Skip to main content

பேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் .


மலேசியா, கெடா மாநில சுங்கைப் பட்டணியிலிருந்து கோலாலம்பூருக்குப் போய்வருவதை நினைக்கும்போதே பழைய பயண அனுபவமங்கள் நினைவுக்கு வந்து தொல்லைசெய்யும்.  
 பயணமாகும் நேரம் விமான டிக்கெட்டின் விலை குறைந்திருந்தால் பயணம் சுகமாய் அமையும். அவவாறில்லையெனில் ஐந்தாறு மணி நேரம் பேருந்துப் பயணம்தான். போகும்போது டிரான்ஸ்னேசனல் பேருந்து எடுத்துக்கொள்வேன். நேரப்படி ஏற்றி நேரப்படி இறக்கிவிடும். ஓட்டுனர்கள் அதிசயமாய் புனிதர்களாக இருப்பார்கள். 
கோலாலம்பூரை விட்டுத் திரும்பும் தருணத்தில் கே எல். நம்மை விரட்டிக்கொண்டிருக்கும்.  உடனடியாகக் கிளம்பும் மனநிலைதான் எப்பாதுமே உருவாகும்.  வீடு போய் சேர வேண்டும் என்ற ஆவலைவிட கே.எல்லின் புழுக்கமும், கந்தகக் காற்றும், செலவும், காரணங்கள்தான்.அதனால் எந்தப் பேருந்து முதலில் கிளம்புகிறதோ அதற்கு டிக்கட் எடுத்து ஏறிக்கொள்வேன். 
அதையும் தாண்டி என்ன நடக்குமென்றால், நாம் புடுராயா வளாகத்தினுள் நுழையுமுன் சில கழுகுகள் உங்களை பிராண்டத் தொடங்கிவிடும். விடாமல் பின்தொடரும். "இப்போ கெளம்புது எஸ்பிக்கு," என்று சுற்றி சுற்றி வரும் நம்மை. தொல்லைகளைத் தாங்கவே முடியாது. நாம் டிக்கட் கௌண்டரை அடையும் முன் பத்து கழுகளாவது நம்மை கவ்விச்செல்ல பின்னாலேயே வரும். இதனைக் கடந்து செல்வது மிகப்பெரிய மனச்சிக்கலை உண்டாக்கும். இவர்களிடம் சிக்கவே கூடாது என்ற நம் சங்கல்பம் பல தருணக்களில் கழுகுகளின் எல்லை கடந்த தொந்தரவால் தோல்வியிலேயே முடியும். சே தொலஞ்சி போ என்று அவர்களின் பிடுங்களுக்கு விழுந்துவிடுவோம்.நான் கே.எல்லை விட்டு விலகும் மனநிலையில் இந்தக் கழுகுகளின் வலையில் சிக்கிச் சின்னாபின்னமான அனுபவங்களோடு ஒப்பிடும்போது, இந்த சமீபத்திய அனுபவம்  சாதாரணமானது.
முதல் நாள் பயணம் ஆறு மணி நேரம் எடுத்தது. போதாக்குறைக்கு விடுதியில் தூங்க முடியவில்லை. சாலையில் விடாமல் ஓடும் வாகன ஓசை பெரிய இடையூறாக இருந்தது. கலையில் எழுந்தபோது தூக்கக் களைப்பும் உடற் சூடும் நிம்மதைகுலைவை உண்டாக்கியது. எழுத்தாளர் சங்க கூட்டம் முடிந்து டேக்சி பிடித்து புடு ராயாவுக்கு வந்ததும் கழுகுகள் மல ஈக்கள்போல ஙொய்த்துக்கொண்டே பின்தொடரத் தொடங்கிவிடும்.

