுவதால் அவர்கள் கருத்துலகம் வெவ்வேறாகத்தான் இருக்கும். அந்த முரண் அறிவுலத்தின் மேன்மைக்கு வழி கோலும். இன்றைக்கும் இடது சாரி, வலது சாரி எழுத்தாளர்களைப் பிரித்தெடுக்கலாம். தீவிர இலக்கியம், வெகுஜன இலக்கியம் படைப்பவர்களையும்  நிறைந்து கிடப்பதைப்பார்க்கலாம். அக்கொள்கை அவர்கள் இலக்கிய சோலையில் வளர்ந்த விதத்தை அடிப்படையாகக்கொண்டது.

அந்த அறிமுகக் கூட்டம் நன்றியுரை இல்லாமலேயே முறிந்தது. சீனி எழுந்து போகும்போது என்னிடம் இரண்டு நூலுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போனார். அதற்குப்பிறகும் உங்கள் குரலில் என் கலப்பு மொழி குறித்து சாடித்தான் எழுதினார். நான் புண்பட்டேன். பதிலிறுத்தேன். அதற்கும் அடி கொடுத்தார். இருப்பினும் என் கதை  மொழியை நான் மாற்றிக்கொள்ளவே இல்லை.

புனைவெழுத்து சார்ந்து அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. நவீனக் கட்டமைப்பு இலக்கியம் சமூகம் வகுத்த ஒழுக்கத்தை மீறுகிறது என்பதாலும் , அதன் மொழிப் பயன்பாடு இலக்கணப் பிழைகள் மலிந்திருப்பதாலும் அப்படி எழுதுபவர்கள் மேல் அவர் ஆவேசம் கொண்டார். ஒற்றுப்பிழை, வாக்கிய அமைப்புப் பிழை, கருத்துப்பிழை செய்யும்  முக்கிய எழுத்தாளர்கள் பலரை அவர் பேனாவின் கூர்மை சீற்றம் மிகுந்து குத்தியது. மொழியின் சிதைவை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. புனைவிலக்கியத்தில் யதார்த்தம்தான் அதன் வலிமை. படைப்பாளனின் மனக்கொந்தளிப்பைச் சொல்வதற்கு அவன் மொழி இலக்கணச் சீர்மையை கடைபிடிப்பதில்லை என்பதுதான் உண்மை. அதனை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. மொழி வேறு இலக்கியம் வேறு  அல்ல என்பார்.இலக்கியம்தான் மொழியின் மாண்பைக் காக்கவேண்டும் என்ற கடமையில் கடுமையாக இருந்தார்.

சீனி மரபிலக்கியத்தின் மாறாத பிடிப்பு உள்ளவர். இலக்கணம் பிறழாத மரபுக்கவிதையை அவர் உயிராக மதித்தார்.  எண்பதுகளில் புதுக்கவிதை  இலக்கியம், புது எழுச்சியோடு இலக்கிய உலகின் வாசலை உடைத்துக் கொண்டு பெருவெள்ளம்போலச் சீற்றம் கொண்டு பாய்ந்தது.  சொற்பமாகத் தமிழ் கற்றவர்கள் கூட புதுக்கவிதை என்ற பெயரில் சொற்கூட்டத்தைக் குறைப்பிரசவமாக பெற்றுத்தள்ளினார்கள். காதலில் முயங்கிய இளையோர் கூட்டம் காதலைக் கவிதையாக சொல்லித் தீர்த்தார்கள். தமிழில் காதல் மலர்ந்தவுடன் கவிதையும் மலர்வது இலக்கியத்தில் உண்டாகும் மிகப்பெரிய அபத்தமாகியது.(சில நல்ல கவிதைகள் நீங்களாக)

