Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3

 முத்தம் 3



அபு டாபி விமான நிலையத்தை அடைந்தபோது உடல் சோர்ந்திருந்தது. என்னதான் விழித்து விழித்து கண்ணயர்ந்தாலும்  மூன்று மணி நேரத்துக்கு மேல் தூங்கியிருக்கமாட்டேன். ஒரு பெக் விஸ்கி அரைமணி நேரம் கூட உடன் இருப்பதில்லை. மெல்லிய போதை உண்டாகும் நேரம் தூக்கம் பிடிக்கத் தொடங்குகிறது. போதை உடலை விட்டு விலகியவுடன்  தூக்கம் கலைந்துவிடுகிறது. இரண்டு பெக் போட்டால் தூக்கம் நன்றாக வரும் என்பதையெல்லாம் நம்ப முடியவில்லை. அது வெறும் முயக்கம். அதனைத் தூக்கமென்றா நினைத்துக்கொள்வது?

உடல் வலுவற்றிருந்தது. சோர்வு நீங்குவதற்கு நீண்ட தூக்கம் போடவேண்டும். அபு டாபி விமான நிலையத்தில் அதற்கு வழியே இல்லை. உடலைச் சாய்த்து உட்காரும் அளவுக்குக் கூட இருக்கைகள் வசதியாக இல்லை. பயணிகள் ஆயிரக்கணக்கில் தொடர்புப் பயணத்துக்குக் காத்திருந்தனர்.

அபுடாபி அரபு நாட்டின் மிக முக்கிய நகரம். அசுர வேகத்தில் மெட்ரோபோலிட்டன் நகரமாக வளர்ந்து செழித்துக் கொழுத்த நகரம். பெட்ரோல் வற்றாமல் ஊறிக்கொண்டே இருக்கிறது. பெருத்த ஒட்டக வயிற்றைப் போலவே ஷேக்குகள் கொழுத்து இருக்கிறார்கள். அரபு நாட்டின் நகர மேம்பாட்டு கட்டுமானத்துக்கும், வீட்டுவேலைகளுக்கும் இந்திய துணை கண்டத்திலிருந்து பெருவாரியான கூலித்தொழிலாளிகள் அபுடாபிக்குள் நுழைந்தவண்ணம் இருக்கிறார்கள். நான் இருந்த மூன்று மணி நேரத்தில் விமான நிலையத்தை அடைத்துக்கொண்டு நின்றவர்களில் இந்தியக் குடியினரே அதிகம். கையில் பாஸ்போர்ட வைத்துக்கொண்டு மலங்க மலங்க விழிப்பவர்களைப்  பார்க்கும்போது அவர்கள் அரபு முதலாளிகள் சுரண்டுவதற்காக இந்திய விவசாய மண்ணில் உழைத்து வளர்த்த  உடலை  சுவீகரிக்க வந்தவர்கள் போல் இருந்தார்கள். முதலாளித்துவம் விரைந்து வளரும் நாடுகளில் கொத்தடிமைத் தொழிலும் சுரண்டலும் பெருகிக்கொண்டே போகிறது என்பதற்கு அரபு தேசம் சாட்சியாய் நிற்கிறது.

விமான நிலையத்தில் உள்ள அங்காடிகளில் வரிசையைப் பார்க்கும்போது அங்கே நின்று உணவு வாங்குவது மேலும் சோர்வை அதிகரிக்கும். இருக்கையை விட்டகன்று மீண்டும் வந்தால் அதில் வேறொருவர் அமர்ந்திருப்பார். கூட்ட நெரிசல் குளிர்சாதனத்துக்குச் சவால் விடுவதாய் இருந்தது.

விமான நிலையம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அதன் கூரை பெரிய பள்ளிவாசலின் உட்பகுதி கூம்பு போல விரிந்தி கூர்மையாய் உள்வாங்கியிருந்தது. ஜெய்ப்பூரில் அக்பர் இந்து மனைவிக்காகக் கட்டிய மணிமண்டபம் மாதிரி தக தகவென ஜொலித்தது. பூமிக்கடியில் கிடைத்த பணம் கூரை வரை உய்ர்ந்திருப்பது அதிசயமில்லைதானே?