நேற்று மணி மூன்றளவில் புடுராயாவில் சுற்றிக்கொண்டிருக்கும் கழுகிடம் வசமாய் மாட்டிக்கொண்டேன். அதற்கு முன்னர் மூன்று நான்கு கழுகுகளின் பிடுங்களைத் தவிர்த்து கடந்த்விட்டேன்.
தொடர்த்து கவுண்டரை நோக்கிப்போகும் என்னைத் குறுக்கே நின்று தடுத்து,
"நில்லு இப்ப கெளம்புது" என்று சொல்லி நகரும் பேருந்தை தொலைபேசியில் அழைத்து நிறுத்தப் பார்த்தான் ஒருவன். இவன் ரொம்ப நல்லவனா இருக்கானே என்று நினைத்தேன். ஆனால் நம் கவனத்தைக் கவர அவன் ஆடிய தொலைபேசி உரையாடல் நாடகம் அது என்று பின்னர் புரிந்து கொண்டேன்.
 "சே அது போய்டுச்சு, இன்னொரு பஸ் இருக்கு வா" என்றான். தாய்க்கோழி பின்னால் போகும் ஒற்றைச் கோழிக்குஞ்சாய் அவன் பின்னால் போனேன். "இதில் ஏறிக்கோ" என்றான் ஒரு பஸ்ஸைக் காட்டி. "டிக்கட்" என்றேன் "தோ கவுண்டரிலிருந்து வாங்கி வரேன்," என்றான். 40 ரிங்கிட்டை வாங்கிக் கொண்டான். பஸ் ஓட்டுனரிடம் கேட்டேன்" எப்போ கெளம்புது?" என்று. அவன் அவனிடமே கேள் என்று பணம் வாங்கியவனிடம் கண்ணைக் காட்டினான். ஓட்டுனருக்கு எப்போது கிளம்புகிறது என்று தெரியாத என்று என் கிளம்பும்  அவசர நோக்கம் சிந்திக்கத் தவறிவிட்டது. 
"நீ ஏறு ஏறு" என்று என்னை அவசரப் படுத்தினான் பணம் வாங்கியவன்.அவன் அவசரப் படுத்தியதில் பஸ் கிளம்பிவிடும் என்ற மகிழ்ச்சியில் ஏறினேன். அப்போது கோட்டுவாய் விட்டான் ஓட்டுனர். எனக்கு முன்னால் ஏறி பயணிகள் சீட் ஒன்றை விரித்து படுத்துக்கொண்டான்.ஓட்டுனர். தூங்கப்பாறானே பஸ் கெளம்புமா? என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பணம் கொடுத்தாச்சு. அவன் டிக்கட் பெறப் போய்விட்டான். வேறு கதியில்லை எனக்கு. நான் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஓட்டுனர் குரட்டை ஒலி சன்னமாய்க் கேட்டது. பேருந்தில் ஏழெட்டு பேர் இருந்தனர். எல்லார் கையிலும் கைப்பேசி. நேர விரையம் பற்றி கவலையே படாத இளைய சமூகம். ஒருவனைக் கேட்டேன் பஸ் எப்போ கெளம்பும்? அவன் சொன்னான் நான் 2.30க் க்கு ஏறிட்டேன். முனுக்கு கெளம்பும் என்றுவிட்டு மீண்டும் கைப்பேசிக்கு அடிமையானான். அப்பொ மணி 3.15. இப்போ பஸ் கெளம்பிடும் என்று சொன்னதை நான் நம்பினேன். டிக்கட் வாங்கப்போனவன் திரும்பவே இல்லை. டிக்கட் இல்லாமல் பேருந்தில் அமர்ந்திருப்பது சங்கடமாய் இருந்தது. நான் பயணிக்கான அனுமதி பெற்றிருக்கவில்லை என்ற பயம் கவ்வியது. ஓட்டுனர் தூக்கத்தில் சற்றே செத்துப்போய் இருந்தான்.மணி 3.39. அப்போது ஒருவன் வந்து ஏறினான். டிக்கட் கட்டு ஒன்று கையில் இருந்தது. அவனைக் கேட்டேன்" டிக்கட் கெடைக்கிலியே" என்று. "தோ கொண்டாறேன்" என்றான். சொல்லிவிட்டு அவனும் காணாமற் போய்விட்டான். 
ஒரு கைதியை சிறையிலிருந்து விடுவிக்காத சட்டத்தைப் போல பேருந்துக்குள் பழைய சிகெரெட் புகை  வாடை அடைபட்டே இருந்ததை உணர் முடிந்தது. குளிர் சாதனம் வசதி கொசுறாக இந்த 'இன்பத்தையும்' கொடுக்கும்.
மணி 4.00 எட்டிக்கொண்டு இருந்தது. கழிப்பறை போ என்று சீண்டிக்கொண்டே இருந்தது மிட்டாய் கேட்கும் குழந்தையாய் சிறுநீர்ப்பை. போனால் பேருந்து என்னைவிட்டு விட்டு கிளம்பிவிடும் என்ற பயம் நெஞ்சில்." போ போ உடனே போ" என்று கட்டளையைப்பிறப்பித்துக்கொண்டே இருந்தது சிறுநீர்ப்பை. கைவசம் டிக்கட் இல்லை. பஸ் போய்விட்டால் முறையிட ஆதாரமே இல்லை!