புதுக்கவிதை உடன் கொண்டுவந்த மொழிச் சிதைவை, ஒழுக்கப் பண்பாட்டை மரபாளர்களால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை. மொழியை உயிராய் மதித்த முக்கியமானவர்கள் புதுக்கவிதையின் வரவை எதிர்க்கத் துவங்கினார்கள். அவர்களில் சீனி மிக முக்கியமானவர். மரபிலக்கியத்தைத் தனக்கு அடுத்துவரும் சந்ததியினரே முன்கையெடுக்கவேண்டுமென்று  பேசியும் எழுதியும் இருந்த வேளையில் புதுக்கவிதையின் வரவு அவர்களை நிலைகுலைய வைத்தது. புதுக்கவிதை தன் தடத்தை வலிந்து தகவமைத்துக்கொண்ட காலக் கட்டத்தில் யாப்பிலக்கண மரபு இல்லாமல்  போய்விடுமே என்ற அச்சம் அவரை அதிரவைத்திருக்கலாம். மரபுக்கவிதைகளால் மேலெழுந்து நிமிர்ந்து நின்ற மொழி சிதைந்து விடுமே என்ற கவலை அவரை வதைத்தது. எனவே தயவு தாட்சண்யம் இல்லாமல் மோசமான புதுக்கவிதைகளையும் அதனை எழுதியவர்கள் பெயெரோடு உங்கள் குரலில் பிரசுரித்து சாடி எழுதத் துவங்கினார். மரபுக்கவிதையே மொழியை உய்விக்கும், புதுக்கவிதை தொய்விக்கும் என்று அஞ்சாமல் தன் கருத்தை முன்வைத்தார். மரபுக்கவிதை படைப்பிலக்கியம்  தடமிழந்து நிலையிழந்து கிடக்கும் இன்றைய தேதியில் கூட அதனின் மாண்பைக் கட்டிக்காத்து வந்த மலேசியாவின் கடைசி மனிதர் அவர். ஒரு திங்களுக்கு முன்னால் கூட மரபுக்கவிதை எழுதுவது மிக எளிது. யாப்பு இலக்கணம் என்றெல்லாம் பயந்து பின்வாங்காமல், எழுத வாருங்கள் என்று சபையில் பேசினார்.ஆனால் பின்னாளில் நல்ல புதுக்கவிதைகளை உங்கள் குரலில் பிரசுரித்தார் என்பது அவர்  இலக்கியப் பரிணாமத்தை மதித்தார் என்றே புரிந்துகொள்ள வைத்தது. புதுக்கவிதை திறம்பட எழுதுவர்களில் அதனைப்பற்றிய ஆழ்ந்து வாசித்தறிந்தவர்களில் கோ.புண்ணியவானும் ஒருவர் என்று ஒருமுறை உங்கள் குரலில் பதிவு செய்தும் வைத்தார்.

எனக்கும் அவருக்குமான பிணக்கும் இறுக்கமும் ஒரு சந்தர்ப்பத்தில் தளர்ந்து போனது. விக்டோரியாவின் முன்னால் மாணவர் சங்கம் , நான் தலைமை ஆசிரியராக இருந்த தமிழ்ப்பள்ளியில் தொல்காப்பிய வகுப்பை நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மலேசியாவில் தொல்காப்பியம் என்றால் சீனி என்றுதானே  பொருள் வரும். முகநூலில் எழுதிவரும் விரிவுரைஞர் தமிமாறன்தான் அதனை முன்னெடுத்தார். நான் தடையேதும் சொல்லவில்லை. அதுவரை பிணக்கு முறுக்கு குறையாமல்தான் இருந்தது. அவர் வகுப்பு தொடங்கிய முதல் நாளில் நான் வர்வேற்றுப் பேசினேன். அவர் நெகிழ்ந்து போனார். இருவருக்கும் மன இறுக்கம்  அத்தருணம் தொட்டு இல்லாமல் ஆகியது. வகுப்பு ஒரு ஆண்டுக்கு மேல் நீண்டது. அவர் தவறாமல் வந்தார். கூட்டம்தான் குறைந்து போனது.

ஒருமுறை சுங்கைப் பட்டாணியில் தமிழர்த் திருநாளுக்கு அவரைப் பேச அழைத்தேன். அவர் ஆர்வம் மிகுந்திருந்தார். தமிழர் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. குரல் உடைந்து தழுதழுத்தது. வார்த்தைகள் கோர்வையற்று சிதறின. புண்ணியவான் என்னை மன்னிக்கவேண்டும். நான் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். பரிசோதனைக்குப் பிறகே நான் வெளியாகமுடியும். நேற்றிரவு உடலெல்லாம் வியர்த்து மூச்சுத் திணறியது. என் வீட்டார் பயந்து இங்கே சேர்த்துவிட்டார்கள். நான் வரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்றார். இது நடந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால்.