ஒரு அங்காடிக்கடையின் வரிசையில் உணவும் காப்பியும் வாங்க காத்திருந்து என் முறை வந்தபோது, முதலில் பணம் கட்டிச் சிட்டை வாங்கிவா என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான ஒரு விற்பனை பணியாள். அந்த வரிசை அனுமர் வால் போல நீண்டு கிடந்தது. போய் நின்றேன். உடற்களைப்பு காப்பியை வேண்டியது.  காப்பியும் பர்கரும் கேட்டேன். விலை சொன்னான். என்னிடம் அரபு பண்மான ரியால் இல்லை. எனவே  புதிய 100 அமெரிக்க டாலரை நீட்டினேன். அவன் அரபு மொழியில் சொன்னான் நான் திரும்ப ரியால்தான் தருவேன் சம்மதமா என்றான். எனக்குப் புரிந்துவிட்டது. பண விவகாரமில்லையா? எந்த மொழியானால் என்ன?  ஐரோப்பாவில் ரியால் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஒட்டகமா வாங்க முடியும்? மீண்டும் அபு டாபிக்கு வரப்போவதில்லை. அப்புறம் ரியால் மலேசியாவுக்கு வந்ததும், இரண்டாம் உலக யுத்தத்தில் புழங்கி காலாவதியான சப்பான் நோட்டு மாதிரி பல்லிளித்துக்கொள்ளும். மகளிடம் நடந்ததைச் சொன்னேன். அவள் கிரெடிட் கார்டு பாவித்து காப்பியும் ரொட்டியும் வாங்கித் தந்தார். கிரடிட் இருந்தால்தான் கார்டு இருக்கவேண்டுமென்பதல்ல. அதற்குப்பெயரைத் தமிழில் கடன் அட்டை என்று சரியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அப்படியானால் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்களெல்லாம் கடனாளிகள்தான். அல்லது கடனாளியாக்குவதற்கான முன்யோசனைத் திட்டம். வங்கிகள் கடனாளிகளை உருவாக்க பெரும் கடமையில் ஈடுப்பட்டிருக்கிறது.

வேண்டாம் சாமி எனக்கு காப்பியே இல்லை யென்றாலும் பரவாயில்லை என் அமரிக்க புது நோட்டு புது நோட்டாகவே இருக்கட்டும் என்று திரும்பி வந்துவிட்டேன்.

ரோமுக்குப் பறக்கும் அடுத்த விமானத்தைப் பிடிக்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. பின்னிரவு தாண்டி இருக்கும்.பூமிப்பந்தில் இந்த அகால வேளையில் எங்கே இருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன். பயமாக இருந்தது.  அடுத்த விமானம் ஏறும் வரை நிம்மதி இருக்காது.

மூன்று மணிநேரம் யாருமில்லாத சுங்கத் துறையும குடிநுழைவுத்துறையும் ஒரே நேரத்தில் பரபரப்பாகத் துவங்கியது. பல நாடுகளுக்குப் பறக்கும் விமானம் ஒரே நேரத்தில் வந்துவிட்டது போலும். கூட்ட நெரிசல் வரிசையைக் கண்டுபிடிக்கத் தடையாக இருந்தது. எப்படியோ அடித்துப் பிடித்து இன்னொரு எத்திஹாட் விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.

ரோமை அடைந்த போது அபுடாபியில் பார்த்த கூட்டத்தில் இரண்டு மடங்கு அதிகம் நெருக்கிக் கிடந்தது. இத்தாலி சுற்றுலாப் பயணிகளை அதிகம்  கவர்ந்திழுக்கும் நாடு. புராதன கோட்டைகள் உலக அதிசயமான பிசாவும், நீரில் மிதக்கும் வெனிஸ் நகரமுமுள்ள விந்தை ஊர். இந்தப் பெருங் கூட்டத்துக்கு இதுதான் காரணம்.

ரோமிலிருந்து ஸ்பேய்ன் பார்சிலோனாவுக்கு விமானம் ஏறியபோது பொன்விடியல் புன்னகைப் பூக்கத் துவங்கியது.

தொடரும்.......


Comments

அபுதாபி ஏர்போர்ட் பளபளன்னு இருக்கு.எல்லா ஏர்போர்ட்டிலும் காஃபி,டீ யானை விலை.ஆனா பயணகளைப்பிற்கு தேவை படுதே.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த