ஓட்டுனர் தூங்கிக்கொண்டிருந்தான். யாரிடம் ஒற்றை விரலை நீட்டுவது? அந்நேரத்தில் மீண்டும் வந்தான் சற்று முன்னர் பார்த்தவன். "நான் கழிப்பறைக்குப் போக வேண்டும் என்றேன்". "சரி போ" என்றான். அவன் போ என்று அனுமதித்ததும் பஸ் கிளம்ப இன்னும் நேரமாகலாம் என்ற சமிக்ஞ்ஞையை உதைத்து நெஞ்சில். போய்விட்டு வந்தேன். மணி 4.15. பேருந்து ஓட்டுனர் தூங்கும்போது கிளம்பாது என்ற மகாப் பெரிய தத்துவத்தை உணர்ந்தேன் அப்போது. மீண்டும் தோன்றினான் டிக்கட் கட்டு வைத்திருந்தவன். "டிக்கட்" என்றேன் அவனிடம்."ச்சே ஒங்கூட தொல்லையாப் போச்சுடா என்று சொல்லாமல் சொல்லி ஒரு டிக்கட்டைக் கிழித்துக்கொடுத்தான். டிக்கட் கொடுக்காமல் இருந்திருந்தால் அநத 40 ரிங்கிட்டை  ஒட்டனரும் இவனும் பங்கிட்டுக்கொண்டிருக்கலாம். பேருந்துப் பயணிகளின் எண்ணிக்கையை  பரிசோதிக்க யாரும் இல்லாத துணிச்சலில்தான் இந்த தகிடுதித்தம். பாவம் பேருந்து முதலாளி.
டிக்கட் கெடச்சுட்டா பஸ் கெள்ம்பிடுமா என்ன?
மணி 4.25.
ஓட்டுனரை எழுப்பது சில சமயம் சிங்கம் முயலை எழுப்பிய கதையாகிவிடும். நான்தான் அவர்கள் வீசிய வலையில் சிக்கியிருக்கிறேனே.
இன்னொரு புதியவன் தோன்றி 'போலே ஜாலான்' என்று எழுப்பினான்.
அவன் எழுந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஓட்டுனர் சீட்டில் உட்கார்ந்தான். புகை பேருந்துக்குள் மிதக்க ஆரம்பித்தது. வெளியே தூண்களில் புகைபிடித்தால் 2000 ரிங்கிட் தண்டம் என்று எழுதியிருந்தது. அந்த விளபரப் பலகைதான் தண்டம். அதை போட்ட அதிகாரம் அதைவிட தண்டம்.
எனக்கு கொஞ்சம் சாம்பிராணி புகையென்றாலே தலைவலி வந்துவிடும். இந்தச் சாம்பிராணிகளின் புகை வேறா? சிகரெட் புகை சாவாகசமாய் பேருந்துக்குள் சற்று நேரத்தில் மிதக்க ஆரம்பித்தது. தலைவலி எகிற ஆரம்பித்தது. கையில் வைத்திருந்து புத்தகத்தை மூடி பையில் திணித்தேன். பஸ் நகர நகர தலைவலி புதிய காற்றை நிவாரணமாக் கெஞ்சியது.
பேருந்துக்குள் பயணிகள் ஓரளவுக்கு நிறையும் வரை கிளம்பாது. டிக்கட் விற்பனை மையத்துக்குப் போகும் பயணிகளைத் தடுத்து , ஆள்பிடித்து பேருந்துக்குள் ஏற்றி நிரப்பும் வேலை நிகழ்ந்தபடி இருக்கும். ஏமாளிகள் பேருந்தில் மெல்ல ஒவ்வொருவாராய் ஏறிக்கொண்டிருப்பர். இதற்கு கழுகுகளுக்குப் போதிய கமிசன் சேரும்.
கே. எல்லில் கிளம்பியவன் எங்கும் நிற்கவில்லை.(மறுநாள் காலை நடை முடியும் வரை தலைவலி நிற்கவில்லை) வேகமாக் ஓடியதில் நான்கரை மணி நேரம் ஆயிற்று சுங்கைபட்டாணியைப் பிடிக்க. எனக்கோ 3.30 மணி நேரத்துக்கு ஒருமுறை எதையாவது சாப்பிடவேண்டும். இனிப்பு நீர்.(இதற்கு ஏன் கசப்பு நீர் என்று பேரிடவில்லை) பசி கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருந்தது. அவசரமாய் பேருந்தில் ஏறவேண்டி இருந்ததால் உண்பதற்கு ஏதும் வாங்கவில்லை. இடையில் நிற்கும் என்ற முன் எண்ணம். தலைவலி பசி களைப்பு மன அழுத்தம் இவற்றோடு வீடு சேர்ந்தேன்.
புடுராயாவில் எச்சரிக்கை பலகைக்குக் குறைச்சலில்லை. நாம் ஏமாறுவதை வெறும் பலகைகளால் தடுக்க முடியாது என்பது அதிகாரத்துக்குத் தெரியாது? (அவைங்களே பலகைதானே) புகார் செய்யலாம் என்றால் அங்கேயே செய்ய வசதியாவது உண்டா? எந்த அரசாங்க மயிராண்டியும் அங்கில்லை. எந்த அதிகாரியும் கண்களில் படமாட்டாரகள். அவைங்களுக்கு நாசி லெமாவும் தேனீரும், சிகிரெட்டும் இருந்தால் சொர்க்கம். கூடுதலாக முகச்சாயம்  பூசிய பெண் இருந்தால்  பேரின்பம். போதை வஸ்து இருந்தால் அதனிலும் கூடுதலான ஆனந்தம். சட்டமாவது வெங்காயமாவது?