அவர்தான் முக்கியப் பேச்சாளர். இந்த நேரத்தில் வேறு யாரைத்தேடுவது என்று தெரியாமல் பதற்றமானேன். பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல்.. பராவாயில்லிங்க கவிஞரே ஒடம்பப் பாத்துக்கோங்க.. நீங்கதான் எங்களுக்கு மிக முக்கியம் என்று ஆறுதலாகப் பேசினேன். அதற்குப் பின்னர் அவர் குரல் உள்வாங்கிச் செருமியது. உடனடியாக பேசமுடியாமல் தவித்தது தெரிந்தது.
சிரமப் படாதீங்க நான் வேற ஏற்பாடு செய்துக்குவேன் என்றேன்.
மீண்டும்  தளர்ந்து நடுங்கிய தொனியில் உங்களுக்கு சிரமம்தான் என்றார்.
கவிஞரே நீங்கள் தேறி வருவீர்கள். நன்றாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நான் வந்து பார்க்கிறேன் என்றேன். அவர் நெஞ்சு வலிக்கு பயந்த குரலில் நானும் சற்று நடுங்கித்தான் போனேன். விரைவிலேயே அவர் மீண்டு வந்தார் என்பதை நான் தொடர்பு கொண்ட பிறகே உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அன்று இருந்த நெஞ்சு நோய் அவரை தொடர்ந்திருக்கிறது.

முதல் முறை போல , இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் நெஞ்சு வலியிலிருந்து மீண்டு வரமுடியாமல் போனது எத்தனை நெஞ்சுகளை வலிக்க வைத்திருக்கும்!


Comments

ரூபன் said…
வணக்கம்
தாங்கள் சொல்வது போல. மூத்த கவிஞர் சீனி அவரின் மறைவு எழுத்துலகம்முழுதும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிராத்திப்போம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
mpn kadaram said…
It's a great eulogy for the late Tamil Poet Kavinger Seeni Naina Mohamad.May he rest in Peace.Thanks Annae for including me in your posting.I feel honored.
ko.punniavan said…
திரு ரூபன்,
உங்கள் மின்னஞ்சலை மீண்டும் அனுப்பவும். நான் அனுப்பிய பதில் மடல் உங்கலுக்கு போய்ச் சேரவில்லை.
mpn kadaram said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
To ruban....ko.punniavan@gmail.com
tq
KAVIN said…
ஓர் இலக்கியத் தடாகம் சட்டென்று வற்றிப் போனதை மனம் ஏற்றுக் கொள்ள மறுதலிக்கிறது... இம்மண்ணில் இது போன்ற ஒரு மனிதர் தோன்றுவாரா என்று காலம் கேட்கிறது..தாங்கள் கூறியது போல் காலத்தால் கரைக்க முடியாத சீனி அவர்...நன்றி.. முனியாண்டி ராஜ்.

Popular posts from this blog

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

எம்ஜியார் -சிறுகதை

எம்ஜியார்
திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்செவிமடல்களைச் சிலிர்க்கச்செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத்துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள். இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம். சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று.நள்ளிரவு 12.00க்குத் திரும்ப பேருந்து டிக்கட் வாங்கியாயிற்று . பத்து நிமிடங்ளுக்கு முன்னாலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் .அது டிக்கெட்டின் கட்டளை. காலை ஆறு மணிக்குத்தான் திரும்பப் போய்ச் சிரம்பான் சேரும். தன் பையிலிருந்த நெளிந்து நெகிழ்ந்து நெளிந்த்து, மடிப்புக்கு அடங்கமாட்டேன் என்று வில்லத்தனம் செய்யும்சிகப்புச் சட்டை. சமீப காலமாய் இனிப்பு நீர் தொல்லையால் இளைத்துப் போன மார்பகத்துக்கும், கை முஷ்டிக்கும் இறுக்கம் தருவதில்லைதான். ஆனால் சட்டைக் …