ஒருமுறை ஓட்டுனரை நியாயம் கேட்கப்போய் என்னை கிட்டதட்ட அடித்திருக்கும் அவலம் நிகழவிருந்தது. நான் தற்காப்புக் கலையைக் கற்காதவன். அப்படியே படித்திருந்தாலும் பெரிதாய் ஒன்றும் நடந்திருக்காது.பேருந்து ஓட்டுனர்கள் பல சமயம் தூக்கமின்மையால் மன் அழுத்தம் கூடியவர்களாக இருப்பார்கள். ஊசி மிளகாயை கடித்ததுப்போல கடுப்பாய் வார்த்தைகள் வெளிப்படும்
சில ஓட்டுனர்கள் போதை வஸ்த்துக்கும் அடிமையானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சதா அவர்களை பரிசோதனைக்கு உள்ளாக்க முடியுமா என்ன? ஒழிந்த நெரத்தில் இழுத்து சுகிப்பவர்கள் இவர்கள்.
சட்டம் இருந்த என்ன செய்ய? அமலாக்கம் இல்லாததால் இந்த நிலை. இதைவிட மோசம் அமலாக்க அதிகாரிகளை பணத்தால் வாங்கிவிடலாம் என்பதுதான்.
  
எதுக்கு இவனெல்லாம் பொழுதும் சாமி கும்பிடற மாதிரி வேஷமெல்லாம் போடுறான்?

Comments

வணக்கம்
ஐயா
தங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் நானும் பல தடவை சென்றேன். 10மணிக்கு பேருந்து என்பார்கள் ஆனால் அது வரும் நோரம் 2மணியாகும் எல்லா இடங்களிலும் தில்லு முல்லுக்கு பஞ்சமில்லை..kl பயணம் எப்போதும் அவதானம்...

எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ko.punniavan said…
மிக்க நன்றி ரூபன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின